இரும்புக் கதவுகள் கிறீச்சிட்ட சத்தத்தில் நடேசுவிற்கு விழிப்பு வந்திருக்க வேண்டும். இருட்டுக்குள் பழகிப் போன குழிவிழுந்த கண்களுக்குள் வெளிச்சம் பாய்ச்சப் பட்டதும், கூச்சம் தாங்காமல் அவை தானாகவே இறுக மூடிக் கொண்டன. இமைகள் மூடிக் கொண்டாலும் காது மடல்கள் விரிந்து நெருங்கி வரும் கனமான பூட்ஸின் அதிர்வுகளை மௌனமாக உள்வாங்கிக் கொண்டன. ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதற்கான எதிர்பார்ப்பில், இதயம் ஏனோ வேகமாகப் படபடவென்று அடித்துக் கொண்டது. மிக அருகே அதிர்வுகள் நிசப்தமாகிப் போனதால், பயத்தில் இதயம் இன்னும் வேகமாக அடித்துக் கொள்ள, தூங்குவது போலப் பாசாங்கு செய்ய முனைந்தான்.

‘எழுந்திருடா’ பூட்ஸ் கால் ஒன்று விலாவில் பட்டுத் தெறித்தது.

துடித்துப் பதைத்துக் கைகளை ஊன்றி எழுந்திருக்க முயற்சி செய்தான். ‘சுள்’ என்று முழங்கால் மூட்டு வலித்தது. அடிக்கு மேல் அடிவாங்கிய அந்த உடம்பிற்கு, எங்கே வலிக்கிறது என்பதைக்கூட உணர முடியாமல் இருந்தது. வீங்கிப்போன கால்கள் எழுந்து நிற்கமுடியாமல் துவண்டு சரிந்தன. வந்தது யாராய் இருக்கும் என்று ஊகித்ததில் நிமிர்ந்து பார்க்கவே பயமாக இருந்தது.

‘வெளியே வாடா நா..!’ தொண்டை கிழிய அவன் கூச்சல் போட்ட போது அவனது குரலை இவனால் இனம் காண முடிந்தது. அவனது கண்களில் இவன் படும் போதெல்லாம் இப்படித்தான் கொச்சைத் தமிழில் கூச்சல் போட்டுக் கத்துவான். ஒரு போதும் அவனது வாயிலிருந்து நல்ல சொற்கள் உதிர்ந்ததை இவன் கேட்டதில்லை.

தள்ளாடியபடியே வெளியே வந்து, அச்சத்துடன் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு சப்பாத்துக் கால்களைப் பின் தொடர்ந்தான். இரும்புக் கதவுகள் பல திறந்து, மூடப்பட்டு இறுதியில் ஒரு அறைக்குள் இருந்த அதிகாரி முன் நிறுத்தப் பட்டான். இந்தச் சிறைக்கு மாற்றப்பட்ட நாளில் இருந்து யாரையுமே நிமிர்ந்து பார்க்க அவனுக்குப் பயமாக இருந்தது.

‘நீ நடேசுதானே..?’

எப்போவோ மறந்துபோன அவனது பெயர் நினைவுவர மெல்ல தலை நிமிர்த்திக் குரல் வந்த திசை நோக்கிப் பார்வையைச் செலுத்தினான். அவனைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய ஆவணமாய் இருக்கலாம், அந்த அதிகாரிக்கு முன்னால் மேசையில் விரித்து வைக்கப்பட்டிருந்தது. அதுவும் இவனது கடந்த கால நிலையற்ற வாழ்க்கைபோல, மின்விசிறிக் காற்றில் அடிபட்டுத் துடித்துக் கொண்டிருந்தது.

எதுவும் பேசாது தலையாட்டிக் காளைபோல, இவன் தன்னிச்சையாய் தலை அசைத்தான்.

‘உனக்கு விடுதலை, கையொப்பம் போட்டு விட்டு நீ போகலாம்..!’

அவனுக்குத் திக்கென்றது. விடுதலையா? எனக்கா? அவன் ஒருபோதும் விடுதலை வேண்டும் என்று கேட்கவே இல்லையே..?

விடுதலை என்று கையொப்பம் போட்ட பல தமிழ் இளைஞர்கள் வீடுபோய்ச் சேரவில்லை என்பது இவனுக்குத் தெரியும். இவனைக் கொண்டே அப்படிப் பலரின் சடலங்களைப் புதைத்தால் என்றாவது தெரியவருமென்று, அடையாளம் தெரியாமல் எரிக்கப் பண்ணியிருக்கிறார்கள்.

