அஞ்சலிக்குறிப்பு: விடைபெற்ற தோழர் தா. பாண்டியன் ( 1932 – 2021 )! ஈழத்தமிழருக்கு ஆதரவாகவும் - அடக்குமுறைக்கு எதிராகவும் ஒலித்த குரல் ஓய்ந்தது ! - முருகபூபதி -
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நேற்று 26 ஆம் திகதி உடல்நலக்குறைவால் மறைந்துவிட்ட தோழர் தா. பாண்டியன் அவர்கள், முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் – அதாவது 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதியே இறந்திருக்கவேண்டியவர் ! இதனை வாசிக்கும் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா..? அந்தத் திகதியை எவரும், ஏன் முழு உலகமுமே மறந்திருக்காது. அந்தநாள் எத்தகையது என்பதை தா. பாண்டியனின் வாக்குமூலத்திலிருந்தே இங்கே தருகின்றேன். அந்த வாக்குமூலத்தை அவர் தமது 69 வயதில்தான் பதிவுசெய்துள்ளார்.
“ பிறந்த நாளைப் பலர் மறக்காமல் கொண்டாடிவருகிறார்கள். நான் என் பிறந்த நாளை, நான் கடந்துவிட்ட 69 ஆண்டுகளில் ஒரே ஒரு முறைதான் கொண்டாட நேரிட்டது. பிறந்தநாளையே நினைக்காதிருந்த எனக்கு அதை 1992 இல் கொண்டாடவேண்டிய ஒரு நிர்ப்பந்தம் என் மனைவி , குழந்தைகளிடமிருந்து வந்தது. 1991 மே, 21 ம் நாளன்று சென்னையை அடுத்துள்ள திருப்பெரும்புதூரில், தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்காக வந்த ரஜீவ்காந்தி மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார். அன்று அந்த இடத்தில் அவர் அருகில் இருந்தவன் நான். மூன்றடி தூரத்திற்குள் நின்று இருந்த நானும், குண்டுகள் பட்டுக் காயமடைந்தேன். வெடித்த வேகத்தில் தூக்கி எறியப்பட்டேன். இறந்துபோனதாகவே அறிவிக்கப்பட்டேன். சில பத்திரிகைகளில் இறந்தோர் பட்டியலில் என் பெயரும் இருந்தது. அன்று இரவு முழுவதும் என் குடும்பத்தார்க்கும் நான் கொல்லப்பட்ட ஒருவன்தான். ஏனெனில் அதுதான் அவர்களுக்கு தரப்பட்ட செய்தி.
இருந்தும் உயிர்தப்பி வாழ்கிறேன்… எப்படித் தப்பினேன்..? என்பதை இன்றும் என்னால் தெளிவாகக் கூற முடியவில்லை. ஏனெனில், எனக்கு வலதுபுறம் இருந்தவரும் கொல்லப்பட்டார்… இடதுபுறம் நின்றவரும் வீழ்ந்தார். எனக்குப்பின்னிருந்த ஏழெட்டுப்பேர் ரத்த வெள்ளத்தில் துண்டிக்கப்பட்டுக்கிடந்ததையும் கண்டேன். என்னைச்சுற்றிலும் குண்டு விபத்துக்குப்பலியாகி மடிந்தவர்கள் பதினெட்டுப்பேர். ராஜீவ்காந்தியுடன் பத்தொன்பது பேர். ஒரு நொடியில், ஒரே இடத்தில் களப்பலியாயினர். இவர்கள் மத்தியில் நின்ற நான், அதுவும் ராஜீவ்காந்தியின் அருகில் நின்று மொழிபெயர்த்துக்கொண்டிருந்த நான் குண்டின் குறிக்கு எப்படித் தப்பினேன் ?.... இன்றும் புரியாத புதிராகவே இருக்கிறது. ஆனால், பதிந்த குண்டுகள், இரும்புத் துகள்கள், ஆணிகள் என் உடம்பில் இன்றும் இருந்து அந்த நாளை நினவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன. வலதுகை விரல்கள் சிகிச்சைக்குப்பிறகும் சரியாகவில்லை. அதனால் உணவருந்தும்போதும், எழுதும்போதும், தலைவாரும்போதும், வலது கையை பார்க்குந்தோறும், அந்தச் சோக நிகழ்ச்சியை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன. எனவே, அதை நான் மறுபிறவி எடுத்த நாளாக என் குடும்பத்தினர் கருதியதில் வியப்பில்லை. எனவேதான், 1992 மே 18 ம் நாள் மட்டும் 60 வது பிறந்தநாளை யாருக்கும் தெரிவிக்காமல் எங்கள் ஊரிலுள்ள தோட்டத்தில் இருக்கப்போனோம். பிறந்த நாள் மே 18. – மறுபிறவிகொண்ட நாள் மே 21. இப்போது மே 21- தான் நினைவில் நிற்கிறது. “