சியாமளா அம்மாளின் பாட்டைக் கேட்ட நாளில் இருந்து அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை என் மனதில் துளிர்விட்டிருந்தது. கணீரென்ற அந்தக் குரல் என்னை எங்கோ இழுத்துச் சென்றது.
ஈழமண்ணில் பிறந்து, ஜேர்மனிக்குப் பெற்றோர் புலம் பெயர்ந்ததால் ஜெர்மனியில் தான் நான் வளர்ந்தேன். படிப்பிலே கவனம் செலுத்தினாலும், ஓய்வு நேரங்களில் பாட்டுக் கேட்பது, அதைப்போலப் பாடிப்பார்ப்பது, சினிமா படங்கள் பார்ப்பது என்று என் வாழ்க்கை சந்தோஷமாகத்தான் போய்க் கொண்டிருந்தது.
முன்புபோல் அல்லாமல், இப்போதெல்லாம் தொழில் நுட்பவளர்ச்சியால் எல்லாமே உடனுக்குடன் கிடைக்கக்கூடியதாக இருப்பது, எங்கள் தலைமுறைக்குக் கிடைத்த அதிஸ்டம் என்றுதான் சொல்லவேண்டும். வீடு தேடியே சீடி, டீவீடி என்று சொல்லப்படுகின்ற குறும்தட்டு, காண்தட்டு என்று எல்லாம் ஒழுங்காக வரும். விரும்பிய நேரம் போட்டுக் கேட்கலாம், பார்க்கலாம் என்று எத்தனையோ வசதிகள் இருந்தன. இதைவிட இதற்கென்றே சில இணையத் தளங்களும் இருந்தன.
அப்பாவிற்கு பழைய பாடல்கள் என்றால் நல்ல விருப்பம். நான் சொல்வது சிவாஜி, எம்ஜிஆர் காலத்துப்பாடல்கள் அல்ல, அதையும்விட பழையது. கிராமபோன் காலத்துப் பாடல்கள். அப்போ, அவர்களது இளமைக் காலத்தில் இப்படியான வசதிகள் எதுவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
அப்பா தன்னை மறந்து அடிக்கடி தனக்குள் முணுமுணுக்கும் ஒரு பாடல் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதுண்டு. தெருக்கூத்தோ, அல்லது நாட்டுப் பாடலோ என்றுதான் நான் முதலில் நினைத்தேன். ‘என் ஜீவப்ரியே ஷ்யாமளா’ என்ற வார்த்தைகள், அது ஒரு சினிமா பாடல் என்று பின்புதான் எனக்குத் தெரிய வந்தது. அப்பா அடிக்கடி பாடியதாலோ என்னவே என்னுடைய மனசுக்குள்ளும் அந்தப்பாடல் வரிகள் சின்ன வயதிலேயே என்னையறியாமல் பதிந்து விட்டது.
அம்மாவுடைய பெயர் அது இல்லை என்று எனக்குத் தெரியும், அப்பா இந்தப் பாடலை எப்போதாவது முணுமுணுக்கும் போதெல்லாம், ‘ம்.. தொடங்கி விட்டார்!’ என்று அம்மா அலுத்துக் கொள்வதும் தெரியும்.
‘இந்த ஷ்யாமளா யார்?’ ஒருவேளை அப்பாவின் முன்னாள் காதலியாக இருந்திருப்பாளோ, அதுதான் அம்மா அசட்டை செய்கிறாளோ என்று கூட நினைத்தேன்.
அம்மாவிடம் இதைப்பற்றிக் கேட்டேன் ‘அவர் ஒரு சினிமா பைத்தியம், அதுதான்’ என்று அம்மா மொட்டையாகப் பதில் சொன்னாள்.
கொஞ்சம் வளர்ந்து உலகம் பிடிபடத் தொடங்கியபோது, ஒருநாள் பொறுக்க முடியாமல் ‘யாரப்பா இந்த சியாமளா’ என்று அப்பாவிடமே கேட்டுவிட்டேன்.
