காலம் காலமாக பல்வேறு வகையான வெளியீடுகள் வெளியீட்டு நிகழ்வுகள் மூலமாக பல்வேறு எழுத்தாளர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. முழு நீளத் திரைப்படம், குறுந்திரைப்படம், இசைகலந்த பாடல்கள், சிறுகதைகள், நாவல்கள், கவிதைத் தொகுப்புகள் மற்றும் கட்டுரைகள் என்று வெளியீடுகளையும் அவை சார் வெளியீட்டு நிகழ்வுகளையும் அடுக்கிக்கொண்டே செல்லலாம். இவற்றுள் திரைப்படங்கள், குறுந்திரைப்படங்கள் மற்றும் பாடல்கள் தவிர்ந்த ஏனைய வெளியீடுகளில் நூல் வெளியீடுகள் முக்கிய இடம்பெறுகின்றன. நூல் வெளியீடுகளில் பல தரப்பினரும் அழைப்பிற்கு அமைவாக கலந்துகொள்வதுண்டு. அந்த வகையில் அண்மையில் எனக்கும் ஒரு கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த நிகழ்வில் கலந்துகொண்டபோது எனது மனதில் பதிந்த சில விடயங்களை வைத்துக்கொண்டு நூல் வெளியீடுகளின்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விடயங்களை புதிய மற்றும் வளர்ந்துவரும் எழுத்தாளர்களுக்கு எதிர்காலத்தில் பயனளிக்கும் பொருட்டு இந்த ஆக்கத்தை படைத்துள்ளேன். இங்கு மூத்த எழுத்தாளர்களை தவிர்த்து புதிய மற்றும் வளர்ந்துவரும் எழுத்தாளர்கள் என்று நான் குறிப்பிட்டமைக்கு காரணம் மூத்த எழுத்தாளர்களைப்பொறுத்தவரை அவர்கள் போதுமான அனுபவங்களைப் பெற்றவர்கள். ஆகவே முக்கியமாக புதிய எழுத்தாளர்களுக்கு இந்த கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதே எனது அபிப்பிராயம்.
அண்மையில் பிரபல எழுத்தாளர் ஒருவருடைய காணொளியொன்றை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த காணொளியில் ஒரு சந்தர்ப்பத்தில் ‘இன்று எழுத்தாளர்களுள் சிலர் வெளியீட்டு மோகம் உள்ளவர்களாக எழுதத் தொடங்கியிருக்கிறார்கள்’ அதாவது தாம் எழுதிய படைப்பை வெளியிட்டுவிடவேண்டும் என்ற அவா அவர்களிடத்தில் முக்கியத்துவம் பெறுகிறது என்ற கருத்துப்பட ஒரு விடயத்தை குறிப்பிட்டிருந்தார். அவசரம் அவசரமாக வெளிவரும் பல வெளியீடுகளை பார்க்கையில் இவரது கருத்து மிக நீண்ட காலமாக அவதானிக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டதாகவே தோன்றுகிறது. இந்த விடயமும் எனது மனதின் ஆழத்தில் பதிந்திருந்தது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டபோது அந்த விடயமும் இந்த வெளியீட்டு நிகழ்வின் போக்கும் அனேகமாக இந்த ஆக்கத்தின் அவசியத்தை வலியுறுத்துவதாகவே அமைகிறது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஒருவர் நிகழ்வு முடிந்து சென்றதன் பின்னர் சிங்கப்பூரில் உள்ள அவரது நண்பர் ஒருவருக்கு இந்த நிகழ்வுபற்றி குறிப்பிடுகையில் நிகழ்வு வழக்கம்போல பாரம்பரிய நிகழ்வாகவே இடம்பெற்றதாக குறிப்பிட்டதாகவும் அறியக்கிடைத்தது. இன்று அனேகமான நிகழ்வுகளில் புதுமைகள் புகுத்தப்பட்டு பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் முறைமைகள் பல மாற்றங்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அது தவறென கருதவும் முடியாது எத்தனையோ விடயங்கள் மாறிக்கொண்டே இருக்கும் இந்த நவீன யுகத்தில் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவையே. இந்த நிகழ்விலும் சில புதுமைகள் புகுத்தப்பட்டிருந்தன. முக்கியமாக இசை கலந்த பாடல் நிகழ்வு புகுத்தப்பட்டிருந்தது. இது வரவேற்கக்கூடிதே பேச்சுக்களை கேட்டு கேட்டு சோர்வுற்றிருக்கும் பங்குபற்றுனர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தவும் தொடர்ச்சியாக முழு நிகழ்விலும் ஆர்வத்துடன் பங்குபற்றுவதற்கும் இது சிறந்த ஒரு முயற்சியே.
