நீண்ட நெடுநாளாக சங்க இலக்கியங்களை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் இருந்து வந்தது. அமெரிக்காவிலுள்ள ஹூஸ்டன் பாரதி கலை மன்றம் வழியாக எனக்கு ஓர் அரும்பெரும் வாய்ப்பு கிட்டியது. ஆம் பாரதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அமெரிக்காவின் ஹூஸ்டன் பாரதி கலை மன்றம் நிகழ்த்திய ஞானபாரதி விருதுக்கான நான்கு கட்ட பேச்சுப் போட்டி நடைபெற்றது. அதில் அரையிறுதிச் சுற்றில் சங்க இலக்கியங்களுள் ஒன்றான பட்டினப்பாலையையும் , நெடுநல்வாடையையும் அறியும் வாய்ப்பு கிடைத்தற்கரிய வரமாக கிடைத்தது.தமிழை வாழ்த்துவதற்கும் , வளர்ப்பதற்கும் கடின உழைப்பை உரமாக இட்டு தமிழ்த்தொண்டு ஆற்றி வரும் அமரிக்காவின் ஹூஸ்டன் பாரதி கலை மன்றத்திற்கு நிச்சயம் தமிழ் கூறும் நல்லுலகம் சார்பாக கோடி நன்றிகள்.
12 ஆம் வகுப்புக்கு பிறகு தமிழ் கற்கும் வாய்ப்பு கிட்டத்தட்ட 10 வருடங்கள் இல்லாமல் போனது. ஆங்கிலவழி கணினி தொழில்நுட்ப கல்வி, தொழில்நுட்ப வேலை, புலம்பெயர்வு என தமிழன்னையை தரிசிக்க தவறிய தருணங்கள் அவை. புலம்பெயர்ந்த நாடான கனடா மீண்டும் என்னை உயிர்ப்பித்து என் தாய்த்தமிழை வாசிக்க வாய்ப்பு தந்தது. அதற்கு முக்கிய மூல காரணமாக அமைந்தவர்கள் என் ஈழத்தமிழ் உறவுகள். மீண்டும் வாசிப்பு பழக்கம் , எழுதும் வழக்கம் , பேச்சு எல்லாம் கைக்கொள்ள இன்று தமிழன்னையின் பெருமை வெளிச்சத்தில் நானும் ஒரு சிறு துளி வெளிச்சம் பெற்று ஒளிரும் நிலவானேன்.
பட்டினப்பாலையை பற்றிய தேடல் என்னை மேலும் மேலும் எனது தாய் மொழியை பற்றியும் , தமிழர்களின் வாழ்வியலை பற்றியும் பெருமை கொள்ள செய்தது . பெருமை கதைகள் , வரலாறுகள் மட்டுமே பேசினால் போதுமா? இன்றைய வாழ்வியலில் நம்பிக்கைக்கையின்மை, சுயநலம் , எந்த வழியிலாவது பொருள் ஈட்டினால் போதும், குறுகிய காலத்தில் குறுக்கு வழியில் பொருள் ஈட்டுவது போன்ற எண்ணங்களும் செயல்களும் மேலோங்க காரணமாக இருப்பது சற்றே குறைந்து போன எமது முன்னோர்கள் வாழ்வியல் கோட்பாடாக வரித்து கொண்ட அற உணர்வு தான் என்பது எனது கருத்து.இதனை மீட்டெடுக்க நாம் நமது வரலாற்றை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். உணர்ந்துகொள்ள வேண்டும்.நாம் செய்யும் செயல்களில் ,வணிகத்தில், வேலையில் , கல்வியில் ,குடும்பத்தில் என எங்கெல்லாம் முடிந்தவரை செயல்படுத்தமுடிகிறதோ அங்கெல்லாம் உறுதியாக கடைபிடிக்க வேண்டும். வாழ்வியல் கொளகைகளாக வரித்து கொள்ள வேண்டும்.