கையிலே ஒரு பையைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். கையெழுத்துப் போட்டுவிட்டு பிரித்துப் பார்த்தான். இருபத்திரண்டு வருடங்களுக்கு முன் இவன் கைதானபோது அணிந்திருந்த வேட்டியும், சேட்டும் இவன் நினைவுகளைப் போலவே அவையும் கசங்கி மங்கிப்போய்க் கிடந்தன. சேட்டை உதறி மாட்டிப் பார்த்தான். தொளதொளத்துப் போயிருந்தது. தாடியும், பரட்டைத் தலையும் தெருப் பிச்சைக்காரனை அவனுக்கு ஞாபகமூட்டியது.

பலியாடு போலப் பின்தொடர, இராணுவ தடை முகாமிற்கு வெளியே உள்ள வீதியில் அவனைக் கொண்டு வந்து விட்டார்கள். இவனது இளமைக் காலத்தை முற்றாகக் கொள்ளையடித்த அந்த இராணுவ முகாமை வெறுப்போடு திரும்பிப் பார்த்துக் கொண்டே உயிர் வாழும் ஆசையில் அந்த இடத்தை விட்டு வேகமாய் நடந்தான்.

இனி எங்கே போவது? யாரிடம் போவது?

உள்ளே இருக்கும்வரை இல்லாத பிரச்சனை இப்போ பூதாகரமாய் தலை தூக்கி நின்றது. காலையில் இருந்து பட்டினி கிடந்ததால் பசி வயிற்றைக் கிண்டியது. உள்ளே இருந்திருந்தால் ஒருவேளை கஞ்சியாவது கிடைத்திருக்கும். உடலும் உள்ளமும் சோர்ந்து போக அப்படியே தெருவோர மரத்தடியில் உட்கார்ந்தான்.

மழை வரும்போல, ஆங்காங்கே வானம் கறுத்திருக்க குளிர் காற்று சில்லிட்டது. சூடாக ஏதாவது குடித்தால் இதமாக இருக்கும்போல் தோன்றிற்று. யாரோ பாதி குடித்துவிட்டுக் கீழே போட்டு நசுக்கிவிட்ட பீடித்துண்டு ஒன்று குழி விழுந்த தெருவில் அரை உயிரோடு இழுப்பு வந்ததுபோல இழுத்துக் கொண்டு கிடந்தது. அதை எடுத்து அதில் ஒட்டியிருந்த மண் துகள்களை ஊதித் தள்ளிவிட்டு வாயில் வைத்து உதட்டைக் குவித்து ஒரு இழுப்பு இழுத்தான். இழுத்த இழுப்பில் இதமான சூடு உள்ளே உடம்பெல்லாம் பரவ, நரம்புகள் புடைத்து நிற்பதை இவன் உணர்ந்தான். அந்த பீடித்துண்டு கொடுத்த உட்சாகத்தோடு மீண்டும் எழுந்து தள்ளாடியபடி நடந்தான்.

எங்கே போவது என்று தெரியாமல் கால்போன திசையில் விச்ராந்தியாக நடந்தான். கனமான பூட்ஸ் கால்கள் பதிந்த இடமெல்லாம் திட்டுத் திட்டாய் வீங்கிப் போயிருந்தன. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் வேதனை தாங்காது ‘விண் விண்’ என்று மூட்டுக்கள் வலித்தன. காலாகாலமாய் முடிவின்றி நடந்ததுபோல கால்கள் துவண்டு போயின. இன்னும் எவ்வளவு தூரம்..?

எப்படியோ யாரையோ எல்லாம் கெஞ்சி மன்றாடி, மாடுகள் சோடைபிடித்துப் போவதுபோல கடைசியில் இவனும் தான் பிறந்த மண்ணுக்கு வந்து சேர்ந்தான். இருபத்திரண்டு வருடங்களுக்குமுன் இருந்த கிராமம் எப்படியோ எல்லாம் மாறிப்போயிருந்தது. பெட்டிக்கடை மளிகைக் கடையாய் மாறி இருப்பதை அதிசயமாய்ப் பார்த்தான். குழந்தை பசியிலே வீரிட்டதைத் தாங்கமுடியாமல் ஊரடங்குச் சட்டத்தையும் பொருட்படுத்தாமல் தெருவைக் கடந்து பின்பக்கத்தில் இருந்த பெட்டிக் கடைக்குப் பால்மா வாங்கச் சென்ற பொழுதுதான் இவன் இராணுவத்தால் பிடிக்கப்பட்டான்.

