துயர் பகிர்வோம்: கவி வித்தகர் சபா அருள் சுப்ரமணியம். - குரு அரவிந்தன் -
எம்மைவிட்டுப் பிரிந்த நண்பர் சபா அருள் சுப்ரமணியத்தின் பிரிவு (09-10-2021) தமிழ் இலக்கிய உலகத்திற்குப் பேரிழப்பாகும். குறிபாகப் புலம் பெயர்ந்த கனடிய மண்ணில் தமிழ் மொழியைத் தக்கவைப்பதற்குக் கடந்த 30 வருடங்களாக முன்னின்று உழைத்தவர்களில் இவரும் ஒருவர் என்றால் மிகையாகாது. இவரையும் இவரது மனைவி திருமதி. யோகசக்தி அருள் சுப்ரமணியத்தையும் முதன் முதலாக அதிபர் பொ. கனகசபாபதி அவர்களின் வீட்டில்தான் சந்தித்தேன். மாதகல் மண்ணில் பிறந்த இவர் கனடாவுக்குப் புலம் பெயர்ந்திருந்தார். மாதகல் சென். ஜோசப் மகாவித்தியாலய அதிபராகவும் இவர் பணியாற்றியிருந்தார். இவருக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள். சிறுவர் இலக்கியத்தில் எங்கள் இருவருக்கும் அதிக ஈடுபாடு இருந்ததால், தொடர்ந்தும் அடிக்கடி சந்தித்துக் கலந்துரையாட முடிந்தது. சமீபகாலமாகச் சுகவீனமடைந்திருந்தாலும், சமூகத் தொண்டை அவர் கைவிடாது தொடர்ந்து கொண்டே இருந்தார்.
கனடா அறிவகத்திற்கு அவர் பொறுப்பாக இருந்தபோது, நான் ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கத்தின் தலைவராக இருந்தேன். அவர்களின் தமிழ் மொழிப் பரீட்சையும், நாங்கள் நடத்தும் தமிழ் மொழிப் பரீட்சையும் அனேகமாக ஒரே வாரஇறுதியில்தான் நடந்து கொண்டிருந்தன. இதனால் பங்கு பெற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் குழப்பநிலையை அடைந்தனர். ஏற்கனவே அவர் எனக்கு அறிமுகமானவராக இருந்ததால், பேசித்தீர்கக் கூடிய விடயம் என்பதால் நான் அவருடன் இது பற்றி உரையாடினேன். எங்கள் பக்கத்து நடைமுறைச் சிக்கல்களை அவருக்கு எடுத்துச் சொன்னேன். அவர் பெருந்தன்மையோடு, சற்றுக் கடினம்தான் ஆனாலும் முயற்சி செய்கிறேன் என்று சொல்லி, தங்களின் பரீட்சைத் திகதியை வேறு ஒரு தினத்திற்கு மாற்றிக் கொண்டார். அவர் பொறுப்பாக இருந்த நிறுவனத்தைவிட, தமிழ் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து அவர் காட்டிய அக்கறை என்னை மிகவும் கவர்ந்திருந்தது. இருவருமே சிறுவர் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருந்ததால், அத்துறை சம்பந்தமாக அடிக்கடி கலந்துரையாட முடிந்தது. தனது சிறுவர் இலக்கிய நூல் வெளியீடுகளுக்கு உரையாற்றப் பல தடவைகள் என்னை அழைத்துக் கௌரவப்படுத்தி இருக்கின்றார். தாய் மொழியாம் தமிழ் மொழி மீது அதீத பற்றுக் கொண்ட இவர் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்.
‘தமிழ் பூங்கா’ என்ற ஒரு மாணவர் அமைப்பை ஏற்படுத்தி அதன் பொறுப்பாளராக இருந்து செயற்பட்டார். கடைசியாக ‘பட்டறிவு பகிர்வு’ என்ற கவிதை மின்நூலை சென்ற ஆகஸ்ட் 28 ஆம் திகதி ‘சூம்’ மூலம் வெளியிட்டிருந்தார். தனது பிறந்த ஊரின் பெருமை பேசும், ‘மாதகல் மான்மியம்’ என்ற நூலை வெளியிட்டிருந்தார். தமிழ் சிறுவர்களின் மொழி வளர்ச்சிகாகப் பல நூல்களை வெளியிட்டிருக்கின்றார். இவற்றில் பயிற்சி நூல்கள், கட்டுரைகள், இலக்கண வினாவிடை, சிறுவர் கதைகள், சிறுவர் பாடல்கள், ஒலிவட்டுக்கள் போன்றவை முக்கியமாக அடங்கும். எதிர்கால சந்ததியினருக்கு இவை எப்போதும் வழிகாட்டியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.