எனது ஐந்து வயதுப்பேரனுக்கு பீட்டர் என்ற முயலின் கதையை (Tale of Peter the Rabbit) சமீபத்தில் வாசித்தேன் . அந்த கதை பலருக்குத் தெரிந்திருக்கும். தாய் முயல் தனது பிள்ளைகளான புளுப்சி, மெர்சி, கொட்டன் ரயில் மற்றும் பீட்டரிடம் , “நீங்கள் போய் விளையாடுங்கள். ஆனால் மிஸ்டர் மக்கிரகரின் தோட்டத்திற்கு போகவேண்டாம் . ஏற்கனவே அங்கு போனதால் திருமதி மக்கிரகர், சில காலத்தின் முன்பு உங்களது தந்தையை தங்களது உணவாக சமைத்து உண்டுவிட்டார்கள். ஆகவே கவனம் ” என எச்சரிப்பார்

பீட்டர் என்ற முயல் மட்டும் தாயின் சொல்லை கேளாது, மக்கிரகரின் தோட்டத்தினுள் புகுந்து சென்று, அதிகமான காய்கறிகளை உண்டது . மக்கிரகர் வந்தபோது அவர்களது தோட்டத்தின் குடிலில் ஒளித்திருந்து ,தப்பி ஓடி வரும்போது போட்டிருந்த உடை, காலணி என்பவற்றை தோட்டத்துள் விட்டு விட்டு, தலை தெறிக்க ஓடிவருகிறது. வீடு வந்தபோதும் , தோட்டத்தில் வயிறு புடைக்கத் தின்றதால், பீட்டர் வயிற்றுவலியால் அவதிப்பட்டது . தாய் கசாயத் தேநீர் கொடுத்து பட்டினியாகப் பீட்டரைப் படுக்க வைக்கும்போது, ஒழுங்காகத் தாயின் சொல்லைக் கேட்ட மற்றைய மூன்று குட்டிகளும் பிளாக்பெரி, பாண், பால் என விருந்துண்டார்கள்.

இந்த சிறிய கதை, சில வசனங்களோடு படங்களாக எழுதப்பட்டிருந்தது . மிகப் பிரபலமாகத் திரைப்படமாகவும் வந்துள்ளது . படம் சிலகாலம் தடை செய்யப்பட்டிருந்தது. இதில் பீட்டரின் தந்தை, ஏற்கனவே மிஸ்டர் மக்கிரகரின் தோட்டத்துக்குள் சென்ற உணவாகிய விடயத்தை நான் அழுத்தமற்று வாசித்தபோது, எனது பேரன் , பீட்டரின் தந்தைக்கு என்ன நடந்தது என்று கேட்டான் – நான் அதை விளக்கியதும் அவன் கண்ணீருடன் சோகமானான். இருவரும் அத்துடன் அந்த புத்தகத்தை மூடிவிட்டாலும், அவனாலும் என்னாலும் பீட்டர் என்ற முயல் கதை எக்காலத்திலும் மறக்கமுடியாது உள்ளது

காரணம் பீட்டர் என்ற முழுமையான பாத்திரமே

அதே போல் சத்தியம் மீறியபோது என்ற நெடுங்கதையில் பாட்டியின் பாத்திரமே மனத்தில் நிற்கிறது . பாட்டியின் ஒவ்வொரு செய்கையிலும் வார்த்தைகளிலும் பாத்திரத்தின் குணங்கள் முழுமையாக வெளிப்படுத்தப்படுகிறது.

புனைகதைகளுக்கு உரிய புனைவின் மொழியாக எழுதப்படாது கதை. யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கில் உள்ளது.

கதையில் நடந்த சம்பவங்கள், போர்க்காலத்தில் நடந்தவை . நாம் எல்லோரும் வானொலி பத்திரிகை தொலைக்காட்சி என அறிந்த உண்மையான சம்பவங்கள் . ஆனால் பாத்திரத்தின் செயல்களால் விவரிக்கப்படும்போது ஒடிசியசின் சாகச செயல்போல் நமக்கு மனத்தில் வந்து திரையிடுகிறது . மகனின்மேல் உள்ள அன்பால், மகளுக்குச் செய்த சத்தியத்தை மீறிச் சென்றபோது தாய்ப்பாசம் வெளிவருகிறது – ஒரு தாய் நமக்குக் கிடைக்கிறது. அப்போது நமது தாய்மாரையும் கதை நினைவில் கொண்டுவருகிறது.

பிறந்த ஊரின்மேல் உள்ள பாசம் – அங்குப் பேசப்படும் இயக்கப்போராளிகள் சார்பான அரசியலில், மண்ணின் மீதான ஒரு அசாதாரணமான ஈரம் வெளிவந்து நமது இதயத்தில் கசிவை ஏற்படுத்துகிறது.

பிடிவாதம் – குழந்தைகள்போல் வயதானவர்கள் பிடிவாதம் கொண்டவர்கள். அவர்களுக்கு மற்றவர்களோடு ஒத்துப்போய், இனிமேல் எதையும் சாதிக்கவேண்டும் என்ற தேவை இல்லை அதற்கப்பால் மற்றவர்களிலும் பார்க்க, இந்த உலகில் வாழ்ந்து பார்த்துவிட்டோம் என்ற தன்னம்பிக்கை உள்ளது- அதைக் கதையின் பல இடங்களில் பார்க்கமுடியும். முக்கியமாக இந்தியக்கரையில் மற்றைய அகதிகளை அகதி முகாங்களுக்கு எடுத்துச் செல்ல முயன்ற அதிகாரிகளிடம், நான் மகளிடம் போகிறேன் என அந்தப்பாட்டி சொல்வது இலகுவானதல்ல. நான் தென்னிந்திய அகதிகள் முகாங்களில் வேலை செய்தவன் – அதிகாரிகள் ஏய் , இந்தா - என ஏகவசனத்தில் பேசி குறுநில அரசாக அரசாள்வார்கள்.

பாட்டி, யாழ்ப்பாணத்திலிருந்த காலத்தில் திருமணம் செய்து வெளிநாடு போக இருந்த இளம்பெண்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுத்தது மற்றவர்களுக்கு உதவும் குணத்தைக் காட்டுகிறது.
-இரண்டு முருகேசன்களும் என்னைப் பார்த்துக்கொள்வார்கள் என மகன் முருகேசனையும் நல்லூர் முருகனையும் சேர்த்துச் சொன்னது நகைச்சுவை உணர்வை நமக்குக் காட்டுகிறது .அதேபோல் சிவராத்திரியில் நித்திரை வராதிருக்க ஒருவரை ஒருவர் கிள்ளுவோம் என எனநினைத்து படகில் பக்கத்தில் உள்ளவரைக் கிள்ளினால் தடித்த மனிதன் கடலுக்குள் தூக்கி எறந்துவிடுவார் என்று மனத்தில் எழும் குறுகுறுப்பை சொல்லுவது நம்மைப் புன்னகைக்க வைக்கிறது.

யாழ்ப்பாண பாரம்பரியமான ரேடியோப்பு என மூன்று வளையல்கள் ஒட்டியிருப்பதை சொன்னது – இதுவரை எனக்குத் தெரியாது – ஆனால் அக்காலத்தில்யாழ்பாணம் வந்த பிலிப் வானொலியின் முன்பக்கம் அப்படியாக இருந்தது என்பது எனக்கு நினைவு வருகிறது

வாழும் ஆசை என்பது சகல உயிர்களுக்கும் பொதுவானது. ஆனால் மதங்கள் பல இதை மறுக்கிறது . அத்துடன் அடுத்த பிறவியில் உனக்குச் சொர்க்கம் கிடைக்கும் அல்லது பிறவாத நிர்வாண நிலை அடைவாய் என்கின்றன. மொத்தத்தில் நீ பிறந்ததே முற்பிறவியில் செய்த பாவத்தின் சம்பளம் என்பதே அடிநாதமாக உள்ளது.

அதேநேரத்தில் வாழும்போது உணர்வுரீதியாக நன்மையைச் செய்தபடி மன மகிழ்வோடு வாழ்வதையே அல்பேட் காமு நீட்சே போன்றவர்கள் எக்ரென்சலிசத்தின் கருத்துரையாக வைக்கிறார்கள்.

இந்தப் பாட்டி இங்கே இந்த 77 வயதில் கொழும்பில் சகோதரனது வீட்டில் முடங்கிக் கிடந்திருக்கலாம்- இருக்கவில்லை

தாய்ப்பாசத்தில் மூத்தமகனைப் பார்க்கச் சென்ற ஒரு தாயாக யாழ்ப்பாணம் சென்றது எக்காலத்திலும் நடக்கக்கூடியதே – அங்கு யுத்தம் நடந்தபோது, எனது மகனுக்கு நடப்பது எனக்கு நடக்கட்டும். இந்த வயதில் எனக்கு என்ன வேண்டும்? என் மகன் கொள்ளி போடுவான் என யாழ்ப்பாணத்தில் முடங்கியிருக்கலாம்.

ஆனால் சென்னையிலிருந்த மகளிடம் செல்ல கொழும்புத்துறையிலிருந்து படகில், கடல், இலங்கை கடற்படை, மற்றும் இந்தியக் காவல்துறை என்ற தடைகள் கடந்து பயணம் செய்தது பெரிய விடயம் என நீங்கள் கருதலாம். நானும் கருதுகிறேன் ஏன் எழுதிய கணநாதன்கூட கருதியிருக்கலாம்.

ஒரு கதையில் பாத்திரத்தின் தன்மைகளால் அந்தக்கதை சிறப்பாவது உண்மையே. இது ஒரு நல்லகதை எனச் சொல்லி நீங்கள் நகரலாம்

ஆனால் முடியாது. எனக்கு இந்தக் கதையின் உச்சம் வாழ்வின் தத்துவத்தை நமக்குச் சொல்லி உச்சத்தை அடைவதே நான் உணர்ந்தேன்

தனது கடல்ப்பயணம் முடித்து, ரயில் ஏறி, இறுதியில் சென்னையில் ஓட்டோவில் சென்று இறுதியில் மகள் குடும்பத்திடம் தனது கதையைச் சொல்கிறார். அந்தக்கதை முடிவில் வரும் இறுதி சம்பவமே முக்கிய இலக்கிய உணர்வாகிறது.

இதுவரையும் அசைவ உணவு உண்ணாது 77 வருடங்கள் வாழ்ந்த ஒருவர் மகளிடம் முட்டைப் பொரியல் தேவை எனக் கேட்டு அதை ருசித்து உண்பதே இந்தக்கதையை நல்ல கதை என்றதற்கப்பால் ஒரு சிறப்பான கதை என்ற தத்துவ முத்திரை பதித்து முத்திரைக் கதையாக்கியது.


கதையை வாசிக்க :

சிறுகதை: சத்தியம் - மீறிய போது...

- ஆங்கிலத்தில் வே.க.கணநாதன் | தமிழில் : சகுந்தலா கணநாதன்

திருப்பூரிலிருந்து முதல் நாள் இரவு ரயிலில் வந்திறங்கி மிக்க சோர்வுற்றிருந்தேன். நல்ல வேளை இன்று ஞாயிற்று கிழமை. படுக்கையை விட்டு எழ வேண்டியதில்லை என்ற நினைப்பு ஒரு இதமான சுகம் என் மனதுக்கு அளித்தது.

அடுத்த வினாடி வாசல் அழைப்பு மணி அடிக்க, யார் இந்த அதிகாலையில் தொந்தரவு பண்ணுகிறார்கள் என்று எரிச்சலுற்று, போர்வையை மூடிக்கொண்டு திரும்பவும் படுத்தேன். பால்காரனா இராது. கெஞ்சினாலும், அவன் ஏழு மணிக்கு முன் வரவேமாட்டான். எங்கள் வீட்டுவேலை செய்யும் மீனாட்சி நேரம் தெரியாமல் வந்திட்டாளோ?

மீண்டும் அழைப்பு மணி அடிக்க அதில் ஒரு அவசரம் தெரிந்தது.

உடனே படுக்கையை விட்டெழுந்து வாசலுக்கு விரைந்தேன். நான் முன்கதவைத் திறந்த மறுகணம் அதிர்ச்சியுற்றுத் தடுமாறினேன். வாசல் கதவருகே இருள் சூழ்ந்த வெளிச்சத்தில், எங்கள் பிளாட் காம்ப்ளெக்ஸில் பணிபுரியும் காவல்காரன்.

அவன் அருகே, வெள்ளை முடியுடன், நீண்ட மிலிட்டரி கோட் அணிந்த உருவம் ஒன்று, குழி விழுந்த கண்களுடன் என்னை ஊடுருவிப் பார்த்தபடி நின்றது.

என்னைச் சுதாகரித்துக்கொள்ளமுன், பின்னால் வந்த என் மனைவி, “அம்மா!” என்று அலறியவாறு, வந்தவரை இறுக்கக் கட்டியணைத்து முத்தமிட்டாள். பதிலுக்கு, வந்தவரும் சகுந்தலாவை அணைத்து முத்தமிட்டார்.

நான் அதிர்ச்சியும் ஆச்சரியமும் தாளாமல், ஒருவர் மற்றவரை தழுவியபடி, அழுகையுடன் உள்ளே செல்வதைப் பார்த்தவாறு, இவை எல்லாம் கனவோ என்ற நம்பிக்கையற்ற நிலையில், முன் கதவைச் சாத்தினேன்.

சகு தனது தாயார் அணிந்திருந்த அழுக்குக் கோட்டைக் கழட்டி அவரைக் கதிரையில் மெதுவாக உட்கார வைத்தாள்.

நான் அவருக்குப் பின்னால் குஷன் ஒன்றை வைத்து, “அம்மா, நீங்கள் வாறதைப்பற்றி எங்களுக்கு ஏன் அறிவிக்கவில்லை?” என்று கேட்டேன். “நாங்கள் விமான நிலையத்தில் உங்களைச் சந்தித்திருப்போமே.”

நான் ‘அம்மா’ என்று அழைப்பது என் மாமியாரை. அவர் மிகவும் களைப்படைந்த நிலையில் இருந்தார். எனவே, பேச்சை நிறுத்தி, நான் அவருக்குக் கோப்பி போட, சமையலறைக்குச் சென்றேன்.

மறுகணம் சகு என்னருகே வந்தாள்.

“அம்மா திடீரென்று இந்தக் கோலத்தில் ஏன் வரவேணும்? என்ன நடந்திருக்கும்? கைப்பை கூட இல்லாமல் வந்திருக்கிறாரே!”

சகு பதில் அளிக்காமல் தாய்க்குக் கோப்பியும் எங்களிருவருக்குத் தேத்தண்ணியும் தயாரித்தாள். கோப்பிக்குப் பெயர் போன சென்னை மாநகரில் நாங்களிருவரும் தினமும் தேத்தண்ணி குடிப்பதைப் பார்த்துப் பக்கத்து வீட்டார் சிரிப்பார்கள்.

அம்மா கோப்பியை சுவைத்துக் குடிப்பதை நான் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவர் கொஞ்சம் இளைப்பாறிய பிறகு, என் மனைவி அவருக்குப் புது காஃப்தான் ஒன்றைக் குடுத்துக் குளித்துவிட்டு வரும்படி சொன்னாள்.

அம்மாவின் மூண்டு பேத்திமாரும் அப்பொழுது நித்திரையாக இருந்தார்கள். அம்மம்மா திரும்பி வந்திட்டார் என்றறிந்ததும் அவர்கள் எவ்வளவு சந்தோசப்படுவார்கள்.

சிறிது நேரம் கழித்து, அம்மா சாப்பாட்டு அறைக்குள் வந்தார். நல்லதொரு காஃப்தான் அணிந்து, முகம் முழுதும் பவுடர் தடவி, நெற்றியில் திருநீறு பூசி, சிரித்தவண்ணம் எங்கள் முன் தோன்றினார். “மூண்டு நாளுக்குப் பிறகு இப்ப தான் குளிச்சேன்,” என்று சொல்லி ஒரு குழந்தை போல் சிரித்தார்.

பட்டர் தடவி, மார்மலேட் ஜாம் அதன்மேல் பரப்பி, மூன்று துண்டு பாண் (பிரெட்) அவருக்குக் குடுத்தேன். அவர் அசைவ உணவு சாப்பிடமாட்டார் என்றதனால் என் மனைவி அவருக்கு முட்டைப் பொரியல் குடுக்கவில்லை.

“எனக்கும் ஒரு முட்டை வேணும்,” என்றார். சைவ உணவே அம்மா சாப்பிடுவார். ஆகவே, அவர் அப்படிக்கேட்க, மறு பேச்சில்லாமல் மகள் தாய்க்கு முட்டைப் பொரியலைக் குடுக்க, அவர் அதை ருசித்து உண்ண, மேலும் என்னென்ன அதிசயங்கள் நடக்கப் போகுதோ என்று என்னுள் சிந்தித்தவண்ணம், அவர் அருகே ஒரு பப்பாப்பழத் துண்டை வைத்தேன்.

நாங்கள் தினமும் காலையில் வாழைப் பழமோ ஒரு துண்டு பப்பாப்பழமோ சாப்பிடுவோம். சென்னையில் பழங்களுக்குக் குறைவில்லை. தி-நகரிலுள்ள ‘நல்லி சில்க்ஸ்’ கடை வாசலுக்கு முன், மல்லிகைச் சரங்கள், வளையல் விற்பனையோடு, பெரிய பிளம்ஸ் அளவு நெல்லிக்கனி, நாவல் பழங்கள் ஆகியவற்றை கோபுர வடிவில் வரிசை வரிசையாய் அடுக்கி வைத்திருப்பார்கள்.

கோடை காலத்தில் சாலைகள் இருபக்கமும் பங்கணப்பள்ளி மாம்பழங்கள் குவிந்திருக்கும். அவற்றை எப்ப நினைத்தாலும் வாயூறும். கூடை கூடையாய்க் கொய்யாப்பழம் கொண்டருவோரிடம் பேரம் பேசாமல் அவர் கூறும் விலைக்கே வாங்குவோம்.

சரி, இப்ப அம்மாவின் கதைக்கு வருவோம். அம்மாவின் வயது 77. இந்தத் தள்ளாத வயசில் அவர் என்னென்ன கஸ்டங்களை அனுபவிக்கிறாரோ என்று கடந்த மூன்று மாதங்களாய் தினமும் கவலைப்பட்டுக்கொண்டிருந்தோம்.

எதற்கும், நாங்கள் இப்போ கொஞ்சம் பொறுமையைக் கடைப்பிடித்தால் அம்மா களைப்பாறிய பிறகு, அவர் தானே முன்வந்து எங்களுக்குத் தன் அனுபவங்களைப் பற்றிக் கூறட்டும்.

சில மாதங்களுக்கு முன்னர் எனது மனைவியும் அம்மாவும் துபாய் நகரில் சகுவின் சகோதரியைப் பார்க்கச் சென்றிருந்தார்கள். அங்கு ஒரு மாதம் தங்கிய பிறகு இருவரும் கொழும்புக்குச் சென்றார்கள். அங்கே தங்கள் உறவினர் சிநேகிதிமாரைக் கண்டு களித்து ஒரு கிழமைக்குப் பிறகு சென்னைக்குத் திரும்பிவிடலாம் என்று நினைத்திருந்தாள் என் மனைவி.