அப்புறம் வேண்டாத குற்றமெல்லாம் இவன்மீது சாட்டி இவனையும் கும்பலோடு கும்பலாகக் கொண்டு போனார்கள். ஒவ்வொரு முகாமாக இவனைக் கொண்டு திரிந்து, அலைக்கழித்து இவனது குடும்பத்திற்கு கண்ணாமூச்சி காட்டினார்கள். பணவசதியோ செல்வாக்கோ இல்லாததால் இவனை வெளியே கொண்டுவர இத்தனை காலமாகியும் இவனது குடும்பத்தால் எதுவுமே செய்ய முடியாமல் போய்விட்டது.

யார்யாரையோ எல்லாம் விசாரிக்க, கடைசியில் கடைக்கு முன்னால் உள்ள மரத்தடியில் கண்ணாடியோடு உட்கார்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்த வயோதிபர்தான் அவனை யார் என்று அடையாளம் கண்டு கொண்டார்.

‘தன் கணவன் உயிரோடு இருக்கிறான்’ என்ற ஒரு நல்ல வார்த்தையைக் கேட்பதற்காக ஒவ்வொரு முகாமாக இவன் மனைவி அலைந்து திரிந்து உயிர் உருக அரசிடம் யாசித்தது அவர் மனக்கண்முன் நிழலாய் வந்தது.

நடேசு தனது குடும்பத்தைப் பற்றி அவரிடம் விசாரித்தான். அவர் கொடுத்த தகவலின்படி அவனது மனைவி இறந்து போனதும், மகள் பாட்டியோடு வளர்ந்து வந்ததும், இப்போ திருமணமாகி அந்த ஊரிலேயே தங்கி இருப்பதும் தெரியவந்தது.

”நீ திரும்பி வருவாய் என்று நாங்கள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை நடேசு!” அவனது மகள் குடியிருக்கும் ஒதுக்குப் புறமான ஒரு குடிசைக்கு அவனை அவர் அழைத்துச் செல்லும் போது அவர் ஆச்சரியமாய்ச் சொன்னார்.

வாசலில் சொறி நாய் ஒன்று கண்மூடிப் படுத்திருந்தது. நாயைச் சுற்றி ஈக்கள் வட்டமிட்டு மொய்த்துக் கொண்டிருக்க, மெல்லிய உறுமலோடு தலை நிமிர்த்திப் பார்த்துவிட்டு மீண்டும் சுருண்டு படுத்துக் கொண்டது.

அறிமுகம் இல்லாத இவனைப் பார்த்துக் குரைக்காமல் விட்டதே இவனுக்கு மிகப்பொரிய ஆறுதலாக இருந்தது.

‘சரசு..!’ என்று பெரியவர் வெளியே நின்றபடி குரல் கொடுத்தார்.
இருபத்திமூன்று, அல்லது இருபத்திநாலு வயது மதிக்கத்தக்க பெண்ணொருத்தி வெளியே வந்தாள். அவளின் முந்தானையைப் பிடித்தபடி நாலு, ஐந்து வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்றும் தொடர்ந்து வந்தது.

நடேசு ஆச்சரியத்தோடு வெயியே வந்த அந்தப் பெண்ணைப் பார்த்தான். இருபத்திரண்டு வருடங்களுக்குமுன் மனைவியைப் பார்த்த ஞாபகம் சட்டென்று வந்தது.

‘சரசு, இது யார் என்று தெரியுதா..?’

அவள் நடேசுவைச் சலனமற்ற ஒரு பார்வை பார்த்துவிட்டு ‘தெரியாது’ என்பது போலத் தலையசைத்தாள்.

‘இதுதான் உன்னோட அப்பா, நடேசு..!’

அவள் அந்த வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. அவளது முகபாவத்தில் இருந்து அதை ஏற்றுக் கொள்ளும் நிலையில் அவள் இல்லை என்பது இவனுக்குப் புரிந்து போயிற்று. அவளோ வேண்டாத சந்தேகத்தோடு நடேசுவைப் பார்த்தாள்.

‘அவர்தான் செத்துப் போயிட்டாரே..?’ புதிதாக ஒருவனை ஏற்கமுடியாத நிலையில் வார்த்தைகள் இழுபட்டன.

‘இல்லை சரசு, தொலைந்து போனவன், செத்துப் போயிட்டான் என்றுதான் நாங்க எல்லோரும் நினைச்சு கருமாதி எல்லாம் செய்திட்டோம். ஆனால் இத்தனை வருடமாய் மாறிமாறி ஒவ்வொரு தடைமுகாமிலையும் இருந்திருக்கிறான். இப்பதான் நாட்டிலே சமாதானம் என்று சொல்லி இவனை விடுதலை செய்தார்களாம்.’

