இலங்கையில் நீடித்திருந்த உள்நாட்டுப்போர் கடந்த 2009 ஆம் ஆண்டு மேமாதம் நடுப்பகுதியில் முடிவுக்கு வந்திருந்தாலும், அதன் பாதிப்புகள் தொடர்பான விவாதங்கள், விசாரணைகள், ஆய்வுகள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.
அந்த கொடிய போர்க்காலத்தில் காணாமல்போனவர்களின் உடன்பிறப்புகள், உறவினர்கள் நடத்திவரும் அறப்போராட்டங்களும் முற்றுப்பெறவில்லை. அதேசமயம் நீடித்த அந்தப்போரின் உறைபொருளையும் மறைபொருளையும் பின்னணியாக வைத்து நூல்கள் வெளிவருவதும் முற்றுப்பெறவில்லை. தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் இலங்கை உள்நாட்டுப்போர் அல்லது தமிழ் ஈழ விடுதலைப்போர் என்பதை கருப்பொருளாகக் கொண்டு சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள் பல வெளிவந்தன. வந்தவண்ணமிருக்கின்றன.
விடுதலைப்புலிகளின் மகளிர் படையணியில் முக்கிய பொறுப்பிலிருந்து, போர் முடிவுற்ற காலத்தில் சரணடைந்து, புனர்வாழ்வு முகாமிலிருந்து வெளியேறிய தமிழினி சிவகாமி எழுதிய ஒரு கூர்வாளின் நிழலில், விடுதலைப்புலிகளினால் கடல்பரப்பில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த கடற்படையைச் சேர்ந்த கொமடோர் அஜித் போயாகொட எழுதிய காத்திருப்பு, ஆகிய நூல்கள் சிங்கள – தமிழ் மொழிகளில் வந்திருப்பதுபோன்று, மேஜர் கமால் குணரட்ண எழுதிய Road to Nandikadal என்ற நூலும் வெளிவந்து பரபரப்பாக பேசப்பட்டது.
இந்தவரிசையில் அவுஸ்திரேலியாவில் நான்கு தசாப்த காலங்களுக்கும் மேலாக வதியும் ‘ சுந்தர் ‘ சுந்தரமூர்த்தி எழுதிய Dare to Differ என்ற நூல் அண்மையில் வெளிவந்துள்ளது. அச்சம் தவிர் என்றார் ஔவையார். அச்சமில்லை… அச்சமில்லை என்றார் பாரதியார். இக்கூற்றுக்களை கேட்டும் படித்தும் கடந்துவந்திருக்கும் நாம், ‘ சுந்தர் ‘ சுந்தரமூர்த்தியின் Dare to Differ என்ற நூலின் தலைப்பினை மாறுபட அஞ்சேல் எனவும் துணிந்து மாறுபடு எனவும் அர்த்தப்படுத்திக்கொள்ள முடியும்.
சுந்தர், அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் இயங்கிய இலங்கை தமிழ்ச்சங்கத்தின் செய்தி ஏடான தென்துருவ தமிழ்முரசு இதழின் ஆசிரியராகவும் இங்கு இயங்கிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ் ஈழ பொருளாதார மேம்பாட்டு அமைப்பிலும் Tamil Elam Economic Development Organiழ்ation (TEEDOR) போரின் முடிவுக்குப்பின்னர் வடக்கு - கிழக்கு புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி என்னும் தன்னார்வ அமைப்புடன் North East Rehabilitation and Development Organization (NERDO) முதலானவற்றில் இணைந்து பணியாற்றியவர்.
1986 இலேயே அவுஸ்திரேலியா லிபரல் கட்சியிலும் அங்கத்தவராக சேர்ந்தவர். 1991 முதல் 2004 வரையில் சமூகத்தொடர்புச் செயலாளராக அவுஸ்திரேலிய தமிழர் பேரவையிலும் Australasian Federation of Tamil Association (AFTA) 1994 முதல் 2005 வரையில் ஸ்தாபக உறுப்பினராகவும் இணைப்பாளராகவும் இயங்கிவந்திருப்பவர். பல மாநாடுகள், கருத்தரங்குகள் ஆகியனவற்றில் சம்பந்தப்பட்டிருந்த இவர் ஜெனீவா வரையில், ஈழத்தமிழருக்காக குரல் கொடுக்கச்சென்றவருமாவார். அதனால், தான் கற்றதையும் பெற்றதையும், சந்தித்த தலைவர்கள், இயக்கத்தினர், அரசியல் ஆலோசகர்கள் பற்றியெல்லாம் தமது நூலில் விபரித்துள்ளார். தனது நாற்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பொதுவாழ்வுபற்றி எழுதியிருக்கும் சுந்தரின் நினைவாற்றல், பல செய்திகளையும் சம்பவங்களையும் துல்லியமாக பதிவுசெய்திருக்கிறது.
அத்துடன் அவரது தீர்க்கதரிசனமும், இனி நாம் என்ன செய்யவேண்டும் என்பதற்கான யோசனைகளும் இந்நூலில் வெளிப்பட்டுள்ளது. அதன் மூலம் அவரது அரசியல், சமூக நிலைப்பாடும் தெரியவருகிறது. தான் கடந்து வந்த பாதையில் நேர்ந்த மாற்றங்களை படிப்படியாக சித்திரித்திருக்கும் சுந்தர், ஒரு நோக்கத்திற்காக முன்னெடுக்கப்பட்ட விடுதலைப்போரின் உள்ளிடுக்குகளில் நிகழ்ந்த தான் நேருக்கு நேர் சந்தித்த சம்பவங்களையும் பதிவுசெய்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் மதியுரைஞர் அன்டன் பாலசிங்கம், குமார் பொன்னம்பலம், தமிழ்ச்செல்வன், மற்றும் ஒரு காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் குரல் எழுப்பிய கிருஷ்ணா வைகுந்தவாசன் முதலானோருடன் நடத்திய உரையாடல்கள் குறித்தும் இந்நூலில் எழுதியிருக்கிறார்.
அரசியல் ஆய்வாளர்களுக்கும், ஈழ விடுதலை அரசியலை கற்க விரும்பும் மாணவர்களுக்கும் இந்த நூல் வாயில்களை திறந்துவிட்டிருக்கிறது. இந்த நூல்பற்றிய சிறிய அறிமுகம்தான் இந்தப்பதிவு. எனினும் இந்நூல் கூறும் முரண் நகை, குறித்து எழுதுவதற்கு நிறையவுண்டு. அவை பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் எழுதலாம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.