நம் தீவு நாட்டில் தான் ‘ தீ ‘க் குளிப்புகள் நடக்கிறதென்றால் போற புலம் பெயர் நாடுகளிலுமா இடம் பெற வேண்டும் ? இந்த பூமிப்பந்திற்கு என்ன தான் வந்து விட்டது . தாமாக ஈடுபட்டாலும் சரி , மற்றவர்கள் வலுவால் தூக்கி எறியப்பட்டாலும் சரி அது மனிதத்திற்கு அவமானமான செயல் தான் . மனிதம் செத்துக் கொண்டிருக்கிறது என்பதற்கான ஒரு சமிக்ஞை . மிருக நிலையிலிருந்து தேவ நிலைக்கு வைக்கிற வைக்கப்படுற ( கால் ) அடிகள் சறுக்குண்டு பின்னோக்கி விழுவது போன்ற ஒரு விபத்து . மனிதம் தின்று வாழ்கிறவர்கள் அதிகமாகிப் போனதனால் அதில் ஒரு அங்கமாகி தலைவராகி , இவை நிகழ்வதற்கு தார்மீக ஆதரவையும் , கூடுதலாக படையினரின் ஈனச் செயல்களையும் அனுமதித்து விடுகிறார்கள் . பழையபடி அரசநாயகத்தில் நழுவி விழுந்து தலைவர்களாகத் ( அரசர்களாக ) தான் போட்டி நடை பெறுகின்றது . இன்று , நம்நாடு போர்க் குற்றங்கள் மலிந்த ஒரு ஈன நாடாக காட்சி அளிக்கின்றது . பெயர் கெடுக்கப்பட்டு விட்டிருக்கிறது . படைப்பிரிவுகளைக் கலைத்து மீள புதுதாக ஏற்படுத்த வேண்டிய தேவை கிடக்கிறது . குற்ற விசாரணைகளைச் செய்ய வேண்டிய பணியை சமூக நீதிமன்றங்களிடம் தள்ளி விட வேண்டும் . அப்ப தான் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் . ஆளுக்காள் அபிப்பிராயம் சொல்லகிற அழுகிய நிலை வேண்டாம் . அரசியல் அத்திவாரம் சரியில்லை . அதைச் சீர்ப்படுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது . ஆனால், நம்நாடு , சீராகி மூச்சு விடுமா? , விடவே நூறு ஆண்டுகள் செல்லும் போல இருக்கிறது .
விமல் , ” டேய் , நானும் ,ரமணாவும் இங்கே தான் இருக்கிறோம் . ரவி பையித்தியம் பிடித்தவன் போல இருக்கிறான் . எப்படி தேற்றுறறென்று தெரியல்லை ” என்கிறான் . அவன் குரலும் உடைந்திருக்கிறது . அப்படி என்ன தான் நடந்து விட்டிருக்கிறது . ரமணனின் தங்கை சித்திராவை ரவி முடித்தவன் . நாமெல்லாம் கிராமத்துப் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள் . நம் நட்பும் உயிர்ப்புடன் திகழ்கிறது . ” என்னடா , பதற்றபபடுறதைப் பார்த்தால் பயமாக இருக்கிறதடா ” ” இவன்ர அம்மா ,இங்கே வந்தது தெரியும் தானே . கொலண்டிலே இருந்து விட்டு பவியைப் பார்க்க வந்து ஒரு கிழமையாய் தங்கி இருந்தவர் . நாளை பிளேன் ஏற இருந்தவர்…” அவன் சொல்ல முடியாது திணறினான் . ரமணன் அலைபேசியை பறித்து ” டேய் , வீடு எரிந்து அம்மா , தங்கச்சி , பவிக் குட்டி எல்லோரும் சாமிக்கிட்ட போயிட்டாங்கடா . பிறகு எடுக்கிறோம் . ரவியை கவனிக்க வேண்டி இருக்கிறது ” என்று தொடர்ப்பு அறுபடுகிறது . நாயகம் இரத்தம் உறைய அதிர்ந்து போய் நிற்கிறான் . அவனுடைய செல்ல மகள் கீதாவின் சாவு …புரட்டிப் போட்டிருக்கிறது .குறு , குறுவெனப் பார்க்கும் அந்தப் பார்வை , வில்லு போல தெளிவாகத் தெரியும் புருவங்கள் ,அவன் அலட்டுவதைக் கேட்டு , அப்பப்ப முகத்தில் பூக்கும் சந்தோசங்கள் …சிறிது குளிராக இருந்தாலும் சரிவர உடுப்புப் போட்டு சில்லு நாற்காலியில் அவளை பல்கணிக்கு கொண்டு வந்து காற்றை சுவாசித்து புத்துணர்ச்சி பெற நிற்பார்கள் .இன்று அவள் இல்லை . தனிய நின்று ஏதோதோ யோசித்துக் கொண்டிருக்கும் போது இந்த பேரிடி வருகிறது . பிறந்த நாட்டில் இருந்திருந்தால் இந்த அவலமெல்லாம் எமக்கு நிகழ்ந்திருக்காது . எமக்கு தான் ” கடவுளே இவளை வேளைக்கு துன்பப்படுத்தாமல் எடுத்து விடு ” என்ற பிராத்தனை இருந்தது என்றால்…., , பவி நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டியவள் அல்லவா , அவளைப் போய் சிங்களக்காடையர் துன்புறுத்துவது போல எடுத்து விட்டாரே!