பண்டைய தமிழர்களின் வரலாற்றுக்குரிய அரிய சான்றுகள் பலவற்றைத் தாங்கி நிற்பதும் , பண்டைத் தமிழர்களின் வாழ்வியலையும், வணிகநிலையையும் குறிப்பிடுகினற சங்க இலக்கியங்கள் ஒரு காலக்கண்ணாடி என்றே சொல்ல வேண்டும். சங்க இலக்கியங்களுள் ஒன்றான பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது விளங்குவது பட்டினப்பாலை.இது சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கதாநாயகனாக கொண்டு கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது.
கரிகால் சோழன் பெருவளத்தான் திரைக்கடலில் நாவாய்கள் பல செலுத்தி, சுங்க முறையை ஏற்படுத்தி, வெளிநாடுகளுடன் வாணிபத்தொடர்பு ஏற்படுத்தி தமிழகத்திற்கும் , தமிழர்களுக்கும் உலகப்புகழை ஏற்படுத்தியவன். அவன் ஆண்ட சோழப் பேரரசின் தலைநகரமாக விளங்கியது காவிரிப்பூம்பட்டினம். கரிகால் சோழனுடைய காவிரிப்பூம்பட்டினத்தின் பெருஞ்சிறப்பைச் சொல்வதே பட்டினப்பாலை ஆகும்.
பட்டினம் என்பது காவிரிப்பூம்பட்டினம் ஆகும். இந்நகரை புகார், பூம்புகார் எனவும் அழைப்பர்.
இதற்க்கு முதல் உரை எழுதிய நச்சினார்க்கினியர் பின்வருமாறு பெயர்காரணத்தை விளக்குகிறார். "இது பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய பாலைத்திணை யாகலின், இதற்குப் பட்டினப்பாலை என்று பெயர்" கழனியும் , காவிரியும் உழவும் செழித்து விளங்கிய சோழமணடலத்தில் பாலை எப்படி வந்தது என்று யோசித்தால் "பாலையாவது பிரிதலும் பிரிதல் நிமித்தமும் கூறுவது" என்பதனை விடையாக தருகிறது நச்சினார்க்கினியர் உரை. இக்காரணத்தால் "பாலைபாட்டு" என்றும் இந்நூல் அழைக்கப்படுகிறது.
இந்நூலில் 163 அடிகள் வஞ்சிப்பாவல் அமைந்துள்ளது.இடையிடையே ஆசிரியப்பா அமைந்த வஞ்சி நெடும் பாட்டாக 301 அடிகளை கொண்டது பட்டினப்பாலை.இந்நூலுக்கு "வஞ்சிநெடும் பாட்டு" என்ற பெயர் இருந்தமையை தமிழ் விடு தூது குறிப்பிடுகிறது.
பட்டினப்பாலை நூலை இயற்றிய கடியலூர் உருத்திரங்கண்ணனாருக்கு அரசன் கரிகாற் பெருவளத்தான் பரிசில் கொடுத்து சிறப்பு செய்த குறிப்பு பட்டினப்பாலையில் இல்லை. ஆனால் பதினாறு நூறாயிரம் பொன் (16X 100000=16,00000 லட்சம் பொற்காசுகள்) வழங்கினான் என்ற குறிப்பு பிற்கால நூலான இராசராசன் உலாவில் பதிவாகியுள்ளது.
கலிங்கத்துப்பரணி, குலோத்துங்கன் பிள்ளைத் தமிழிலும் திருவெள்ளறைக் கல்வெட்டிலும் இச்செய்தி பதிவாகியுள்ளது.உலகிலேயே அதிக பரிசில் பெற்ற முதற் புலவர் இவராகத்தான் இருந்திருப்பார்.இன்று இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய சிறந்த சாகித்ய அகாடமி விருதுக்கு கூட பரிசுத்தொகையாக 1,00,000 ரூபாயும், ஒரு பட்டயமும் தான் வழங்கப்படுகின்றன.
