டொமினிக் ஜீவா!: இலக்கிய ஆலமரம்! தோப்பாகிய தனிமரம்! - வ.ந.கிரிதரன் -
மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களின் மறைவுச் செய்தியினை முகநூல் கொண்டு வந்தது. அவரது மறைவு துயரினைத் தந்தாலும் அவரது நிறைந்த வாழ்வு மகிழ்ச்சியைத் தந்தது. அவர் பூரணமான, நிறைந்ததொரு வாழ்வினை வாழ்ந்து முடித்துள்ளார். தான் விரும்பியதை, விரும்பியவாறு எவ்வித சமரசங்களுக்கும் இடங்கொடுக்காது செய்து , வரலாற்றில் ஆழமான தடத்தினைப் பதித்துச் சென்றுள்ளார். அது மகிழ்ச்சியைத் தந்தது.
எழுத்தாளராக, இதழாசிரியராக, அறச்சீற்றம் மிக்க சமூக, அரசியற் செயல் வீர்ராக அவரது இருப்பு பெருமைப்படத்தக்கதோர் இருப்பு. எத்தனை பேருக்கு இவ்விதமானதோர் இருப்பு அமையும்?
இருப்பில் நிலவிய சமூக, அரசியல் பிரச்சினைகளை, வர்ண, வர்க்க வேறுபாடுகளைக்கண்டு ஒதுங்கிச் செல்லாமல் , இறுதிவரை உறுதியாக, தெளிவாகத் தனது எழுத்துகளூடு, இதழினூடு , தத்துவார்த்த அடிப்படையில் , சமரசங்கள் எவற்றுக்கும் இடங்கொடாது முடிந்தவரை போராடிச் சென்றார். இதிலிருந்து நாம் படிக்க வேண்டியவை பற்பல. தன் இருப்பினூடு மானுட இருப்புக்கான அர்த்தம்தனை அனைவருக்கும் எடுத்துக் காட்டியவர் டொமினிக் ஜீவா அவர்கள்.
'மல்லிகை' மூலம் அவர் இலக்கியத்தில் விழுதுகள் பலவற்றை உருவாக்கிய ஆலமரம்! அந்த ஆழமரம் தந்த நிழலில் இளைப்பாறியவர்கள்தாம் எத்தனை! எத்தனை!