முன்னுரை:
சொல்லப் புகுவதனைத் தக்க ஒப்புமை கொண்டு உணர்த்துவது உவமை. பேச்சிலும், எழுத்திலும் உவமையைக் கையாளாதவர் எவருமிலர் எனலாம். புலி போலப் பாய்ந்தான், மான்போல ஓடினாள் என எளிய மக்களும் உவமை கூறக் காண்கிறோம். அணிகட்கெல்லாம் தாயாக விளங்குவது உவமை அணியே… சொல்லப் புகும் கருத்து உவமையால் வலிவு பெறுகிறது.
பெருங்கதை உவமை:
பெருங்கதையில் நானூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் உவமைகள் ஆளப்பட்டுள்ளன. பெருங்கதையாகிய தங்க வளையலில் உவமைகளாயாகிய மணிக்கற்களைப் பொருத்தமுறப் பதித்து ஆசிரியர் ஒளி கூட்டியுள்ளார்.
ஒரே அடியில் உவமைகளை எடுத்தாண்டு உள்ளத்தைக் கொள்ளை கொள்வதில் கொங்குவேள் சிறப்பிடம் பெறுகிறார்.
பட்டும் படாப்பேச்சு:
ஒருவரிடம் பலர் வந்து ஒன்றை வேண்டும் போது அவர் கூறும் மறுமொழி, கேட்பவர் தங்கட்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கைக்கு இடம் தந்தும் அதே வேளை அவர் எவ்விதப் பிடியும் கொடுக்காமலும் பேசுவதற்குக் குரங்கு தன் குட்டியைத் தாங்குவது உவமையாகக் கூறப்பட்டுள்ளது. குட்டி தன்னை நன்றாகப் பற்றிக் கொள்ளத் தாய்க்குரங்கு இடந்தருகிறதேயன்றித் தான் குட்டியைப் பற்றிப் பிடிப்பதில்லை. இவ்வுவமையை ஆசிரியர் கொங்குவேள் பிரச்சோதனன் மூலம் பொருந்திக் காட்டுகிறார்.
மரனிவர் குரங்கின் மகக்கோட் போல
நிலைமையொடு தெரிதரு நீதியனாகி
ஆவது துணிதுணை ஆசையின் நிறீஇ
பிரச்சோதனன் பேசினான்.
தந்தை உள்ளம்:
வாசவதத்தை குறிப்பதற்காகச் சாலில் நீரைப் பெய்து சூரிய வெப்பத்தில் சுட வைத்தனர். மேலுள்ள நீர், வெப்பத்தால் இளஞ்சூடாய் இருந்தது. சாலின் ஆழத்தே இருந்த நீரோ தண்ணெனக் குளிர்ந்து இருந்தது. மேற்பரப்பில் வெது வெதுப்பாயும் ஆழத்தில் குளிர்ச்சியாயுமுள்ள தன்மைக்கு அரியதோர் உவமை காட்டப்படுகிறது. தந்தை மகனிடம் கொள்ளும் வெகுளி வெளித் தோற்றத்தில் கடுமையாகத் தென்படும், ஆனால், உள்ளத்தின் ஆழத்திலோ அன்பு நிறைந்திருக்கும். வெளிப்படக் கடிந்து கொண்டாலும் உள் மனத்தில் மகன்பால் ஈரம் படிந்திருக்கும். அதுபோலச் சாலின் மேற்பரப்பில் நீர் வெதுவெதுப்பாயும் உள்ளே குளிர்ச்சியாயும் இருந்ததாம்.
தன்ன மகவயிற் றவாஅத் தாதைக்கு
முன்ன ரெழுந்த முழுக்கதம் போலப்
புறவயிற் பொம்மென வெம்பி அகவயின்
தண்மை அடக்கிய நுண்ணிறைத் தெண்ணீர்,
சாலில் இருந்தது.