‘ஏன் இந்த சந்தேகம்?’ என்பது போல அப்பா என்னைப் பார்த்தார்.
‘இல்லையப்பா இந்தப் பாட்டை அடிக்கடி பாடுறீங்களே அதுதான் யார் இந்த ஷியாமளா’ என்றேன்.
அப்பா சிரித்துவிட்டுச் சொன்னார், ‘இதுவா இது அந்தக் காலத்து பழைய சினிமாப் பாட்டு. என்னுடைய அப்பா நல்லகுரலில் பாடுவார், அதைப்பற்றிக் கதை கதையாச் சொல்லுவார். அந்தக்காலத்து இளைஞர்களைக் கவர்ந்த பாட்டாம். அந்தக் காலத்தில் நடிகர்களே பாடியும் நடிக்க வேண்டுமாம். உன்னோட தாத்தா இந்தப்பாட்டை தோட்டத்தில தண்ணீர் இறைக்கும் போது, துலா மிதிக்கும் போது எல்லாம் உரக்கப் படிப்பார். நான் தண்ணீர் கட்டிக் கொண்டிருப்பேன், காற்றிலே மிதந்து வந்து செவிக்குள் புகுந்து கொள்ளும், அதனால் களைப்பே தெரியாது, அதனால்தான் என்னுடைய மனசிலும் இந்தப்பாட்டுப் பதிந்து விட்டது’ என்றார்.
மூன்று தலை முறையாக அந்தப் பாடல் எங்கள் குடும்பத்தில் தங்கியிருந்திருக்கிறது என்பதை நினைக்க எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அது மட்டுமல்லல பழைய பாடல்களில், அந்த இசையில் எங்களுக்குப் பரம்பரைத் தொடர்போல, ஆர்வமும் இருந்திருக்கிறது என்பதும் எனக்குப் புரிந்தது.
அதனால்தான் ‘ஞானப்பழத்தை பிழிந்து’ என்ற அந்தப் பாடலைக் கேட்டதில் இருந்து, அந்தக் கணீரென்ற குரலுக்கு உரியவரைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, குறும்தட்டு விற்பனை நிலையத்தில் சென்று விசாரித்தேன். அவர் என்னை மேலும் கீழும் பார்த்தார்.
‘படத்தில் தான் பார்க்கலாம்!’ என்று சொல்லிவிட்டு, எங்கேயோ தேடி ஒரு பழைய குறும் தட்டைக் கொண்டுவந்து காட்டினார்.
‘ஒருத்தரும் இப்ப வாங்கிறதில்லை. உங்களுடைய அதிஸ்டம் ஒன்று கிடைச்சுது’ என்றார்.
அவர் தந்த குறுந்தட்டை வாங்கிப் பார்த்தேன். கவரிலே கே.பி. சுந்தராம்பாள் ஒளவையாராக சிரித்துக் கொண்டு, குளோசப்பில் நின்றார். நான் தடுமாறிப் போனேன். இது அப்பா காலத்துப் பாட்டல்லவா?
‘இல்லை.. வந்து.. நான் கேட்டது இதில்லை. கொஞ்ச நாளைக்குமுன் கனடாவில் ஒரு மேடை நிகழ்ச்சியில் ‘ஞானப்பழத்தை பிளிந்து’ என்ற பாட்டைப் பாடின சியாமளாவம்மாவின்ர பாட்டைத்தான்..!’
‘இப்ப இப்படி எத்தனைபேர் படுகினம்’ என்று முணுமணுத்தவர், அவர் அதைப்பற்றித் தனக்கு ஒன்றம் தெரியாது என்று கைவிரித்து விட்டார்.
ஏமாற்றத்தோடு வீட்டுக்குத் திரும்பி வந்தேன்.