ஆனாலும் இங்கு பாரம்பரிய முறைமை என்பதால் குறிப்பிடப்படுவது என்ன? ஏன் அப்படிக் குறிப்பிட வேண்டும்? என்பதே எனது தாக்கமாக இருக்கிறது. இதை பாரம்பரிய முறைமை என்று பார்க்காமல் நூல் வெளியீடு ஒன்றில் இருக்கக்கூடிய ஒழுங்கு முறை அல்லது அவசிமான நடைமுறைகள் என்று எடுத்துக்கொண்டால் அது இன்னும் சிறப்பாக இருக்கும் அப்போது பாரம்பரியம் என்ற பேச்சுக்கு இடமிருக்காது. ஒரு நூல் வெளியீட்டு நிகழ்வில் பொதுவாக பின்பற்றப்பட்டு வருகின்ற ஒழுங்குகள் அல்லது நடைமுறைகள் இன்றியமையாதவையாகவே கருதவேண்டும். இங்கு நான் குறிப்பிடும் ஒருங்கு முறைகள் என்பதை நாம் பின்வரும் நிகழ்சி நிரல் வடிவில் நோக்கலாம்.
1. இறை வணக்கம்
2. மங்கள விளக்கேற்றுதல்
3. வரவேற்புரை
4. ஆசியுரை
5. சிறப்புரை
6. நூல் அறிமுக உரை
7. நூல் வெளியீடு
8. முதற் பிரதியும் சிறப்பு பிரதிகளும் வழங்குதல்
9. நூல் ஆய்வுரை
10. எழுத்தாளரின் ஏற்புரை
11. பிரதம அதிதி உரை
12. நன்றி உரை
மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரல் பொதுவான ஒன்றாக கருதலாம். இவற்றைவிட நிகழ்வுக்கு பொருத்தமான வேறு விடயங்களை சேர்த்துக்கொள்ள விரும்புபவர்கள் சேர்த்துக்கொள்வதில் தவறில்லை. அத்தோடு நிகழ்சிகளுக்குள் வேறு புதுமைகளை புகுத்துவதும் தவறு கிடையாது. அது வெளியீட்டாளரின் விருப்புக்கும் வசதிக்கும் நேர ஒருக்கீட்டுக்கும் அமைவாக அமையலாம். இலக்கியகர்த்தாக்கள், இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் வாசகர்கள் மேற்படி ஒழுங்கு முறையில் வரக்கூடிய விடயங்களில் ஒவ்வொரு நடைமுறை களுக்குள்ளும் பல எதிர்பார்ப்புகளோடு காத்திருப்பார்கள். அந்த எதிர் பார்ப்புகள் சிதைவடைந்துவிடவோ எமாற்றத்தை தந்துவிடவோ கூடாது என்பதை வெளியீட்டாளர் மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும்.