உலக புகழ் பெற்ற நோபல் விருதில் நோபல் ஒரு பட்டயமும், பதக்கம் மற்றும் ரொக்க பணமும் விருதுடன் வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு பெறும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் ரொக்கப் பரிசை நோபல் அறக்கட்டளை தீர்மானிக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட நோபல் பரிசுடன் ரொக்கப் பரிசு 8 மில்லியன் SEK (சுமார் US$1.1 மில்லியன் அல்லது €1.16 மில்லியன்).அதாவது 1,100,000 அமெரிக்க டொலர்கள். இந்திய இந்திய மதிப்பில் 2020 ஆம் ஆண்டு வழங்க பட்ட தொகை 8,1269663.2 கோடி ஆகும்.16,00000 லட்சம் பொற்காசுகளின் இன்றைய மதிப்பினை முடிந்தால் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.
இதிலிருந்தே பட்டினப்பாலையின் சிறப்பும் அரசன் கரிகால் பெருவளத்தானின் சிறப்பும் கொடையும் சோழ நாட்டின் வளமும் அறிய கிடைக்கின்றது. பட்டினப்பாலை நூல் தமிழறிஞர்கள் பலரின் உள்ளங் கொள்ளைகொண்ட நூலாக இருக்கிறது . இந்த நூலுக்குப் பண்டைத் தமிழாசிரியர் நச்சினார்க்கினியரும், இருபதாம் நூற்றாண்டின் அறிஞர்களான தவத்திரு மறைமலையடிகளாரும், அறிஞர் இரா. இராகவையங்காரும், பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனாரும் எழுதியுள்ள உரைப்பகுதிகளைக் வாசித்தால் பட்டினப்பாலை என்னும் இந்நூல் அவர்களின் உள்ளத்தைக் கவர்ந்த காரணத்தையூம் ம் இன்றும் இந்நூல் தமிழறிஞர்கள் பலரையும் தன்பால் கவர்ந்திழுக்கும் காரணம் விளங்கும்.
இதை அனைத்தையும் தேடி தெரிந்து கொள்ள காரணமாக அமைந்த பட்டினமாலையின் வரிகளுக்கு வருவோம்.பட்டினபலையிலிருந்து "கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைகொடாத" என்ற 210 அடி கொடுக்கப்பட்டிருந்தது. இவ்வடியின் பொருள் புரிந்து கொள்ள அதன் தொடக்கம் முதல் போகவேண்டும். பட்டினலையின் அழகு தமிழின் ஒரு துளி பருகுவோம்.வாருங்கள்.
கொடுமேழி நசையுழவர்
நெடுநுகத்துப் பகல்போல
நடுவுநின்ற நன்னெஞ்சினோர்
வடுவஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவு மொப்ப நாடிக்
கொள்வதூஉ மிகைகொளாது
கொடுப்பதூஉங் குறைகொடாத
பல்பண்டம் பகர்ந்துவீசும்
'சோழ நாடு சோறுடைத்து' என்பது பழமொழி.அத்தகைய உலகுக்கே சோறுபோட்ட சோழ நாட்டின் உழவர் பெருமையை கூறி அதன் தொடர்ச்சியாக மேற்கண்ட அடிகள் சோழநாட்டின் துறைமுக நகரமாக தற்போது கடலுக்கடியில் கண்டுபிடிக்கப்பட காத்திருக்கும் தமிழரின் பொக்கிடமான பூம்புகார் நகரில் வாழ்ந்த வணிகரின் பெருமையை கூறுகிறது.
உழவரின் ஏரில் இரண்டு மாடுகள் பூட்டிய நுகத்தின் நடுவில் இருக்கும் அதாவது நுகத்தடியில் இருக்கும் பகலாணி போல அறந்தவராத நடுவுநிலை கொண்ட நேர்மையான மக்களையும் , மண்ணையும் நேசித்த நல்ல எண்ணங்கள் கொண்டு வணிகர்கள் வாணிகம் செய்தனர்.
தமக்கும் தன் தலைமுறைக்கும் பழி வந்துவிடுமோ என்னும் அச்சத்தோடு தமிழ் வணிகர்கள் சொன்னசொல் மாறாமல் வாய்மையையே பேசினர்.