ஆனால் யாழ்ப்பாணத்தில் இருந்த தன் மூத்த மகன் முருகேசனைச் சந்திப்பதற்கு அவரது தாயார் ஆவலாய் இருந்தார்.

சகு தன் தாயிடம், “நீங்கள் யாழ்ப்பாணத்துக்குப் போக வேண்டாம். அண்ணாவைக் கொழும்புக்கு வந்து உங்களைப் பாக்கச் சொல்லுங்கோ,” என்றாள்.

”அம்மா, இலங்கை அரசுக்கும் விடுதலைப் போராளிகளுக்கும் இடையே ஒரு தற்காலிகப் போர் நிறுத்தம் இப்ப இருக்குது. அது நீண்ட காலம் நீடிக்கும் என்று ஆரும் நம்பவில்லை. நீங்கள் கொழும்பை விட்டு ஊருக்குப் போக மாட்டேன், என்று எனக்குச் சத்தியம் பண்ணித்தர வேணும்.”

“எனக்கென்ன விசரே? நான் கட்டாயம் அங்கே போகமாட்டேன்,” என்று அம்மா மகளுக்கு வாக்குறுதி குடுத்தார்.

தன் தாயார் கொழும்பில் மாமாவின் பாதுகாப்பில் இருக்கிறார் என்ற நினைப்பில், சகு அடுத்த நாள் சென்னைக்கு விமானப் பயணம் மேற்கொண்டாள்.

1983-ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட இனப் படுகொலைக்குப் பின்னர் நாங்கள் எங்கள் மூன்று மகள்மாருடன் சென்னைக்கு வந்து குடியேறியிருந்தோம். அவர்கள் இங்கே பள்ளிக்கூடங்களில் படிக்கிறார்கள்.

எங்கள் ஆபீஸ் முதலில் காலேஜ் ரோட்டில் இருந்தது. வேலை அதிகரிக்க, கோபாலபுரத்துக்கு ஆபீசை மாத்தி அமைத்தோம். என் மனைவி ஆபீசை நிர்வாகித்தார். நான் அநேகமாக வேலை நிமித்தம் இந்தியா முழுதும் பயணிக்கவேண்டியிருந்தது.

நான் (Knitted Garments) பின்னல் ஆடை, (Granite) க்ரானைட் ஆர்டர்ஸ் எடுத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட ஏற்றுமதியாளருக்கு அவற்றைக் குடுப்பேன்.

பின்னல் ஆடை தயாரிப்பில் தலை சிறந்த திருப்பூரிலும், எடுத்த ஆர்டேர்ஸ் சரிவரச் செய்கிறார்களா என்று உறுதி செய்ய, எங்கள் (Quality control inspectors) தரப்படுத்தும் இன்ஸ்பெக்டர்ஸ் இரவும் பகலும் பணி புரிவர். ஏதும் தப்பாயிருந்தால், தயாரிப்பாளருக்கு லட்சக் கணக்கில் நஷ்டம் ஏற்படும். இதைத் தவிர்க்க நாங்கள் நிறையப் பாடுபட வேண்டி இருந்தது. எங்கள் அங்கீகாரம் பெற்ற பின்னரே அவற்றை ஸ்வீடன், நார்வே நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிப்போம்.

அங்கீகாரம் பெற்ற Granite quarry உரிமையாளருக்கு, யப்பான் நாட்டில் ஆர்டெர்ஸ் எடுத்துக் குடுத்து, அவர்கள் கற்களை ஏற்றுமதி செய்ய வழி வகுத்தோம். கருங் கற்களைத் தேர்ந்தெடுப்பது கடுமையான வேலை. எங்கள் field inspectors குழு நிறைய உதவி புரிந்தனர்.

சகு சென்னைக்குத் திரும்பிய ஒரு வாரம் கழித்து, அம்மா தன் மகனைப் பார்க்கக் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு யாழ்தேவி புகையிரத வண்டியில் புறப்பட்டுவிட்டார் என்று மாமாவிடமிருந்து செய்தி வந்ததும், நாங்கள் திடுக்கிட்டுவிட்டோம். ஏனென்றால் சில நாட்களுக்கு முன்பு மீண்டும் வட இலங்கையில் கடும்போர் மூண்டது. மேலும், யாழ்ப்பாணக் குடாநாடு, மற்றப் பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது என்ற அதிரடி செய்திகளை ரேடியோவில் கேள்விப்பட்டிருந்தோம்.

எங்கள் ஆவலைப் புரிந்தவராய், அம்மா தன் அனுபவங்களைச் சொல்லத் துடங்கினார்.

-0-

பாகம் 2

சகுந்தலா சென்னைக்குத் திரும்பின அடுத்த நாள், தம்பி பரமானந்தன் என்னை எவ்வளவோ தடுத்தும், நான் (Yal Devi train) யாழ்தேவியில் ஏறினேன். அன்று மத்தியானம் அது யாழ்ப்பாணம் போய்ச் சேர்ந்தது. ஒரு ஆட்டோவில் ஏறி முருகேசன் வீட்டுக்குப் போனேன்.

அங்கே பாத்தா வீடு பூட்டிக் கிடந்தது. அடுத்து என்ன செய்யலாம் என்று நான் யோசித்தேன். என் பெட்டியை முன் விறாந்தையில் வைச்சிட்டு, கேட்டுக்கு வெளியாலே போய் பக்கத்து வீட்டுக் கதவைத் தட்டினேன்.

நடுத்தர வயதான பெண் ஒருவர் கதவைத் திறந்து வெளியே வந்தார். நான் அடுத்த வீட்டு முருகேசன்ட அம்மா என்று என்னை அறிமுகப்படுத்தினேன்.

“அப்படியா? உள்ளே வாங்கோ,” என்று சிரித்த முகத்தோடு அழைத்தார். “நீங்கள் திலகம் தானே? முருகேசன் உங்களைப்பத்தி நிறையச் சொல்லி இருக்கிறார். என் பெயர் நாகம்மா,” என்று தன்னை அறிமுகப்படுத்தினார்.

“முருகேசன் எங்கே? வீடு பூட்டிக்கிடக்குதே.”

“அப்ப நீங்கள் வாறதெண்டு அவருக்கு அறிவிக்கேல்லையோ?”

“நினைச்சேன். உடனே வந்திட்டேன்,” என்றேன் சிரிச்சுக்கொண்டு.

நாகம்மா என்னைக் கொஞ்ச நேரம் பார்த்தார். தலையை ஆட்டிவிட்டு, “அவர் வேலைக்குப் போயிருப்பார். பின்னேரம்தான் வீட்டுக்கு வருவார். நீங்கள் கடும் வெய்யில்லே வந்திருக்கிறீங்கள். கொஞ்சம் இருங்கோ, வாறன்,” என்று, அடுப்படிக்குப் போய் ஒரு மூக்குப் பேணி நிறையத் தண்ணீர் கொண்டுவந்து குடுத்தார்.

நான் அதைக் குடிச்சிட்டு கொஞ்சம் கண்ணை மூடிக் களைப்பாறினேன்.

சில நிமிசங்களுக்குப் பிறகு நாகம்மா ஒரு கோப்பை வெறுந் தேத்தண்ணி குடுத்து பிறகும் கேட்டார், “இன்று நீங்கள் வாறீங்கள் எண்டு மகனுக்குத் தெரியுமா?”

“இல்லை. மூண்டு வருசங்களுக்கு மேலே நான் அவனைப் பார்க்கேல்லே. அதுதான் நான் அவனை சந்தோசப் படுத்த சொல்லாமல் வந்தேன். இஞ்சே சில நாள் மகனுடன் தங்க ஆசையாய் இருக்கு. அதோடே, ஊர்க் கோவில்களுக்கும், என் மூதாதையர் வாழ்ந்த கிராமத்துக்கும், நல்லூர் முருகன் கோவிலுக்கும் போக விருப்பமா இருக்கு. அதுமட்டுமல்ல. சில நேர்த்திக்கடன்கள் வைச்சிருக்கிறேன். நான் சென்னை வீட்டுக்குத் திரும்பிப் போகமுன், இஞ்சே அவற்றை எல்லாம் நிறைவேற்ற வேணும்.”

“அப்ப சென்னையில் தான் உங்கள் வீடா?”

“ஓம் நிச்சயமாய் அங்கே தான் எங்கள் வீடு. வீட்டுக்குப் போனால் நிம்மதியாய் ராத்திரி படுக்கலாம். நாங்கள் எண்பத்து மூண்டில் போனபோது சென்னை மக்கள் எங்களை அன்பாக வரவேற்றார்கள்.”

நாகம்மா ஒரு குழந்தையைக் கோவிப்பது போல தன் தலையை ஆட்டினார். “திலகம், நீங்கள் ஒரு பெரிய பிழை செய்திட்டீங்கள். இப்ப யுத்தம் இல்லை. ஆனால், விடுதலைப் போராளிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையிலான இந்தப் போர் நிறுத்தம் ஊசிமேல் நடக்கிற மாதிரி எங்களுக்கு இருக்கு. யாழ்ப்பாணத்தை மீண்டும் பிடிக்க இராணுவம் தீர்மானித்துள்ளது.

“ஏனென்டால், தமிழர்களின் தலைநகரான யாழ்ப்பாணத்தில் தங்கள் உரிமையை இழந்துவிட்டதாக அரசாங்கம் நினைத்து வெட்கப்படுது. எந்த நேரத்திலும் என்னவும் நடக்கலாம் என்பதால், எப்ப என்ன நடக்கப் போறதோ என்று பயந்து பயந்து, தினம் தினம் நாங்கள் செத்துப் பிழைக்கிறோம்.”

“கவலைப்படாதே, நாகம்மா. இரண்டு முருகேசன்களும் எங்களைக் கைவிடமாட்டினம்.”

“இரண்டாவது முருகேசன் ஆர்?”

“நல்லூர் முருகன் தான் முதல் முருகேசன். அவர் பெயரைத்தான் மகனுக்கு வைச்சனாங்கள்.”

நாகம்மா வாய்விட்டுச் சிரித்தார்.

நாங்கள் இப்படி பேசிக்கொண்டிருக்க, என் மகன் சடுதியாக வந்திட்டான் நாகம்மா வீட்டு வாசலுக்கு.

எங்கள் பேச்சுக்குரலைக் கேட்டு, “அம்மா!” எண்டு உரத்த குரல்லே கூப்பிட்டான். “அம்மாவை வெளியே வரச் சொல்லுங்கோ, நாகம்மாக்கா.”

“யாரப்பா அவ?” எண்டு நாகம்மா பகிடிக்கு முகத்தை சுளித்துக் கேட்டார்.

“அக்கா, யாழ்ப்பாணத்திலே ஒலியின் வேகத்தை விடச் செய்திகள் கெதியாய் பரவும் என்ற உண்மையை இன்று தான் அறிந்தேன். அம்மா ஸ்டேஷனிலே வந்திறங்கிய செய்தி மின்னல் வேகத்தில் எனக்கு வந்தது. இது உண்மையா இருக்குமா என்று ஆச்சரியப்பட்டேன். நாளைக்கு நான் இன்றைய மிச்சப் பாடங்களை எடுப்பேன் என்று பிள்ளைகளுக்குச் சொல்லிட்டு ஓடோடி…”

அவன் சொல்லி முடிக்கமுன், நான் ஓடிப்போய் அவனைக் கட்டிப்பிடிக்க, அவன் என்னைத் தூக்கி முத்தம் குடுத்தான். “அம்மா! என்ர அம்மா!!” என்று சொல்லிக் கண்ணீர் வழிந்தபடி கொஞ்சினான். கொஞ்சநேரம் நாங்கள் எங்களை மறந்து அழுதுகொண்டும் சிரிச்சுக்கொண்டும் இருந்தோம்.

பிறகு, நாகம்மாக்கு நன்றி கூறி, என்னைத் தன் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போனான். “நீங்கள் உண்மையாய்த்தான் வந்திருக்கிறீங்களோ, அம்மா! இல்லாட்டி கனவோ என்று நினைக்கவேண்டியிருக்கு,” என்றான்.

எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு அவன் எனக்கு எல்லா வசதியும் செய்து தந்தான். அவன் குடும்பம் இங்கிலாந்துக்கும், ஜேர்மனிக்கும் குடிபெயர்ந்த பிறகு, யாழ்ப்பாணப் பட்டினத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டவனுக்குத் தனியாக வாழக் கஸ்டமாக இருந்தது.

ஆனாலும், அவன் தன் ஊர் மக்களுக்கு நல்லதொரு வழியைச் செய்து குடுக்க நினைத்தான். தமிழ் பிள்ளைகளுக்கு அடிப்படை படிப்புகள், மற்றும் கணினி பாடங்களில் அதிக அளவிலான படிப்புகளைச் சொல்லிக் குடுத்து மகிழ்ச்சியடைந்தான்.

இங்கே கணினிகள் வர முன்பே அவன் இந்தப் பாடத்தை துடங்கிவிட்டான்.

அன்று ராத்திரி, நாங்கள் சாப்பிட்ட பிறகு முருகேசன் என்னைக் கேட்டான், “அம்மா, சகு உங்களை இங்கே அனுப்பினாளா? இங்கே என்ன நடக்கிறது என்று அவளுக்குத் தெரியாதா?”

நான் அவனுடைய சகோதரிக்குக் குடுத்த உறுதிமொழியைப் பத்தி சிரிச்சுக்கொண்டு சொன்னேன்.

“அப்ப நீங்கள் ஏன் மகளுக்குக் குடுத்த சத்தியத்தை மீறினீங்கள்?” எண்டு கோபமாய்க் கேட்டான்.

நான் பிறகும் சிரிக்கத் துடங்கினேன். “தேவை ஏற்பட்டால் குடுத்த சத்தியத்தை மீறலாம் எண்டு கனபேர் சொல்லுவினம்.”

“அதை அரசியல்வாதிகள், சினிமாக்காரன் சொல்லட்டும். நாங்கள் இங்கே எப்படி சீவிக்கிறம், என்ன கஸ்டங்களை அனுபவிக்கிறம் என்று தெரியாமல், நீங்கள் இங்கே வந்திட்டீங்கள். வட மாகாணத்துக்கு வாற ஒவ்வொரு வாகனத்தையும் தடுத்து நிறுத்தி, ஆமிக்காரங்கள் சோத்தித்துத்தான் விடுவாங்கள். அதுக்குள்ளே, வந்த மருந்தும் உணவுப் பொருளும் வீணாகிடும். எவ்வளவு அநியாயம் பண்ணிறாங்கள்? இந்த மருந்தெல்லாம் விடுதலைப் போராளிகளுக்குப் போய்ச் சேந்திடுமாம் என்று இவங்கள் நினைப்பு. அதாலே மக்கள் தான் பாதிக்கப்படுகினம்.”

“மகனே, நாளைக்கு அதைப்பத்திப் பேச நிறைய நேரம் இருக்கு. இப்ப நாங்கள் படுப்போம்,” என்றேன் கொட்டாவி விட்டபடி.

“இனிமேல் என்னிடம் இருக்கிற கொஞ்சச் சாப்பாட்டை நீங்களும் நானும் சாப்பிடுவோம். அது வேணும் இது வேணும் என்று நீங்கள் சின்னப்பிள்ளை மாதிரி அடம் பிடிக்க வேண்டாம்,” என்று சொல்லி ஒற்றைக் குப்பிவிளக்கை அணைச்சான்.

“மண்ணெண்ணெய்த் தட்டுப்பாடு. கவனமாய்ப் பாவிக்க வேணும். உங்களுக்கு நடுராத்திரி ஒண்டுக்குப் போகவேணும் என்றால், என்னை எழுப்புங்கோ. இருட்டிலே இங்கே அங்கே போய் விழுந்திடாமல் நீங்கள் கவனமாய் இருக்க வேணும்.”

என்னிடம் கொஞ்ச நேரம் டூபாயில் தங்கச்சி ரஞ்சி குடும்பத்தைப்பற்றி விசாரித்தான்.

“Dubai is a city of gold!” என்றேன் கும்மிருட்டில். அப்படி உரக்கச் சொன்னால் அறைக்குள்ளே வெளிச்சம் வரும் என்ற ஆசை வந்தது எனக்கு. ஆனால் சந்திரன் கூட அந்த இரவு ஒளிச்சு விளையாடினான்.

அவன் என் பக்கத்தில் படுத்துக்கொண்டு என் தலையை மெதுவாகத் தடவினான். “என்ர டார்லிங் அம்மா! நீங்கள் பயப்பிடாமல் இவ்வளவு தூரம் வந்தது எனக்கு சரியான சந்தோசம். இப்படிச் சந்தோசப்பட்டு எத்தனை வருசங்கள் ஆச்சு.”

“உன்னைப் பார்க்க எனக்குக் கஸ்டமாய் இருக்கு. நீ சரியாய் மெலிஞ்சு போனாய்.”

“என்ர உடம்பு இருக்கட்டும். நீங்கள் மூன்று வருசங்களுக்குப் பிறகும், அப்படியே இருக்கிறீர்கள். என்ர கண்ணூறு பட்டிடுமோ?” என்றான் வாய் விட்டுச் சிரித்தபடி.

அந்த இருட்டிலும் எனக்குத் தெரிஞ்சது, அவன் தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டிருந்தான் எண்டு. “ஏன்டா அழுறாய்?”

“நீங்கள் நாளைக்கு மத்தியானம் முதல் ட்ரெயினில் இங்கிருந்து திரும்பிக் கொழும்புக்குப் போகவேணும். கொழும்பிலிருந்து அடுத்த நாள் சென்னைக்கு விமானப் பயணம் செய்ய வேண்டும். அதிலே ஒரு மாற்றமும் இல்லை.”

“சும்மா அலட்டாமல் படுடா.”

“உங்களுக்கு இப்ப 77 வயசு. உங்களுக்கு எப்படி இங்கே கஸ்டங்களைத் தாங்க முடியும்?”

அவன் பேச்சை நான் சீரியஸாய் எடுத்துக்கொள்ளவில்லை. சிரிப்பென்னவென்டால் அன்று ராத்திரி விதி எங்களோடு விளையாடும் எண்டு எங்களுக்குத் தெரியவில்லை.

இதற்கு முன்னம் அவன் குடும்பம், பிறந்த ஊரைவிட்டு வெளிநாட்டில் குடியேறியபோதுதான் அவன் கவலைப்பட்டு அழுதான். ஆனாலும், அவன் தன்னைத் தேற்றிக்கொண்டு, தன் பிள்ளைகள் எங்கெங்கே குடி பெயர்ந்தாலும் அந்த ஊர்லே அவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமையவேண்டும் எண்டு சாமியிடம் தினமும் வேண்டுவான்.

அடுத்த நாள் காலை என் பெட்டியைத் திறந்து, கொண்டு வந்த சாமான்களை வெளியே பரப்பி வைத்தேன். முருகேசனுக்கு நல்லதொரு ஷர்ட் டூபாயில் வாங்கி வந்திருந்தேன். அதை அவனுக்கு அன்றே குடுத்து அழகு பார்க்க வேண்டும் என்று நினைத்தேன்.