திருத்தப்படாத மகன்
வாசவதத்தை திருமணம் நடந்ததும் உதயணன்,”காலையும், பகலும் கையறு மாலையும் ஊர் துஞ்சு யாமமும் விடியலும்” என்ற கால வேறுபாடின்றி அவள் இன்பதிலேயே ஆழ்ந்து கிடந்தான். தலைநகரை ஆரணி அரசன் கைப்பற்றி ஆண்டதையும் கருதவில்லை. தம்பியரையும் நினைக்கவில்லை. அரச கருமங்களையும் ஆற்றவில்லை. மனம் போனவாறு வாசவதத்தையிடமே வசித்து வந்தான். இச்செயல் தந்தையாலே தண்டித்துத் திருத்தப்படாதவனும் தானே சிந்திக்கும் உணர்ச்சியல்லாதவனுமான பேதை மகன் தான் செய்ய வேண்டியதை ஆய்ந்து தெளிந்து செய்யாது மனம் போன போக்கில் செல்வது போலாயிற்று என்கிறார் கொங்குவேள்.
உதயணன்,
தந்தையொ டொறுக்கப் படாஅன் சிந்தை
அகனுணர் வில்லா மகனே போலத்
தன்மனம் பிறந்த ஒழுக்கினன் ஆகி,
வாசவதத்தையுடனேயே உறைந்து வந்தான்.
பெற்றதை இழந்தவன்:
வாசவதத்தையைக் கனவில் கண்ட உதயணன் தழுவச் செல்கையில் அவள் உருவம் மறைந்தது. துயிலும் கலைந்தது. உயிரனையாளைக் கனவில் கண்டு மகிழ்ந்த மகிழ்ச்சி இருந்த இடம் தெரியாமல் மறைந்தது. பெறுதற்கரிய மணியைப் பெற்ற வறியவன் ஒருவன் அதனை மிக ஆழமான மடுவில் நழுவ விட்டு வருந்தி நின்ற நிலையை அடைந்தான் உதயணன்,
பெருமணி பெற்ற நல்குர வாளன்
அருமணி குண்டு கயத்திட் டாங்கு
எல்லையற்ற வருத்தம் கொண்டான்.
புலவர் தொழில்:
நிகழ்ச்சி நடைபெற்றது. அம் மயிர்வினைக் கல்யாணத்திற்குப் பந்தல் அமைக்கப்பட்டது. பந்தல் வினைச் சிற்பியர் நல்ல இடத்தைத் தேர்ந்தெடுத்து, கல், ஓடு, புல், உமி, மயிர்,என்பு முதலியனவும் இவை போல் வனவுமாகிய பொருந்தாப் பொருள்களை மண்ணினின்றும் அரித்தெடுத்து அகற்றி, மேடும் பள்ளமுமின்றி விரவி, ஒப்பனைப் பொருள்களால் ஒப்பனை செய்து பந்தலிட்டனர். இச்செயல் நல்லிசை; புலவர் செய்யுள் செய்யுங்கால் பொருளற்ற பதர்ச் சொல், நுண் பொருளில்லாத எண் பொருள் முதலியவற்றை ஆராய்ந்து நீக்கி, பொருள் நிறைந்த சொல்லால் அதனைப் புனைவது போன்றிருந்தது.
பதர்ச்சொல் பருப்பொருள் பன்னுபு நீக்கிப்
பொருட்சொல் நிரப்பும் புலவர் போலக்
கல்லும் ஒடும் புல்லும் கரியும்
உமியும் மயிரும் என்பும் உட்பட
அமைவில் தன்மைய அரித்துடன் களைந்து,
பந்தலிட்டனர்.
சுட்டுக்கோல்:
கௌசாம்பி நகரில் அரண்மனைக்கு மட்கலம் வனையும் குயவன் ஒருவன் இருந்தான். உதயணன் சிறைப்பட்டு உச்சயினிக்குக் கொண்டு செல்லப்பட்ட போது அவன் நண்பர்கள் மாற்றுருவுடன் அவ்வூரை அடைந்தனர். அந்த மறவர் கூட்டத்துள் குயவனும் ஒருவன். துன்பம் நேர்ந்த காலத்தில் தன் இன்பத்தைத் துறந்து தீயினுள் புகும் சுட்டுக்கோல் போன்று நட்பின் பொருட்டுத் தன் நாட்டினைத் துறந்து வேந்தனைச் சிறைவீடு கொள்ளும் அவாவினால் உச்சயினி அடைந்தான்.