மாலை வேலையிலிருந்த ரவிக்கு வீட்டிலிருந்து சித்திராவின் தொலைபேசி அழைப்பு வந்தது .” வீட்டிலே நெருப்பப்பா… ” அறுபட்டு விட்டது . அவன் 911 க்கு உடனடியாக அறிவித்தான் . அத்தனை விரைவாக …எரிந்து …” ரவி தலையில் கையை வைத்துக் கொண்டு பிரமை பிடித்தவன் போலாகி விட்டான் . கூட வந்த நண்பன் தான் ரமணனுக்கு அலைபேசியில் தெரிவிக்க விமலுடன் வந்திருக்கிறான் . ரவி , யாரை நினைத்து அழுவான் . பவிக்குட்டி அவன் கண்ணுக்குள் சிரிக்கிறாள் . பொய்க் கோபம் காட்டுறாள் . சித்திரா…அத்தை..,அவன் வாய் விட்டு அழுது கொண்டிருந்தான் . தீயணைக்கும் அதிகாரி , அவனை தேற்ற முயன்று தோற்றுப் போய் விட்டிருந்தார் . வாய் விட்டு அழுகிறது தான் நல்லம் என அவருக்கும் தோன்றியது . அவருள்ளும் கையாலாகத்தனம் குறித்து வெறுப்பு மண்டிப் போய் இருந்தது . இங்குள்ள கருவிகள் எரிகிறதைக் காட்டும் கருவிகள் . காப்பாற்றும் கருவிகள் அல்ல . இனி அவர் அறிக்கை தயாரிக்க வேண்டும் . வாகன நெரிசல்.. எத்தனை காவலர் வந்தும் என்ன விரைவாக குறித்த நேரத்திற்கு வர முடியாத நிலமை .
இங்கே வீடுகள் எரிவது ஒரு பொம் வெடிப்பது போன்றது . சிலவேலை அப்படியும் கூட கிடக்கலாம் . இங்கே உள்ளேயும் ,வெளியிலுள்ள மண்ணினுள்ளும் காஸ் காவிக்கொண்டுச் செல்லும் சிறு குழாய்கள் ஓடுகின்றன . தொடர்ந்து எரிவதற்கு ஊக்கியும் விடுகிறது . கனடாவில் கூட முந்தி வீட்டு சமையல் அடுப்புகளிற்கு காஸ் தான் பாவித்தார்கள் . தற்போது மின்சாரத்திற்கு மாற்றி விட்டிருக்கிரார்கள் . ஆனால் , உணவகங்கள் வழியே தற்போதும் காஸ் தான் பாவிக்கப்படுகின்றன . ஐரோப்பிய நாடுகளில் இந்த மாற்றம் பெரிதாக நிகழவில்லை . விரைவாக எரிவதற்கு இதுவும் கூட காரணம் தான் .
” சே ! ,என்ன , கடவுள் இவர் ? ” . ரவிக்கு இந்த ஜென்மத்தில் ஆறுதல் கிடைக்கப் போவதில்லையே . நாயகத்திற்கு தன் மகளைப் போல அலைபேசியில் மழழையில் பேசும் பவிக்குட்டியையும் நிறைய பிடிக்கும் . ” இதுவும் கடந்து போகும் . துயரத்தை குளத்து வான் அணைக்கட்டில் நீர் வழிந்து செல்வது போல வழிய விட்டு விட வேண்டும் ” என்று சொல்வதெல்லாம் சாமியாருக்கு தான் ஏற்ற வேதாந்தங்கள் . சமானியரான எமக்கு சரிப்பட்டு வராது . அவனிடத்திலும் ரவிக்கு ஆறுதல் சொல்ல சொல்ல வார்த்தைகள் இல்லை .