முருகேசன் ரேடியோவில் செய்திகளைக் கேட்டுக் கொண்டிருந்தவன், “அம்மா!” என்று திடீரென்று தொண்டை கிழியக் கத்தினான். “இனிமே நீங்கள் இந்தியாக்குப் போக முடியாது!”

“அதுக்கென்ன?” என்று சும்மா கேட்டேன்.

“போர் மீண்டும் துவங்கிட்டுது! அரசு எல்லா வழிகளையும் மூடிட்டாங்கள்! எல்லாப் பாதைகளும் மூடப்பட்டுள்ளன. என்ர அம்மா, எப்படி இந்தக் கொடுமைகளைச் சமாளிக்கப் போறீங்கள்? போர் துவங்கிட்டது என்று ரேடியோ சொல்லுது. ஒவ்வொரு பக்கமும் மற்றவர்களைக் குற்றம் சாட்டினம். தெய்வமே! போர் முழு அளவில் மீண்டும் துடங்கி இருக்கு. வவுனியாக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் எந்தவொரு ரயிலும் போக முடியாது. ரயில்வே டிராக்கிலே குண்டு வீசியிருக்கிறாங்கள் ஆமிக்காரங்கள்! யாழ்ப்பாணம், எல்லாப் பக்கத்திலும் துண்டிக்கப்பட்டிருக்கு! அய்யய்யோ! நாங்கள் என்ன செய்யப்போறம்! கடவுளே, எல்லாரையும் காப்பாத்து!” என்று அலறினான்.

அந்த நேரம், பேரழிவின் தீவிரத்தை நான் அறியவில்லை.

“பயப்பிடாதே, மகனே. எல்லாம் கொஞ்ச நாளில் சரி வந்திடும்,” என்று ஆறுதல் சொன்னேன். எனக்குள்ளே ஒரு பயம் இருந்தபோதும், அதை நான் வெளியே காட்டவில்லை. அதற்குப் பதிலாக, காலை உணவுக்கு என்ன செய்யலாம் என்று அவனைக் கேட்டேன்.

“பேக்கணும் (Baconum) கிராஃப்ட் சீஸும், மற்றும் டோஸ்ட் மீது மார்மலேடு ஜாம்!” என்றான்.

“அடேயப்பா! இதெல்லாம் இங்கே கிடைக்குமா உனக்கு?”

கோபத்தோடு அவன் என்னருகே வந்தான். “உங்களுக்குப் பைத்தியமா, அம்மா? நாங்கள் இந்த மாதிரி விரும்பியபடி சாப்பிட்டு எத்தனையோ வருசங்கள். இப்ப நீங்கள் திரும்பிப் போய் படுங்கோ. நான் உங்களுக்கு பாண்(bread) வாங்கி அதை இரண்டாப் பிரிச்சு வைக்கிறேன். வெறுந் தேத்தண்ணிக்கு கொஞ்சம் சீனி கலந்து அதிலே தொட்டுச் சாப்பிடுங்கோ காலை உணவுக்கு. மத்தியானத்துக்கு மீதிப் பாணோடே, நாகம்மா அக்காவிடம் கொஞ்சம் சம்பல் கேட்டு வாங்கிச் சாப்பிடுங்கோ.

“நான் வேலையால திரும்பி வர்ற வழியிலே அரிசி, பருப்பு, காய்கறி, உள்ளி, வெங்காயம், மிளகாய்த் தூள், புளி வாங்கி வாறன். உப்பும் புளியும் ஓரளவு சேர்த்தால் ருசியாயிருக்கும். வெறு வயித்தில் இருந்தா நித்திரை வராது.”

அப்பதான் எவ்வளவு கஸ்டப்படுறான் என் மகன் எண்டு எனக்கு விளங்கிச்சுது. “மகனே, நான் கடைசி வரைக்கும் உன்னோடு தான் இருப்பேன். நான் சென்னைக்குத் திரும்பிப் போகமாட்டேன். இது சத்தியம்.”

“இனிமே இன்னுமொரு சத்தியத்தை நீங்கள் மீற முடியாது. ஏனென்டா இனிமே இங்கே தான் இருக்கப் போறீங்கள். நாங்கள் எல்லாரும் கெதியாச் சாகப் போறம்.” எண்டு சொல்லி தலையை மற்றப் பக்கம் திருப்பிக் கண்ணீரைத் துடைத்தான்.

இவ்வளவு மோசமான வாழ்க்கையில் திண்டாடுகிறார்கள் எங்கள் இனம் எண்டு நான் இதற்கு முன்னம் அறியவில்லை. எதற்கும் ஒரு விடிவுகாலம் கிட்டும் என்ற நம்பிக்கை என் மனதில் எப்போதும் இருக்கும். எல்லாம் கெதியா சரி வந்திடும். ரயில் பாதைகளை கெதியிலே ரிப்பேர் பண்ணிடுவாங்கள். நான் திரும்பிப் போவேன் என்ற உறுதியான எண்ணம் என்னுள் இருந்தது. நான் எப்போதும் கடவுளை நம்பிறவள். அவர் எங்களைக் கைவிட மாட்டார் என்ற திடமான நம்பிக்கை உடையவள்.

ஆகவே கதையை மாத்த, “ஏன் இந்தப் போரை துடங்கினார்கள்?” என்று கேட்டேன். “இத்தனை வருசங்களில் எத்தனை பேர் அநியாயமாக் கொல்லப்பட்டிருக்கினம்?”

“உங்களுக்குத் தெரியும் தானே 1948-ஆம் வருசம் இந்த நாடு சுதந்திரம் பெற்றது என்று.”

நான் தலையை ஆட்டினேன்.

“சுதந்திரப் போராட்டத்தின் போது, தமிழரும் முஸ்லிம்களும் சிங்களவரும் ஒற்றுமையாய் இருந்தார்கள். எங்களை ஆண்ட பிரித்தானியர்கள் இலங்கையிலிருந்து விலக நாங்கள்—.நாங்கள் என்று நான் குறிப்பிட்டது தமிழர், சிங்களவர், முஸ்லிம் மக்களை. ரோட்டிலே போற குடுகுடுப்பைக்காரன் சொல்லிற மாதிரி, “நல்ல காலம் பிறந்திட்டுது! நல்ல காலம் பிறந்திட்டுது!!” என்று நாங்கள் எல்லாரும் கும்மாளம் போட்டோம். சிங்கள சகோதரர்களோடு சேர்ந்து மகிழ்ச்சியடைந்தோம்.

“ஆனால் கெதியா எல்லாம் வீணாப்போச்சு. பிரதம மந்திரி எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா ‘சிங்களம் மட்டும்’ என்ற சட்டத்தைக் கொண்டுவந்து தீவின் தலைவிதியை ஒரே நாளில் மாத்தினார்.

“ஊரெங்கும், ‘அவன் தமிழன்’ ‘இவன் சிங்களவன்’ என்ற வித்தியாசம் சிறுவர் முதல் பெரியவர் வரை வளரத் துடங்கியது. அதனுடன் சேர்த்து, தமிழ் குழந்தைகளின் மதிப்பெண் தரநிலைப் படுத்தப்பட்டது, பல்கலைக் கழகங்களுக்கு அனுமதி பெற தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களுக்கு மேலதிகமாக மதிப்பெண் பெற வேண்டியிருந்தது.

“சிங்கள மொழி, நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாக மாறியது. ஆகவே தமிழருக்கு சிங்களம் படிக்க வேண்டிய கட்டாயத்தை அரசாங்கம் உருவாக்கியது. விரைவில் இது ஒரு அரசியல் பிரச்சினையாக மாறி நாட்டை இரண்டாகப் பிரிக்கத் துடங்கியது.”

முருகேசன் இப்படி பேசிக் கொண்டிருக்க, நல்லூர் வைமன் ரோட்டில் வாழ்ந்த சுந்தரம் எங்களைப் பார்க்க வந்தார். முதல் நாள் நான் வந்திருப்பதைப் பற்றிக் கேள்விப்பட்டு அது உண்மையா என்றறிய அவர் வந்திருந்தார். “திலகம், இந்த ஆபத்தான நேரத்தில் நீங்கள் ஏன் யாழ்ப்பாணத்துக்கு வந்தீங்கள்?” என்று கேட்டார்.

அவருக்கு நேரடியாகப் பதில் அளிக்காமல், “சனங்கள் ஏன் ஒருவருக்கொருவர் சண்டை போடுறார்கள்?” என்று கேட்டேன்.

“திலகம், இதைக் கேட்டறிய இவ்வளவு தூரம் நீங்கள் வந்திருக்க வேண்டாம். என்றாலும் சொல்கிறேன். யுத்தம் துவக்க வேணும் என்று யாரும் விரும்பவில்லை. ஆனால் பெரும்பாலான சிங்களவர்களுக்கு எங்கள் பூர்வீக வரலாறு தெரியாது. அவர்கள் சிங்கள வரலாற்றை மட்டுமே அறிந்திருக்கிறார்கள். அரசியல் சூழ்ச்சிகளை அவர்கள் அறிவதில்லை. ‘தமிழ் போராளிகள் எல்லோரும் பயங்கரவாதிகள்’ என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் ஊரெங்கும், உலகெங்கும் பறை அடித்தது. ஆனால் தமிழ் இளைஞர்கள், தங்கள் இனத்துக்கு நீதி கோரி விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று அவர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.

“சில அப்பாவி சிங்கள சிறுவர்கள் இராணுவத்தில் சேர்ந்ததும், ராணுவ அதிகாரிகள் அவர்களுக்குத் தமிழ் இளைஞர்களைக் கொண்டு குவிக்கக் கட்டளை இடுவார்கள்.

“சிங்களவரில் பெரும்பான்மையினர் சமாதானத்தை விரும்பும் மக்களாக இருப்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் சில பௌத்த குருமார் புத்தமதத்தின் அஹிம்சைக் கொள்கையைப் புறக்கணித்துவிட்டு, அரசியல்வாதிகளிடம் சில நன்மைகளைப் பெற சிங்கள மக்களுக்கு தமிழர் மீது வெறுப்புணர்ச்சி வளர்ப்பதில் ஈடுபடுகின்றனர்.

“கண்டியை ஆண்ட கடைசி மன்னர், ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கா, தமிழ்நாட்டில் மதுரையை ஆட்சி புரிந்த நாயக்க வம்சத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் மன்னன். ஒரு காலத்தில் பொலன்னறுவையை பராக்கிரமாபாகு ஆண்டபோது, தென்னிந்தியாவிலிருந்து வந்த தமிழ் மக்கள் அங்கே போய் குடியேறியிருந்தனர்.

“இவர்கள் காலப்போக்கில், தீவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் குடியேறி, அங்கே ஏற்கெனவே வாழ்ந்து வந்த தமிழ் மக்களுடன் ஒன்று சேர்ந்து, சைவ வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

“போர்த்துகீசிய, டச்சு மற்றும் பிரித்தானியா ஆட்சிகளின்போது, அவர்களுக்கு எதிராக இலங்கையர் அனைவரும் ஒன்று கூடி தம்முள் ஒற்றுமையாக இருந்தனர்.

“ஆனால் 1948-ஆம் ஆண்டில் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர், அந்த ஒற்றுமை, நிலை குலைந்தது. அதன் பின்னர்தான் இந்த இனப் பிரச்சினை உருவாகியது. சிங்கள அரசியல்வாதிகள், தங்களை சிறுபான்மை தமிழர்கள் மற்றும் பிற இனத்தவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டத் துடங்கினார்கள். இதனாலே தான் இனவாதக் கிளர்ச்சி துடங்கியது. 1958-ஆம் ஆண்டில் மே மாத இனவாத கிளர்ச்சியில் துடங்கி, 1971, 1977 தொடர்ந்து, ஜூலை 1983-ஆம் ஆண்டில் உச்சக் கட்டத்தை அடைந்தது.”

“சுந்தரம், ஏன் போரைத் தவிர்க்க முடியாது?”

“சில அரசியல்வாதிகள் தங்களைத் தக்க வைத்துக் கொள்ள முயன்றனர். முக்கியமாக பண்டாரநாயக்க-செல்வநாயகம் உடன்படிக்கை, மற்றும் டட்லி சேனநாயக்க-செல்வநாயகம் உடன்படிக்கை. அந்த நேரத்தில் சிங்கள எதிர்க்கட்சிகள் இந்த ஒப்பந்தங்ளுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததில் எல்லாம் தோற்றுப் போய்விட்டது.

“பெரும்பான்மை சிங்கள மக்கள் இனவேறுபாட்டைத் தீர்த்து வைப்பதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளையும், சாத்வீகப் போர்களையும், உண்ணா விரதங்களையும் சிங்கள அரசியல்வாதிகள் கொஞ்சமாவது பொருட்படுத்தவில்லை.

“இந்த விவகாரம் சில தமிழ் இளைஞர்களுக்குப் பெரிய ஏமாற்றத்தைக் குடுத்தது. பல வருசங்களாக தமிழர், சிங்கள அரசிடம் எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம் என்று அவர்களுத் தோன்றியது. சும்மா பேச்சு வார்த்தைக்கு இனிமே இடம் இல்லை. ஒரு சுயாதீன தேசமாக தங்கள் பாரம்பரிய தாயகத்தைக் காப்பாற்றுவதற்காக ஆயுதங்களைத்தான் இனிக் கையில் எடுத்துக்கொள்ள வேணும் என்று நினைத்தார்கள் இந்த இளைஞர்கள்.”

இப்படி அவர் பேசிக்கொண்டிருக்க, முருகேசன் குறுக்கிட்டு, தன் கைக்கடிகாரத்தைப் பார்த்து, “சுந்தரம் மாமா, எனக்கு நேரமாகிது. நான் கிளாஸ் எடுக்கப் போகவேணும். நீங்கள் அம்மாவோட பேசிக்கொண்டிருங்கோ,” என்றான். “உங்களுக்கு வெறுந் தேத்தண்ணி தரட்டா?”

“ஏண்டா மகனே, இந்த நேரத்தில் இது தான் ஒரு குறையா?” என்று சுந்தரம் முருகேசனை ஏசினார். “இப்ப தேயிலை, சீனி வீணாக்கிற நேரம் இல்லை. எனக்கு மூக்குப்பேணி நிறைய தண்ணீர் தந்தால் போதும்.

“இன்னுமொரு விசயம் சொல்ல இருக்கு, திலகம். தமிழீழ விடுதலைப் போராளிகள் யாழ்ப்பாணத்தைத் தங்கள் ஆட்சிக்குள் கொண்டுவந்திட்டினம். அது தான் இலங்கை ராணுவத்துக்குப் பெரிய இழப்பு. பெரிய வெட்கக்கேடு. சூடு வாங்கின குரங்கு ஆத்திரம் அடைந்து பக்கத்துச் செடிகளைப் பிய்த்து நாசம் செய்ற மாதிரி, பொதுமக்கள் மீதும், வீடுகள் மீதும் ராணுவம் வான் தாக்குதல்களையும் ஷெல் தாக்குதல்களையும் செய்யுறாங்கள்.

“எங்களை அழிக்க வேணுமென்று, பாகுபாடின்றி சனங்கள் மேல் குண்டு வீசுறாங்கள் படுபாவிகள்,” என்று ஆத்திரத்துடன் கூறி, சால்வையால் முகத்தைத் துடைத்துக்கொண்டு வெளியே கிளம்பினார்.

அடுத்த இரண்டு மூன்று கிழமைகளில் நாங்கள் பாணும் வெறுந் தேத்தண்ணியோட பகலிலும், ராத்திரிக்கு சோறும் பருப்பும் சாப்பிட்டுப் படுக்கப் போனோம். அரிசி குறைஞ்சால், முருகேசன் தேங்காய் பயறு கலந்த ஒரு அரிசிக் கஞ்சி செய்வான் இரவு சாப்பாட்டுக்கு. நல்ல ருசியா இருக்கும்.

கொஞ்ச நாள் போக நான் பலவீனமாய் இருப்பதைக் கண்டு, முருகேசன் ஒவ்வொரு நாளும் எனக்குப் பால் வாங்கிக் குடுப்பான். சமையலுக்கு அவசியமான சாமான்கள், மண்ணெண்ணெய் வாங்கவும், எனக்கு மருந்து வாங்கவும் அவன் தன்னிடம் இருந்த ரிஸ்ட் வாட்சை வித்திடான் என்று நான் பிறகு தான் அறிந்தேன். பாவம். ரேடியோலே நேரம் கேட்டு பிள்ளைகளுக்குக் கிளாஸ் எடுக்கப் போவான்.

அவ்வப்ப நாகம்மா எங்களுக்கு இரண்டு கோழிமுட்டை தருவா. பட்டினி கிடந்த என்னை முருகேசன் முட்டை சாப்பிட வலியுறுத்தினான். அப்பதான் முட்டை தின்னத் துவங்கினேன். சில நேரங்களில் இரண்டு மரக்கறி வெட்டி சோத்துக்குள்ளே முட்டைப் பொரியலைச் சேர்த்து நாங்கள் பிரியாணி சாப்பிடுவோம். நல்லா இருக்கும். நிறையச் சாப்பிடுவேன்.

முருகேசனின் மாணவர்களில் ஒருவன் அவருக்கு ஒரு பை நிறைய பச்சை மாங்காய் கொண்டு வந்து குடுத்தான். மற்றொருவன் மாஸ்டருக்கு நாலு பாண் (bread) குடுத்தான். மகன் என்ன விசயம் என்று கேட்க, மாணவர் இருவரும் தாங்கள் மாஸ்டருக்கு குடுக்கிற பணத்துக்குப் பதிலா ஒரு பையன் தன் வீட்டுக் காணியிலே இருந்து சில மாங்காய்களை அப்பப்ப குடுக்க முடிவு செய்தான்.

மற்றப் பையன் தனது அம்மா கடைக்கு செய்து விக்கிற பாணிலே வாரத்தில் நாலைஞ்சு குடுக்க விரும்பினான்.

மாஸ்டருடன் அவர் அம்மாவும் வீட்டிலே தங்கியிருக்கிறார் என்று அவர்களுக்குத் தெரியும்.

முருகேசன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து, மாங்காயையும் பாண் நாலையும் ஒரு பையில் போட்டு, வீட்டுக்குக் கொண்டு வந்தான். அவன் நாகம்மாக்கு மூண்டு மாங்காயும் ஒரு பாணும் குடுத்திட்டு, மீதி மாங்காயை சின்னஞ் சின்னனாய் அரிஞ்சு ஒரு சாடிக்குள்ளே போட்டு, மிளகாய்த் தூளும் நல்லெண்ணையும் கலந்து, கொஞ்சம் சீனியும் உப்பும் தூவி மூடி வைத்தான்.

பாண் இரண்டை கெட்டுப்போகாமல் இருக்கத் தோசைக்கல்லில் போட்டு நல்லா வாட்டி எடுத்தான். மீதி இருந்த பாணை அவன் செய்த திடீர் மாங்காய் சட்னியோடே வயிறு நிறையச் சாப்பிட்டோம். பிறகு ஒவ்வொரு நாளும் ஒரு கரண்டி மாங்கா ஊறுகாயோட நான் காலையும் மத்தியானமும் பாணோடே சாப்பிடுவேன்.