இட்டிடர்ப் பொழுதின் இன்பம் நீக்கிக்
கட்டழற் புகூஉம் சுட்டுறு கோல்போல்
நட்டை யிட்டு நாட்டகம் துறந்துதம்
பெருமகற் கொள்ளும் வேட்கையிற் போந்த
குயமகன்.
என்று அவன் பாராட்டப்படுகின்றான்.
வித்தோப்பும் உழவன்:
விளைவை எதிர் நோக்கும் உழவன் விளைச்சலுக்கான வித்தினை அறிந்து, தேடி, அரணிட்டுப் பாதுகாக்கின்றான். அதுபோல வீடு பேராகிய விளைவினை வேண்டுவோர் அதற்கு வித்தாகிய தவத்தினை அரணிட்டுக் காக்க வேண்டும்.
வளைவித் தாரும் வாயில் நாடி
விளைவித் தோம்புதும் வேண்டிய தாமென
ஒடுக்கி வைக்கும் உழவன் போல
அடுத்த ஊழிதோ றமைவர நில்லா
யாக்கை நல்லுயிர்க்கு அரணம் இதுவென
மோக்கம் உன்னிய முயற்சியே னாகி,
தவம் செய்து இருப்பதாக விரிசிகையின் தந்தை உதயணனிடம் கூறினார். விளைவுக்கு மூலம் வித்து. வீடு பேற்றுக்கு மூலம் தவம்.
நீதி புகட்டல்:
காட்டிலிருந்து புதிதாகக் கைப்பற்றி வந்த யானையைப் பயிற்றுவிக்கும் பாகர் போன்று நல்ல கருத்துக்களை இடைவிடாது எடுத்துக்கூறி அறிவு புகட்ட வேண்டும்.
புதிதிற் கொண்ட பூக்கலின் வேழம்
பணிசெயப் பிணிக்கும் பாகர் போல
நீதி யாள ராதி யாகிய திறத்திற்.
காட்ட வேண்டுவது கற்றறிந்தார் கடன். புதிதாகக் கொண்ட யானை எளிதில் கட்டுப்படாதாயினும் பாகர் எல்லா முயற்சியும் எடுத்து அதனைப் பிணிப்பர். அதுபோல் நீதிகளைக் கேட்போர் எளிதில் கொள்ளாராயினும் பன்முறையும் எடுத்துச் சொல்லி அவற்றை ஏற்கச் செய்ய முயல வேண்டும்.
காதலர் நெஞ்சம்:
உதயணன், வாசவதத்தை இருவரும் கண்ட அளவில் காதல் கொண்டனர். ஒருவரை ஒருவர் நினைந்து உருகினர். ஒரு கணமும் ஓய்வின்றி ஒரே எண்ணத்தில் சுழன்று கொண்டிருந்து உள்ளம் திகிரியின் சுழற்சியைப் போல ஆயிற்று.
இருவர் நெஞ்சமும் இடைவிடல் இன்றித்
திரிதரல் ஓயாது திகிரியிற் சுழல்.
இரா முழுவதும் காதல் நினைவுகளால் அலைப்புண்டு வருந்தினர். கடலிலே கிடந்து தத்தளித்துத் துன்புற்றோர்க்குக் கரை தோன்றியது போலக் காலை தோன்றியது.
முழங்குகடற் பட்டோர் உழந்துபின் கண்ட
கரையெனக காலை
மலர்ந்தது. இரவு பட்ட தொல்லைக்கு விடியல் ஒரு மருந்து.
மலர்ந்தும் மலராத கண்:
பொய்கையில் கழுநீர், ஆம்பல், குவளை முதலியவற்றின் அரும்புகள் இதழ்களைத் திறந்தும் திறவாத நிலையிலே தேன் துளித்து மணம் கமழ்ந்தன. மலர்ந்தும் மலராத அப்பூக்கள். குலமகளிர் கணவனொடு புணர்ந்த துயில் பொழுதில் இன்ப மெய்ப்பாடொழுகத் திறந்தும் திறவாதிருந்த கண்ணையொத்தன என்று கூறும் உவமை மிகவும் நயம் வாய்ந்ததாக இருக்கிறது.
