- கங்கா சத்திரம் -
பழம் பெருமைகளைச் சொல்லி மார்தட்டிக் கொள்வதில் யாழ்ப்பாணத்தவராகிய நாம் வல்லுனர்கள். லெமூரியாக் கண்டத்தில் தொடங்கி, சிந்துவெளியூடாக உலகின் நாகரிகம் வளர்ந்த இடங்களை அலசி எல்லாமே எங்களுடையதுதான் என்று பெருமை பேசிக்கொள்ளும் பலர் நம் மத்தியில் உள்ளனர். பேச்சுப் பல்லக்கு தம்பி கால்நடை என்ற பழமொழிதான் ஞாபகத்துக்கு வருகின்றது. உள்ளூரில் எங்களுடைய வரலாறு, நம் முன்னோருடைய வாழ்வியல், பண்பாடு போன்றவற்றை வெளிப்படுத்தும் சின்னங்களைப் பார்க்கவேண்டும் என்று நமது பிள்ளைகள் கேட்டால், அவர்களுக்குக் காட்டுவதற்கு யாழ்ப்பாணத்தில் நாம் எவற்றை விட்டுவைக்கப் போகிறோம் என்று முதலில் சிந்திக்க வேண்டும்.
சிறப்பம்சங்கள் பொருந்திய நமது மரபுரிமைச் சின்னங்கள் ஏராளமானவை அழிந்துவிட்டன. அவற்றை நாமே அழியவிட்டோம் அல்லது அழித்துவிட்டோம். இவ்வாறான மரபுரிமைச் சின்னங்கள் அழிவதையும் அவற்றை அழிப்பதையும் தடுத்து அவற்றை முறையாகப் பேணிக் காப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய பொறுப்பும் ஓரளவு அதிகாரமும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு உண்டு. ஆனால், உள்ளூராட்சி மன்றங்களே இவ்வாறான அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.
அண்மையில் வேறு தேவைக்காகப் பத்திரிகை ஒன்றின் 1980 ஆம் ஆண்டு வெளியான பழைய பிரதிகளைப் பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு செய்தி கண்ணில் பட்டது. அக்காலத்து யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினர்கள் சிலர் மணிக்கூட்டுக் கோபுரம் ஒரு அடிமைச் சின்னம் என்றும் அதை அகற்றவேண்டும் என விரும்புவதாகவும், வேறு சிலர், அதை இடித்துவிட்டுத் திராவிடச் சிற்பக்கலை அம்சம் பொருந்திய புதிய மணிக்கூட்டுக் கோபுரம் அமைக்கவேண்டும் என விரும்புவதாகவும் அச்செய்தி கூறியது. இது உண்மையாக இருந்தால், அது அதிர்ச்சி தரக்கூடிய ஒரு விடயம். 100 வருடப் பழமை கொண்டதாக இருந்த ஒரு மரபுரிமைச் சின்னத்தை உடைக்கவேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்படுகிறது? நம்மிற் சிலருக்கு உள்ளுணர்வாகவே இந்த எண்ணம் ஏற்படுகிறதோ எனச் சிந்திக்கவேண்டியுள்ளது. எப்படியோ மணிக்கூட்டுக் கோபுரம் தப்பிவிட்டது. எல்லா மரபுரிமைக் கட்டடங்களுக்கும் இந்த அதிர்ஷ்டம் வாய்ப்பதில்லை. காங்கேசந்துறை வீதி, ஆஸ்பத்திரி வீதிச் சந்தியை முன்னர் சத்திரத்துச் சந்தி என அழைப்பர். இன்றும் சிலர் இந்தப் பெயரைப் பயன்படுத்துவது உண்டு. இந்தப் பெயருக்குக் காரணமான சத்திரம் இச்சந்தியின் வடகிழக்கு மூலையில் இருந்தது. கங்கா சத்திரம் என அழைக்கப்பட்ட இச்சத்திரத்துக்குக் கிழக்கே பெரியகடைச் சந்தைக் கட்டடங்கள் இருந்தன. யாழ்ப்பாண நகரத்தில் முதல் தேனீர்க்கடையைத் தொடங்கி நடத்திய வல்லிபுரம் என்பவர் 1905 ஆம் ஆண்டில் இச்சத்திரத்தைக் கட்டிப் பொதுப் பயன்பாட்டுக்கு வழங்கினார். நகரத்துக்கும், பெரியகடைச் சந்தைக்கும் வரும் பொதுமக்களும், வியாபாரிகளும் பயன்படுத்துவதற்கு ஏற்ற வசதிகளுடன் இந்தச் சத்திரம் அமைக்கப்பட்டிருந்தது.
