திரு டொமினிக் ஜீவா அவர்களுடனான எனது இலக்கியத் தொடர்பு!
அண்மையில் இவ்வுலகை விட்டு மறைந்த திரு டொமினிக் ஜீவா அவர்கள் இலங்கையின் முற்போக்கு இலக்கியத்துறையில் மிகவும் முக்கியமான ஆளுமைகளில் ஒருத்தராகும். 27.6.1927-ல் பிறந்து 28.1. 2021 மறைந்த மதிப்புக்குரிய எழுத்தாளரின் குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கற் செய்தியைப் பகிர்ந்து கொள்கிறேன். இச்சிறு கட்டுரையில அவருடன் எனக்கிருந்த இலக்கிய உறவு தொடக்கம் அவரின் இலக்கியப் பயணத்தின் எனக்குத் தெரிந்த சில விடயங்களையும் பகிர்ந்து கொள்கிறேன். இன்று அன்னாரின் மறைவுக்கு,உலகம் பரந்த விதத்தில் அஞ்சலி செலுத்துக்கொண்டிருக்கிறார்கள். பல்வேறு பத்திரிகைகளில் அவரைப் பற்றிய பல தகவல்கள் இலக்கிய ஆர்வலர்களால் எழுதப் படுகின்றன.
அவர் 1950-1960;ம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்த சாதிக்கொடுமையின் விகார முகத்தை, வக்கிரமான நடவடிக்கைகளை எதிர்த்த பல முற்போக்கு படைப்பாளிகளில் முக்கியமானவராகும். அவரின் காணொலி ஒன்றில், அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் நிலவிய சாதிக் கொடுமையின் தாக்கத்தால் அவர் பாடசாலைப் படிப்பையே பன்னிரண்டு வயதில் அதாவது 1939ம் ஆண்டு துறந்து வெளியேறியதைப் பற்றிச் சொல்கிறார். அதைத் தொடர்ந்து, அன்று யாழ்ப்பாணத்தில் இடதுசாரிக் கொள்கைகளுக்கு 1947ம் ஆண்டு முதல் அத்திவாரமிட்ட அண்ணல் மு. கார்த்திகேசு மாஸ்டரின் சமத்துவத்திற்கான முக்கிய வேலைகள் யாழ்ப்பாணத்தில் பரந்தபோது அதனால் ஈர்ப்பு வந்து இடதுசாரிப் பணிகளில் முக்கிய பங்கெடுத்த சரித்திரத்தைச் சொல்லியிருக்கிறார்.