தாம் கொடுக்கும் பொருளையும் அதிக அநியாய விலை வைத்து பொருள்களை விற்க்காமலும் , நுகர்வோர் கொடுக்கும் விலைக்கு அளவில் குறைவாக கொடுக்காமலும் , தாம் பிறரிடமிருந்து விலையாக வாங்கும் பொருளைகளை நியாயமான விலைக்கு விளைவித்தவர்களிடமிருந்தும் பிற வணிகரிடமிருந்தும் பெற்றுக்கொள்ளவும் செய்து தமிழ் கூறிய அறவழியில் வணிகம் செய்வர்.தம் வவிற்கும் மற்றும் வாங்கும் பொருள்களை ஒத்த நிறையுடையதாகக் கருதினர். எனவே மதிப்புக்கு அதிகமாக வாங்குவதோ, குறையாகக் கொடுப்பதோ அவர்களின் வாழ்க்கையில் இல்லை.
அதாவது அடிமாட்டு விலைக்கு அல்லது கெட்டதுக்கு பாதி என் எங்கள் ஊரில் சொல்லுவார்கள், அப்படி பொருட்களை விளைவிப்பவர்களிடம் வாங்காமலும் அதேபோல யானை விலை , குதிரை விலை என கொள்ளை விலைக்கு விற்க்காமலும் (தற்போதைய அமேசான், பிளிப்க்கார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் நினைவுக்கு வருகிறது) அறத்தோடு முறையான நேர்மையான வணிகம் செய்து வளமாக வாழ்ந்தனர்.
பல பண்டங்களையும் உண்மை விலைகூறி, தாம் பெரும் லாபத்தையும் வெளிப்படையாகக் கூறி விற்பதும் வாங்குவதுமாக தம் குடிக்குப் பழி வராதபடி நேர்மையான முறையிலும் நடுவுநிலையுடனும் வணிகம் செய்தனர் என்பதை அறியும்பொழுது பண்டைக்கால வணிகமுறை நமக்குப் புலனாகிறது.
வணிகம் எப்படி செய்ய வேண்டும் என்பதை வணிகரின் சிறப்பை கூறுவதன் மூலம் தெளிவாக விலக்கிவிட்டது பட்டினப்பாலை. கிமு 5 ஆம் நூற்றாண்டு சீன போரியல் மேதை சுன் த்சு என்பவரால் எழுதப்பட்டபோர்க்கலை (The Art of War) என்னும் நூல் இப்பொது தொழில் முனைவோருக்கான உத்திகளாக பயன்படுத்தப்பட்டு பல்வேறு நூல்கள் வெளிவந்துள்ளன.அதை போல இன்னும் ஆய்வு நோக்குடன் ஆங்கிலத்தில் எழுதினால் மிகச்சிறந்த தொழில் முனைவோருக்கான ஆகச்சிறந்த நூல் கிடைக்கும்.
தமிழர் என சொல்லும் நாம் இம்முறையில் வணிகம் செய்கிறோமா என்பதை உங்களது மனச்சாட்சிக்கு விட்டுவிடுகிறேன்.ஆம் என்று உறுதியான பதில் உங்களுக்குள் இருந்து வந்தால் நீங்கள் நிச்சயமாக பெருமை கொள்ளலாம். நாளை தமிழன் உலகை போகிறான் என மார்தட்டிக்கொள்ளும் நாம் தமிழ் காட்டிய அறவழியில் சென்றால் மட்டுமே அது சாத்தியம்,சத்தியம்.
கீழடி போன்ற ஆய்வுகள் சங்க இலக்கியங்களுக்கு உண்மைத்தன்மையினை அளித்து தமிழர் பெருமையாய் வெளிகொண்டுவருவது ஒரு பக்கமிருந்தாலும் தமிழர் என சொல்லிக்கொள்ளும் ஒவ்வொருவரும் பழி பாவங்களுக்கு அஞ்சி, நன்நெஞ்சோடு அறவழி வாழ்தல் மட்டுமே இவ்விலக்கியங்கள் காட்டும் தமிழரின் பெருமையை, மேம்பாட்டை,ஆளுமையை உலகறிய செய்யும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.