அண்மையில் நான் வாசித்த 'பறவைகள்' பற்றிய புத்தகம் என்னை மிகவும் கவர்ந்த புத்தகங்களிலொன்றாக மாறிவிட்டது. வெறும் தகவல்களையுள்ளடக்கியதோர் அறிவியற் நூலாக அமையாமல் , இலக்கியத்தரமுள்ள, நெஞ்சை ஈர்க்கும் சுவையான மொழியில் எழுதப்பட்ட கட்டுரைகளை நூலாக அமைந்துள்ளது.. இயற்கையின் வனப்பை மண் வாசனையுடன் விளக்கும் வகையிலான மொழிநடையில் எழுதப்பட்டுள்ளதால் , வாசிப்பவர் எவரையும் முதல் வாசிப்பிலேயே கவர்ந்துவிடும். வாசகரும் எழுத்தில் விரியும் இயற்கையெழிலில் மூழ்கி விடுவார்.
பறவைகளைப்பற்றி 23 கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பில் போதுமான அளவுக்கு பறவைகள், அவற்றின் கூடுகளை வெளிப்படுத்தும் சித்திரங்களும் இடம் பெற்றுள்ளன. அழகான , கண்ணைக்கவரும் ஓவியங்கள். நூலை காந்தளகம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
முதலில் அட்டையைப் பார்த்ததும் சிறுவர்களுக்கான பறவைகளைப்பற்றிய கவிதைகளை உள்ளடக்கிய நூலோ என்று ஒரு கணம் நினைத்து விட்டேன். ஆனால் பிரித்துப் பார்த்தபோதுதான் நூலின் அருமை, பெருமையெல்லாம் நன்கு விளங்கியது.
இந்த சிறப்பான பறவைகள் பற்றிய அறிவியல் நூலை வெளியிட்ட பதிப்பகம் 'காந்தளகம்' (1980)
பறவைகள் நூலை எழுதியவர் யார் தெரியுமா? மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்களே. ஆரம்பத்தில் எழுத்தாளர் பண்டிதர் க.சச்சிதானந்தன் அவர்களே எழுதியதாக எண்ணி விட்டேன். அதனை முகநூல் நண்பர் கு.சரவணன் தவறென்று சுட்டிக்காட்டி மறவன்புலவு க.சச்சிதானந்தனே எழுதியதாகக் கூறியிருந்தார். அவருக்கு நன்றி. நூலகம் தளத்தில் க.சச்சிதானந்தன் என்னும் பிரிவில் இந்நூல் உள்ளதால் அவ்விதமே நம்பி விட்டேன். மேலும் மறவன்புலவு க.சச்சிதானந்தன் என்றுதான் அவர் எழுதுவது வழக்கம். இதில் க.சச்சிதானந்தன் என்றே அட்டையில் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதாலும் அவ்விதமே நம்பி விட்டேன். இருந்தாலும் நூல் முன்னுரையில் நூலாசிரியர் ஐக்கியநாடுகள் திட்டத்தில் வேலை செய்தவராகக் குறிப்பிடப்பட்டிருந்தபோது கவனித்திருக்க வேண்டும். அப்போதும் பண்டிதர் க.சச்சிதானந்தன் வானவியல் துறையில் ஆர்வமுள்ளவராகவும், யாழ் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக் கட்டுரை அத்துறையில் சமர்பித்தவராகவும் வாசித்திருந்ததால் அவரே எழுதியதாக எண்ணி விட்டேன். மேலும் இருவரது பெயர்களு,மே கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன் என்றிருப்பதும் தவறான புரிதலுக்குக் காரணம்.
