1. சிறுமிகளின் இரட்டைச்சடையும் குதிரைவாலும்
குட்டிப்பெண்ணுக்கு அவளுடைய அம்மா எப்போதுமே அத்தனை இறுக்கமாக இரட்டைச்சடை பின்னிவிடுவாள்
காதுகளின் பின்புறமும் பிடரியிலும் நெற்றிப்பொட்டுகளிலும் வலி தெறித்தெழும்.
தாளமுடியாமல் சிணுங்கினால் நறுக்கென்று குட்டுவிழும்.
நடுமண்டையும் சேர்ந்து வலிக்கும்.
அல்லது குதிரைவால்.
கோடையில் கசகசக்கும்.
ஆனால் அம்மாவுக்குப் பெண் நாகரீகமாக இருக்கவேண்டும்.
அதாவது, அவர் வகுத்த நாகரீக வரம்பெல்லைக்
குட்பட்ட அளவில்
அவர் வகுத்தது அம்மம்மா வகுத்திருந்ததில் பாதி
அச்சு அசலாகவும் பாதி புறந்தள்ளப்பட்டு
திரிந்து உருமாறியதாகவும்.
பள்ளிக்குச் சென்றபின் கூந்தலை அவிழ்த்துவிட்டுக்கொள்ளலாமென்றால்
வகுப்பில் எல்லோருமே விறைத்துக்கட்டிய பின்னல்களும் அல்லது கசகசக்கும் குதிரைவால்களுமாயிருக்க
பாடமெடுக்கும் கைகளில் இருக்கும் இல்லா
திருக்கும் பிரம்புகளின்
நீள அகலம் நினைவில் பேயாகத் தலை
விரித்தாடும்.
அன்று அப்படியொரு தலைவலி வந்தபோது
அம்மா அலறியடித்துக்கொண்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றாள்.
மருத்துவர் ‘அறிவுகெட்டத்தனமா இத்தனை இறுக்கமாகப் பின்னியிருக்கிறீர்களே – நரம்புகளே அறுந்துவிடுமளவு?’ என்று கோபமாகக் கேட்டபோது அன்பு அம்மாவின் முகம் துவண்டுபோவதைக் காணப்பொறுக்காத சிறுமி
’ அம்மாவை ஏன் திட்டுகிறீர்கள் – இப்படிப் பின்னுவதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது’ என்றாள்.
‘அறிவுகெட்டத்தனமா’ என்று மருத்துவர்
கூறியிருக்கத் தேவையில்லை’.
யாகாவாராயினும் நாகாக்க.
மருத்துவர் சொன்னது அவளுடைய மீட்சிக்கான தருணம் என்று அந்தச் சிறுமிக்குப் புரிந்திருக்க வழியில்லை…
ஓர் அந்நியர் அன்பு அம்மாவை முட்டாளென்று திட்டக்கேட்டு முட்டிக்கொண்டு கோபம் வரத்தானே செய்யும்…
மகள் சொன்னதைக் கேட்டு அகமகிழ்ந்துபோன அம்மா அடுத்தநாளிலிருந்து இன்னும் இறுக்கமாகப் பின்னக்கூடும்.
புரிந்தும் புரியாமலுமான குழப்பத்தில் உறங்கத்தொடங்கினாள் சிறுமி.
2. கவிதை வாசிப்புக் காணொளிகளும் கவிதையும்
நவீன கவிதையாகச் சொல்லப்படும் சமகாலக் கவிதையை
மசாலா சினிமா பாணியில் கிசுகிசுக்கும் குரலொன்று வாசித்துக்கொண்டிருக்கிறது……
கவிதைக்குள் இருக்கும் சோகம் அந்தக் குரலின்
மிகையுணர்ச்சியில் எரிச்சலூட்டும் அவலமாக மாறுகிறது.
ஆனால் 'அடடா என்ன அருமை!'களும் 'Woo hoo!' களும்
’வாரே வா’க்களும்
அனேகரிடமிருந்து எழுந்தவண்ணமே.
அந்தக் கவிதையை எழுதியவர் உட்பட.
இடையிடையே கவிதை வாசிக்கும் குரல் விடும் பெருமூச்சுகள் கவிதைக்குள் கேட்கவில்லையே
என்று
எவரொருவரும் கேட்கலாகாது.