அவள் இடையிலே வந்த இந்தப் புதிய உறவை ஏற்றுக் கொள்ள முடியாதவளாய், இந்தக் கதை எல்லாம் எனக்கு வேண்டாம் என்பது போலப் பிடிவாதமாய், அவரது கூற்றை மறுப்பதுபோலத் தலையசைத்தாள்.

‘அப்பா என்கிற உறவே என்ன என்று தெரியாமல் நான் இத்தனை வருசமாய் வளர்ந்திட்டேன், பாட்டி போனதுக்கப்புறம் வேளாவேளைக்குச் சாப்பிடக்கூட வழியில்லை. கூலி வேலை செய்து இந்தக் குழந்தையை வளர்த்து எடுக்கவே என்பாடு சங்கடமாய் இருக்கு. இப்போ புதிதாய் இந்த வயதிலே அப்பா என்று இவர் உறவு முறை சொல்லிக் கொண்டு வந்தால் நான் என்ன செய்ய..? இருக்கிற சுமையே எனக்குப் போதும் சாமி, இனி என்னாலே புதிதாய் வேறு ஒரு சுமையையும் தாங்கமுடியாது!’

இது போலக் கௌரவமாக வாழ்ந்த இப்படி எத்தனை ஆயிரம் குடும்பங்கள் அந்த மண்ணிலே சிதைக்கப்பட்டு அவர்களின் எதிர்காலக் கனவுகள் எல்லாம் பெரும்பான்மை இனத்தவர்களால் கொள்ளை அடிக்கப் பட்டிருக்கின்றன என்பதை நினைத்துப் பார்க்க நடேசுவுக்கு ஓவென்று அழவேண்டும் போலிருந்தது. ஆழமாக நினைவுமுள் கிழித்த வேதனையில் காலில் இருந்த வலி மறந்துபோக, தன் எதிர்காலம் குறித்த கவலை இப்போது அவனைப் பிடித்துக் கொண்டது.

‘பாட்டிக்கு என்னாச்சு..?’ பெரியவர் கேட்டார்.

‘பாட்டி போனவருடம் செத்துப் போயிட்டா.’ என்றாள் சரசு.

‘அப்போ உன் புருசன்..?’

‘மூன்று வருடமாச்சு, இவனுக்கு சாப்பிட ஏதாவது கடையிலே வாங்கிக் கொண்டு வர்றேன் என்று சொல்லிவிட்டு கடைப்பக்கம் போனவர்தான் அப்புறம் திரும்பி வரவே இல்லை..!’ என்றாள்.

உயிரோடு சரணடைந்தவர்களையே காணாமலாக்கப்பட்டபோது..இவன் ?

எங்கே போயிருப்பான் என்பதுதான் எப்போதுமே விடை தெரியாக் கேள்வியாய்த் தொக்கி நிற்கிறது. தன்னைப் போலவே தொலைந்து போனவர்களின் பட்டியலில் அவனது பெயரும் எங்கேயாவது எழுதப்பட்டிருக்கலாம் என இவன் நினைத்தான். இன்று நாட்டில் இருக்கும் சூழ்நிலையில் அவன் உயிரோடு இருப்பானோ என்பதுகூட இவனுக்குச் சந்தேகமாய் இருந்தது.

‘ஏதோ பெற்றெடுத்த கடமைக்காக என்றாலும் காய்ச்சிற கஞ்சியோ, கூழோ மிச்சம் இருக்கிறதைக் கொடுத்தால் போதும் சரசு, உனக்கு ஒருகாலும் நடேசு பாரமாய் இருக்கமாட்டான்.’ வேலி ஓலையில் பிய்த்து எடுத்த ஈக்குச்சியால் பல்லைக் குடைந்து கொண்டிருந்த நடேசுவிற்காகப் பெரியவர் பரிந்துரைத்தார்.

கனவு கண்டுகொண்டு வாசலில் படுத்திருந்த நாய் திடீரென எழுந்து தன் இருப்பை உறுதி செய்ய ஒரு உசுப்பல் உசுப்பி சோம்பல் முறித்தது. நடேசுவைக் கண்டு கொள்ளாமல், ஒரு பாய்ச்சல் பாய்ந்து எதிர் வீட்டுக் கோழியை விரட்டிக் கொண்டு ஓடியது. வாசலின் வெறுமையில் கலைந்துபோன ஈக்கள் எல்லாம் இப்போ நடேசுவைச் சுற்றி மொய்க்கத் தொடங்கின.

* (கனடியத் தமிழ் வானொலி (CTR) சர்வதேசரீதியாக நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு பெற்ற சிறுகதை.)

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்