கணனியை இயக்கி தமிழ்ச்செய்திகளைப் பார்த்தான் . நடந்த அந்தச் செய்தி கிடக்கிறது . என்ன நாடு இது ? . இயற்கைச் சீற்றத்தால் நிகழ்கிறது ஒரு புறம் கிடக்க , இலங்கையைப் போல இந்த நாடும் கூட சமாதானத்திற்கான போர் என இடைக்கிடைக் கூறி கூட்டணியோடு நியாயப்படுத்திக் கொண்டு எறும்புகளைக் கொல்றது போல , வலிமை குன்றிய நாடுகளின் தொகையான மக்களை கொன்று விட்டு தான் நிற்கிறது . இவர்கள் கொட்டுற வெடி பொருட்களால் , நகரங்கள் அழிந்து எழுகிற புகைகளால் , தூசிகளால் …இயற்கை சீற்றம் துப்பரவாக அடைவதில்லையா ? . இயற்கை ஆர்வலர்கள் அதைக் குறித்து அரசியல் பேசுவதில்லையாம் . நல்ல விதி . மாசுப்படுத்திய இலங்கையரசு தப்பித்துக் கொண்டது . குருக்கள் செய்தால் குற்றமில்லை என்ற என்ற வேதம் இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது . விஞ்ஞானத்தில் நிறையக் கண்டு பிடிக்கிறார்களோ இல்லையோ , நிறைய பொய்களைக் கூறுகிறார்கள் . இவன் இதை எழுதுற போதும் கூட இங்கே …ஒரு வீடு எரிந்ததில் அதில் இருந்த ஒரிருவரும் சேர்ந்து எரிந்து இறந்து போய் தான் இருக்கிறார்கள் . விஞ்ஞானிகள் எரியக் கூடியவை இல்லை எனக் கூறிய கட்டடப் பொருட்களைக் கொண்டு கட்டப்பட்ட வீடுகள் தாம் இவை . இங்கே பச்சை மரமும் கூட எரியக் கூடிய எரிச்சத்துக் கொண்டவை .
பிரான்சில் காலூன்றி இரண்டு வேலைகள் செய்து ஒரு மாதிரி , ஒரு வருடத்திற்கு முதல் தான் ரவி வீடு வாங்கி இருந்தான் . சித்திரா ரமணனுடன் ஒட்டு கூட ! . கிராமத்து வீட்டிற்குப் போனால் , ரவி ,விமல் ,நாயகம் மூவருக்கும் கூட தேனீரை கொண்டு வந்து கொடுப்பாள் . அவர்கள் வீட்டில் திண்ணைப் பகுதியுடன் கூடிய முகப்பு அறை ரமணனுடையது . அவன்ர அம்மாவிற்கும் அவர்களும் பிள்ளைகள் தான் . வீதியில் , சந்தையில் காண்கிற போதும் கனிவுடன் கதைப்பார் . அந்த வீட்டு விசேசங்களில் எல்லாம் அவர்களும் கூடமாட உதவிகள் செய்திருக்கிறார்கள் . ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போன்றவர்கள் . 83ம் ஆண்டுக் கலவரத்தில் கிராமே தெரியாத திரவியம் மாமாவின் கொழும்புக் குடும்பம் பாதிப்புற்று கிராமத்திற்கு வந்திருந்தது . அவசரத்தில் குடல் தெறிக்க ஓடிய போது ஓட்டோ ஓட்டியும் அவர்களை பாதுகாப்பாக அகதி முகாமில் கொண்டு போய் இறக்கி விட்டிருந்தான் . அப்புகாமி அவர்களிடம் பணம் வாங்கவில்லை . அடிக்கடி பிழங்கியதால் நேசமாகி விட்ட சிங்களவரான ஓட்டி அப்புகாமியிற்கு எல்லோரும் நல்லா இருக்க வேண்டும் என்ற