சில நேரங்களில் மாணவர்களிடம் இருந்து எங்களுக்குத் தேங்காய் கிடைக்கும்.

என் வற்புறுத்தலுக்கு இணங்கி, ஒரு நாள் முருகேசன், சண்டிலிப்பாயில் என் சகோதரி புனிதக்கா வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போனான். “அம்மா, இந்தப் பொல்லாத காலத்தில் நீங்கள் நிறைய நாள் அங்கே தங்கினால் அவர்களுக்குக் கஸ்டமாயிருக்கும். நான் மூன்று நாள் கழித்து வருவேன் உங்களைக் கூட்டிக்கொண்டு வர.”

அக்காவுடன் நான் சந்தோசமாக இருந்தேன். அவன் சொன்ன மாதிரி, மூன்றாம் நாள் பின்னேரம் முருகேசன் என்னைக் கூட்டிக்கொண்டு போக வந்தான். எங்களுக்கு அக்கா கொஞ்சம் தோட்டத்துக் கத்தரிக்காய், முருங்கைக்காய், இரண்டு கட்டு கீரை, வெங்காயம் தந்தா. நான் அவரிடம் பிரியா விடை பெற்று வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி மகனின் சைக்கிளின் பின்னாலே ஏறினேன்.

ஒரு நாள் என்னிடம் ஆங்கிலத்தில் பேசிப் பழக விரும்பி இரண்டு இளம் பெண்கள் வந்தார்கள். திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை இரண்டு மணித்தியாலம் நான் அவர்களுக்கு ஆங்கிலம் சொல்லிக் குடுத்தேன். என் வயசாக்களைவிட சின்னப் பிள்ளைகளோடு சிரிச்சுப் பேசத்தான் எனக்கு விருப்பம்.

அவர்கள் இரண்டு பேரும் எப்ப வருவினம் என்று காத்துக் கொண்டிருப்பேன். அவர்களுக்கு ஆங்கிலத்தில் எழுதத் தெரியும். ஆனால் ஆங்கிலத்தில் ஒருவருடன் பேசக் கொஞ்சம் கூச்சப்பட்டார்கள்.

நிறையப் பகிடிக் கதை சொல்லி, அவர்களைச் சிரிக்க வைத்த பிறகு, அவர்களுடன் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவேன். கொஞ்சம் கொஞ்சமாய் அவர்கள் கூச்சம் குறைஞ்சது. அவர்கள் வெளியூர் போகப் போயினம் எண்டு சொன்னார்கள். ஒருவ கனடாக்கும் மற்றவ அவுஸ்திரேலியாக்கும் குடியேறப் போகினமாம். ஒரு பெண்ணின் அக்காவும், மற்றவரின் பெரியண்ணாவும் ஸ்பான்சர் (sponsor) பண்ணியிருக்கினமாம் என்று சொன்னார்கள்.

“நீங்கள் ரவிக்கை (blouse) தைக்கப் பழகுங்கோ. போன இடத்தில் நிறைய தையல் ஓர்டர்ஸ் கிடைக்கும்,” என்றேன் அவர்களுக்கு.

“ஓம். நல்ல வழி காட்டியிருக்கிறீங்கள்,” என்றார் ஒரு பெண்.

பாகம் 3

ஒரு நாள் எனது சொந்தக் கிராமமான நவாலிக்குச் சென்றோம். பெயர் போன அட்டகிரி கந்தசாமி கோவிலுக்குப் போய் பிள்ளையாரைத் தரிசித்து கந்தனைக் கும்பிட்டோம். எனக்குத் தெரிந்த சிலரைக் கண்டு மிகவும் சந்தோசப்பட்டேன். ஆனால் அவர்கள் கவலையோடு இருந்தார்கள். எப்படி கலகலப்பாய் இருந்த நவாலியில் இப்ப முதியோர் மட்டும் காணப்பட்டார்கள். விசாரித்ததில் அவர்கள் சொந்தங்கள் சிலர் அகால மரணம் அடைந்தார்கள் என்று அறிந்தேன்.

சிலர் தங்கள் பிள்ளைகள் வெளியூருக்குப் போய்விட்டார்கள் என்றார்கள். மற்றவர்கள், யாழ்ப்பாணத்தில் வாழும் தங்கள் இளைய சந்ததியினருக்கு எப்படி எதிர்காலம் இருக்கும் என்று மனவருத்தப்பட்டார்கள். கொஞ்ச நேரம் அவர்கள் சோகக் கதையைக் கேட்டு, அவர்களுக்கு நல்ல காலம் விடிய வேணும் என்று முருகப்பெருமானிடம் மனமுருக வேண்டினேன்.

கோவிலை வலம் வந்து, திரும்பியும் சாமியைக் கும்பிட்ட பிறகு, வயலோரமாய் வந்து, இடிஞ்சகுண்டு பக்கம் போகாமல், மானிப்பாயிலிருந்து அரசடிக்குப் போகும் தெருவில் சைக்கிளை ஓட்டினான் முருகேசன்.

இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், இன்றைக்கு நான் வந்த விசயம் கேட்ட உடனே என்னைப் பார்க்க வந்திருக்கும் உங்களுக்கு, எங்கள் ஊர் பற்றித் தெரிவிக்க விருப்பமா இருக்கு எனக்கு. அப்பதான் இலங்கைத் தமிழர் எவ்வளவு கஸ்டப்படுறார்கள் எண்டு நீங்களும் அறிவீர்கள்.

நாங்கள் 1954-55-ஆம் ஆண்டில் கட்டிய புது வீடு, என் பெயர் சூட்டப்பட்ட திலக நிவாசாவை (Thilaga Nivasva} பார்க்கப் போனோம். வெளிச் சுவரோடு நாங்கள் போட்ட இரும்பு கேட் அப்பிடியே இருந்தது. முன் வாசல் சுவருக்கு மேலே பொறிக்கப்பட்ட வீட்டுப் பெயர் Thilaga Nivasa (திலக நிவாஸா) என்னை வரவேற்றது. இம்மியளவு மாற்றம் இல்லாமல் வீடு இருப்பதைக் கண்டு சந்தோசப்பட்டேன்.

கொஞ்ச நேரம் அங்கே இப்பத்திய வீட்டுச் சொந்தக்காரரோடு ஊர்ப்புதினங்கள் விசாரிச்சு, வளவையும் வீட்டையும் சுத்திப் பார்த்தோம்.

அப்ப நாங்கள் நட்டிருந்த மாங்கண்டுகள் இப்ப பெரிய சோலையாய் வளர்ந்திருப்பதைக் காணச் சந்தோசம் பொத்துக்கொண்டு வந்தது எனக்கு. கிணத்தடிக்குப் போய் வாளியில் தண்ணி பிடிச்சு, முருகேசனும் நானும் தாகம் தீரக் குடிச்சோம். இந்தக் கிணத்துத் தண்ணி உவர் இல்லை என்று தெரிஞ்சு, அக்கம் பக்கத்து வீட்டார் அப்ப எங்கள் வீட்டுக்கு வந்து குடம் நிறையத் தண்ணி கொண்டுபோவினம் சமையலுக்கு.

அடுத்த வீடு எங்கள் பெரியக்கா வீடு, பத்ம பவன், (Pathma Bhavan). பெரியக்காவும் அத்தானும் இறந்தபிறகு, அவர்களின் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் வெளிநாடுகளில் குடிபெயர்ந்திருந்தனர். அதன் பிறகு அவர்கள் வீட்டைத் தங்களுக்குத் தெரிந்த ஒரு குடும்பத்துக்குக் குடுத்திருந்தார்கள். அதை வெளியிலிருந்து பார்த்துவிட்டு, இருட்டுப்படமுன் வீடு திரும்பவேணும் என்று மகன் சொன்னதால், நான் அவன் சைக்கிளின் பின்னாலே ஏறினேன்.

நாங்கள் நவாலியிலிருந்து எங்கள் வீட்டுக்கு வர, இருந்தாப் போலே பரந்தளவிலான ஷெல் தாக்குதல்கள் காதைத் துளைக்க, அதிர்ச்சி அடைந்தோம். சனங்கள் பக்கத்திலிருந்த பதுங்கு குழிகளில் பாய்வதைக் கண்டு, நாங்களும் பதுங்கு குழி ஒன்றில் பதுங்கினோம். என் நெஞ்சு படபடக்க, மூக்கை வாயைப் பொத்தி கண்ணை மூடினேன். அதுக்குள்ளே எவ்வளவு நேரம் இருந்தேனோ தெரியாது.

குண்டு வெடிப்புச் சத்தம் ஓயாது கேட்டது. ஒரு குழந்தை வீறிட்டு அழ ஆரோ அதன் வாயைப் பொத்தி இருக்க வேணும். கும்மிருட்டில் என்ன நடக்கிறது எண்டு ஒருவருக்கும் தெரியவில்லை. பதுங்கு குழியில் எத்தனை பேர் இருந்தார்கள் என்று கூடத் தெரியாது.

ஆமிக்காரர் நாசம் பண்ணிப் போனபின், ஒரு மயான அமைதி அங்கே நிலவியது. முருகேசன் இருட்டில் என்னைத் தேடிப் பிடிச்சு மெதுவாய்த் தூக்கி வெளியே இருத்தினான்.

பிறகு அவன் என்னை அணைத்தடி சைக்கிளைத் தேடினான். ஒருபடி அதைக் கண்டு பிடிச்சு என்னைப் பின்னால் இருத்தி, நேரே வீட்டுப் பக்கம் சைக்கிளை ஓட்டினான்.

எங்கேயும் ஒரே அவலக் குரல். எனக்கு சத்தி எடுக்க வேணும் போல இருந்தது. பத்து நிமிசத்தில் நாங்கள் வீடு வந்து சேர்ந்தோம். அய்யய்யோ! என் மகன் வீட்டிலும் ஒரு பக்கத்தில் குண்டு விழுந்திருப்பதைக் கண்டு நான் கதறி அழுதேன். முருகேசன் அதிர்ச்சியடைஞ்சு கொஞ்ச நேரம் ஒன்றும் பேசமுடியாமல் இருந்தான்.

அவனுக்கு என்னால் முடிந்தவரை ஆறுதல் சொல்லி, அவனைத் தேற்றினேன். “மகனே, நல்ல வேளை நாங்கள் வெளியே போனபடியா உயிர் தப்பினோம். அட்டகிரிப் பிள்ளையார் எங்களைக் கைவிடார்,” என்றேன் அவனை அணைத்து.

அடுத்த வீட்டில், நாகம்மாவின் மகள் காயமடைஞ்சு அவளை உடனடியாக ஆசுபத்திரிக்குக் கூட்டிச்சென்றார்கள். அங்கே காயத்துக்கு வேண்டிய மருந்து இல்லாதபடியால், methylated spirit தடவி, கட்டுப் போட்டு (bandage) வீட்டுக்கு அனுப்பினார்கள். மருத்துவஅதிகாரிகள் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு வசதி இல்லாததால் வருத்தம் அடைந்தார்கள்.

எங்களுக்குப் பாதிவீடு மட்டுமல்ல, நாங்கள் அப்பப்பவாட்டி வைத்திருந்த பாண்துண்டுகளும், மாங்காய் ஊறுகா சாடியும் நொருங்கிப் போய்விட்டன.

என் மகனுக்கு நான் ஒரு சுமையானேன். ஒருத்தன் தனி ஆளாயிருந்தால் ஓரளவு தன்னைத் தேற்றிச் சமாளிப்பான். ஆனால் வயதுபோன தாயார் பக்கத்தில் இருந்ததால் அவனுக்கு நான் ஒரு சுமையாய்த்தான் இருப்பேன் எண்டு நினைச்சு நான் வருந்துவேன். உணவுத் தட்டுப்பாடு நேரத்தில் வீட்டிலிருந்த கொஞ்ச சாப்பாட்டுக்கு எனக்கு பங்கு போட விருப்பமில்லை. ஆனாலும் கூழோ கஞ்சியோ அவன் என்னுடன் பகிர்ந்து கொள்வான்.”

-o-

அம்மாவின் கதை இந்தக் கட்டத்தில் தடை பட்டது. எங்கள் பிள்ளைகள் லட்சுமி, கீதா, ஷ்யாமளா இப்ப கண் விழித்துக்கொண்டனர். மூவரும் அம்மம்மாவைக் கட்டி அணைத்து கொஞ்சி மகிழ்ந்தார்கள். மாறிமாறி முத்தங் குடுத்து தம் அன்பை அம்மம்மாக்குப் பொழிந்தனர். சிறிது நேரம் அம்மா அவர்களில் ஒருவரானார். அவர்களுடன் சிரித்துப் பகிடி விட்டார். “இது ஆரா இருக்கலாம் என்று சொல்லுங்கோ,” என்றார் அம்மம்மா. “சோற்றைக் கொட்டிவிட்டு பானையைச் சாப்பிடலாம். அது என்ன பானை?”

“அதென்ன பானையாய் இருக்கும்?” என்றாள் கீதா

“இது ஒரு நாளும் நடக்காது. ஆரும் இந்த மாதிரி அநியாயம் செய்ய மாட்டினம்,” என்றாள் லட்சுமி.

“நம்பிற மாதிரி ஒண்டு சொல்லுங்கோ, அம்மம்மா,” என்றாள் ஷ்யாமளா.

அம்மம்மா சொன்னார், “நாங்கள் ஒவ்வொரு நாளும் இஞ்ச இப்படித்தான் பானையைச் சாப்பிடுறம்.”

உடனே, “பப்பாப்பழம் !” என்று மூவரும் கத்தினார்கள்.

அம்மா ஊரிலிருந்து சென்னை வந்திறங்கிய செய்தி காட்டுத்தீ போல் பரவியது. அன்று முழு நாளும் அண்டை வீட்டாரும், உறவினரும், சிநேகிதரும் எங்கள் வீட்டுக்கு வந்து கொண்டே இருந்தார்கள். ஒரு சிலர் சிற்றுண்டிகளையும், சிலர் மதிய உணவும் சமைத்துக்கொண்டு வந்தார்கள்.

வந்தவர்களுக்கு தேத்தண்ணி கோப்பி தயாரிப்பதும், இடையே அம்மா கதையைத் துவங்க, செய்துகொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு அம்மா அருகில் இருந்து அவர் பிரயாணக் கதையைக் கேட்பதுமாக, மீனாட்சியும் எங்கள் பெண்களும் அங்கும் இங்குமாக போய் வந்துகொண்டிருந்தார்கள்.

அம்மா தன் கதைகளைத் தொடருவதற்கு முன் சகுந்தலா அவரைக் கூட்டிக்கொண்டுபோய், ஒரு சில நிமிடங்கள் ஓய்வெடுக்குமாறு சொல்லுவாள்.

சிறிது நேரம் கழித்து நான் அம்மாவிடம் சொன்னேன், “நீங்கள் இங்கே எப்படி வந்தீங்கள் என்பதைத் தயவு செய்து சொல்லுங்கோ. பிள்ளைகளே, அம்மம்மாவைத் தடுத்து நிறுத்தாமல், அவரின் முழுக்கதையையும் கேளுங்கோ.”

அம்மா தன் கதையைத் தொடர்ந்தார்.

-0-

“யுத்தம் என்பது ஒரு நீடித்த போராட்டம். விடுதலைப் போராளிகளைத் தாக்க இராணுவம் வலு இழந்தபோது, அவர்கள் பொதுமக்களைத் தாக்கத் துடங்கினார்கள். அவங்கள் சீற்றத்துக்கு மக்கள் குறி வைக்கப்படுகின்றார்கள்.

முருகேசனோ துணிச்சலானவன். எதற்கும் பயப்பிட மாட்டான். அவன் ஒவ்வொரு நாளும் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் குடுக்கப் போவான். போக முதல் அடுத்த வீட்டு நாகம்மாவிடம் என்னைக் கவனமாய்ப் பார்த்துக்கொள்ளச் சொல்லுவான்.

முருகேசன் வீடு உடைஞ்ச பிறகு, எங்களுக்குப் படுக்க ஆமான இடம் கிடையாது. படுத்துக்கொண்டிருப்போம். இருந்தாப்போல கூரையிலிருந்து மழைத் தண்ணி ஒழுகும். உடனே வேறு இடத்திலே படுக்கை விரிப்போம். படுக்கை நனைந்திருக்கும். பிறகு நித்திரை வராது. எப்படா விடியும் எண்டு ஆவலாய் இருப்பேன். அடுத்த தாக்குதல் எப்ப நடக்கும் என்ற பயம் எங்களுக்கு.

யாழ்ப்பாணத்தில் உணவு மற்றும் மருந்து பற்றாக்குறைகள். முந்தி இருந்த சாப்பாட்டுத் தட்டுப்பாட்டுக்கு மேல் இப்ப காசு குடுத்தாலும் சாமான் இல்லை என்று கடைக்காரர்கள் எல்லாத்தையும் பதுக்கி வைத்திட்டார்கள். நாட்டிலே ஒரே பஞ்சம். ஒரே அவலக்குரல் எங்கும்.

இந்தக் காலகட்டத்தில், ஏராளமான மக்கள் ஊரை விட்டோடப்படகுகளில் பயணஞ் செய்தார்கள். தென் இந்தியாக்குப் பல படகோட்டிகள் மக்களை ஏற்றிச் சென்றனர் என்று நாங்கள் கேள்விப்பட்டோம். மக்கள், வேற வழியில்லாமல் தங்கள் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான வாழ்வு கிட்டட்டும் எண்டு விரும்பி, படகில் பயணஞ் செய்யத் துணிந்தார்கள்.

நான் இருதலைக் கொள்ளிபோல் ஆனேன். ஒரு நேரம் எது நடந்தாலும் மகனோடு இங்கே சாவேன் என்ற வைராக்கியம். மறு நேரம் பயத்திலே செத்துக்கொண்டு விசர் பிடிச்சது போல அழுவேன். கொஞ்ச நாளைக்குப் பிறகு நான் இனிமேல் இஞ்சே இருக்க முடியாது, என் மகள் வீட்டுக்குப் போகவேணும் எண்டு விரும்பினேன்.

நான் நாளுக்கு நாள் பலவீனம் அடைவதைப் பார்க்க முடியாமல், முருகேசன் ஒருநாள் என்னைப் படகு மூலம் அனுப்ப முடிவு செய்தான்.

எப்படா போவேன் எண்டு காத்திருந்த எனக்கு, அவன் அப்படிச் சொன்னவுடன் அவனை விட்டுப் போகத் தயக்கமாய் இருந்தது.

“அம்மா, இஞ்சே இருந்தால், நீங்கள் பட்டினியால் செத்துப்போவீங்கள். இல்லாட்டி ஆமிக்காரன் குண்டு வீசி, நீங்கள் எங்கள் எல்லாருடனும் சேர்ந்து செத்துப்போவீங்கள். அதை நான் விரும்பவில்லை. உங்களுக்கு சகுவின் குடும்பத்தோடு அமைதியாய் சீவிக்க, இப்ப வாய்ப்பு வந்திருக்கு.”