எவருக்கும் எவரொருவருக்குமிடையேயான அர்த்தபேதங்களைப்பட்டியலிடத் தொடங்கும்
அந்தக் குரல்
ஏழுக்குப் பிறகு பத்தைச் சொல்லும்போது
அதில் கிளம்புமொரு (எத்தனை நன்றாகப் படிக்கிறேன் பார்த்தாயா)
குழந்தைத்தனமான பெருமையில்
கவிதைக்குள்ளிருக்கும் தத்துவமும் குறியீடும்
காணாமல் போய்விடுகின்றன.
ஒப்பனைக்கண்ணீர்விட்டு அழுதபடியே வாசிக்கும் குரலில்
என் கண்களிலிருக்கும் குளங்கள்
ஒரேயடியாக வறண்டுபோகின்றன.
கவிதையின் பாதியில் தூரத்தே ஒரு ரயில் போய்க்கொண்டிருப்பது
காட்டப்படுகிறது.
அத்தனை தொலைவாக விரைந்துகொண்டிருக்கும் அதில்
எப்படி ஏறிக்கொள்வது என்று புரியாமல்
அலங்கமலங்க விழிக்கிறது கவிதை
வாசிக்கும் குரல் கவிதை நேசிக்கப்படவேண்டியது
என்று குறிப்புணர்த்துவதாய்
ஒரு மாதிரி உயர்ந்துதாழ்கிறது.
ஒரு கணம் அந்தரத்தில் அறுந்து தொங்குவதா
யுணர்ந்து
அஞ்சி நடுங்குகிறது கவிதை.
வாசிக்கும் குரல் கவிதையை இழைபிரித்துத்
தருவதான நினைப்பில்
துண்டுதுண்டாகக் கடித்துப் போட _
வாசிப்பு முடிகிறது.
குதறப்பட்டுக் கிடக்கும் கவிதை
அந்த வாசிப்பையும்
அதை ரசித்துக் குவிந்தவண்ணமிருக்கும்
லைக், கமெண்ட், ஷேர்களையும் கடந்துபோய்க்
கொண்டிருக்கிறது
தனக்கான மௌ(மோ)ன வாசகரைத் தேடி....
தனியறையொன்றில் நகம் கடித்தபடி
எழுதிக்கொண்டிருக்கும் கவியை நாடி.....
3. புரியுங்கவிதை
எனக்கே புரியாத ஒன்றை
எனக்குப் புரியவைக்கப் பார்க்கவும்
உங்களுக்குப் புரிகிறதா
என்று அன்போடு கேட்கவும்
உன்னை நான் புரிந்துகொள்ள
என்ன செய்யவேண்டும் என்று
நானறியாத என்னை யுன்னை
என்உன்னைக் கேட்கவும்
ஒரு சில வரிகளைக் கவிதையாக்குகிறேன்.
திருத்தமான உரு பெறாததால்
கருவுள்ளிருக்கும் சிசு பிசுபிசுத்துச்
சிதைந்துவிட்டது
என்று உருவேற்றுவோரைக்
கடவுள் மன்னிக்கட்டும்.
உண்டென்றால் உண்டு இல்லையென்றால் இல்லையென்றாகும்
அருங்காதலை புகைப்படம் எடுத்து
ஆழியில் ஆணியடித்து மாட்டுவதுபோல்
ஆழ்மனதிலொரு கவிதையென்னைச்
சூழ்ந்தவண்ணம்....
அதன் நீர்மட்டம் உயர்ந்துகொண்டேபோகிறது.
கழுத்தைக் கடந்து மூக்கிலும் வாயிலும்
காதுகளிலும் நுழைவதற்கு முன்
வெளியேறிவிடவேண்டும்;
வெளியேற்றிவிடவேண்டும்.
உயிர் பெரிது;
கவிதை காற்றுபோல்.
தீண்டக் கொடுத்துவைத்திருக்கவேண்டும்.
உள்ளங்கைக்குள் ஒரு கணம்
தேக்கிவைக்க முடிந்தால்
பின் வேறென்ன வேண்டும்?
கள்வெறி கொள்ளும் மனம்
காத்திருக்கும்.
அட, யார் கல்லெறிந்தால் என்ன?
அடங்க மறுத்தெழும்
ஆவியுருக் கவிதை.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.