கொள்கை . தனிமரம் தோப்பாகாது போல பாதுகாப்பாகவும் ஆகாது தானே . ஆனால் விதி …! .” இஞ்சாரப்பா உவளுக்கு வைத்திருந்த நகைப்பெட்டியை விட்டுட்டு வந்திட்டேனப்பா ,என்ன செயிறது? ‘மனைவி சொல்ல , திரவியத்திற்கு ஒன்றும் தோன்றவில்லை . ” கொஞ்சம் அடங்கட்டும் போய் பார்திட்டுட்டு வாரேன் ” என்றார் . அடுத்த நாள் வீதியில் படையினர் ,பொலிசாரின் நடமாட்டம் நிலவியது . பாதுகாக்கிறார்கள் என்று நம்பி விட்டார் . ” சரி , நான் போய் பார்த்திட்டு வாரேன் ” என கிளம்பினார் . கடைகள் , வீடுகள் எரிந்து பயங்கரமாய் தோற்றம் அளித்தன . வீடு போய்ச் சேரும் வரையில் அவருக்கு ஒன்றும் நிகழவில்லை . மனம், எப்பவும் சுமூகமாய் தானே கற்பனை செய்யும் . வீட்டின் ஒரு பகுதி தான் எரிந்து கொண்டிருந்தது . இவருக்கு எங்கே இருக்கிறது என்று தெரியும் . எரியாத பகுதிக்குள்ளே மெதுவாக செல்ல முயன்றார் . ” உவன் தமிழன் ” என்று பார்த்து விட்ட ஒருத்தன் கத்தினான் . அப்ப தான் புரிந்தது , ” படையினர் கொல்லி எடுத்துக் கொடுக்கிறவர்கள் என்று ” . அவரை தூக்கி எரிகிற பகுதிக்குள் எறிந்து விட்டார்கள் . கிராமத்திற்கு வந்திருந்த அந்த குடும்பம் நண்பர்களை வெகுவாகப் பாதித்து விட்டது . நாயகம் ,கலா , மோகன் ,ராஜன் நால்வரும் ஒருநாள் ஒன்றாய்ப் போய் இயக்கமொன்றில் சேர்ந்து விட்டார்கள் . ஒருவகுப்பில் இப்படிச் சென்றது பள்ளிக்கூடத்தை குழப்பி விட்டது . ஆதரவாளர்களாக மாறி நண்பர்கள் வீட்டிற்கு அப்பப்ப செய்திகளை தெரிவித்துக் கொண்டிருந்தார்கள் . இயக்கமோதல் எழ நாயகம் கொழும்புக்கு வந்து கனடா வந்து விட்டான் . மற்ற இருவர் கொலண்டுக்குப் போக ரவி பிரான்சுக்கு வந்தான் . சித்திராவிற்கு கல்யாணம் நடந்த பிறகே யோசிப்பேன் என ரமணன் பிடிவாதமாக இருந்தான் . சித்திராவிற்கு ரவியிலே விருப்பம் இருந்திருக்கிறது . தாய்யிடம் சொல்ல , அவர் எழுத , ரவிக்கு ஆச்சரியமாக இருந்தது . பிரச்சனை எழவில்லை . சுமூகமாக பிரான்சுக்கு அழைத்து முடிய …., பவிக்குட்டியுடன் சொந்த வீட்டில் காலெடுத்து வைத்த போது …அவளின் அதிருஸ்டம் என்று எவ்வளவு மகிழ்ந்திருந்தார்கள் . இப்ப எல்லோருமே குடும்பமாகி விட்டார்கள் . ஏற்ற இறக்கத்துடன் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கையில் , ரவியின் கனவு வண்டி திடீரென இப்படி குடை சாய்ந்து விட வேண்டுமா ? . மூளை , சிந்திக்கும் சக்தியை இழந்து விட்டது . ராணியிடம் செய்தியைக் கூறினாள் . அவளுக்கும் தாங்க முடியாதிருக்கிறது .