ஓவ்வெரு முறையும் இப்படி யாராவது கைவிரிக்கும்போது அந்தக் குரலுக்குரிய அம்மாவைப் பார்க்கவேண்டும், இரண்டு வரி என்றாலும் பாடிக் காட்டச் சொல்லிக் கேட்க வேண்டும் என்ற ஆவலும் எனக்குள் கூடிக்கொண்ட சென்றது.
யாரைப்போல அந்த அம்மா இருப்பாள், சுசீலா மாதிரியா, ஜானகி மாதிரியா, அல்லது எல். ஆர் ஈஸ்வரி மாதிரியா என்றெல்லாம் கற்பனை பண்ணிப்பார்த்தேன். ஏன் முனியம்மா மாதிரிக்கூட இருக்கலாம்.! குரலுக்கும் ஆளுக்கும் தொடர்பே இல்லை என்பதை பலரைப் பார்த்த பிறகுதானே நானும் புரிந்து கொண்டேன்.
எப்படியோ அதைப் பாடியவரின் வாட்ஸ்அப் இலக்கம் கிடைத்ததால் வாட்ஸப்பில் அந்த அம்மாளுடன் தொடர்பு கொள்ள முடிந்தது. நான் ஒரு ரசிகன் என்று என்னைப்பற்றி அறிமுகம் செய்து கொண்டேன். கனடா வந்தால் சந்திக்கலாமா என்ற கேட்டபோது சம்மதம் தெரிவித்து முகவரியும் தந்திருந்தார்.
கனடா சென்ற போது, குறிப்பிட்ட தினத்திலன்று அவரது வீடு தேடிச் சென்று அழைப்பு மணியை அடித்துவிட்டு நின்றேன். வாசல் கதவு திறந்தது, எதிரே ஞானப்பழத்தோட மகளாகவோ அல்லது பேர்த்தியாகவோ இருக்கலாம் என்று மனசு கணக்குப் போட்டது, சின்ன வயசுதானிருக்கும், சிரித்த முகம், கொள்ளை அழகு!
‘நீங்க ..?’ என்றாள் அவள்.
நான் வந்த விடயத்தை மறந்து ஒரு கணம் தடுமாறிப் போனேன்.
‘வந்து.. சியாமளாம்மா இருக்கிறாங்களா?’ என்று இழுத்தேன்.
‘இருக்கிறாங்க, உட்காருங்க வரச்சொல்றேன்’ எனறு சொல்லி, ஹாலில் இருந்த இருக்கையைக் காட்டினாள்.
சியாமளாம்மா எப்படி இருப்பாங்க என்ற பரபரப்போடு உட்கார்ந்திருந்தேன்.
‘அம்மா..!’ என்று குரல் கொடுத்தபடி அவள் உள்ளே சென்றாள்.
சற்று நேரத்தால் ஒரு அம்மாள் சேலைத் தலைப்பில் கையைத் துடைத்தபடி உள்ளே வந்தாள். நெஞ்சு படபடத்தது.
‘வணக்கம் அம்மா’ என்று கையிலே கொண்டு வந்த மலர்க்கொத்தைக் கொடுத்து வணங்கினேன்.
‘வணக்கம். நீங்க..?’
‘நான் ப்ரகாஷ்..! ஞாபகம் இருக்கா? என்றேன்.
‘பிரகாஷ்..? தெரியலையே..! என்றாள் தயக்கத்தோடு.
‘ஜெர்மனியில் இருந்து வந்திருக்கேன்’ என்றேன்.
அவரோ குழப்பத்தில் ஆழ்ந்தவர் போலக் காணப்பட்டார்.
‘சியாமளா..?’
‘ஓ மகளிட்ட வந்தீங்களா? சியாமளா உனக்குத்தான் விசிட்டர்’ என்று உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தாள் அந்த அம்மாள்.
இப்போ, நான் முதல் சந்தித்த அதே பெண் மீண்டும் வந்தாள்.
‘சியாமு.. உன்னைப் பார்க்கத்தான் வந்திருக்கிறாங்க.’என்று சொன்னபடி அந்த அம்மாள் உள்ளே சென்றாள்.