“கொஞ்ச நாள் பார்ப்போம். இப்ப வேண்டாம்,” என்றேன்.

இந்த நேரத்தில், சில படகுகள் கடலில் தாண்டு போயின என்ற அவலச்செய்தி பரவியது. அப்படி ஆபத்துக்கள் இருந்தபோதும், தென்னிந்தியாவில் ஒரு அமைதியான வாழ்க்கையை விரும்பி, மக்கள் கையிலே உயிரைப் பிடித்தபடி, படகிலே பயணஞ் செய்யத் துணிந்தார்கள்.

நான் அரைப் பட்டினியால் மெலிந்துபோவதைப் பார்க்க முடியாமல், ஒருநாள் மகன் கேட்டான், “அம்மா, நீங்கள் ஒரு மீன்பிடி படகில் பயணம் செய்யத் தயாரா? நித்திரை மயக்கத்தில் கடலுக்குள் நீங்கள் விழலாம். அல்லது நீமோனியா பிடித்துச் சாகலாம்.”

“யமதர்மராஜா அப்படி எனக்கு கிட்ட வர முடியாது. நான் எதுக்கும் பயப்பிட மாட்டேன். ஆனால் நீ என்னுடன் வந்தால் மட்டுமே போகப் போகிறேன். இருவரும் சேர்ந்து சகுவின் வீட்டுக்குப் போவோம்.”

“அம்மா, யாழ்ப்பாணத்தில் நான் வாழந்து, இந்த ஊர்ப் பிள்ளைகளுக்கு உதவுவது தான் என் விருப்பம். உலகிலே எங்கு போனாலும் அவர்களுக்கு வேலை கிடைக்க வேண்டுமென, அவர்களுக்கு கணினி திறன்களைப் படிப்பிக்கிறேன். கொஞ்ச காலத்துக்குப் பிறகு நான் சென்னைக்கு வருவேன். ஆனால் இப்ப முதலிலே நீங்கள் போக வேணும்,” என்றான் என் அன்பு மகன், அடக்க முடியாத கண்ணீரைத் துடைத்துக்கொண்டு. “இதிலே எந்த வித மாற்றமும் இல்லை.”

என் பயணத்துக்குக் குடுக்க வேண்டிய பணத்துக்காக அவன் தன் கணினிகளில் ஒன்றை விற்கத் திட்டமிட்டான்.

அதை அறிந்ததும் நான் அவனைத் தடுத்தேன். “அதை விற்கிறது உன் வலது கையை வெட்டுவது போல இருக்கும். கவலைப்படாதே, என்னட்ட கொஞ்சம் காசு இருக்கிது. அதோட இந்த ஒரு சோடி ரேடியோ காப்பும் இருக்கிது. இவற்றை நீ விடுதலை வீரர்களுக்குக் குடுக்க வேண்டிய பவுனுக்காக எடுத்துக்கொள்,” எண்டு சொல்லி நெளிக்காப்புகளைக் கழட்ட, அவன் என்னைத் தடுத்தான்.

“அம்மா, உங்கள் காப்புகளை வைத்திருங்கோ. உங்கள் கல்யாண நாள் அன்று அப்பா குடுத்த முதல் பரிசு இவை. பவுன் குடுக்க நான் வேறு வழியைப் பார்க்கிறேன்.”

“நீ கவலைப் படாதே. உன் அப்பா இப்ப உயிரோடு இருந்தால் மிக்க சந்தோசம் அடைவார் தன் அன்புப் பரிசு ஒரு நல்ல காரியத்துக்கு உதவப் போறதெண்டு.”

-0-

இப்படிப் பேசிக்கொண்டிருந்த அம்மா, திரும்பித் தன் பேரப்பிள்ளைகள் மூவரையும் கூப்பிட்டார். “ரேடியோ காப்பு பற்றி உங்களுக்குச் சொல்லவேணும். சின்னச் சின்ன பவுன் மாங்காய்கள் தனித்தனி மூன்று நெளிஞ்ச பவுன் காப்புகளை ஒட்டினமாதிரி இருக்கும். ஒரு ஒற்றைக் காப்பு மூன்று தனிக் காப்பு மாதிரி இருக்கும். யாழ்ப்பாணப் பொம்பிள்ளையள் இந்த ரேடியோ காப்பை விரும்பிப் போடுவார்கள்.”

“எங்களுக்குத் தெரியும், அம்மம்மா. நீங்கள் ஸ்பெஷல் தினங்களுக்கு அதை போடுவீங்கள்,” என்றாள் எங்கள் மூத்த மகள் லக்ஷ்மி.

அம்மா திரும்பவும் கதையைத் தொடர்ந்தார்.

-o-

“ஓர் அமாவாசை அன்று நாங்கள் எங்கள் இரவு உணவைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம்.

முருகேசன் சொன்னான், “நாங்கள் படுக்கமுதல் கோவிலுக்குப் போக வேணும்.”

கோயில் பூட்டி இருக்கும். என்றாலும் நான் அவனுடன் வெளியே போக ஆயத்தமானேன். என் பொய்ப்பல்லை நல்லாக் கழுவித் திரும்பவும் போட்டேன். வேறொரு காஃப்தானை மாத்திக்கொண்டு அவனுடைய சைக்கிளின் பின்னாலே ஏறினதும், முருகேசன் பைக்கை கெதியா ஓட்டினான்.

முழு நகரமும் இருட்டில் இருந்தது. மண்ணெண்ணெய் பற்றாக்குறை இருந்தபடியால் ஒவ்வொருவரும் நேரத்தோடே தத்தம் வீட்டில் விளக்கை அணைத்திடுவார்கள்.

என் மகன் கொஞ்ச தூரத்தில் இருந்த மூலைப் பிள்ளையார் கோவிலடியில் பைக்கை நிறுத்தினான். நான் கீழே இறங்கவும், ஒரு கற்பூரத்தை வாசலில் கொளுத்திப் பிள்ளையாரைக் கும்பிட்டான்.

நான் ஒரு தேவாரம் பாடி சாமி கும்பிட்டு முடித்ததும், அவன் கீழே விழுந்து என் பாதங்களைத் தொட்டு வணங்கினான்.

திடீரென்று என் நெஞ்சு பட படத்தது.

அவன் எழும்பி என்னைத் தழுவினான். அவன் கண்ணீர் என் முகத்தை நனைக்க நான் அழத் துவங்கினேன்.

அவன் என்னை ஆறுதல்படுத்தி என் கண்ணீரைத் துடைத்தான். “எல்லாம் சரி வரும். இப்ப நாங்கள் வந்த வேலையைக் கெதியா முடிக்க வேண்டும்.”

“வாடா வீட்டுக்குப் போவோம்,” என்றேன்.

“அது வீடில்லை. பாதி வீடு,” எண்டு பகிடி விட்டான்.

எனக்கு மனவேதனை தாங்கமுடியவில்லை. நான் சைக்கிளில் ஏற மறுத்தேன்.

“அம்மா, சொல்லுக்கேளுங்கோ. பிடிவாதம் பிடிக்கிற நேரம் இல்லை. வாங்கோ.” என்னை வலுக்கட்டாயமாய் இழுத்துத், தன்பின்னே இருத்தி பைக்கை ஓட்டினான்.

நாங்கள் கொஞ்ச நேரத்தாலே கொழும்புத்துறையில் ஒரு கடற்கரை பக்கம், சவுக்கு மரம் நிறைந்த இடத்துக்கு வந்தோம். கடலலைகள் பேரிரைச்சலோடு கரையில் மோதிக்கொண்ட மாதிரி அந்த இருட்டில் எனக்குக் கேட்டது.

அதுக்கு ஏத்தாப்போல, கரையிலிருந்த சவுக்கு மரங்கள் பேயாட்டம் போட்டு ஆடிக்கொண்டிருந்ததைப் பார்த்ததும் நான் பயந்து போனேன். இன்னும் என்ர காதிலே கேக்குது அந்த இரைச்சல் சத்தம்,” என்றார் அம்மா தன் காதுகளைப் பொத்தி.

-o-

அம்மா இப்படிச் சொல்லிக் கண்களை மூடினார். உடனே சகு அவரைக் கூட்டிக்கொண்டுபோய் அறையில் படுக்கச்சொன்னாள்.

எவ்வளவு கஸ்டப் பட்டிருக்கிறார் அம்மா, என்று நாங்கள் வந்தவரோடும் பிள்ளைகளோடும் பேசிக்கொண்டிருந்தோம்.

ஒரு மணித்தியாலம் கண்ணயர்ந்த பின்னர், அம்மா வெளியே வந்தார். அவருக்குச் சுடச்சுட ஒரு கப் பால் குடுத்தாள் மகள் கீதா. கொஞ்ச நேரம் ஷ்யாமளா, கீதா, லக்ஷ்மியோடே அம்மா பகிடிக் கதை சொல்லிச் சிரிச்சார்.

அம்மாவின் மீதிஅனுபவங்களைக் கேட்டறிய நாங்கள் ஆவலாய் இருந்தோம்.

அம்மா தன் மீதிக் கதையைச் சொல்லத்துவங்கினார்.

-o-

“கடற்கரையிலே நாலைஞ்சு இளைஞர்கள் நின்றார்கள். ஒருவன் அந்த இருட்டிலும் முருகேசனை அடையாளம் கண்டுகொண்டான்.

என் மகன் அவனுக்கு ரூபாய் 1600/= எண்ணிக் குடுத்தான். அதை வாங்கிய பிறகு அந்தப் பையன் என் காப்புகளைத் தரச் சொன்னான்.

அப்பதான் என்ன நடக்கிறது என்பதை நான் அறிந்தேன்.

“இல்லை, என் மகன் என்னுடன் வந்தால் மட்டுமே நான் படகில் வருவேன்,” எண்டு நான் கோபமாய்ச் சொன்னேன்.

வந்த குமுறலை அடக்கி, முருகேசன் என்னைத் தேற்றினான். “அம்மா, நிச்சயமாக, நான் கெதியா உங்களிடம் வந்து சேருவேன். ஆனால் இப்ப நீங்கள் மட்டும் கிளம்புங்கோ.”

“சத்தியமாஎங்களைப் பார்க்கவருவியா?”

“நான் சத்தியம் செய்கிறேன். உங்கள் எல்லாரையும் பார்க்க சென்னைக்கு வருவேன்.”

நான் அந்த இளைஞனுக்கு என் சோடி காப்புகளைத் தயக்கத்துடன் நீட்ட, அவன் பக்கத்திலிருந்த படகோட்டிக்குப் பணத்தைக் குடுத்தான்.

பிறகு முருகேசன் அந்தப் போராளிக்கு மேலும் 500 ரூபாய் குடுத்து அவன் போட்டிருந்த (combat fatigue என்ற) நீளமான கோட்டைத் தன் தாயாருக்கு குடுக்குமாறு வேண்டினான். “என் அம்மா இதை அணிந்தால், ராத்திரி கடல் பயணத்திலே அவருக்குக் குளிரைத் தாங்கப் பாதுகாப்பாய் இருக்கும்.”

அந்த இளைஞன் பணத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துக் கோட்டை எனக்கு இனாமாகக் குடுத்தான். “எனக்கும் ஒரு வயதுபோன அம்மா வீட்டில் இருக்கிறார்,”என்றான் தழுதழுத்த குரலில்.

நான் அவனைக் கட்டி அணைத்து நன்றி கூறினேன்.

முருகேசன் அவருக்கு நன்றி தெரிவித்த பிறகு அந்தக் கோட்டை என் தோள்களைச்சுத்திப் போட்டான். “இந்த உடுப்பு உங்களுக்கு குளிர் பிடிக்காமல் இருக்கப் பாதுகாப்பாய் இருக்கும்.”

அவன் அந்தக் கோட் பாக்கெட்டில் ஒரு சின்ன பர்ஸை வைத்து, “நீங்கள் வீட்டுக்குப் போய்ச் சேரும்வரை உங்கள் செலவுக்குப் போதுமான காசு இதில் வைச்சிருக்கிறேன். பத்திரமாய் வைச்சிருங்கோ,”என்றான்.

நாங்கள் ஒருவரை ஒருவர் தழுவி அணைத்தோம். அவன் அழுதான். நானும் தேம்பித் தேம்பி அழுதேன். ஒருபோதும் ஒருவர் மற்றவரை மீண்டும் பார்க்க முடியாது என்றதீராத சோக உணர்வு எனக்குஏற்பட்டது. எங்கள் கண்ணீர் கன்னங்களில் வழிந்தது.

அப்ப படகோட்டி எங்களைஅவசரப்படுத்த, என் அன்பு மகன் என்னை ஒரு சிறு குழந்தையை அணைப்பதுபோல் தூக்கிப் படகில் ஒரு வலுவான மனிதனுக்குப் பக்கத்தில் இருத்தினான்.

அந்தச் சின்ன மீன்பிடி படகில், இருபது இருபத்தைஞ்சு பயணிகள் பனங்கிழங்கு அடுக்கின மாதிரி நெருக்கமாய் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் எல்லாரும் இருட்டில் எப்படிச் சடுதியா வந்தார்கள் எண்டு நான் ஆச்சரியப்பட்டேன்.

முருகேசன் என்னைக் கட்டி அணைத்து படகுடன் கொஞ்ச தூரம் நடந்தான். இல்லை! இல்லை!! கடலில் நீந்தி வந்தான் என் கையைப் பிடித்துக்கொண்டு. கடலின் ஆழம் கூடத் துவங்க தண்ணீர் என் மகனின் நாடியைத் தொட்டது.

அவனுக்கு ஆபத்து வராமல் இருக்க, நான் என் கையைத் தயக்கத்துடன் விடுவித்துக்கொண்டேன்.

படகோட்டி படகை மெதுவாக இயக்கத் துவங்கினான்.

என் கண்ணீர் என் பார்வையை மறைத்தபோதும் என் மகன் நின்ற திக்கில் தலையைத் திருப்பித் தேம்பித் தேம்பி அழுதேன். அடுத்த சில வினாடிகளில் அவன் என் கண்களுக்குத் தெரியவில்லை ‘’கடவுளே அவனைக் காப்பாத்து‘ எண்டு வேண்டினேன்.

அந்த இருட்டில் சடுதியா பத்துப் பதினைஞ்சு படகுகள் அங்கே வந்தன. படகோட்டிகள் பயணிகளை ஏத்திக்கொண்டிருந்தார்கள். என்னைப்போல ஒவ்வொருவரும் தங்கள் பிரார்த்தனைகளைச் செய்து கொண்டிருப்பார்கள்.

Part 4

படகோட்டி பயணிகளைப் பாதுகாத்து அக்கரை சேர்க்கக் கடமைப்பட்டுள்ளான். அவன் மேல் முழு நம்பிக்கை வைத்துத்தான் உறவினர்கள் தங்கள் சொந்தங்கள் படகில் பயணிப்பதை அனுமதித்திருந்தார்கள். தற்செயலாக ஏதும் தப்புச் செய்தானோ, அவன் திரும்பி வீட்டுக்குப் போக முடியாது. ஏனென்றால், விடுதலைப் போராளிகள் அவனுடைய எல்லா விவரங்களையும் தெரிந்து வைத்திருந்தார்கள். உண்மையில, படகோட்டியின் “சாதகம்‘’ அவர்கள் கையில் இருந்தது. அவர்கள் சினத்தைஅவன் தாங்கமாட்டான்.

எல்லாரும் படகில ஏறினதும், படகோட்டி கொஞ்ச நேரம் துடுப்பைஇயக்காமல் படகைத் தன் பாட்டுக்கு நீரில் அலையவிட்டான். அது மெதுவாக ஆழ்கடல் நோக்கிப் போனது. எங்களைக் கும்மிருட்டு கவ்விக் கொண்டபிறகு, சத்த மில்லாமல் படகோட்டியும் அவன் உதவியாளனும் துடுப்புகளை துழாவச் செய்ய, தோணியும் அலைகள் மேலே மெல்ல மெல்ல நகர்ந்தது.

சடுதியா ரோந்து படகுகள் இரைந்து வரக் கேட்டதும், திருப்பியும் துடுப்பைப் பாவிக்காமல், படகோட்டிஎங்களைத் தாழ்ந்த குரலில் எச்சரித்தான்ஏக வசனத்தில், “நீ எல்லாம் உயிரோடெ இருக்க வேணும்னா, சத்தம் போடாமல் இரு. தலையைக் குனி.”

நாங்களும் உடனே கண்ணை மூடி, மூச்சை நிறுத்தித் தலையை முழங்கால் மேல் கவிழ்த்தோம். ரோந்து படகுகள் வேறு திசை போனபிறகு, ஸ்கூல்லே டிரில் மாஸ்டர் கட்டளை இட்டது போல, அவன் “இப்ப நிமிர்,”என்றதும் நாங்கள் நிமிர்ந்தோம்.

அரை மணித்தியாலத்துக்குப் பிறகு துப்பாக்கிச் சூடு பட்டு கடல் நீர் துள்ளி எழும்பினதைக் கண்டு கிடுநடுக்கம் வந்தது எங்களுக்கு. ரோந்துப் படை எங்களுடைய படகிலிருந்து கொஞ்ச தூரத்தில் சென்றுகொண்டிருக்குது என்று பயணி ஒருவர் மெதுவாகச் சொன்னார்.

பத்து நிமிசத்துக்குப் பிறகும் அவங்கட துப்பாக்கிச்சூடு எங்களுக்குக் கிட்ட விழுந்து தண்ணி எல்லா இடமும் சிதறியது. அது என் கற்பனையோ?சேச்சே! பறக்கும் மீன் தாவி இருக்கும் என்று என்னைத் தேற்றிக்கொண்டேன். ஆனாலும் நெஞ்சு படபடத்தது. என் பயத்தை வெளிக்காட்டாமல் மெதுவாகத் தேவாரம்பாடினேன்.

ரோந்து படை எந்தப் பக்கத்திலிருந்து வருகுது என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் பல வருசங்களாக கடலில் திரிந்த படகோட்டிகள் தம் கண்களையும் காதுகளையும் நல்லாய் பயிற்றுவித்திருந்தார்கள். ஆகவே ரோந்துப் படகின் ரீங்காரச் சத்தம் (whirring) எங்கேயிருந்து, எவ்வளவு தூரத்திலிருந்து வருது, என்பதை அவர்கள் நல்லாய் அறிந்து வைத்திருந்தார்கள்.

கொஞ்ச நேரத்துக்குப் பிறகு ஒரு சத்தமும் கேட்கவில்லை. என் இதயத் துடிப்பைத் தவிர.

படகோட்டியும் அவர் உதவியாளனும் துடுப்புளைக் கெதியாக ஓட்டினார்கள். ரோந்து படையால் கண்டுபிடிக்கப்படாமல் இருக்க எல்லாப் படகுகளுக்கும் கறுத்த சாயம் பூசப்பட்டிருந்தது.

இப்ப கொஞ்சம் ஆறுதலாய் இருக்கு எண்டு நான் நினைக்க, கடல் சீற்றம் அடைந்த மாதிரி இருந்தது. பெரிய பெரிய அலைகள் தோணியைக் குலுக்கத் துவங்க, எனக்குச் சத்தி எடுக்க வேணும் போல இருந்தது. நான் வாயைக் கையால் பொத்தினேன். அப்படி மற்றப் பயணிகளும் செய்தார்கள்.