மேலே நான் குறிப்பிட்டுள்ள நிகழ்சி நிரலில் 12 விடயங்கள் குறிப்பிட்டிருந்தாலும் இந்த நிகழ்ச்சி ஒழுங்கில் ஒரு நூல் வெளியீட்டில் மிகவும் முக்கிமானது நூல் அறிமுகம், நூல் அறிமுக உரை, ஆய்வுரை மற்றும் ஏற்புரை. நூல் அறிமுக உரையில் நிகழ்வில் பங்குபற்றுபவர் நூல் பற்றிய தெளிவை பெறுவதோடு அதன் உள்ளடக்கங்கள், வடிவம், அட்டைப்பட கருத்து, எழுத்தாளர் பற்றிய குறிப்பு மற்றும் அதற்கு யாராவது உரைகள் வழங்கியிருந்தால் அவர்கள் பற்றிய விபரம் மற்றும் அவர்கள் என்ன கூறுகிறார்கள் போன்ற பல விடயங்களை அறிந்து கொள்கிறார்கள். இது அவர்கள் அந்த நூலை வாங்கும் ஆர்வத்தை தூண்டுவதோடு அந்த நூலை தொடர்ந்து முழுமையாக வாசிக்கும் ஆர்வத்தையும் ஏற்படுத்தும். அத்தோடு நூல் ஆய்வுரை நிகழ்த்தப்படும்போது அவர்களும் அந்த நூலை கையில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு பக்கமாக நூலோடு ஒன்றித்துப்போய்விடுவார்கள். ஆகவே நூல் அறிமுகவுரை அதை ஆற்றக்கூடிய ஒருவரைக்கொண்டு சிறப்பாக நிகழ்த்தப்பட வேண்டும் மிகவம் அவசியமான ஒன்றாகும்.
அடுத்து ஆய்வுரை நிகழ்த்தப்படும். இவ்வாறு ஆய்வுரை நிகழ்த்தப்படும்போது அந்த நூலின் அட்டை வடிவமைப்பிலிருந்து நூலின் ஒவ்வொரு பகுதிகளும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு இறுதி அட்டை வடிவமைப்பு வரை ஆய்வாளரால் பல்வகையான விளக்கக் குறிப்புகளுடன் நூல்பற்றி அவருடைய கருத்துகள் முன்வைக்கப்படும். இதில் ஆய்வுரை நிகழ்த்துபவர் எழுத்தாளரின் எழுத்து நடை, கவர்ச்சி, இலக்கியத்திறன், அனுபவம், சுவாரஸ்யம், சுவை, நகர்வு, சொற்பயன்பாடுகள் என்று பல்வேறு விடயங்களையும் முன்நிறுத்தி முற்கூட்டியே ஆழமாக ஆய்வு செய்த விடயங்களை திருத்தக் குறிப்புகளும் உள்ளடங்கலாக முன்வைப்பார். ஆகவே இந்த உரையும் எழுத்தாளருக்கும் நிகழ்வில் பங்குபற்றுகின்றவர்களுக்கும் பின்னர் அந்த வெளியீட்டை வாசிக்கவிருப்பவர்களுக்கும் மிகவும் பயனுடையதாகும்.
ஏற்புரையானது நிகழ்விலே ஆய்வுரை நிகழ்த்தப்பட்டால் எழுத்தாளரால் வழங்கப்படுவது அவசியமானது. அந்த ஆய்வுரை நிகழ்தியவரின் ஆய்வுக்குட்பட்டு முன்வைக்கப்பட்ட விடயங்களை எழுத்தாளர் தனது கருத்துப் பதிவின் மூலம் சமப்படுத்துவதே ஏற்புரையின் அவசிய தன்மையாகும். இதனால் ஆய்வாளர் முன்வைத்த சகல விடயங்களையும் ஏற்புரையில் எழுத்தாளர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது எனது கருத்தல்ல. இதில் ஒவ்வொருவருடைய பார்வையின் பொருட்டும் கருத்துக்கள் மாற்றம்பெறலாம்.