‘என்னையா?’
‘ஆமா..!’
‘சியாமளா அம்மா என்று கேட்டீங்களே?’
நான் அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தயங்கினேன்.
‘நான் பிரகாஷ், ஞாபகம் இருக்கா? ஜெர்மனியில் இருந்து வந்திருக்கிறேன்.’
‘ஓ.. நல்லாய் ஞாபகம் இருக்கே எப்படி இருக்கீங்க?’
‘நல்லாயிருக்கேன், தப்பு என்னோடதுதான். உங்க பாட்டைக் கேட்டதாலே உங்களுக்கு நல்ல வயசாயிருக்குமோ என்று நினைச்சிட்டேன்.’ என்றேன்.
சியாமளா ஒரு கணம் தலை குனிந்து அடக்க முடியாமல் சிரித்தாள்.
‘மன்னிக்கணும், நானும் அப்படித்தான் நினைச்சிட்டேன். ஞானப்பழம், ஜீவப்பிரியே பாடல் ரசிகர் என்ற படியால் வயசானவர் என்று நினைச்சிட்டேன்.’
இரண்டு பேருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அவள் பகாவதரையும், நான் கே. பி. சுந்தராம்பாளையும் நினைத்துக் கொண்டிருந்ததில் எல்லாமே குழம்பிப் போச்சு!
‘ஜீவப்பிரியே பாட்டு ஏன் உங்களுக்குப் பிடிச்சுது?’ அவளே சரளமாகக் கதைக்கத் தொடங்கினாள்.
‘அதுவா, எங்க தாத்தா தியாகராஜா பாகவதர் ரசிகராம், அதனாலே ஜீவப்பிரியே பாட்டை தாத்தா அடிக்கடி படிப்பாராம், அதனாலே அப்பா அந்தப் பாட்டை அவ்வப்போது படிக்க, நானும் அதைப் பாடமாக்கிக் கொண்டேன்’
‘அப்போ உங்க அப்பா ஞானப்பழம் ரசிகரா?’
‘ஆமா, அப்பா மட்டுமல்ல நானும்தான்’ என்றேன்.
‘நீங்களுமா, உங்களுக்கு அந்தப் பாட்டு பிடிக்குமா? அப்படின்னா, தாத்தாவோட ஜீன் உங்ககிட்ட இருக்கணுமே?’
‘அவ்வளவுக்கு இல்லை, ஆனால் சுமாரா படிப்பேன்’
‘அப்போ எனக்கு ஒருக்கா பாடிக் காண்பீங்களேன்’ என்றாள்.
எனது தயக்கம் அவளுக்குப் புரிந்திருக்க வேண்டும்.
‘பயப்படாதீங்க, நான் மட்டும்தான் இங்கே இருக்கேன், ப்ளீஸ்.. இரண்டுவரியாவது..’
தொண்டையைச் சரிசெய்து கொண்டு பாடத் தொடங்கினேன், அவள் ரசித்துக் கொண்டிருந்தாள், என்னையா பாடலையா தெரியலை, அதுவே எனக்கு ஒருவித உட்சாகமூட்டியதால், நான் கண்களை மூடிக் கொண்டு உணர்ச்சி வசப்பட்டுப் பாடினேன்.
‘என் ஜீவப்பிரியே ஷ்யாமளா, என் ஜீவப்பிரியே ஷ்யாமளா
என் ஜீவப்பிரியே சியாமளா.. சியாமளாதேவி!
பாதைமேல் விழியாப் பார்த்தே நொந்தேன்
பாங்குடன் தேன் மொழிபேசிட வாறாயோ சியாமளா..
என்றுனைக் காண்பேன் இன்பம் பெறுவேன்
ஏக்கமேதீர இரங்கிடுவாயே நீயே சியாமளா
ஆசை முகம் காட்டியே என் அல்லலைத் தவிராயோ
ஆடிவந்து எந்தன் அன்பினை மேவி ஆனந்தம் தாராயோ
என் ஜீவப்பிரியே ஷ்யாமளா, என் ஜீவப்பிரியே ஷ்யாமளா..!’