- கங்கா சத்திரத்தின் ஒரு தோற்றம் – 1970 களின் பிற்பகுதி (நன்றி அ. சந்திரகாசன்) -
வெளித் தோற்றத்தில் இது காலனித்துவ அம்சங்களோடு கூடிய கட்டடமாக இருந்தாலும், இது உள்ளூர்ப் பண்பாட்டுத் தேவைகளை நிறைவு செய்யும் ஒரு கட்டடமாகவே இருந்தது. விரைவான போக்குவரத்துச் சாதனங்கள் இல்லாத அக்காலத்தில், தொலை தூரங்களிலிருந்து உற்பத்திப் பொருட்களைக் கொண்டுவருபவர்கள், தமது வண்டில் மாடுகளுக்குத் தண்ணீர், உணவு என்பன அளித்து அவற்றை ஓய்வெடுக்கச் செய்வதற்கான வசதிகளும், வணிகர்களும், பிறரும் முகம் கைகால் கழுவிக் களைப்பாறும் வசதிகளும், மடத்தினுள் வழிபாட்டுக்கான ஒரு கோயிலும் இருந்தன. உட் சுவர்களில் பல சமயம் சார்ந்த ஓவியங்களும் வரையப்பட்டிருந்தன. இங்கே அன்னதானமும் வழங்கப்பட்டதாகத் தெரிகின்றது.
பொதுப் போக்குவரத்துச் சேவைகள் அறிமுகமாகி, போக்குவரத்துக்கள் விரைவாகவும், இலகுவாகவும் ஆனபோது, சத்திரத்தின் பயன்பாடு குறைந்தது. ஆனாலும், இது நமது முன்னோர்களின் வாழ்வியலின் முக்கியமான சில அம்சங்களின் வெளிப்பாடாக அமைந்த ஒரு அழகிய கட்டடம். நிச்சயமாக இது ஒரு மரபுரிமைச் சொத்து என்பதில் ஐயமில்லை. 1979 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மாநகரசபை இதை இடித்து அழிப்பதற்கான முயற்சிகளை எடுத்தது. இதை அறிந்த மரபுரிமை ஆர்வலரும், தொல்பொருள் சேகரிப்பவருமான கலைஞானி செல்வரத்தினம் இதைத் தடுப்பதற்கு முயற்சி செய்தார். பத்திரிகையொன்றின் மக்கள் கருத்துப் பகுதியில் இது குறித்து எழுதி மக்களின் அபிப்பிராயத்தைத் திரட்ட முயன்றார். அதேவேளை, தொல்லியல் பகுதிக்கும் அறிவித்துச் சத்திரத்தின் அழிவைத் தடுக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனால் தொல்லியல் பகுதி தலையிட்டு, இதுபற்றி ஆராய்ந்து முடிவெடுப்பதற்காகக் கட்டடம் இடிக்கப்படுவதைத் தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டது.
- கங்கா சத்திரத்திலிருந்த ஒரு ஓவியம் – 1970 களின் பிற்பகுதி (நன்றி க. சிவபாலன்) -
அதேவேளை இடிக்கும் நோக்கத்தை மூடி மறைத்து மக்களைத் திசைதிருப்பும் முயற்சிகளும், சத்திரத்தை உடைக்கும் கைங்கரியத்துக்கு ஆதரவு தெரிவித்துக் கைதட்டும் வேலைகளும் இடம்பெற்றன. ஒரு மாநகரசபை உறுப்பினர், யாழ் மாநகராட்சி மன்றம் சத்திரத்தைப் பொறுப்பேற்றது எதற்காக என்று புரிந்துகொள்ளக் கூடாதவர்கள் தாம் எடுக்கும் முயற்சிகளுக்கு இடையூறாக இருப்பதாகக் குறிப்பிட்டார். அத்துடன், சத்திரத்தை நிர்வகித்தவர்கள், தவறான வழியில் அதன் பெருமையையும் புராதன தன்மையையும் அசிங்கப்படுத்தினார்கள் என்று குற்றஞ்சாட்டிய அவர், சத்திரத்தை உருவாக்கியவர்களின் விருப்பத்தைச் செயற்படுத்த முன்வந்தோமே தவிர அதனைப் பாழ்படுத்தவல்ல என்று உண்மைக்குப் புறம்பான கருத்தொன்றையும் வெளியிட்டார்.