நாயகத்திற்கு ஊரில் கிடக்கிற வீடுகள் தான் ஞாபகத்தில் உடனே வந்தன . பனை சிலாகைகளைச் செதுக்கி ….,அரிந்து ராஜா , ராணிக் கூரையுடன் சீமேந்துக் கல்லையும் அரிந்து கட்டுற வீட்டில் தீ பிடித்தாலும் எரியவே எரியாது . தவிர இங்கே போலே அங்கே , வீட்டிற்குள்ளேயும் , நிலக்கீழ் மண்ணிலும் காஸ் சிறு குழாய்கள் கண்டறிமாட்டுக்கு ஓடுவதில்லை . இங்கே , நிலத்தைக் கொத்தி தோட்டம் செய்வதென்றாலும் யோசிக்க வேண்டி இருக்கிறது . இங்குள்ள பச்சை மரங்களே எரியும் அபாயம் கொண்டதாக அடிக்கடி எரியும் வனத் ‘ தீ ‘ க்கள் . இந்த மனிதர்களின் இரத்தமும் கூட எரியக் கூடியவை தானோ ? . அங்கே , அரச யந்திரம் என்கிற பெரிய அரச அமைப்புகள் செய்கிற கொடூர நிகழ்வுகளை , இங்கேயும் , தனி மனிதர்கள் , சிறிய , சிறிய வட்டங்களில் நிகழ்த்திக் கொண்டே தான் இருக்கிறார்கள் . சராசரி மனித மூளையிலும் கொடூரம் குடி கொண்டிருக்கிறதோ ? என்ற சந்தேகமும் முளை விடுகிறது . கொடூரம் மனிதக் குணம் எனப் புரிகின்றது . ஆனால் சிலபேர்கள் அதற்கு சொந்தக்காரர்கள் போல ஏன் இருந்து தொலைக்கிறார்கள் . சிங்களவர்கள் அனைவரையும் அந்த வரைபுக்குள் அடக்கக் கூடாது எனச் சொல்லப்படுகிறது . ஆனால் , அவர்களும் ஏதோ ஒரு வகையில் …பங்குதாரிகள் தானே . பிடுங்கப்படுற நிலங்கள் அவர்களுக்குத் தான் பங்கிடப்படுகின்றன . வேலை வாய்ப்புகள் , மற்றும் சலுகைகள் எல்லாம் அவர்களுக்குத் தானே வழங்கப்படுகின்றன . அவற்றை மறுத்து நின்று அவர்கள் காட்டி இருக்கிறார்களா ? காட்டவில்லை தானே ! . புரட்சிகர அமைப்பு என எழுந்த சிங்கள இளைஞர் அமைப்பும் கூட வெறும் இனவாத அமைப்பாகவே இயங்கியது , வடக்கு கிழக்கைப் பிரிக்கிறது , காணி ,பொலிஸ் அதிகாரங்களை பிடுங்கிக் கொண்டு மாகாணவரசை செயலற்றதாக்க முனைப்பு காட்டுகிறது . ஜனநாயக உரிமைகள் அவர்களுக்கும் ….வேம்பாக கசக்கிறதில்லையா ? .கிட்லர் நடத்திய போருக்காக உலகம் , ஜேர்மன் மக்கள் அனைவரையும் கூட்டுக் குற்றவாளியாகப் பார்த்து , (பிறகு) அவர்கள் சாகிற போது இரக்கம் காட்டாது அமைதியாகத்தானே இருந்தது . கடலில் , கப்பல்களில் பரிதவித்த போது , அவர்களை நேச நாடுகளின் படைகள் தாக்கி அழித்த போது ‘ போர்க்குற்றம் ‘ என மெதுவாகத் தானே கூறியது தவிர விசாரணையை முன்னெடுத்ததா ? இல்லையே ! . யூதர்களின் பழிவாங்கலை ஒரு எல்லையோடு நிறுத்திக் கொண்டதை விட என்ன செய்தது .