உடனே படகோட்டி ஒவ்வொருத்தருக்கும் ஒரு பிளாஸ்டிக் பையைக் குடுத்து, “பையை வாயிலே பிடி. படகுலே சத்தி எடுக்காதே. வாயைக் கடல் பக்கம் திருப்பு,” என்றான் கடுமையாகஎல்லாருக்கும். அதே ஏக வசனம். எனக்கு சிரிக்கவா கோவிக்கவா என்று தெரியவில்லை. ஆனாலும் அவன் சொன்னதில் ஞாயம் இருந்தது.

படகு மேலும் கீழும் பயங்கர அலைகளில் பாய, நாங்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தோம். கடவுள் புண்ணியத்தில் சில நிமிசத்துக்குப் பிறகு, கடல் கொந்தளிப்பு கொஞ்சம் குறைஞ்சது. இப்ப என் பயமும் குறைஞ்சது.

சரியாக் களைச்சுப் போனேன். நித்திரைகொள்ள வேணும்போல இருந்தது. ஆனால் முருகேசன் எச்சரித்ததை நினைத்துக் கண்களை கசக்கினேன். அப்பபக்கத்தில் இருந்தஒரு பெண் அவர் வைத்திருந்த துவாய்த் துண்டைத் தந்தார். அதைக் கடல் நீரில் நனைத்து என் முகம் முழுதும் துடைத்தேன்.உவர்த் தண்ணி கண்களை அரிக்கத்துவங்க, வந்த நித்திரை போனது.

நேரம் முடிவில்லாமல் நீண்டு கொண்டே போனது. என்ர சீவியத்திலே அதுதான் நீண்ட ராத்திரிபோல இருந்தது. சின்னவயதில் சிவராத்திரி விரதம் பிடிச்சால், நித்திரை வராமல் இருக்க, நாங்கள் ஒருவரை ஒருவர் கிள்ளுவோம். ஆனால் இப்ப அப்படிக் கிள்ளினால், பக்கத்தில் இருந்த தடிச்ச மனுசன் என்னைத் தூக்கிக் கடலுக்குள் எறிவாரோ எண்டு பயம்.

ஆகவே நித்திரை வராமல் இருக்க நான் மெதுவாக சிவபுராணம் பாடத் துவங்கினேன். அப்ப சில பொம்பிளையளும் என்னோட சேர்ந்து பாடினார்கள்.

நாங்கள் ஒருக்கா இல்லை, கனதரம் சிவபுராணத்தைப் பாடியும், இரவு விடியவில்லை. மேகங்கள் அப்பப்ப நகர, நட்சத்திரங்கள் எங்களைப் பார்த்து மின்னின. நேரத்தைப் போக்க நான் ஒவ்வொரு நட்சத்திரமாய் எண்ணிக்கொண்டிருந்தேன். நீங்கள் நினைப்பீங்கள் இது என்ன விசர் எண்டு. பின்னே என்ன? நடுக்கடலில் நடுராத்திரியில் வேறு என்ன செய்யலாம்? ஒளிச்சு விளையாடவா முடியும்?

நாங்கள் இன்றிரவு இந்த ஆழ் கடலில் மூழ்கப் போகிறோம் எண்டு நினைத்துப் பயந்துகொண்டிருந்தேன். பாதாளத்தில் இருந்து கடல் வேதாளங்கள் எங்களைக் கீழே இழுத்துப் போகுங்கள். கண்களை இறுக்கி மூடியும் அந்தப் பேய்கள் எங்களைத் தூக்கி இழுத்துப் போகிற மாதிரி எனக்குஒருபயம் வந்தது.

என் கடல் பயணம் எப்படிப் பட்டது, எவ்வளவு கஸ்டமானது என்பதை இப்ப என்னால் சொல்ல முடியாது. அது நான் அனுபவித்த நீண்ட நரக இரவு. யாழ்ப்பாணத்தை விட்டுத் தப்பிப் போகவேணும் எண்ட என் முடிவை நினைத்து நான் துக்கப்பட்டேன்.

பாதி வீடோ சாப்பாட்டுத் தட்டுப்பாடோ அங்கே முருகேசனோட இருந்திருக்கலாமே எண்டு நினைச்சு அழுதேன்.

என்னோடு வந்த ஒவ்வொரு பயணியும் அந்த மாதிரி தங்கள் வீட்டில் இருந்திருக்கலாமேஎண்டு நினைச்சிருப்பார்கள். ஆனால் ஒருவருக்கொருவர் கதைச்சு ஆறுதல் சொல்ல எங்களுக்குத் தெம்பு வரவில்லை.

என் முதுகு வலி அதிகரிக்க, போட்டா போட்டிக்கு என் கால் உளைவு அதிகரித்தது.

அவ்வப்ப ரோந்துக் கடற்படைகள் தொலைவில் வரும் சத்தம் எங்களுக்குக் கேட்டது. படகோட்டி ஏக வசனம் சொல்ல முன்னம், நாங்கள் தலையைக் கீழே முழங்காலுக்கு இடையில் கவிழ்த்தோம். படகோட்டியும் அவன் உதவியாளனும் துடுப்புகளை துழாவச் செய்வதை நிறுத்த, படகு கொஞ்ச நேரம் கடலில் அங்கும் இங்கும் மிதந்தது.

கடற்படைப் படகுகள் வேறு பக்கம் போய்விட்டன என்றதை உறுதிப் படுத்திய, பிறகு படகோட்டி துடுப்பை கெதியா அசைத்தான்.

நான் என் மனசிலே படகோட்டிக்கு நன்றி கூறினேன். தன் உயிர் மட்டும் அல்ல. எங்கள் எல்லாற்றை உயிரும் அவன் கையில்.

நேரம் முடிவில்லாமல் நீண்டு கொண்டு போனது. எத்தனை தரம் நான் துவாய்த் துண்டை நனைத்து என் முகம் கைகளை கடல் நீரில் கழுவியிருப்பேன் நித்திரை மயக்கம் வராமல் இருக்க.

இலங்கையரும் அல்ல, இந்தியரும் அல்ல. நாங்கள் இனிமேல் கடல் வாசிகள் என்ற பயம் வந்தது எனக்கு. இப்படி எத்தனையோ எண்ணங்கள் என்னை வாட்டிக்கொண்டிருக்கத் திடீரெண்டு,

படகோட்டி, உரத்த குரல்ல சொன்னான், “உங்களுக்கு ஒரு சந்தோசசேதி சொல்லப்போறன். நீங்கள் கொஞ்சம் ஓய்வெடுக்கலாம்.” அவன் கிழக்கு அடிவானத்தைச் சுட்டிக்காட்டி, “உத்துப் பார். அங்கே ஒரு மங்கலான வெளிச்சம் தெரியுதா?”

அப்பதான் அடிவானத்தில் ஒளிவீசும் விளக்குகளை நாங்கள் கவனித்தோம்.

உடனே எல்லாரும், “அரோஹரா, அரோஹரா, ராமேஸ்வரம் வந்திட்டோம்,” எண்டு பலத்த சத்தமாய் முழக்கமிட்டோம்.

படகோட்டி வாய்விட்டுச் சிரித்தான். “அட பைத்தியமா நீ எல்லாம்? இப்பதான் அனலைதீவு வந்து சேர்ந்திருக்கு.”

அதே ஏக வசனம் என்னை ஆத்திரபப் படுத்தியது.இதுவா நேரம் நையாண்டி செய்ய?

உடனே பக்கத்தில் இருந்த மனிதர்கோபத்துடன் படகோட்டிக்குக்கிட்டப் போய், “ஏண்டா, எங்கள் பணத்தை கொள்ளை அடித்து நீ தப்பலாம் என்று நினைச்சாயோ?” என்றார்.

அவன் பயந்திட்டான். படகும் ஒரு பக்கம் சரிந்தது. “ஐயா, கவனம். படகு கவிழப் போகுது,” என்றான். வேறு யாருமாய் இருந்தால் அவன் கோவிச்சிருப்பான். ஆனா ஒரு போலீஸ் DIG மாதிரி பேச்சும் உடம்புமாய் தெரிந்த அவர் போக்கு, அவனை ஒரு நிமிசம் உலுக்கியது.

கையெடுத்து ஸலாம் போட்டு, மிக்க மரியாதையுடன் தாழ்ந்த குரலில் சொன்னான், “ஐயா, என்னை மன்னியுங்கோ. கடற்படை ரோந்து படகு காரணமா, நேத்திராத்திரி மாத்துப் பாதை ஒண்டு எடுக்க வேண்டிய கட்டாயம் எனக்கு. நீங்கள் பயப்பிடவேண்டாம். நான் உங்கள் ஒருவருக்கும் துரோகம் செய்ய மாட்டேன். இயக்கத் தலைவர்கள் என்னைச் சும்மா விடமாட்டார்கள். நீங்கள் எல்லாரும் கெதியா ராமேஸ்வரத்துக்குப் போவீர்கள்.ஐயா, இது ஒரு சாதாரண படகு. ஒரு மோட்டார் படகில்லை. அதுக்குத்தான் நான் இதை மெதுவாக நகர்த்த வேணும்.”

அப்படி அவன் சொல்ல, அந்தப் பெரியவர் திரும்பி என் பக்கம் வந்தமர்ந்தார்.

எங்களுக்குப் போன உயிர் திரும்பி வந்தது.

அப்ப பயணி ஒருத்தர் சில விசயங்களைச் சொன்னார். “யாழ்ப்பாணக் குடாநாட்டின் மேற்குக்கரையோரத்திலிருக்கும் அனலை தீவில், ஏறக்குறைய ஆயிரம் மக்கள்தான் வசிக்கிறார்கள். கடல் சூழ்ந்த ஒரு கிராமம் என்றுதான் நாங்கள் இதை அழைக்க வேண்டும்.

“ஒரு சிறிய பகுதியில் நெல் சாகுபடி. தவிர, சில இந்து ஆலயங்கள், மற்றும் கத்தோலிக்க திருச்சபை உள்ளன. இந்தத் தீவைச் சுத்தி இருக்கும் கடல் மிக்க பிரசித்தி பெற்றது. முத்துக் குளிக்க வருவர் வருடா வருடம்.மற்றும் மீன்பிடிக்கவும் நிறையப் பேர் அடிக்கடி வருவர்.”

அப்ப படகோட்டி எச்சரித்தான், “நினைவில் இருக்கட்டும். நாங்கள் இன்னும் இலங்கை நீரில் தான் இருக்கிறம். இஞ்சே கொஞ்சம் இளைப்பாறிய பிறகு இண்டைக்கு ராத்திரிக்கு திரும்ப கடல் பயணம் செய்வோம்.”

படகு தீவின் கரையோரமாகப் போக, எல்லாரும் கெதியா படகில் இருந்து இறங்கினார்கள்.ஆனால் என் கால்கள் விறைச்சுப் போய் என்னால் எழும்ப முடியவில்லை. அப்ப ஒரு இளம் தம்பதியினர் எனக்கு உதவினார்கள். என்னைப் படகில் இருந்து வெளியே தூக்கி, அந்த இளைஞனும் அவன் மனைவியும் என் கைகளைப் பிடித்துக்கொண்டு மெதுவாக என்னைக் கரை சேர்த்தார்கள்.

நான் அவர்களுக்கு நன்றி சொல்லி என்னைச் சுத்திப் பார்த்தேன்.

கடற்கரையிலே எங்களைத் தவிர வேற ஒரு குருவியும் இல்லை. சூரியன் உதிக்க கொஞ்ச நேரம் முன்னுக்கு வந்திட்டோம். சிலர் கடல் நீரில் குளிச்சிட்டு உடை மாத்திக்கொண்டார்கள். நான் கரையிலிருந்தபடி வாய் முகத்தைக் கழுவி, நான் போட்டிருந்த நீட்டுக் கோட்டால் முகத்தைத் துடைத்தேன்.

அங்கே கக்கூஸ் இல்லை. கரையிலே ஒதுங்கிய பகுதிகளை நாங்கள் பாவித்தோம். இது பெரிய சங்கடமான அனுபவமாக இருந்தது. ஆனால் எங்களுக்கு வேற வழியில்லை. பெண்களும் குழந்தைகளும் ஒருபக்கம். மற்றப் பக்கத்தில் ஆண்கள்.

நான் ஏன் இப்படிக் கஸ்டப் படவேணும். என் மகளின் சொல்லைக் கேட்டிருந்தால் இந்த வெட்கக்கேடு வந்திராதே!

அதைப் பத்தி இப்ப அழுது என்ன பிரயோசனம். ஸ்ரீலங்கா ராணுவத்திடம் இருந்து நான் தப்பிச்சது பெரிய சந்தோசம்தான். ஆனா ஊரிலே பாவங்கள். முருகேசனும் சனங்களும் எவ்வளவு கஸ்டப்படினம். கோவிலுக்குப் போய் அவர்களை நினைச்சுக் கும்பிட வேணும்.

படகோட்டி தன் ஏகவசனத்தைத் துவங்கினான்.“நீ எல்லாம் இங்கே வா. இந்த தீவில் ஒருத்தனும் துலைய மாட்டான். இண்டைக்குப் பின்னேரம் ஆறு மணிக்கு தேவாலயம்பக்கம் பெரிய புளிய மரம் இருக்கு. நீ எல்லாம் மரத்தடிலே இரு. நான் படகு பக்கம் இருப்பேன். ஆரும் லேட் ஆனா விட்டுட்டுப் போவேன். கவனம்.”

எங்கள் கூட்டத்தில் அந்த DIG மாதிரி மனிதரைக் காணவில்லை. அதுதான் படகோட்டிக்கு எங்களைப்பயமுறுத்தஇவ்வளவு தைரியம் வந்தது.

ஆனாலும் அவன் கட்டளைக்குப் பயந்து, ‘நான் ஆறு மணிக்கு முந்தியே வந்திடுவேன், எண்டு பக்கத்தில் நின்ற பயணி ஒருவருக்குச் சொன்னேன்.

ராத்திரியில குளிரில் நடுங்கினோம். ஆனா அனலைதீவில் வெப்பம் காத்தால துவங்கிட்டுது. எனக்குச் சரியான பசியும் களைப்பும். மற்றப் பயணிகளுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும்.

சில இடங்களில் காலமையே பச்சை அரிசிக் கஞ்சி இலவசமாகக் குடுத்தார்கள். அவர்களுக்கு நன்றி செலுத்தி வயிறுமுட்ட அதை அருந்தினோம். என் பசி நீங்கவும், உண்ட களைப்பு எனக்குத் தலையைச் சுத்தியது.

பக்கத்து சீமெந்துத் தரையில் கைகால்களை நீட்டி, நெட்டி முறித்துப் படுத்தேன். எவ்வளவு நேரம் போனதோ தெரியாது. கண்ணைத் திறந்து பார்க்க, மத்தியானம் ஆகியிட்டது என்று அவசரப்பட்டு, பக்கத்துப் பிள்ளையார் கோவிலுக்குக் கெதியா நடந்தேன்.

அங்கே முருகேசனுக்கும் ஊரில் கஸ்டப்படுகிறவருக்கும் கெதியா விடிவு காலம் வரவேண்டும் என்று கும்பிட்டேன். நெத்தியில் திருநீறு பூசி சாமியை வலம் வந்தேன்.

சிலர் தேவாலயத்துக்குப் போய் வழிபட்டனர்.

படகோட்டி இட்ட கட்டளைக்குப் பயந்து நான் அப்பப்ப அந்த ஊர் மக்களிடம், “ஐயா, என்ன நேரம் இப்ப?” என்று கேட்டுக்கொண்டிருந்தேன்.

பின்னேரம் நான்கு மணியளவில் ஒரு கடையிலே பெரிய பாத்திரத்தில் ஒடியல் கூழ்காச்சியிருந்தார்கள். அதுக்குள்ளே பொரிச்ச மீன், இறால், மரவள்ளிக்கிழங்கு கீரைவகை போட்டு மிளகாய் அரைச்சுப்போட்டு சமைத்திருந்தார்கள். வந்திருந்த பயணிகளுக்கு இலவசமாகக் குடுத்தார்கள்.

எங்களுக்குப் பிறகும் பச்சை அரிசிக் கஞ்சி கிடைச்சது. ஒரு சிலர் தம்மால் இயன்ற பணத்தை அங்கேயிருந்த பேணியில் போட்டுக் கடைக்காரருக்கு நன்றி தெரிவித்தார்கள். நானும் கொஞ்ச காசை குடுக்கவேணும் எண்டு நினைச்சு, போட்டிருந்த கோட் பாக்கெட்டில் மகன் வைத்த சின்னப் பணப்பையைத் தேடினேன்.

ஆனால் அதைக் காணவில்லைஎண்டு அதிர்ச்சியடைந்தேன். நான் காலம்பற கடற்கரையில் வாய் முகத்தைக் கழுவி, கோட்டால் என் முகத்தைத் துடைக்க அது கடலில் விழுந்திருக்குமோ? அய்யய்யோ! எப்படி ஒரு சல்லிக்காசும் இல்லாமல் நான் வீட்டுக்குப் போகப் போறன் எண்டு நினைக்கநெஞ்சு வலிச்சது.

பிறகு, பிள்ளையார் என்னைக் கைவிடமாட்டார் என்ற மனத் தெம்புடன், எங்கள் பயணிகளோடே அந்த ஊரைச் சுத்திப் பார்க்கப் போனேன்.

தீவில் ஒரு காரோ சைக்கிளோ காணவில்லை. மாட்டு வண்டி ஒன்டு இரண்டு. பச்சைப் பசேல் போல நெல்விளையும் வயல். “அறுவடைக்கு இன்னும் நாலு மாசம் இருக்கு,” என்றான் ஒரு கமக்காரன்.

“உன் சொந்தங்கள் இந்த ஊரிலே எவ்வளவு காலமாய் இருக்கிறார்கள்?” என்று கேட்டார் என் வயதுப் பாட்டி ஒருவர்.

“நாங்கள் ஒவ்வொருவரும் ஏதோ வகையில் மற்றவருக்கு சொந்தம் என்று பழகுவோம். நல்ல விடயமோ சாவு வீடோ எல்லாரும் சேர்ந்து நடத்துவோம்,” என்றான்.

எவ்வளவு பெரிய விசயத்தை அந்தப் பையன்துல்லியமாகச் சொன்னான் ஒரே மூச்சில். இவனைப் போல அரசியல் வாதிகள் இலங்கையை ஆண்டால் தமிழருக்கு இப்ப இருக்கிற கதி வந்திருக்குமா?

ஒரு மணித்தியாலத்துக்குப் பிறகு வானம் செக்கச் செவேரெண்டு மாற நாங்கள் கெதியா தேவாலயத்துக்குப் பக்கத்தில் இருந்த புளிய மரத்தடிக்குப் போய்ச் சேர்ந்தோம்.