யாழ் மாநகர சபைக்கு வரிகட்டும் ஒரு கௌரவப் பிரஜை எனத் தன்னை அடையாளம் காட்டிக்கொண்ட இன்னொருவர், கரிகாலன் கல்லணை, மாமல்லபுரச் சிற்பங்கள், சிகிரிய, மிகிந்தலை, பொலநறுவை, நாவலர் மண்டபம், சங்கிலியன் தோப்பு ஆகியவை பற்றிக் கதையுங்கள். சத்திரத்தைக் கலைப் பொக்கிஷங்களோடு ஒப்பிடாதீர்கள் என்று எழுதியிருந்தார். அது மட்டுமன்றி சத்திரத்தை ஒரே இரவில் இடித்துத் தரை மட்டமாக்கியிருந்தால் யாழ்ப்பாண மக்கள் சந்தோஷப்பட்டிருப்பர் என்று வன்மத்துடன் கூடிய ஒரு கருத்தையும் வெளியிட்டிருந்தார். நம்முடைய பகுதியில் என்ன இருக்கின்றதோ அவைபற்றித்தான் நாம் பேசமுடியும், பிறநாடுகளிலும், வேறு பகுதிகளிலும் உள்ளவற்றோடு எம்முடைய மரபுரிமைகளை ஒப்பிடவேண்டிய தேவை என்ன? யாழ்ப்பாணத்தவரின் வரலாற்றைப் பொறுத்தவரை கல்லணையைவிட, மாமல்லபுரத்தைவிட, சீகிரியாவைவிடக் கங்கா சத்திரம் முக்கியமானதுதான். உண்மையில், சங்கிலித் தோப்பு, மந்திரிமனை என்பவற்றுடன் ஒப்பிடும்போது கங்கா சத்திரம் அவற்றுக்குக் குறையாத பண்பாட்டுப் பெறுமதி கொண்டது என்பது எனது கருத்து. ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் வாழ்ந்த நமது முன்னோரின் வாழ்வியலின் வெளிப்பாடாக அமைந்தது. அவ்வகையான ஒரு கட்டடத்தை யாழ்ப்பாணத்திலோ, இலங்கை முழுவதிலுமோ வேறெங்கும் காணமுடியாது.
கங்கா சத்திரம் நீண்டகால வரலாறு கொண்டதல்ல என்றும், அதன் வயது 70 ஆண்டுகளே என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. அப்படியானால், யாழ்ப்பாணப் பண்பாட்டுக்குரியனவும், அதைவிடப் பழமையானவையுமான பல கட்டடங்கள் நம்மிடம் உள்ளனவா? அதை உடைக்காமல் விட்டிருந்தால் இன்று அது 115 ஆண்டுகள் பழமையான ஒரு கட்டடமாக இருந்திருக்கும். பிற நாட்டவரும், பிற பகுதிகளைச் சேர்ந்தோரும், நமது இளைய தலைமுறையினரும் விரும்பிப் பார்க்கக்கூடிய ஒரு பண்பாட்டுச் சுற்றுலாத் தலமாக அதை உருவாக்கியிருக்கலாம். நூறு வருடப் பழமையான ஓவியங்களை அங்கே நாம் கண்டு களித்திருக்கலாம்.