இங்குள்ள பனி வீடுகள் கழுத்துக்கு மவ்ளரைக் கட்டுவது போல கூரைத் தலைப்பகுதியில் காற்று புக முடியாத மாதிரி அடைத்து விடுகிறார்கள் . குளிர் தடுப்பு என்றாலும் வீட்டிற்குள்ளேயும் காற்றோட்டம் அவசியமாகிக் கிடக்கிறது . பனிக்காலத்திலேயே இப்படி எரியிறது கூடுதலாக நிகழ்கிறது . யன்னல் ,கதவுகள் சதா அடைப்பட்டுக் கிடப்பதால் காபனோ ஒட்சைட்டு வாயு வீட்டினுள் இயல்பாகவே சிறிய வீதத்தில் இருக்கவே செய்கின்றது . எரிகிற போது அதிகளவு வாயு வெளியேற வழியில்லாமல் தங்கி விடுகிறது . அந்த வாயு விரைவிலே மயக்கமுறவும் வைத்து விடுகின்றது . உடனடியாக ஈரத்துணியை எடுத்து முகத்தைச் சுற்றிக் கொண்டால் ஒருவேளை யோசிக்கவாவது நேரம் கிடைக்கலாம் . திடகாத்திறமானவர்கள் , தப்பக் கூடியவர்கள் கூட இப்படி இறந்து விடுகிறார்கள் . பவி சிறுமி . சிறுவர்கள் இறப்பது தான் மிக மிக கொடூரமானது . சிங்கள சமுதாயம் எமக்கிழைக்கிற தீங்கு இங்கேயும் வந்து எமக்கு நிகழ வேண்டுமா ? . சுனாமி நேரம் ” நீச்சலைக் பழக்காமல் விட்டோமே , பழக்கி இருந்தால் இந்நேரம் எத்தனை தாய்மார்களும் பிள்ளைகளும் உயிருடன் இருந்திருப்பார்கள் ! ” என்று பிலாக்கணம் இடுகிறோமே ( ஊளையிடுகிறோமே) . அது போல இதற்கும் நாம் தயார் படுத்தாதது தான் இறக்கிறதுக்குக் காரணம் . தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு முதலே எல்லாம் முடிந்து விடும். இங்கே நக்கலாக சொல்லப்படுகிறது . குற்றம் நடந்த பிறகு வருகிற படை தான் பொலிஸ் படை . இலங்கைப்படையைப் போல தான் . நெருங்காது . அங்கே கொல்லியையும் எடுத்துக் கொடுக்கிறதைச் செய்கிறது . இங்கே வீதிகளில் நெரிசல் காரணம் கூறப்படுகிறது . தீயணைப்புப்படையினர் உயிரைக் கொடுத்து உயிரைக் காப்பாற்றுறவர்கள் என்கிறார்கள் . அப்படி என்றால் மேயரும் குற்றவாளி தானே . நாயகம் இப்படியும் யோசிப்பான் . ” கட்டடக்கலைஞர்களை மட்டுமே மேயர் தேர்த்தலில் நிற்க முடியும் என அடிப்படைச்சட்டம் இருக்க வேண்டும் . அப்ப தான் மனித உயிர்களைக் காப்பாற்றுற செயற்பாடுகள் நடக்கும் ” . மற்றைய ஜனநாயத் தேர்த்தல்களிலும் வக்கீல்கள் தானே அதிகமாக நிற்கிறார்கள் . தகுதியானவர்கள் நிற்பதில்லையே . இலங்கையில் இனத்துவேசிகள் அதிகமாக நிற்கிறார்கள் . நாடு எப்படி உருப்பெறும் ? .
நடந்த பிறகு அழுது தான் என்ன பயன் ? நம்மவர்கள் காச்சா மூச்சா என்றிருந்தாலும் கூட எல்லாவற்றிலும் நுழைந்து ஓல் ரவுண்டராக இருக்க முயல்பவர்கள் . அது கொஞ்சமாவது செயல்பட வைக்கிறது . இங்கே ஒரு துறையில் இருப்பவர்களுக்கு அவர்களுடைய வேலை மட்டுமே தெரியும் . மற்றவர் வேலை துப்பரவாகத் தெரிவதில்லை . எனவே அறிவுப் பரப்பு குறுக்கப்படுகிறது . ஓப்பீட்டளவில் எல்லாமே அக்கரைகள் பச்சை தான் . சிறிலங்காவில் வடக்கு (+கிழக்கு ), தெற்கு (+மேற்கு) என பிரிபட்டிருப்பது போல உலகமும் கிழக்கு , மேற்காகவே பிரிந்திருக்கிறது . ஒன்றின் அறிவு , ஒன்றுக்கில்லை .சேர்ந்து பயணிக்கிறதென்றது …எங்குமே கிடையாது , இல்லை . திணிக்கிறது அல்லது பறிக்கிறது தான் நடைபெறுகின்றன . அவர்கள் அப்படி செத்திருக்கக் கூடாது . காப்பாற்றி இருக்க வேண்டும்ஆனால் பரிதாபகரமாக இறந்து போய் விட்டார்கள் . வெளியில் இருப்பவர்களுக்கு இது ஒரு கலவரச் செய்தி . கிட்ட இருப்பவர்களுக்கு சித்திரவதையானது . அந்த முள் சதா குத்தி , குத்தி உள்ளே நீள வலிக்க வைத்துக் கொண்டே இருக்கப் போகிறது . சிறிலங்காவரசு , இதே போன்ற காணாமல் போனோர் விவகாரத்தை கடத்தி விடப் பார்க்கிறது . சிங்களவர்களுக்கு அது தூரத்துச் செய்தி . ஆனால் அது , அப்படி கடத்தி விடக் கூடிய விவகாரமில்லை . ஒரு நாள் அதன் அம்புகள் அவர்கள் குரள்வளையை நோக்கி பாயவேச் செய்யும் .
