* ‘சிதரால் திருச்சாரணத்து மலை’ சமணப்பள்ளி – ஆசிரியர் டாக்டர் சிவ.விவேகானந்தன் , வெளியீடு காவ்யா, விலை – 300
நூலாய்வு
தேனடைகளைக் கொண்ட ஏராளமான ஆலமரங்களைக் கொண்ட ஊருக்குச் சிதரால் என்று பெயர். இப்பெயர் குறித்து கல்வெட்டுகளிலோ, கதைப் பாடல்களிலோ இல்லை என்பைதையும் ஆசிரியர் குறிப்பிடுகிறார். சிதரால் நடுவே அமைந்துள்ளது திருச்சாரணத்துமலை. மலை உச்சியில் சமணப்பள்ளி ஒன்றும் உள்ளது. திருச்சாரணத்து மலையில் வீற்றிருக்கும் படாரியான பத்மாவதி அம்மனுக்கு (இவர் இயக்கி என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்) ஆறாட்டுக்காக, சமணப் பெண் துறவிகளால் வெட்டப்பட்ட நீர்ச்சுனை ஒன்று உள்ளது. சமணப்பள்ளி ஏறத்தாழ ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. சமணப்பள்ளி சமண மடாலயம் என்று அழைக்கப்பட்டது.
சமண சமயத்து இளந்துறவிகளான சாரணர்கள் சிதரால் மலையில் தங்கியிருந்து சமணப் பணி செய்துள்ளனர். திருச்சாரணத்துமலை சமணப் பள்ளியைப் போல முற்காலத்தில் பல பள்ளிகள் அமைந்துள்ள திருச்சாரணத்து மலைக் கோவிலில் பாசுவநாதரும், பத்மாவதி இயக்கியும் கோவிலில் தெய்வமாக இருந்துள்ளனர். வியப்பு என்னவென்றால் சைவம் புகுந்த போது சமண சமயத்து இயக்கியான பத்மாவதி, சைவசமயத்து பகவதி அம்மனாக மாற்றம் பெற்றனர்.
தொடக்கத்தில் குகைப் பள்ளியாக இருந்த இக் குகை 8ஆம் நுற்றாண்டிலிருந்து குகைக் கோவிலாக மாற்றம் பெற்றது. வழிபாடுகளும் சமயப் போதனைகளும் இங்கு நடைபெற்றன. குகைக் கோவிலாக மாற்றம் பெற்ற நிலையில் இந்துக்கோவிலாக மாறி பகவதி அம்மனான உருமாற்றம் பெற்றது.
திருச்சாரணத்து மலைக் கோவிலில் காணப்படும் கல்வெட்டுக்கள் பதினேழு. இவற்றில் பன்னிரெண்டு கல்வெட்டுகள் சமணசமயம் தொடர்பானவை.
திருச்சாரணத்துமலை சமணப்பள்ளி கி.பி 12ஆம் நூற்றாண்டுத் தொடங்கி, சைவமதத்தைத் தனக்குள் கொண்டதாக விளங்கியது. தமிழ்ப் பல்லவராயனால் இம்மாற்றம் நடைபெற்றது.
சைவ சமய நாயன்மார்களைப் போல சமணத்துறவிகளும் 9ஆம் நூற்றாண்டு முதல் பல இடங்களுக்குச் சென்று சமயப் பணி செய்து வந்தனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் அச்சநந்தி ஆவார். இக்குறிப்பு திருச்சாரணத்துமலை கல்வெட்டில் காண்ப்படுகிறது.
வீரசங்கம் என அமைத்துக் கொண்டு 9ஆம் நூற்றாண்டு முதல் பாண்டிய நாடு முழுவதும் சென்று சமயப் பணி செய்தனர் சமணசமயத்துறவிகள்.
உத்தநந்தி என்னும் சமணசமயப் பெருந்துறவி ஒருவர் திருக்கோட்டாறு நாகராஜா கோவிலைச் சார்ந்தவர். இங்குத் தலைமை தெய்வம் பத்மாவதி என்னும் நாகர். இவரது கணவர் தரனேந்திரன் நாகராஜாவாக உறைந்துள்ளார். தமிழகத்தில் கி.பி.3ஆம் நூற்றாண்டு முதல் சமணத்துறவிகள் உறைந்துள்ள குகைப் பள்ளிகள் தமிழகம் முழுவதும் பரவியுள்ளன. தொடக்கக் காலத்தில் சமணசமயம், சமயப் பணிக்கு முதன்மை தந்ததே ஒழிய உருவ வழிபாட்டிற்கு அல்ல.
சமணசமயத்தில் உள்ள தீர்த்தங்கரர் ஒவ்வொருவருக்கும் இயக்கர், இயக்கி என்ற பரிவாரத் தெய்வங்கள் உண்டு. தீர்த்தங்கரர்கள் அறிவிற் சிறந்தவர்களாக மதிக்கப்பட்டனர்.
தற்காலத்தில் திருச்சாரணத்துமலைக் கோவிலின் உள் வழிபாட்டு மூலவர்களாக பகவதி அம்மன், மகாவீரர், பார்சுவநாதர் ஆகிய மூவரும் உள்ளனர்.