தொல்லியல் துறை சத்திரத்தின் எதிர்காலம் குறித்து முடிவு எடுப்பதற்குப் பல மாதங்கள் எடுத்ததாகத் தெரிகிறது. இடிப்பதற்கான வேலைகள் இடை நிறுத்தப்பட்டது செப்டெம்பர் மாதத்தில். இதற்கு முன்னரே கட்டடத்தின் ஓடுகள் அகற்றப்பட்டிருந்தன. பத்திரிகைச் செய்திகளின்படி அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை எந்த முடிவையும் தொல்லியல் துறை எடுத்திருக்கவில்லை. எனவே அந்த ஆண்டு மாரி காலத்தில் கட்டடத்தின் உட்பகுதிகளும், அங்கிருந்த ஓவியங்களும் மேலும் சேதம் அடைந்திருக்கும் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. கட்டடத்தை இடிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். ஆனால், கலைஞானி, யாழ்ப்பாணத் தொல்லியல் துறைப் பொறுப்பாளருக்கும், பண்பாட்டலுவல்கள் அமைச்சருக்கும், சம்பந்தப்பட்ட பிற அதிகாரிகளுக்கும், இவற்றைக் காப்பாற்றும்படி கோரிக்கை மேல் கோரிக்கையாக விடுத்துக்கொண்டிருந்தார். எவ்வித பலனும் கிடைத்ததாகத் தெரியவில்லை.
இறுதியாகத் தொல்லியல் துறை என்ன முடிவு எடுத்தது என்பது தெரியவில்லை. ஆனால், சத்திரத்தை மாநகரசபை இடித்துவிட்டது என்ற உண்மை எல்லோருக்கும் தெரியும். நவீன சந்தை கட்டப்போகிறோம் அதனால் அதை உடைக்கவேண்டும் என்றனர். 1979 ஆம் ஆண்டின் இறுதியில் இது பற்றிக் கருத்துக்கூறிய அப்போதைய நகர முதல்வர் நகரத்தை அழகுபடுத்தப் போவதாகவும் அதற்காகவே கட்டடத்தை அகற்ற முயற்சித்ததாகவும் கூறியிருந்தார். அழகுபடுத்துவதற்கென ஒரு அழகிய கட்டடத்தை இடித்தவர்கள் எவ்விதத்திலும் அப்பகுதியை அழகுபடுத்தவில்லை. இப்பொழுது அந்த இடம் நகருக்கு ஒரு திருஷ்டி பரிகாரம் என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம்.
நவீன சந்தையின் மூன்றாம் கட்டத் தேவைகளுக்காவது பயன்படக்கூடிய வகையில் அந்த இடத்தை மாநகரசபை பாதுகாத்து வைத்திருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. இப்போது அவ்விடம் வேறு பயன்பாட்டுக்கு உட்பட்டுள்ளது. இனி மாநகர சபை நினைத்தாலும் அவ்விடத்தில் எதுவும் செய்ய முடியாது.
மேலேயுள்ள விடயங்களை யார்மீதும் குற்றம் சுமத்துவதற்காக நான் கூறவில்லை, நமது வரலாறுகள் திரிக்கப்படுகின்றன, பண்பாடுகள் அழிக்கப்படுகின்றன என்று மற்றவர்களை நோக்கி விரலை நீட்டும் நாம், நமது வரலாறுகளையும், பண்பாடுகளையும், மரபுரிமைகளையும் நாமே அழிக்கவில்லையா என்பதையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும். நீண்ட காலமாகவே, இவ்வாறான செயற்பாடுகளில் நாம் ஈடுபடுகின்றோம் அல்லது அவ்வாறான நடவடிக்கைகளுக்குத் துணைபோகின்றோம். இன்னும் அவை தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இனிமேலாவது இவ்வாறு இடம்பெறாமல் பார்த்துக்கொள்வது அவசியம். ஒரு தனித்துவமான இனமாக நமது இருப்பைப் பேணிக்கொள்வதற்கு நமது மரபுரிமைகளை அடையாளம் கண்டு பேணிப் பாதுகாப்பது அவசியம். இது நமது தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கும், பொருளாதார மேம்பாட்டுக்கும்கூட உதவியாக அமையும். இதற்கு நாமெல்லோரும் இவ்விடயத்தில் விழிப்புணர்வு கொண்டவர்களாக மாறவேண்டும்.