இந்த வெளியீட்டு நிகழ்வில் நூல் அறிமுக உரை நிகழ்துபவர் என ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. உரை நிகழ்த்த வந்தவர் அந்த நூலை சரியாக வாசித்து அந்த நூலை அறிமுகம் செய்யும்படியான உரையை நிகழ்த்தவில்லை. அதே போலவே அறிமுக உரையைத் தொடர்ந்து ஆய்வுரை நிகழ்த்த அழைக்கப்பட்டவர் ஆய்வுரை நிகழ்த்தவில்லை. அவரும் நிகழ்வுக்கு வருவதற்கு முன்னர் அந்த நூலை சரியாக பார்த்திருக்கவி;ல்லை என்பது அவரது பேச்சில் புலப்பட்டது. அவர் தான் நிகழ்த்துவது ஆய்வுரை அல்ல என்பதை அவரது உரையில் குறிப்பிடவும் தவறவில்லை. எழுத்தாளர் ஏற்புரை நிகழ்த்த வந்தார் ஆனால் நிகழ்வுக்கு வந்தவர்களுக்கும் நூலை உருவாக்குவதில் பின் புலத்திலிருந்து ஊக்கமளித்தவர்களுக்கும் மற்றும் இந்த நிகழ்வை சிறப்பாக நடாத்துவதற்கு ஒத்துழைப்பும் ஊக்கமும் அளித்தவர்களுக்கும் நன்றி கூறி ஏற்புரையை முடித்தார். நான் என்ன குறிப்பிடுகிறேன் என்பது உங்களுக்கு புரிந்திருக்குமென நினைக்கிறேன். சுருக்கமாக கூறின் இந்த நிகழ்வில்தான் ஆய்வுரையே நிகழவில்லையே பிறகு எதற்கு ஏற்புரை. இந்த விடயத்தை குறிப்பிடுவதன் மூலம் கட்டாயமாக ஆய்வுரை ஒன்றை நிகழ்த்தியே ஆகவேண்டும் என்பது எனது கருத்தல்ல. இன்றைய காலத்தில் பலர் ஆய்வுரைகளே இல்லாமலும் நிகழ்வுகளை நடாத்துகிறார்கள். அடுத்து இங்கு அவதானிக்கப்பட்ட மேலும் சில முக்கியமான விடயங்களை பார்ப்போம்.
நிகழ்ச்சியில் கடவுள் வணக்கம் செய்வதாக இருந்தால் முதலில் கடவுள் வணக்கத்தை செய்தபின்னரே பாரம்பரிய மங்கள விளக்கேற்றும் நிகழ்வை நிகழ்த்த வேண்டும். இந்த இரண்டு நிகழ்வுகளும் இடம் பெறும்போது அனைவரும் எழுந்து நின்று அதனை செய்வதே வழக்கம்.
எப்பொழுதும் நூல் அறிமுகம் செய்தவுடன் முதல் பிரதியை பிரதம அதிதியாக அழைக்கப்பட்ட (முதற் பிரதி பெறுபவர்) பிரமுகருக்கு வழங்க மறக்காதீர்கள். அடுத்ததாக உங்கள் சிறப்புப் பெறுவோர் பட்டியலில் உ;ளடக்கப்பட்டிருந்தவர்களுக்கு முன்னுரிமையடிப்படையில் சிறப்பு விருந்தினர்களுக்கான பிரதிகளை வழங்குங்கள். அதைத் தொடர்ந்து அழைக்கப்பட்ட ஏனைய அனைவருக்கும் நூலை வழங்க மறந்துவிடாதீர்கள். ஆய்வுரை ஆரம்பிக்கும்போது அனைத்து அழைக்கப்பட்ட விருந்தினர்கள் கைகளிலும் குறிப்பிட்ட நூல் கிடைத்திருக்க வேண்டும் என்பது மிக முக்கியமானது.
தற்பொழுதெல்லாம் எல்லோரும் புகைப்படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கத் தவறுவதில்லை. அது அவசியமானதுதான் ஆனால் நிகழ்சியின் நடுவில் அரங்கில் படம் எடுக்கும் நிகழ்வை நடத்துவதை தவர்ப்பது சிறப்பானது. நிகழ்வு முடிந்த பின்னர் குழுப்படம் எழுக்கப்படும் ஆகவே புகைப்படத்திற்குள் உள்ளடங்க வேண்டியவர்களை நிற்கும்படி அறிவித்து நிகழ்வு முடிந்ததும் புகைப்படத்தை எடுப்பது மிகவும் சிறந்தது.