திருச்சாரணத்து மலைக் கோவில் மகா மண்டபதில் இரு பார்சுவநாத சிலைகள் காணப்படுகின்றன. பார்சுவநாதரின் தலை மீது காணப்படும் பாம்பின் படம் ஒன்று விரிந்த நிலையிலும் மற்றது ஒடுங்கிய நிலையிலும் காணப்படுகின்றன.
பத்மாவதி பாம்புக் குடை பிடிக்க பத்மாசனத்தில் அமர்ந்திருப்பார். கட்டடக்கோவில் வழிபாடு கி.பி.7,8ஆம் நூற்றாண்டில் உருவாயிற்று. முன்னர்க் குகைப் பள்ளியாக இருந்தது. தீர்த்தங்கரர் திசைகளையே ஆடைகளாகக் கொண்டவர்கள். அறிவு சான்றவர்கள். திருச்சாரணத்துமலைப்பதிகம் புலவர் திரு.ஜம்பு குமாரன் அவர்களால் பாடப்பெற்றது.
தமிழகத்தில் பண்டைக் காலத்தில் குமரி மாவட்டத்தில் சமணசமயம் சிறந்தோங்கி இருந்தது என்பதைக் கழுகுமலைக் கல்வெட்டுத் தெரிவிக்கிறது.
குமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில் முற்காலத்தில் கோட்டாறு என அழைக்கப்பட்டது. நாகராஜா கோவிலின் சமணசமயத்து பெண் தெய்வமாக பத்மாவதி என்னும் நாகர் பெயரால் அவ்வூர் நாகர்கோவில் என வழங்கப்பட்டது. இப்பொழுது நாகர்கோவிலின் ஒரு பகுதியாக கோட்டாறு விளங்குவதாக ஆசிரியர் தெரிவிக்கிறார்.
நூலாசிரியர் சிவவிவேகானந்தன் முன்பே ஆராய்சிகள் பல செய்து ‘குமரி மாவட்டத்தில் சமணம்’ பற்றி நூல்கள் வெளியிட்டுள்ளார். அவற்றில் ஒன்றுதான் ‘சிதரால் திருச்சாரணத்துமலை சமணப்பள்ளி’ என்பதாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமணப்பள்ளியாகவும், கல்வி நிலையமாகவும் திருச்சாரணத்துமலைப் பள்ளி விளங்கியது என்பதை இந்நூலில் தெரிவிக்கிறார்.
தமிழகத்தின் கல்வி வரலாற்றில் சமணம், பவுத்தம் மற்றும் சைவம் வைணவம் முதலிய சமயங்கள் போற்றிய கல்வி மரபுகள் எப்படி அழிந்து போயின? தமிழகம் அறிவுத் துறையில் எவ்வாறு பின்தங்கிப் போனது? என்ற தமிழர் அறிவு வீழ்ச்சி வரலாற்றை அறிந்து நாம் வேதனைப்படுகிறோம்.
தமிழகம் எங்கும் விரிவாகப் பரவியிருந்த சமணக்கல்வி நிலையங்களும், கல்வியும் அழிந்து போன வரலாற்றின் எச்சம்தான் திருச்சாரணத்துமலை சமணப்பள்ளி என்பதை ஆசிரியர் நூலில் விரிவாக எடுத்துரைக்கிறார்.
வேளான் இனத்தின் ஆதரவோடு வளர்ந்த பக்தி இயக்க வளர்ச்சி அறிவை விட நம்பிக்கைக்கும், சடங்குகள் வழிபாடுகளை முன்னிறுத்தித் தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கும் அறிவு மரபுகளின் மலர்ச்சிக்கும் குந்தகமாக இருந்திருக்கலாமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.
சமணம் எப்படி சைவம் ஆயிற்று? என்பது பற்றிக் குறிப்புகள் பலவற்றைத் தருகிறார் நூலாசிரியர்.
சமணம் தோன்றியது தமிழ்நாடுதான் அதுவும் கடல் கொண்ட குமரிக்கணடத்திலேயே என்பதை நிறுவுகிறார்.
நாகராஜா கோவில் தற்பொழுது சபரிமலை அய்யப்பன் சன்னதியாக மாற்றம் பெற்றுள்ளது என்பதையும் விளக்குகிறார்.
சைவ விவசாயிகளும், நிலச்சுவான்தார்களும் சமண வணிகர்களுக்கு எதிராகத் தொடுத்த பொருளாதாரப் போர்தான் சைவத்திற்கும் சமணத்திற்கும் இடையில் எழுந்த பெரும் போராக வடிவெடுத்தது என்பதைச் சுட்டுகிறார்.
நாக வழிபாடு, சாஸ்தா வழிபாடு, இயக்கி வழிபாடு முதலானவை இன்னும் மக்கள் உணர்வோடும் வாழ்வோடும் சமணமதம் ஒன்றியிருக்கிறது என்பதற்கு சான்றாகும் என்கிறார் ஆசிரியர்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.