சித்திராவிற்கு அடுத்தவன் பாசி . கடைசியும் கூட . அம்மாவும் அவனும் ஊரிலே தனித்து விடப்பட்டிருந்தார்கள் . இலங்கையின் தலைவர் ” இரண்டு நாடுகளுக்கான சண்டையில் வெற்றி பெற்று விட்டோம் ” என்று நிலத்தை முத்தமிட்டு கொண்டாடினார் . அலைந்து ஒய்ந்து பழையபடியே கிராமத்திற்கு வந்தடைய பிழைப்புக்கு ஏதாவது செய்ய வேண்டி இருந்தது . அம்மாவிற்கு அக்காவையும் பவியையும் பார்க்க வேண்டும் என்று ஆசை . ரமணன் , நண்பர்களிடமும் கடன் வாங்கி , ரவியும் உதவிக்கரம் நீட்ட …பாசி , நெல்லு குத்தும் மில் ஒன்றை ஏற்படுத்தி தொழிலைத் தொடங்கி இருந்தான் . பாசி , குட்டியனாக இருக்கிற போதே அவனுக்கு…முஸ்பாத்தியாக கதைக்க வரும் .பெரியவர் ,சிறியவர் எல்லோரையுமே பேச்சில் …சிரிக்க வைத்து விடுவான் . அவன் மேல் எல்லோருக்கும் வாஞ்ஞை அதிகம் . அம்மா , அவனுக்கு பானுவையும் பார்த்து வைத்திருந்தாள் . ” முதலில் உவள் , உன் கொக்காவைப் பார்க்கணும் . வந்து நடத்தி வைக்கிறேன் ” என்றிருந்தார் . இரண்டு நாளில் வர இருந்தார் . ரமணன் அண்ணை தொலைபேசியில் கூறிய போது , அவன் திகைத்துப் போனான் . அம்மா வரவே மாட்டாரா ? . காணாமல் போனோர் நிகழ்த்தி வரும் ஆர்ப்பாடங்களின் தாக்கம் என்ன என்பது அவனுக்கு முதல் முதலில் புரிந்தது . ” அம்மா .. ” பிள்ளையார்க் கோவிலுக்கு போய் ஏகாந்தமாக அழுதான் . அப்படியே வழுக்கியாற்று அணைக்கட்டில் போய் அமர்ந்து தற்போதைய மழையால் ஓடும் நீரோட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் .
அவனுக்கு மில்லிற்குப் போகவே விருப்பமில்லாதிருந்தது . உதவிக்கு நிற்கும் பாலு கவனித்துக் கொள்வான் . பானுவின் அப்பா குகமூர்த்தி அவனை தேடு ,தேடு என தேடி கடைசியில் கண்டு பிடித்தார் . ” தம்பி , எழும்பி வா . முதலில் சாப்பிடு . பிறகு மற்றதைப் பேசிக் கொள்ளலாம் ” . அவனை கட்டாயப்படுத்தி சைக்கிளில் ஏற்றி வீட்டிலே வந்து இறக்கினார் . அம்மா அவலமாக சாகிறதென்றால் யார் தான் தாங்கிக் கொள்வார்கள் ? . வையந்தியத்தை சாப்பிட வைத்தார் . ” தம்பி உனக்கு நாங்கள் எல்லோரும்இருக்கிறோம் . கலவரத்திலே திரவியம் அண்ணைக்கு நடக்கவில்லையா ? இந்த நாடு சாபம் பிடித்த ஒரு நாடு . யாருக்கு என்ன நடக்கும் எனச் சொல்ல முடியாது . போரிலே வீடு , பனை மரங்கள் , வயல்கள்….என எல்லாவற்றையும் நாசம் பண்ணி வைக்கலையா . அம்மா , நீ ,நாம் தப்பித்தது எல்லாம் அதிருஸ்டம் என்று நினைத்திருந்தோம் . அது உண்மையில் அதிருஸ்டமில்லை . நீ மனதை திடப்படுத்திக் கொள் ” என்றார் . கலவர நட்டங்களை நினைவு படுத்தி தான் ஆறுதல் படுத்த வேண்டி இருந்தது . ‘ இருக்கிற நாம் பலமாக இருக்க வேண்டும் ‘ எனச் சொல்ல வருகிறார் . கடவுள் நின்று பதில் அளிக்கிறவர் . எப்படி அவர்கள் எம்மைக் கொன்றார்களோ அப்படியே அவர்கள் ஒவ்வொருவருக்கும் தண்டனை அளித்து வருவார் .