நன்றியுரை கூறி நிகழ்வு முடிவடைந்தது என அறிவித்த பின்னர் மீண்டும் மற்றொரு விடயத்தை மேடையில் நிகழ்த்த முயற்சிப்பதும் விரும்பத் தகாத ஒன்றாகவே இருக்கும் என்பதனையும் வெளியீட்டாளர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும் ஒரு விடயம் நன்றியுரையை தொடர்ந்து நிகழ்தப்படவிருந்தால் அதனை நன்றியுரை கூறுவதற்கு முன்னரே நன்றியுரையைத் தொடர்ந்து குறிப்பிட்ட நிகழ்வு ஒன்று இடம்பெறும் அத்தோடு நிகழ்வு முடிவுறும் என்பதை அறிவித்தால் அது ஏற்புடையதாக இருக்கும். இவ்வாறு சில நிகழ்ச்சிகளில் இடம்பெறுவதுண்டு.; நன்றியுரை தொடங்கும் போது அதனை கேட்பதற்கு ஆர்வம் காட்டாது அவையினர் வெளியேறுவதே இதற்கு முக்கிய காரணம். இதனை தவிர்ப்பதற்காக நிகழ்வின் இறுதிச் செயற்பாடு இடம்பெறுவதற்கு முன்னரே நன்றியுரையை வழங்குவது தற்போது நடைமுறையில் பலரால் பின்பற்றப்படுகிறது.
மற்றொரு முக்கிமான விடயத்தை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். தற்காலத்தில் ஒவ்வொரு நிகழ்விற்கும் தொகுப்பாளரை நியமித்து அவர் மூலமாக நிகழ்வுகளை தொகுத்து வழங்குவது ஒரு வழக்கமாகிவிட்டது. முன்பு இவ்வாறான வெளியீட்டு நிகழ்வுகளுக்கு ஒருவர் தலைமை ஏற்று நடாத்தும் பொருட்டு நியமிக்கப்படுவார். நிகழ்வின் தலைவர் நிகழ்சியை வழிநடத்துவதற்கும் தொகுப்பாளர் வழி நடத்துவதற்கும் இடையே குறிப்பிடக்கூடிய வேறுபாடுகள் நிறைவே உண்டு. இது போன்ற நிகழ்வை நடாத்திய அனுபவம் இல்லாத ஒரு தொகுப்பாளரால் நிகழ்ச்சியை சரியான ஒழுங்குமுறையில் தொகுத்து வழங்குவது சிரமமானதே. தொகுப்பாளர்கள் தங்கள் ஒட்டு மொத்த திறமையையும் நிகழ்வுக்கூடாக வெளிப்படுத்த நினைத்து செயற்படுவதானது நிகழ்வின் முக்கியத்துவத்தை சீரழித்துவிடுகிறது. இந்த நிகழ்வில் இடம்பெற்ற பல நிகழ்வுப் பிறழ்வுகளுக்கும் தொகுப்பாளரின் அதி மேதாவித்தனம் அல்லது அனுபவக் குறைவு காரணமாகவிருந்ததை அவதானிக்க முடிந்தது. ஆகவே நூல் வெளியிடுபவர் இது பற்றி கவனமெடுத்து தொகுப்பாளர் பற்றி தீர்மானத்திற்கு வருவதே சிறந்தது. விருது வழங்கும் விழா, இசை நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சி போன்றவற்றை தொகுத்து வழங்குவதற்கும் நூல் வெளியீட்டு நிகழ்வை தொகுத்து வழங்குவதற்கும் இருக்க வேண்டிய வேறுபாடுகளை இவர்கள் நன்கு விளங்கிக்கொண்டவர்களாக இருக்க வேண்டும். மேற்படி தொகுப்பாளர் பற்றிய விடயத்தை குறிப்பிடும்போது அண்மையில் எனக்கு பார்க்கக் கிடைத்த முல்லை மற்றும் கோதண்டம் என்ற நகைச்சுவையாளர்களின் வெளியீடாக வந்த ஒரு காணொளியே நினைவுக்க வருகிறது . அந்த காணொளியில் தற்போது நேர்காணல் நிகழ்வை மேற்கொள்கிறவர்கள் காண்பிக்கும் மேதாவித் தனத்தை மிகதத்ரூபமாக காண்பித்திருந்தார்கள். மிக சுவாரசியமான பல விடயங்கள் அவர்கது பேட்டி நிகழ்வில் அடையளம் காணக்கூடியதாக இருந்தது அவை இவ்வாறான நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கும் பொருத்தமாக இருக்கும்.