சூரிய அஸ்தமனக் காட்சி நல்ல வடிவா இருந்தது. ஒரு சிவத்த நெருப்புப் பந்து மாதிரி சூரியன் இருந்தது. அது கடலுக்குள்ளே கொஞ்சம் கொஞ்சமாய் மறைவதைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

நாங்கள் பம்பலபிட்டியில இருந்த காலத்தில் சூரிய அஸ்தமனம் பார்க்க எத்தனை முறை கடற்கரைக்குப் போயிருப்போம் பின்னேரங்கள்ளே.

அந்தக் கண் கொள்ளாக் காட்சிக்கும் என்ர பழைய ஞாபகத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தமாதிரி ஏகவசனம் கேட்டது. “ஏய் எல்லாம் ஏறு படகுலே.”

அடுத்த நொடியில் மனுசன் டியூனை மாத்திக்கொண்டான்.

ஏனெண்டு நாங்கள் நினைக்க வேண்டியதில்லை. அந்த DIG மாதிரி மனுசர் அவனை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.

“தயவு செய்து எல்லாரும் படகில் ஏறுங்கோ. கெதியா ஏறுங்கோ,” என்றான் படகோட்டிதாழ்ந்த குரலில்.

நாங்கள் சிரிப்பை அடக்கிக் கரைக்குக் கெதியா நடந்தோம். காலம்பற எனக்கு உதவி செய்த இளம் தம்பதி இப்பவும் படகில் ஏற எனக்கு உதவினார்கள்.

பயணத்தைத் தொடர்ந்தோம்.

ஒரு மணித்தியாலத்துக்குப் பிறகு சிவப்பு வானம் மெதுவா மங்க, இருட்டுதுப்படத் துவங்கிச்சு.

“இந்தக் கும்மிருட்டு எங்களுக்குப் பாதுகாப்பா இருக்கும். பயம் வேண்டாம். ரோந்துப் படை எங்களை கண்டுபிடிக்காது.”

இப்படி படகோட்டி சொல்லிக் கொண்டிருக்க, சடுதியாக இலங்கைக் கடற்படைத் துப்பாக்கிச் சத்தங்கள் எங்களை அதிர வைத்தன. உடனே அவன் வேறு பக்கம் படகைத் திருப்பினான்.

படகோட்டி எச்சரிக்க முன் நாங்கள் வாயைப் பொத்தித் தலையைக் குனிந்தோம்.

என் நெஞ்சு படபடத்தது. ஒரு சின்னப் பிள்ளை கதறத் தாயார் அதன் வாயில் தன் முந்தானையை அமுக்கினார்.

ஐயோ கடவுளே! நடுக்கடலில் எங்களைச் சாகடிக்கப் போறாங்களா இந்த ராட்சசர்கள்? எண்டு நினைச்சு அழுதேன்.

“இந்தப் பாழாப் போன காத்து கூட எங்களுக்கு உதவ மாட்டேங்குது. இல்லாட்டி நாங்க கெதியா இஞ்சேருந்து போய் விடலாம்,” என்றான் படகோட்டி தாழ்ந்த குரலில்.

சில நிமிசங்கள் கழித்து ரோந்துப் படை தொல்லை இல்லாமல் போக, “இப்ப எல்லாரும் நிமிந்து நிம்மதியா மூச்சு விடலாம்,” என்றான்.

நாங்களும் நெட்டி முறித்துத் தலை நிமிர்ந்தோம். தோணி இங்குமங்குமா போய்க்கொண்டிருந்தது.

அரை மணித்தியாலத்துக்குப் பிறகு, படகோட்டியும் அவன் உதவியாளனும் துடுப்புகளை பெரும் சத்தத்துடன் அசைத்துக்கொண்டிருக்கத் தோணி இரைச்சலோட வேகமாய்ப் போனது.

இவங்களுக்குப் பைத்தியமா? சத்தம் கேட்டு ரோந்துக்காரன் திரும்பி வரப்போறானே என்று நாங்கள் புறுபுறுத்தோம்.

அதைக்கேட்ட படகோட்டி, “இப்ப நாங்க இலங்கைக் கடல் எல்லை தாண்டிட்டோம். ரோந்துப் படை இனிமே எங்களைத் துரத்தாது,” என்று உரத்த குரலில் கத்த,

அவனை இடை மறித்து ஒரு இளைஞன் தாழ்ந்த குரலில் கேட்டான், “இந்தப் பரந்த கடலில் ஒரு நாட்டு எல்லை எது என்று உனக்கு எப்படி உறுதியாச் சொல்ல முடியுது?”

“தம்பி, நான் இந்தக் கடல்லே பிறந்து வளந்தவன். என் பாதி வாழ்நாள் பாட்டா, அப்பா, மாமா மச்சினனோடே தோணிலே மீன்பிடி வியாபாரம் செய்தவன். போருக்குப் பின்தான் பயணிகளை ஏத்திக்கொண்டு போறன். உனக்கு உன் ஊர்லே கோயில் எங்கே, வயல், சுடுகாடு எங்கே, அடுத்த ஊர் எங்கே துவங்குது எண்டு எப்படித் தெரியுமோ, அப்படித்தான் எனக்கு இந்தக் கடல். கொஞ்ச நேரத்திலே நாங்க ராமர் பாலத்துக்குப் போயிடுவம். அதுமேல படகைக் கவனமா செலுத்துவேன்.

கும்மிருட்டில் அந்தப் பரந்த நீர்ப்பரப்பில் ஒரு நாட்டின் எல்லையை அவர்கள் எப்படிக் கண்டறிகிறார்கள் என்று நினைச்சு நாங்கள் ஆச்சரியப்பட்டோம்.

அவன் மேலும் சொன்னான், “எல்லாரையும் ராமேஸ்வரம் இறக்கிட்டு ஊரில் விக்க மீன் றாலுக்கு வலை போட்டு கூடை நிரப்புவேன். விக்க முடியாததை கருவாடு செய்ய மணலில் காயவைப்பாள் என்ர பெஞ்சாதி.”

இளைஞன் சிரித்தான். “அப்ப உனக்கு ஒவ்வொரு நாளும் றால் பொரியலும் மீன் குழம்பும் வீட்டில் கிடைக்கும். நீ குடுத்து வச்சவன். எனக்கு இரண்டு நேரம் பச்சை அரிசிக் கஞ்சியும் சம்பலும் சாப்பிட்டு வாய் மரத்துப் போச்சு.”

“தம்பி, இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை மாதிரி பேசாதே. என் மாதிரி ஆள்கள் பயணிகளை ஏத்திப் போனா, இந்திய கடல்ப்படை எங்களைப் பிடிக்கும். கவனமா உங்களை இறக்கிப் பிறகு மீன் றாலுக்கு வலை போட்டு கூடை நிரப்பினா, இந்திய இலங்கைக் கடல் படைகளிடம் அகப்படாம தப்பவேணும். இல்லாட்டி, நாங்க பாடுபட்டு பிடிச்ச எல்லாத்தையும் அவங்க தங்கடதெண்டு எடுப்பாங்க. அது மட்டுமா? சில நேரம் எங்களைக் கைதும் செய்வாங்க.”

“ஏன் அப்படி?” என்று கேட்டேன். “இந்தப் பெரிய கடலிலே இருக்கிற மீன் எல்லாருக்கும் சொந்தம்தானே.”

“சரியாச் சொன்னீங்கள், பாட்டி,”என்றான் இளைஞன்.

“தாயே, அவங்கள் தங்கள் நாட்டு கடல் எல்லைக்குள்ளே மீன் பிடிச்சிட்டோம் எண்டு எங்க மேல் குத்தம் சாட்டுவாங்கள்.”

கொஞ்ச நேரம் ஒருவரும் பேசவில்லை. படகோட்டியும் அவன் தோழனும் மாறி மாறித் துடுப்புகளை அசைத்தார்கள்.

இந்த மீனவர் வாழ்க்கை எவ்வளவு ஆபத்தானது. அடுத்த நாள் காலை அவர்கள் வீடு திரும்பும் வரை அவர் குடும்பங்கள் எவ்வளவு மன ஏக்கத்துடன் கடற்கரையில் காத்திருப்பார்கள். தம் வீட்டு ஆடவரைப் பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பிவை என்று கடவுளிடம் ஒவ்வொரு நாளும் கும்பிடுவார்கள்.

மீனவர், ஒவ்வொரு நாளும் புயல், காற்று, கடல் சீற்றம், ரோந்துப் படை என்று பலவித கஸ்டங்களைச் சந்திக்கவேண்டி இருக்கும். ஒவ்வொரு நாளும் அவர்கள் செத்துப் பிழைத்தனர்.

நாங்கள் என்னடாவென்றால் படகோட்டியின் பேச்சில் இலக்கணப் பிழை கண்டுபிடித்துப் பகிடி விட்டோம். அதை நினைச்சு நான் வெட்கப்பட்டேன்.

இன்னும் எவ்வளவு தூரம் போக வேணும் எண்டு நினைப்பதும், முகத்தை நீரில் கழுவுவதுமாய் மாறி மாறிச் செய்தோம்.

அடுத்த நாள் அதிகாலை கிழக்கு வானத்தில் ஒரு கோயில் கோபுரத்திலிருந்து தெய்வீகப் பிரகாசம் தெரிஞ்சது. நாங்கள் பரவசப்பட்டோம். சந்தேகத்துக்கு இடமில்லை. இது ராமேஸ்வரமேதான் என்று கும்மாளம் போட்டோம்.

“அரோஹரா! அரோஹரா!” என்று ஒவ்வொருவரும் மற்றவர்களை அணைத்து, மகிழ்ச்சியுடன் குதித்து விளையாட, படகோட்டி எங்களை எச்சரித்தான்.

“கவனம்! படகு கவிழ்ந்துடும் நீ எல்லாம் துள்ள. நீ எல்லாரையும் ராமேஸ்வரம் கூட்டிப் போனா என்னைச் சுங்கவரி ஆபீசர் மறியல்ல போடுவார். பிறகு உங்களைப் போல ஊரில் தவிக்கும் ஆக்களுக்கு என்னால் உதவி பண்ண முடியாமல் போயிடும்.”

ராமேஸ்வரம் அருகே சில தீவுகள் காணப்பட்டன. கிட்ட இருந்த ஒரு தீவுக்குப் படகோட்டி படகைச் செலுத்தினான்.

“நான் இப்ப எல்லாரையும் இஞ்சே இறக்கிறன். ராமேஸ்வரம் போக வேற வழி பார். இப்ப இறங்கு கெதியா,” என்றான். அவன் நிலமையைப் புரிந்து நாங்களும் படகில் இருந்து கீழே இறங்க, எங்கள் முழங்காலுக்கு மேல் தண்ணீர் இருந்தது.

அவன் வேற பேச்சில்லாமல் படகைக் கெதியாத் திருப்பி மறைந்து விட்டான் பாதி இருட்டில்.

-0-

நாங்கள் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தோம். எப்படி ராமேஸ்வரம் போகப் போகிறோம் என்ற கவலை எல்லாருக்கும். அந்தத் தீவின் கரைக்குப் போவதா, இல்லாட்டி நீந்தி ராமேஸ்வரம் சேர்வதா என்று சிலர் பேசிக்கொண்டிருந்தார்கள்.

“சிவனே! சிவபுரத்தரசே!! எங்களுக்கு ஒரு நல்ல வழியை அமைத்துத் தா,” என்று நான் என் மனசில் வேண்டினேன். அதே மாதிரி மற்றவரும் கடவுளிடம் வேண்டி இருப்பார்கள்.

விடியக்காத்தாலே ஒரு மீன்பிடி தோணி எங்கள் பக்கம் வருவதைக் கண்டோம். தமிழில் உரத்த குரலில் பாடிக்கொண்டு வந்தார்கள். இரவு முழுக்கவும் மீன் பிடித்துத் தங்கள் ஊருக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தனர் போலும்.

நாங்கள் எல்லோரும் எங்கள் கைகளை அசைத்து பெரிய சத்தமாய், “உதவுங்கோ! உதவுங்கோ!! ராமேஸ்வரம் போக உதவுங்கோ! உதவுங்கோ!!” எண்டு மன்றாடினோம்.

நாங்கள் தண்ணீரிலே நின்று குளிரில் நடுங்கிக்கொண்டு பசியோட அவதிப்பட, எங்கேயோ இருந்து ஒரு சின்னத் தோணி எங்களுக்கு உதவ வந்தது. இரண்டு படகோட்டிகள் என்னையும் மற்ற வயசுபோனவர்களையும் பத்திரமாகத் தூக்கி, தோணிக்குள்ளே இருத்தி, எங்களுக்கு ஆறுதல் சொன்னார்கள்.

அந்த நேரம் அந்தத் தோணி நோவாவின் பேழை (Noah’s Ark) போல இருந்தது. கடலில் அல்லல்படும் எங்களுக்கு உதவ முன்வந்திருக்கே என்று அவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்தோம்.

“மச்சான் சொன்னான் நீங்க இங்க இருக்கீங்கன்னு,” என்றான் ஒரு படகோட்டி.

“மச்சானா?” ’என்று கேட்டார் DIGமாதிரி மனுசன்.

“என்னய்யா, நீ? அதுக்குள்ள மறந்துட்டியா உங்களக் கூட்டி வந்த படகோட்டிய?”

அவர் முகம் சிவந்தது. “நான் அவர்மேல் அநியாயமா கோவிச்சிட்டேனே! எவ்வளவு நல்லவர் அவர்.”

“சிவனே, சிவபுரத்தரசே! நீ எங்களைக் காப்பாத்திட்டாய்,” என்று நான் திரும்பவும் கடவுளை வேண்டினேன். அடுத்த கணம் பயம் கவ்விக்கொண்டது என்னை. இவ்வளவு காலமும் நான் முறையான இந்திய வீசாவோட இருந்தவள், இப்ப சட்ட விரோதமாக வந்திருக்கிறேனே எண்டு நினைச்சுத் துக்கப்பட்டேன்.

கொஞ்ச நேரத்தாலே நாங்கள் ராமேஸ்வரத்தில் இறங்கினோம். அப்ப சீருடை போட்டிருந்த அதிகாரிகள் எங்களைச் சுத்தி நின்றார்கள். அவர்களில் சிலர் அரசு சாரா நிறுவனங்களில் இருந்தும், சர்ச் தொண்டர்கள் என்றும் பிறகு எங்களுக்குத் தெரியவந்தது. பொலிஸ் மற்றும் சுங்க அதிகாரிகள் எங்களை வரிசையில் நிக்கச் சொல்லி அகதி முகாமுக்கு அனுப்ப ஆயத்தம் பண்ணினார்கள்.

ஆனால் நான், “அகதி முகாமுக்குப் போக மாட்டேன்,” எண்டு தலையை அசைத்து மறுப்புத் தெரிவிச்சுக்கொண்டிருந்தேன் பயணி ஒருவருக்கு.

அப்ப, கொஞ்சத் தூரத்தில் நின்ற ஒரு இளம் கிறிஸ்தவ பாதிரியார் என்னைக் கவனித்துக்கொண்டிருந்தார். என்ர பிரச்சனை என்னவென்று கேட்டறிய அவர் தன் உதவியாளர் ஒருவரை என்னிடம் அனுப்பினார்.

“நான் எந்தவொரு அகதி முகாமுக்கும் போகமாட்டேன். நான் சென்னை தி-நகருக்குத்தான் பயணம் செய்ய வேண்டும். அங்கே என் மகள் பல வருசங்களாகத் தன் கணவனுடனும்,குடும்பத்தினரோடும் வாழ்கிறாள்,” எண்டு நான் அவரிடம் திடமாகச் சொன்னேன்.

அந்தப் பையன் திரும்பிப் போய், நான் சொன்னதைப் பாதிரியாருக்குச்சொல்லியிருக்கவேணும்.

பிறகு தன் குருநாதர் ஆலோசனையின்படி, அவர் உதவியாளர் என்னிடம் வந்து, “அம்மா, தயவு செய்து வரிசையில் இருந்து பிரிந்து என்னைப் பின்தொடருங்கோ,” எண்டு மெதுவாகச் சொன்னார்.

நான் வலும் சந்தோசப்பட்டு அவர் பிறகாலே நடந்து பாதிரியாரிடம் போனேன்.

அவர் என் முழுக் கதையைப் பொறுமையாக் கேட்ட பிறகு, அங்கே இருந்த பொலிஸ் மற்றும் சுங்கவரியாளரிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.

அவர்கள் பாதிரியார் வேண்டுகோளுக்கு சம்மதிக்க, அவர் என்னை அந்த இடத்தைவிட்டுத் தன் உதவியாளருடன் வெளியே போகும்படி சொன்னார்.

அவருக்கு நன்றி செலுத்தி, உடனே நான் அந்தப் பையனுடன் நடந்தேன்.

சில நேரம் கழித்து, அகதிகளுக்கு உதவுவதே தம் குறிக்கோள் என்ற ஒருமனத்துடன் சேவை செய்யும் ஒரு கிறிஸ்தவ கன்னிமாடத்துக்கு நாங்கள் வந்து சேர்ந்தோம்.

அங்கே தேவதூதர்கள் போல தோற்றமுடைய கன்னியாஸ்திரீமார் என்னை அன்புடன் வரவேற்றுமுகம் கழுவும்படி வேண்டினார்கள்.

நான் முகம் கைகால் கழுவிக்கொண்டு வந்ததும், எனக்கு ஒரு கப் கோப்பி தயாராய் இருந்தது.

ஆஹா! என்ர சீவியத்திலே இப்படி ருசியான கோப்பி ஒருநாளும் குடிக்கவில்லை. அது தேவாமிர்தம் போல சுவைச்சது.

அதுக்குப் பிறகு இட்டலி சாம்பார் தந்தார்கள். அந்தப் பூப்போல இட்டலி என் மரத்துப்போன வாய்க்குள்ளே போகப் போக, என் களைப்பெல்லாம் பறந்தது. என்ர உடம்பு நல்லபடி விறைப்பு, வலி இல்லாமல் இருக்கத் துவங்க, நான் கூச்சப்படாமல் மேலும் மூண்டு இட்டலி கேட்டுச் சாப்பிட்டேன்.

ஆனாலும் ஒரு குற்ற உணர்ச்சி என்னை வாட்டினது. நான் மட்டும் இஞ்சே பாதுகாப்பான இடத்தில் இருக்க, என்னுடன் வந்த பயணிகள் அகதி முகாமில் எவ்வளவு கஸ்டப்படபோகிறார்கள்.

அந்த வேதனை என்னை ஒரு பக்கம் வருத்த, நான் எப்படிச் சென்னைக்குப் பிரயாணம் செய்ய முடியும் எண்டு நினைச்சவுடன் தலை சுத்தியது. கையில் ஒரு சல்லிக் காசு இல்லை. எனக்கு உதவ ஒருவர் இல்லை. தெய்வமே, நான் என்ன செய்யப் போறேன்.

இப்பிடி பயத்தோட நான் யோசித்துக்கொண்டிருக்க, காலம்பற எனக்கு உதவி செய்த இளம் பாதிரியார் என்னைத் தேடி அங்கே வந்தார். “உங்கள் பசிக்கு ஏதாவது உணவு கிடைத்ததா?” என்று கேட்க,

“எனக்கு வேண்டிய வசதிகள் அளித்தார்கள் இந்த அன்பான கன்னியாஸ்திரீமார்.”