நூலகத்தில் பறவைகள்
நூலிலுள்ள கட்டுரைகள்:
1. வரப்பெல்லாம் நாரைகள்
2. உள்ளத்தின் உணர்வில் புள்ளினங்கள்
3. சைபீரியா முதல் வேடந்தாங்கல் வரை
4. சிலம்பு பூண் காதை
5. மணம் மலிந்த நன்மாதம்
6. காதற் கோலங்கள் கவர்ச்சிப் பாலங்கள்
7. தூக்கணாங் குருவி கூடு
8. முட்டையா கோழியா முதல் வந்தது
9. மாரியில் மகப்பேறு மனைகள்
10. இயல்புகள் ஏழின் இணைவு
11. ஆலோலம் பாடும் வாலைக்குமரி
12. மாடு மேய்ச்சான் கொக்கு
13. புள்ளினங்கள் ஆள் - புலங்கள்
14. பறக்க வேண்டும் இறக்கை
15. தென்திசை ஆடி வடதிசை ஏகி
16. அறிவியல் திறமை அளவிடல் புலமை
17. விருந்துச் செய்திதரும் காகம்
18. காற்று வாழ்வுக்கு ஏற்ற மாற்றங்கள்
19. எச்சம் தரும் பொருள் மிச்சம்
20.ஊடற்கண் அன்றிக் கூடக் கூவுவாய்
21. பஃறுளி ஆறு பன்மலை அடுக்கம்
22. காலத்தின் சுவடு கல் நண்டு
23. இதுதான் எங்கள் உலகம்
"வரப்பெல்லாம் நாரைகள் என்னும் கட்டுரையிலிருந்து சில பகுதிகள்.
" மீட்டர் வரை உயரப் பறக்கும். படைவீரரின் ஒழுங்குடன் பறக்கும். நெருங்கிப் பறக்கும். மீண் டும் வேறொரு வரப்பில் வந்து அமரும். மறவன்புலவுக் குளங்கள் மாரியில் நீரால் நிறையும். கோடையில் நீர் வற்றும்; பொருக்கு வெடிக்கும். மாரிக் குளத்தின் கட்டுகளில் நாரை கள் அமரும். நாரையின் கால்கள் நீண்டவை. குளத்து நீருக்குள்ளும் வயலின் வெள்ளத்துள்ளும் நாரைகள் நிற்கும். மீன் வரும்வரை காத்திருக் கும். விதைத்த எல்லா வயல்களிலும் நெற்பயிர் வளர்வதில்லை. சில வயல்களில் அழிவதும் உண்டு. அந்த வயல்களில் நாரைகள் நிறைந்திருக்கும். காலெட்டும் நீரில் அவை காத்திருக்கும் மீனுக்கு.
சத்திமுற்றம் தமிழ்நாட்டில் ஓர் ஊர். அங் கேயும் குளம் உண்டு. அங்கே தமிழ்ப் புலவர் ஒருவர்; அந்த ஊர்ப் பெயருடையவர்; சத்திமுற்றப் புலவர். 'நாராய் நாராய்' எனத் தொடங் கும் பாடலை எழுதியுள்ளார். தனிப்பாடல் திரட் டில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது. சிவந்த நீண்ட கால்கள்; பனங்கிழங்கு பிளந்தது போன்ற அலகு கூர்மையான அலகு இவை கொண்ட நாரைகள் வாடைக் காற்றுடன் வடக்கில் இருந்து வருவதையும் பின்னர் சில மாதங்கள் கழியத் தெற்கில் இருந்து வடக்கு நோக்கிச் செல்வதையும் இப் புலவர் கண்டுள்ளார்.
சத்தி முற்றப்புலவர் மதுரைக்குச் சென்ருர், பாண்டிய மன்னனிடம் பரிசுபெற விழைந்தார். பாண்டியனின் முன் கவியாத்தார். நாரைகளின் இடம் பெயர் பாங்கினைக் கவிதையில் கூறினர். தெற்கேயுள்ள கன்னியா குமரிக்கு நீராடச் செல்கின்றன. மீண்டும் வடக்கே செல்கின்றன எனக் கூறினர். கார்த்திகையிலும் மார்கழியிலும் வாடைக் காற்றின் வேகத்துடன் நாரைகள் அழுக்கணவன் கள், நீர்க்காகங்கள், கொக்குகள், பல இனப் பறவைகள் தெற்கு நோக்கிப் பறக்கின்றன. "
'பறவைகள்" நூல் நூலகம் தளத்திலுள்ளது. அதற்கான இணைய இணைப்பு
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.