அவையினருக்கும் விசேட விருந்தினருக்கும் அழைப்பு விடுக்கும்போது வெளியீட்டாளர் தனது நண்பர்களுடன் மட்டும் அவையினரை மட்டுப்படுத்திவிடாது கவிதை, சிறுகதை, கட்டுரை, நாவல் மற்றும் ஏனைய படைப்புக்கள் எதுவோ அவற்றுடன் தொடர்புள்ள இலக்கிய ஆளுமைகளையும் அழைப்பது நிகழ்வினை மேலும் சிறப்பிக்கும் என்பதையும் மனதில் இருத்துவது குறிப்பிடக்கூடிய மற்றொரு சிறப்பம்சமாகும்.
வெளியீட்டாளர்கள் அல்லது எழுத்தாளர்களுக்கு பயனுள்ள மேலும் ஒரு முக்கியமான விடயத்தையும் இங்கு குறிப்பிடுவது சாலச் சிறந்ததே எனக்கருதி அதனையும் இங்கு தருகிறேன். இந்த நிகழ்வு முடிந்த பின்னர் அந்த எழுத்தாளரை சந்திக்க கிடைத்தது. அப்போது நிகழ்சி பற்றி அவர் என்னிடம் அளவளாவினார். அதுபற்றி எதனையும் குறிப்பிடவேண்டாம் என என்உள்மனம் கூறவே நிகழ்ச்சி நல்ல சிறப்பாக இருந்தது என்று மட்டும் கூறிமுடித்தேன். அவர் மீண்டும் நீங்கள் என்ன ஒரே வசனத்தில் கருத்தை கூறிமுடித்துவிட்டீர்களே அப்படியென்றால் ஏதாவது தவறு இருக்கிறதா இருந்தால் கூறுங்கள் என மீண்டும் கேட்டதால், நானும் சரி சில முக்கிமான விடயங்களை சுட்டிக்காட்டுவோம் என கூற தொடங்கினேன். கூறுவதற்கு முன்னரே இது ஒரு விமர்சனம் கிடையாது இதை பின்னூட்டலாகவே எடுத்துக்கொள்ளுங்கள் என கூறித்தான் தொடங்கினேன். ஆரம்பித்த சில நொடிகளிலேயே அவரது முகம் மலர்ச்சி குன்றி மாற்றம் காணத்தொடங்கியது. அப்போது அங்கே அவருடைய மற்றொரு நண்பர் வந்தார். அவர் வந்ததும் அந்த கவிதயினியின் முகத்தை அவதானித்துவிட்டு என்னிடம் என்ன Criticism மா என்று கேட்டார். எனக்கு தூக்கி வாரிப்போட்டது. என்ன எடுத்த எடுப்பிலேயே என்ன பேசப்படுகிறது என்று தெரியாமல் இப்படிக் கேட்டுவிட்டாரே என்று மனம் சலனப்பட்டது. இப்படி பிழையான அர்த்தம் கொள்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் இவர்களுக்கு நான் கீழே குறிப்பிடுகின்ற விடயங்கள் பற்றிய முழுமையான தெளிவு கிடையாது ஆகையால் அவர்கள் இப்படித்தான் கருதுவார்கள்.
ஒரு படைப்பு, நிகழ்வு மற்றும் வெளியீடு என்று இவை போன்ற ஒவ்வொரு விடயத்தின் பொருட்டும் மற்றவர்களால் முன்வைக்கப்படும் கருத்துக்கள் பல வகையை சார்ந்ததாக இருக்கும். அவை எந்த வகையை சார்ந்தவை என்பதை விளங்கிக்கொள்வதும் அவற்றின் வேறுபாடுகளை தெரிந்துகொள்வதும் மிகவும் அவசியமான ஒன்றாக நான் கருதுகிறேன் அத்தோடு எழுத்தாளர்களுக்கு இவை மிகவும் பயனுள்ளவையும் முக்கியத்துவம் வாய்ந்தவையுமாகும்.