“மிக்க சந்தோசம். அடுத்து, உங்கள் மகள் முகவரியையும், தி-நகர் போன் நம்பரையும் தர முடியுமா?”

உடனே வேண்டிய தகவல்களை அவருக்குக் குடுத்தேன்.

அவர் ஒரு மணித்தியாலம் கழித்துத் திரும்பி வந்தார். அவர் முகம் கவலையுடன் இருந்ததைக் கவனித்தேன்.

“உங்கள் போன் நம்பர் துண்டிக்கப்பட்டிருக்கு. உங்கள் பயணச் செய்தியை முன்கூட்டி நான் எப்படி உங்கள் வீட்டாருக்கு அறிவிக்க முடியும்?”

“நீங்கள் கவலைப்பட வேண்டாம். என்னைத் தயவு செய்து ரயிலில் ஏத்தி விடுங்கோ. நான் எழும்பூர் ஸ்டேஷனிலே இருந்து தி-நகர் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்திடுவேன்,” எண்டு கைகூப்பி அவரிடம் வேண்டினேன்.

அவர் சந்தேகத்தைத் தீர்க்க, நான் ஆங்கிலத்தில் அவருடன் உரையாடினேன்.“ I have travelled alone to London and Dubai to visit my family. This trip to Chennai is nothing in comparison.” (நான் லண்டன், துபாய்க்கு தனியப் பயணித்திருக்கிறேன் உறவினரைப் பார்க்க. சென்னை எனக்குப் புதிதல்ல.) நீங்கள் தயங்காமல் என்னை அனுப்புங்கோ ராமேஸ்வர வண்டியில்,” எண்டு கெஞ்சினேன்.

அப்படி நான் சொன்னதும், அவருக்கு என் மேல் ஒரு நம்பிக்கை வந்த மாதிரி புன்னகை புரிந்தார். “அப்படியானால் உடனே உங்கள் மருமகனுக்கு ஒரு urgent தந்தி அனுப்பிறேன் எழும்பூர் ரயில் நிலையத்தில் நாளைக் காலை உங்களைச் சந்திக்கும்படி. ஆகவே, இன்றிரவு ரயில் பயணம் செல்ல நீங்கள் ஆயத்தமாய் இருங்கோ,” எண்டு சொல்லி, அங்கேயிருந்து கெதியா வெளியே போனார்.

எனக்குத் திரும்பவும் பயம் வந்தது. வெறுங் கையோடு எப்படி நான் ரயில் பிரயாணம் செய்யப் போறன்.என்ர பிள்ளையாரே என்னைக் கைவிடாதீர், எண்டு மனதில் வேண்டினேன்.

அண்டைக்குப் பின்னேரம் அந்த தேவ கன்னிகள் எனக்கு ஒரு போத்தல் தண்ணியும் ராத்திரி சாப்பாடும் குடுத்தார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து, காலையில் என்னைக் கூட்டி வந்த பிள்ளையோடு கெதியா நடக்கத் துடங்கினேன்.

இருபது நிமிசங்களில் நாங்கள் ரயில் நிலையத்தை அடைந்தோம். முன்கூட்டியே பயணிகள் பணம் கட்டித் தங்கள் ஸீட்டை ரிசர்வ் பண்ணின கம்பார்ட்மெண்ட்டில் என்னைப் பையன் ஏறச்சொல்லி, “இந்த சீட்டில் உட்காருங்கம்மா,” என்றான்.

என் கைகால்கள் நடுங்கத் துவங்க, நான் அவன் கையைப் பிடிக்க, அவன் என்னை அதில் இருத்தினான். டிக்கெட் வாங்காமல் அந்தக் கம்பார்ட்மெண்டில் நான் எப்படிப் பயணிக்கலாம்? அடுத்த ஸ்டேஷனிலே கட்டாயம் டிக்கெட் கலெக்டர் என்னைக் கீழே இறக்கிடுவாரே. ஐயோ! நான் என்ன செய்ய?

கையில் பணம் இல்லாமல் எப்படிப் பயணிக்க முடியும்?இவ்வளவு இன்னல்களைத் தாண்ட உதவிய கடவுள் என்னை இந்த வேளை கைவிட மாட்டார் என்ற தைரியம் கலந்த பயம் என்னை மாறி மாறி சுத்தி வந்தது.

இப்படி மன வேதனையும் பயமும் என்னை வருத்திக்கொண்டிருக்க, சடுதியில் கடவுளின் தூதுவர்போல பாதிரியார் என்னைப் பார்த்துக்கொண்டு கெதியா நடந்து வந்துகொண்டிருந்தார்.

என்ன ஆச்சரியம்!

அவர் என்னிடம் வந்து, “நான் கடைசிநேரம் வரை பொறுமையாகக் காத்திருந்து, யாராவது ரிசர்வ் பண்ணின டிக்கெட்டை ரத்து செய்வார்களா என்று பார்த்துக்கொண்டிருக்க, இப்போதான் ஒன்று கிடைத்தது. அதை உடனே வாங்கி வந்தேன் உங்களுக்கு,” என்று சொல்லி ஒரு ரிசர்வ்ட் டிக்கட்டை என்னிடம் குடுத்தார்.

எனக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.

“நீங்கள் நிம்மதியாக இந்தப் பெட்டியில் சென்னைக்குப் பயணிக்கலாம். அதோடு, இந்த 100 ரூபா பணத்தை வைத்திருங்கோ உங்கள் கைச் செலவுக்கு,” என்றார்.

நான் எழும்பி நின்று அவருக்கு என் அன்பு வணக்கத்தைத் தெரிவித்தேன். “ஐயா, நான் பத்திரமாய் வீடு போய்ச் சேர்ந்திட்டேன் என்ற செய்தியை உங்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன். அதனாலே உங்கள் விலாசத்தை எனக்குத் தயவு செய்து தாங்கோ,” என்றேன் தழுதழுத்த குரலில்.

அவர் தன் விசிட்டிங் கார்டைத் தந்தார். அதை நான் பத்திரமாய் என் கோட் பாக்கெட்டில் வைச்சேன். அவர் எனக்கு செய்துதவிய காசைத் திருப்பி அனுப்ப இது ஒரு யுக்தி.

எனக்கு இன்னும் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தன்னைத் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.

நான் திரும்பவும் திரும்பவும் என் மனமார்ந்த நன்றியை அவருக்குத் தெரிவித்துக்கொண்டிருந்தேன். என்ர நெஞ்சு ரெக்கை கட்டிப் பறக்கிறமாதிரி இருந்தது.

அனலைதீவில் அந்தக் கடையில் மகன் தந்த பணப்பை துலைஞ்சிட்டுது எண்டு பயந்துகொண்ட நேரம் இருந்து, இவ்வளவு நேரமும் அதே பயத்தோட இருந்தேன். இப்ப அந்தப் பயம் எல்லாம் காத்திலே பறந்திட்ட மாதிரி இருந்தது எனக்கு.

அவரும் பையனும் கீழே இறங்கப் புகையிரதம் நகரத் துடங்கியது. நான் யன்னல் வழியே அவர்களுக்குக் கை அசைத்தபடி இருந்தேன். அவர்களும் கையை அசைத்து எனக்கு விடை குடுத்தார்கள்.

அவர்கள் என் பார்வையில் இருந்து மறைந்த பிறகு, அண்டைக்கு நடந்த அதிசயங்களை நினைக்கச் சந்தோசம் கலந்த கண்ணீர் வழிந்தோடியது என் முகத்தில். கடவுளுக்கு நன்றி கூறிக்கொண்டேயிருந்தேன்.

பிறகு அசதியும் நித்திரையும் என்னைச்சூழ்ந்து கொள்ள, நான் சீட்டில் நிமிர்ந்திருந்தபடி தூங்கினேன்.

அப்பப்ப கண்களைத் திறந்து, “சென்னை வந்திட்டோமா?” என்று பக்கத்தவரிடம் விசாரிப்பேன். அவர்கள், “பயப்பட வேண்டாம், பாட்டி. இன்னும் நிறைய நேரம் இருக்கு,” என்று எனக்கு ஆறுதல் அளித்தனர்.

விடிந்ததும், இன்று காலை என் மகளும் மருமகனும் என்னைஎழும்பூர் நிலையத்தில் வரவேற்கப் போகிறார்கள் என்று மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். மற்றப் பயணிகள் இன்னும் நித்திரைத் தூக்கத்தில் இருந்தார்கள்.

ரயில் எழும்பூர் நிலையத்தை அடைந்தபோது, சடுதியாஎல்லாரும்எழும்பினார்கள். “எழும்பூர் வந்தாச்சு!” என்ற சத்தம் எங்கும் கேட்டது. உடனே துள்ளிக் குதித்து, தாங்கள் கொண்டு வந்த சாமான்களை வண்டி உள்ளே நுழைஞ்ச போர்ட்டர்களுக்குக் குடுத்து, ஒவ்வருவரும் சந்தோசத்துடன் கெதியா கீழே இறங்கினார்கள்.

என் குடும்பத்தைப் பார்க்க நான் என் தலையை யன்னல் வெளியே நீட்டி, பிளாட்பாரம் முழுவதும் ஆவலுடன் தேடினேன். நிமிடங்கள் ஏற ஏற, என் ஆவல் புஸ்வாணம் போல் ஆனது. ஏமாற்றமும் அழுகையும் என்னை உந்த, நான் எல்லாப் பயணிகளும் என்னைத் தாண்டிப் போவதைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

உடனே ஒரு வைராக்கியம் என்னை உந்த, நான் ஸ்டேஷனில் இருந்து வெளியேறி மூன்று சக்கர வாகன நிலையத்தை அணுகினேன்.

என் உடுப்பையும் கலைந்த முடியையும் பார்த்து நான் வேறோர் கிரகத்திலிருந்து வந்திருக்கவேணும் எனவாகன ஓட்டி நினைத்தான் போலும். அல்லது தி-நகர் செல்ல வாகன கட்டணத்தைச் செலுத்தும் திறன் எனக்கு இல்லை எண்டு அவன் நினைத்திருக்கலாம்.

ஏளனப் புன்னகையுடன் முகத்தை மறு பக்கம் திருப்பினான். மற்ற வாகன ஓட்டிகளும் அதே மாதிரி முகத்தைத் திருப்பினாங்கள்.

நான் கொஞ்சமும் மனந் தளராமல், மெய்ன் வீதிக்கு வந்து ஒரு ஆட்டோ வண்டிக்குக் கை அசைக்க, அந்த இளைஞன் உடனே என்னருகில் வண்டியைத்திருப்பினான். “நீங்க தான் இன்னிக்கு முதல் சவாரி எனக்கு, தாயே.”

“என்னிடம் நூறு ரூபாய் மட்டும் தான் இருக்கு. நான் தி-நகரில் ஹபிபுல்லா ரோட்டுக்குப் போகவேணும்,” என்றேன் தழுதழுத்த குரலில்.

“அவ்வளா பணம் வராது. மீட்டர் போடுறேன். தயவு செய்து உள்ளே உக்காருங்கோ, தாயே.”

நான் புன்னகையுடன் உள்ளே உட்கார, அவன்வண்டியைச் செலுத்தினான். அரை மணித்தியாலத்தில், ஹபிபுல்லா தெருவில் எங்கள் வீட்டை அடைந்தோம்.

“இது ஒரு பேராசிரியரின் வீடு. என் மருமகன் கணநாதன் இங்கே கீழ் வீட்டை வாடகைக்கு எடுத்திருக்கிறார்,” என்று வாகன ஓட்டிக்கு விளக்கினேன். “வீட்டுச் சொந்தக்காரர் குடும்பம் மேலே வாழ்கிறார்கள்,” என்று சொல்லிக்கொண்டு எங்கள் முன் கதவை ஆவலுடன் தட்டினேன்.

உடனே வீட்டுச் சொந்தக்காரி கதவைத் திறந்தார் ஆச்சரியம் கலந்த புன்னகையுடன். “அம்மா, திரு, திருமதி கணநாதன் அவர்கள் இப்போ ஸ்டெர்லிங் சாலையில் வசிக்கின்றனர். அது உங்கள் இளைய மகளின் குடியிருப்பு என்று நான் நினைக்கிறேன். உங்கள் இளைய மகள் லண்டனுக்குக் குடும்பத்தோடு கிளம்பிட்டார் என்றும் அறிந்தேன். ஆகவே, அவர்கள் வாழ்ந்த அபார்ட்மெண்டில், உங்கள் மூத்த மகள் குடும்பம் சென்ற மாதம் தொட்டு அங்கே வாழ்கிறார்கள்,” என்றார் வீட்டுக்கார அம்மா.

“மிக்க நன்றி, அம்மா, தகவல் அளித்ததுக்கு. நான் நேரே அங்கேயே போகிறேன்,” என்று கூறி விடை பெற்று, ஆட்டோ ஓட்டுனருக்கு விலாசத்தைக் குடுத்தேன்.

பதினைந்தே நிமிசங்களுக்குள் நாங்கள் நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலை அபார்ட்மென்டுக்கு வந்தடைந்தோம்.

வெளியே நின்ற காவலாளியை நான் கேட்டேன், “என் மருமகன் திரு கணநாதன் குடும்பத்தினர் இங்கே வாழ்கிறார்களா?”

“ஆம், அம்மா. நீங்கள் சவுக்கியமா?”

நான் அவருக்குப் புன்னகையுடன் தலை அசைத்து, ஆட்டோ ஓட்டுனரிடம் திரும்பிச் சென்றேன். “தம்பிக்கு நான் எவ்வளவு பணம் கட்டணும்?”

“ஹபிபுல்லா வீட்டுக்கப்புறம் நான் மீட்டர் போடல்லை. ஆகவே மீட்டர் கட்டணத்தை விட, ஒரு சதம் வேண்டாம் அம்மா,” என்று கூறினார் அந்த நேர்மையான இளைஞன்.

நான் அவருக்கு நன்றி கூறி, என்னிடம் இருந்த நூறுரூபாய் நோட்டைக் குடுக்க. அவர் மீட்டர் பணம் மட்டும் எடுத்து மீதிப் பணத்தைத் திருப்பித் தந்தார்.

அவர் காவலாளியைக் கேட்டார், “கணநாதன் சார் இங்கே குடியிருக்காரா?”

“பயப்படாதே. அம்மா கரெக்டான இடந்தான் வந்திருக்காரு. சார் ஒண்ணாம் மாடிலே இருக்காரு,” எண்டு காவலாளி அவருக்கு உறுதியளித்த பிறகுதான், அந்த உன்னதமான ஆட்டோ ஓட்டுனர் கிளம்பினார்.”

“இது தான் என் பிரயாணக் கதை,” என்றார் எங்கள் அம்மா, அம்மம்மா.

கொஞ்ச நேரம் எங்களால் ஒன்றுமே பேச முடியாமல் இருந்தது. எங்கள் மூன்று பிள்ளைகளும் சகுந்தலாவும் அம்மாவுக்கு நேர்ந்த கஷ்டங்களை ஆழ்ந்த துக்கத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர் எழும்பூர் ஸ்டேஷனிலே வந்திறங்கிய செய்தி எங்களுக்குக் கிட்டவில்லையே என்று அறிந்த மட்டில் எங்கள் மனசு மிக்க வேதனைப்பட்டது.

அவர் பேசி முடியும் வரை காத்திருந்து, அம்மம்மாவைக் கட்டி அணைத்தனர் லட்சுமி, கீதா, சியாமளா.

கொஞ்ச நிமிசங்களுக்குப் பிறகு லட்சுமி கேட்டாள் அவரிடம், “அம்மம்மா, சொல்லுங்கோ, யார் உங்களுக்கு பெரிய உதவி புரிந்தார் என்று. படகோட்டியா, பாதிரியாரா அல்லது ஆட்டோ ஓட்டுனரா?”

“கடவுளை எப்பெப்ப நாங்கள் அன்புடன் அழைத்தாலும், அப்பப்ப அவர் எங்களுக்கு உதவுவார். மறந்திடாதேங்கோ அந்த காம்பாட் பாட்டிக் (Combat Fatigue) தந்துவிய போராளியை,” என்றார் அம்மம்மா.

“77வயசில் இவ்வளவு தைரியத்துடன், வந்த கஷ்டங்களை எதிர்த்துப் பயணம் செய்த அம்மம்மாக்கு ஜே போடுங்கோ எல்லாரும்!” என்று ஷ்யாமளா சொல்ல, அங்கே கூடி இருந்தவர் பலத்த கரகோஷத்துடன் அம்மாவைச் சுத்தி வந்தனர். சிலர் அன்பு முத்தம் கொடுத்தனர்.கீதா, லக்ஷ்மி, ஷ்யாமளா, அவரைக் கட்டி அணைத்தனர்.

அடுத்த நாள் நான் பாதிரியாருக்கு அவர் கட்டிய டிக்கெட் பணத்துக்கும் அம்மாவுக்கு கொடுத்துதவிய பணத்துக்கும் சேர்த்து ஒரு காசோலையை அனுப்பினேன்.

அதோடு அவர் அம்மாவுக்கு செய்தருளிய மாபெரும் உதவிக்கு நாங்கள் என்றென்றும் கடமைப் பட்டுள்ளோம் என்று சகுந்தலா ஒரு கடிதம் எழுதி அனுப்பினாள். “நீங்கள் எப்போ சென்னைக்கு வந்தாலும் தவறாமல் எங்கள் வீட்டுக்கு வர வேண்டுமென தாழ்மையுடன் வேண்டுகிறோம்,” என்றும் அதில் எழுதியிருந்தாள்.

முருகேசனுக்கு அம்மா பத்திரமாய் வந்து சேர்ந்த செய்தி அனுப்ப முடியவில்லை. ஆனாலும், அவர் அம்மா படகில் கிளம்பின அன்றும், அடுத்த நாட்களிலும் அகதிகள் பயணித்த படகுகளுக்கு விபத்தொன்றும் நேர்ந்ததாக அவலச் செய்தி ரேடியோவில் வரவில்லை என்று மனநிம்மதி அடைந்திருப்பார்.

ஹபிபுல்லா ரோட்டு எங்கள் பழைய வீட்டுக்கார அம்மாவிடம் இருந்து, பாதிரியார் அனுப்பின தந்தி, அம்மா வந்திறங்கி மூன்றாம் நாள்தான் கிடைத்தது.

சில வருடங்களுக்குப் பின்னர், முருகேசன் அம்மாவுக்கு அளித்த சத்தியத்தை மீறாமல், சென்னைக்கு வந்து எங்கள் எல்லோரையும் கண்டு களித்தார். இந்தப் பயணம் அவர் தன் பிள்ளைகளின் வற்புறுத்தலுக்கு இணங்கி லண்டனில் குடியேற முன்னர் நடந்தது.

-0-

கதாசிரியரின் குறிப்பு

நான் ஆங்கிலத்தில் எழுதிய சத்தியம் மீறியபோது கதையை தமிழாக்கம் செய்தவர் என் மனைவி சகுந்தலா.

அனுப்பியவர்: நடேசன் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
 
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here