புணர்ச்சி மகளிர் போகத்துக் கழுமித்
துயிற்கண் திறந்த தோற்றம் போல
மலர்கள் இருந்தன என்று இன்பக் கிறக்கத்திலுள்ள மகளிர் கண்களுக்கு மலர்ந்தும் மலராத மலர் உவமையாக்கப்பட்டுள்ளது.
சான்றோர் வறுமை:
தம் செல்வ வளம் வற்றி, நாள் தோறும் வறுமை என்னும் பெரு நெருப்புச் சுட்டாலும் மானத்தை இழத்தற்கு அஞ்சிச் சான்றோர் தம் நிலையிலிருந்தும் தளரமாட்டார். காமம் மீதூர்ந்த இடத்தும் அதனைப் பிறர்க்குக் கூறாத கன்னியரைப் போல இன்மை மிகுந்த இடத்தும் அத்துன்பத்தை மனத்திற்குள்ளேயே அடக்கிக் கொள்வரேயன்றிப் பிறரிடம் கூற எண்ணார்.
கன்னி காமம் போல உள்ள
இன்மை உரையா இடுக்கக ணாளர்
எனச் சான்றாண்மையாளர் பாராட்டப்படுகின்றனர்.
வள்ளுவர் வழியில்:
திருக்குறள் உவமைகள் கொங்குவேளைப் பெரிதும் கவர்ந்துள்ளன. கதையின் பல இடங்களில் அவர் குறள் உவமைகளை எடுத்தாண்டு சிறப்பித்துள்ளார்.
பண்டி துறை ஏற்றும் பகடு:
இடுக்கண் நேரும் போது இதை ஏற்று உறுதியோடு முன்னேறினால் நேர்ந்த இடுக்கண் தானே அகன்று போகும். ஆழ்சகதியில், உளையில் இறங்கிய வண்டி, அதை இழுத்து வரும் மாடு மண்டியிட்டு முயன்று இழுக்கக் கரையேறுகிறது. அம்மாடனைய ஊக்கம் உடையவனைச் சேரும் துன்பம் துன்பப்பட வேண்டி இருக்குமே தவிர, அத்துன்பத்தால் அவன் துன்புற்றான். இதனை,
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து
என்ற திருக்குறள் இனிது விளக்குகிறது.
வள்ளுவரின் இந்த உவமையைக் கொங்குவேள் தக்க இடத்தில் கையாள்கிறார். உதயணன் வாசவதத்தையோடு ஏறிச் சென்ற பத்திராபதி யானை வழியில் இறந்தது. அப்போது உதயணனள் வயந்தகனிடம், “நண்பனே இத்துயரத்தாலே மனம் இடிந்து போய்விடக்கூடாது. ஆற்றுத்துறை மணலில் அழுந்திய வண்டியைப் பெரிதும் முயன்று ஏற்றுகின்ற எருதினைப் போன்று இப்பொழுது எய்தியுள்ள துயரினை நாம் இருவரும் முயன்று அகற்ற வேண்டும் எனக் கூறினான்.
குண்டுதறை இடுமணற் கோடுற அழுந்திய
பண்டிதுறை ஏற்றும் பகட்டினை போல
என்ற உவமை திருக்குறளிலிருந்து பெற்றதாகும்.
கொங்குவேளிர் சிறப்பான உவமைகளைப் பொருத்தமான முறையில எடுத்துக் கூறியுள்ளார். பெரும்பான்மை அவர் தாம் கண்ட வாழ்க்கை நிகழ்ச்சிகளையே உவமையாக்கியுள்ளார். மன உணர்வுகளை அவருடைய உவமைகள் மிகத் தெளிவான முறையில் வெளிப்படுத்துகின்றன. முந்தையோர் மொழிந்தவற்றை எடுத்தாண்டும் இருக்கிறார். தாமே பல புதிய உவமைப் பொருள்களைப் படைத்துக் காட்டியுமிருக்கிறார். அவருடைய உவமை தரும் இன்பம் உவமையிலா இன்பமாம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.