அவர்கள் வீட்டில் அம்மாவின் படம் வைக்கப்பட்டு அகல் விளக்கு எரிந்து கொண்டிருப்பதை சிலையாக நின்று பார்த்துக் கொண்டிருந்தான் . பானு , ஓரமாக நின்று அவனை அனுதாபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் . அக்காவும் கார்த்திகை விளக்கு வைக்கப் போய் தான் …எங்கையோ தவறுதலாக எரியத் தொடங்கி… எரிந்து போய் இருப்பார்களோ ?. அவனிடம் பட்சமாக இருக்கிற அக்காவுக்கு …? , நினைக்க நினைக்க குமுறல் தான் வருகிறது . பானுவின் அப்பா , ” நீ இவளின் கழுத்தில் ஒரு மஞ்சள்க் கயிறை கட்டிக் கொண்டு இங்கேயே இரு , அல்லது உன்ர வீட்டிலே இரு .கல்யாணம் என இப்ப பெரிதாய் செய்ய முடியாது .உன்னையும் தனிய விட முடியாது ” என்றார் . சில உறவினர்,நண்பர் , ஐயருடன் பிள்லையார் கோவிலில் கட்டுறது நிகழ இருக்கிறது . அழுகிறதுக்கு கூட இரண்டு , மூன்று நாள்கள் வேண்டும் என கேட்க முடியாதவனாய் பாசி நிற்கிறான் .
கிழக்கும் வெளுக்கவில்லை , மேற்கும் வெளுக்கவில்லை என்றால் …..நாம் கடைசியில் எங்கே தான் செல்வோம் ?
* இந்த கதையில் வாரமாதிரியே , வெளி நாடு ஒன்றில் இருந்த எம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் இறந்திருக்கிறார்கள் . ?…இப்படி நிகழ்கிறது தவிர்க்கப்பட வேண்டும் , தவிர்க்கக் கூடியதும் கூட ! . இப்படி நிகழ்கிற பெருந்துயர் எம்மை நீண்ட காலத்திற்கு அழ வைத்து , வலது குறைந்த ….நிலையில் ஆழ்த்தி வைக்கப் போகின்றது . இலங்கையில் சாதாரண வீடு ஒன்று கட்டப்படும் போதே , முன்புறமும் , பின்புறமும் குறிப்பிட்டளவு நிலப்பரப்பு விடப்பட வேண்டும் என்ற கட்டிட விதிகள் இருக்கின்றன . இங்கும் அதே அதே பில்டிங் கோட்’டே நிலவுறதாகச் சொல்கிறார்கள் . ஆனால் , இங்கு அவை ஏன் பேணப்படுறதில்லை . அரசர் காலங்களிலே நிலக்கீழ்ப்பாதைகள் பாதுகாப்பிற்காகவேக் கட்டப்பட்டிருந்திருக்கின்றன . நகரசபையும் இவ்விதிகளைப் பேணி , பொறியியலாளர்களிடம் நிலவழியை நிர்மாணிக்க கூறி இருந்திருந்தால்…உடனடியாகவே திறம்பட அமைத்து கொடுத்தும் இருப்பார்கள் . இவர்களின் சேவையில் ‘ இட நிரப்பு வெளிகள் ‘ கூடிக் கொண்டே போகின்றன . மனம் கிடந்து அடித்துக் கொண்டே இருக்கின்றது . இங்கும் ” மனிதம் ‘ குறித்த அலட்சியம் மேலோங்கி வருக்கின்றது போல பயம் கொள்ள வைக்கின்றது . கிழக்கும் வெளுக்கவில்லை , மேற்கும் வெளுக்கவில்லை என்றால் …..நாம் கடைசியில் எங்கே தான் செல்வோம் ?
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.