மிக அருகே கரவோசை கேட்டு கண்திறந்து பார்த்தேன். சியாமளாதான், ‘ரொம்ப நல்லாப் பாடுறீங்க, அப்படியே பாகவதர் குரல் போலவே இருக்கு, நான் என்னை மறந்து சிலிர்த்துப் போயிட்டேன்’ என்றவள், அக்கம் பக்கம் பார்த்துவிட்டுக் குனிந்து என் நெற்றியில் சட்டென்று ஒரு முத்தம் பதித்தவள், ஒன்றுமே நடக்காதது போலத் திரும்பிச் சென்று தன் ஆசனத்தில் உட்கார்ந்தாள்.
நான் ஒரு கணம் உறைந்து போயிட்டேன். எல்லாமே எதிர்பாராமல் இன்ப அதிர்ச்சி தருவதாக இருந்தது. அவளுடன் ஏதாவது கதைக்க வேண்டும்போல இருந்தது.
‘நீங்க எப்படி பழைய பாடல்களைத் தெரிந்தெடுத்தீங்க?’ என்று கேட்டேன்.
‘ஒரு நாள் அந்தப் பாடலை, அதுதான் ஞானப்பழத்தைப் பாடிப் பார்த்தேன், எங்கம்மா அப்படியே கே.பி. சுந்தராம்பாள் மாதிரி இருக்கென்று சொன்னாங்க, அப்புறம் இரண்டு மூணு தடவை பயிற்சி எடுத்து மேடையிலே பாடினேன், அமோக வரவேற்புக் கிடைச்சுது’ என்றாள்.
‘ஆமா, அந்தக் குரல் பிரபலமாக வந்ததற்கு காரணம் என்னவென்று யோசிச்சுப் பார்த்தேன். ஒரு உண்மை புலனாயிற்று’ என்று நிறுத்தினேன்.
‘என்ன காரணம் சொல்லுங்களேன்’ என்றாள் அவசரமாக.
‘அதுவா, இப்போ பொறுமையாக இருந்து அதிகமாகத் தமிழ் பாட்டைக் கேட்பவங்க எல்லாம் 40 வயசைக் கடந்தவங்க, அதனாலே தான் அவங்களுக்கு உங்க பாட்டு பிடிச்சிருக்கு’
தாயார் அங்கேயே வைத்துவிட்டுச் சென்ற மலர்ச் செண்டை எடுத்து அவளிடம் நீட்டினேன். என்னைவிட வயதிலே குறைந்தவள் என்பதால் பாதத்தைத் தொட்டு ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு வந்ததெல்லாம் தடைப்பட்டுப் போச்சு!
செண்டை வாங்கி ஆசையாய் அரவனைத்துக் கொண்டு நன்றி சொன்னாள். அப்புறம் என்னுடைய செல்போனை வாங்கித் தனது தொடர்பு இலக்கத்தைப் பதிவு செய்தாள்.
‘அடிக்கடி உங்களைச் சந்திக்கணும்போல இருக்கு, நேரமிருந்தால் வாங்களேன்’ என்றாள். குரலுக்கும் உருவத்திற்கும் தொடர்பில்லை என்பதை மீண்டும் உறுதி செய்து கொண்டேன்.
கலையின் பெயரால், திரும்பி வரும்போது ஆசீர்வாதம் வாங்கும் சாக்கில் குனிந்து அவளது மிருதுவான பாதத்தைத் தொட்டிருக்கலாமோ என்று இந்தப் பொல்லாத மனசை ஏங்கவைத்து விட்டாள் என் ஜீவப்ரியை ச்யாமளா!
(முடிந்தால் ‘ஜீவப்பிரியை’ பாடலை நீங்களும் ஒருமுறையாவது கேட்டுப் பாருங்கள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.