சிறுகதை: தொட்டால் சுடுவது..! - குரு அரவிந்தன் -
ரொரன்ரோ ஸ்கைடோம் வாசலில் ஒரே பரபரப்பாக இருந்தது. வானம் பார்த்த அந்தப் பிரமாண்டமான மண்டபத்தில் ஏ.ஆர். ரகுமானின் இன்னிசைவிருந்து இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பமாக இருந்தது. விளக்கை நோக்கி விட்டில் பூச்சிகள் வருவது போல இன்னிசையால் ஈர்க்கப்பட்டவர்கள் பல திசைகளிலும் இருந்து அங்கே வந்து குவிந்து கொண்டிருந்தனர்.
சிந்துஜா அந்த மண்டபத்தை இரண்டு தடவைகள் சுற்றி வந்து விட்டாள். ஸ்கைடோம் வாசலில் அவளது அறைத்தோழி ரமணியைச் சந்திப்பதாக இருந்தது. ஸ்கைடோமுக்கு எல்லாப் பக்கமும் வாசல் இருப்பதால் எந்த வாசலில் சந்திப்பது என்ற சந்தேகத்தில் தான் அவள் சுற்றி சுற்றி வந்தாள். கோயிலுக்குப் போனால்கூட ஒரு தடவை பிரகாரத்தைச் சுற்றிவர கஸ்டப்படுபவள் இன்று இந்த மண்டபத்தை இரண்டாவது தடவை சுற்றி வரும்போது இசையால் எவ்வளவு தூரம் கவரப் பட்டிருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்த்தாள். ரமணியிடம் தான் இவளது டிக்கட்டும் இருந்தது. இவள் வேலை முடிந்து இங்கே வருவதாகவும் ரமணி இங்கே காத்திருப்பதாகவும் ஏற்பாடாகி இருந்தது. என்ன காரணத்தாலோ ரமணியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்னும் சொற்ப நேரத்தில் நிகழ்ச்சியை ஆரம்பிக்கப் போவதாக வேறு அறிவித்து விட்டார்கள். வேறு டிக்கட்டை வாங்கிக் கொண்டு உள்ளே போகலாம் என்றால் டிக்கட் எல்லாம் விற்பனையாகி விட்டதற்கான ‘சோல்ட் அவுட்’ என்ற அறிவிப்பு வாசலில் பளீச்பளீச் சென்று மின்னிக் கொண்டிருந்தது.