கருத்துப்பகிர்வு - Sharing thoughts or ideas
மீளாய்வு - Evaluation
விமர்சனம்ஃதிறனாய்வு - Review
பின்னூட்டல் - Feedback
தர்க்கம் - Argument
குதர்க்கம் - Criticism
மேலே குறிப்பிட்டவைகளே அவை. அவை ஒவ்வொன்றையும் பற்றி இங்கே முழுமையாக பதிவிடுவதை கட்டுரை நீட்சி கருதி தவிர்த்திருக்கிறேன். அவை பற்றி வேறு ஒரு சந்தர்ப்பத்தில் விரிவாக தரலாம் என கருதுகிறேன். இவற்றுள் உண்மையாக பாதிப்பை உண்டுபண்ணக் கூடியது குதர்க்கம் ஒன்றே. குதர்க்கம் செய்பவர்கள் தாம் சார்ந்திருக்கும் கருத்தை மட்டுமே முன்நிறுத்தி அதற்கப்பால் வேறு எந்தக் கருத்தும் செல்லாது அல்லது பொருந்தாது என்ற நிலையிலிருந்து மட்டுமே வாதிடுபவர்கள். இதைத்தான் முன்னோர்கள் ‘தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என வாதிடுபவர்கள்’ என குறிப்பிடுவார்கள். மற்றயவை அனைத்துமே கண்டிப்பாக ஒரு எழுத்தாளருக்கு, வெளியீட்டாளருக்கு அல்லது ஒரு படைப்பாளிக்கு மிக மிக அவசியமானது. அவை அவர்களின் முன்னேற்றத்திற்கு அல்லது சாதகமான மாற்றங்களுக்கு வழிசமைக்குமே அன்றி ஒரு போதும் தடையாக அமையாது. இந்த விடயங்களினூடாக அடையாளம் காணப்பட்டு முன்வைக்கப்படும் கருத்துக்களை முழுமையாக படைப்பாளி ஏற்றுக்கொண்டேயாகவேண்டும் என்பது எனது கருத்தல்ல. இவற்றை படைப்பாளர் அலசி ஆராய்ந்து சுய ஆய்வுக்குட்படுத்தி இறுதித் தீர்மானத்திற்கு தானே வரலாம். ஆகவே நாம் இந்த விடயங்களின் பொருட்டு எங்கள் ஆர்வத்தை முன்நிறுத்தி செயற்படுவது முன்னேற்றத்திற்கே வழிவகுக்கும்.
இன்னும் பல விடயங்களை இந்த ஆக்கத்துடன் தொடர்பாக குறிப்பிடலாம் என உள்மனம் உறுத்துகிறது. ஆயினும் கட்டுரையின் நீட்சி கருதி அதனை மட்டுப்படுத்தும்பொருட்டு இத்தோடு முடிவுறத்துகிறேன். இந்த ஆக்கம் இலக்கிய உலகத்திற்குள் பிரவேசிக்கும் புதிய வரவாளர்களுக்கும் புதிய இலக்கியம் சார் படைப்புகளை பிரசவிக்கும் ஆளுமைகளுக்கம் பயனுடையதாக இருக்குமென எதிர்பார்க்கிறேன். இது படைப்பாளர்களுக்கு மட்டுமல்ல மாணவர்களுக்கும் பயன் தரும் என்பது எனது நம்பிக்கை. இந்த ஆக்கம் பற்றிய கருத்துக்களையும் என்னை விட அனுபவம் வாய்ந்த மூத்த இலக்கிய ஆளுமைகள் பதிவுசெய்வது எதிகால சந்ததிக்க பயனுள்ளதாக அமையும் என்ற விடயத்தை முன்வைத்து முடிவுறுத்துகிறேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.