யாழ்ப்பாணத்து நியமங்களின்படி பழையன என்று சொல்லத்தக்க சில சுவரோவியங்கள் நாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரை காணப்பட்டன. இவை பெரும்பாலும் பிரித்தானியர் காலத்தின் பிற்பகுதிக்கு உரியனவே. இன்று இவற்றுட் பல அவை வரையப்பட்டிருந்த கட்டிடங்களுடன் அழிந்துவிட்டன. யாழ்நகரப் பகுதியில் இரண்டு இடங்களில் இருந்த ஓவியங்கள் குறிப்பிடத்தக்கவை. ஒன்று யாழ்ப்பாணம் வங்கசாலை வீதியில் (Bankshall) இருந்த கிட்டங்கிக் கட்டிடத் தொகுதி. மற்றது காங்கேசந்துறை வீதி – ஆஸ்பத்திரி வீதிச் சந்தியின் வடகிழக்கு மூலையில் அமைந்திருந்த கங்கா சத்திரம். இச்சத்திரத்தாலேயே இச்சந்தி முன்னர் “சத்திரத்துச் சந்தி” என அழைக்கப்பட்டது. இவ்விரு இடங்களிலும் ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட சுவரோவியங்கள் காணப்பட்டன. கிட்டங்கிக் கட்டிடங்கள் போர்க் காலத்தில் அழிந்தன. சத்திரமோ அதற்கு முன்பே 1980களின் முற்பகுதியில் இடித்து அழிக்கப்பட்டது. இக்கட்டிடங்கள் இல்லாமல் போவதற்கு முன்பு அங்கிருந்த ஓவியங்களைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது நான் எடுத்த படங்கள் போர்க் காலத்தில் தொலைந்துவிட்டன. இங்குள்ள படங்கள் க. சிவபாலன், அ. சந்திரகாசன் ஆகியோர் மொரட்டுவைப் பல்கலைக்கழக, B.Sc. (BE) இறுதியாண்டுப் பரீட்சைக்குச் சமர்ப்பித்த, பதிப்பிக்கப்படாத கட்டுரைகளில் இருந்து பெறப்பட்டவை. படங்களின் படப்பிரதிகளே (Photocopy) கிடைத்ததால், படங்கள் தெளிவாக இல்லை.
கிட்டங்கிக் கட்டிடங்களில் பல வகையான ஓவியங்கள் இருந்தன. சில பிந்திய காலத்துக்கு உரியவை. இவை பெரும்பாலும் இலக்குமி, சரஸ்வதி போன்ற கடவுள் உருவங்கள். வாயில் கதவுகளுக்கு மேல் வரையப்பட்டிருந்தன. இக்கிட்டங்கிகள் பிற்காலத்தில் செட்டி வணிகர்களின் உடைமைகளாக இருந்தபோது இவ்வோவியங்கள் வரையப்பட்டிருக்கலாம். இங்கிருந்த இரண்டு ஓவியங்கள் வேறுபட்டவை. இவை ஐரோப்பிய அதிகாரிகள் இருவர் குதிரையில் செல்ல, அவர்களின் நாய்களும், சேவகர்களும் பின்தொடர்ந்து செல்வதைக் காட்டுகின்றன. இதுபோன்ற காட்சிகள் ஓவியமாக வண்ணார்பண்ணைச் சிவன் கோயில் முன் சுவரிலும், சிற்பமாக உள்ளே விமானத்திலும் இருந்தது குறித்து முன்னைய இடுகையொன்றில் குறிப்பிட்டிருந்தேன். கிட்டங்கிகளில் இருந்த மேற்குறிப்பிட்ட ஓவியங்களைப் பற்றி “யாழ்ப்பாணத்துப் பிற்காலச் சுவரோவியங்கள்” என்ற அவரது நூலில் ஆ. தம்பித்துரை விபரமாக எழுதியுள்ளார். இந்த ஓவியங்களைத் தாவடியைச் சேர்ந்த ஓவியர் துரைச்சாமி என்பவர் வரைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கங்கா சத்திரம் 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் கட்டப்பட்டது. எனவே இங்குள்ள ஓவியங்கள் அதற்குப் பிற்பட்டது என்பது தெளிவு. ஆனால், எவ்வளவு பிற்பட்டது என்பது தெரியவில்லை. இவை சைவ சமயப் புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை வரைந்த ஓவியர் பற்றிய தகவலும் இல்லை. தம்பித்துரை இந்த ஓவியங்களைப் பற்றித் தனது நூலில் குறிப்பிடவில்லை. இந்த ஓவியங்களைப் பற்றிய விபரமான தகவல்களோடுகூடிய நூல்களோ, கட்டுரைகளோ எனக்குக் கிடைக்கவில்லை.
யாழ்ப்பாணத்தில் மிகப் பழைய சுவரோவியங்கள் என்று எதுவும் இல்லாத நிலையில், இருந்த 100 ஆண்டுகள் பழமையான ஓவியங்கள்கூட முறையான ஆவணப்படுத்தல்கள் இன்றி அழிந்து போனது வருந்தத் தக்கது. இனியாவது எஞ்சியிருக்கக்கூடிய நல்ல ஓவியங்களைக் கண்டறிந்து, அவற்றைப் பாதுகாக்கவும், முறையாக ஆவணப்படுத்தவும் நாம் முயற்சி செய்ய வேண்டும். யாழ்ப்பாணப் பல்கலைக் கழக நுண்கலைத் துறையினர் இவ்வாறான பல முன்னெடுப்புக்களைச் செய்துள்ளனர் என எண்ணுகிறேன்.
வண்ணார்பண்ணைச் சிவன் கோயில்
1619 ஆம் ஆண்டுக்குப் பின்னர் போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தில் இருந்த இந்துக் கோயில்கள் அனைத்தையும் அழித்துவிட்டது வரலாறு. தொடர்ந்து வந்த ஏறத்தாழ 160 ஆண்டுகள் ஆங்காங்கே வீட்டு வளவுகளுக்குள்ளும், வேறு மறைவிடங்களிலும் மிகச் சிறிய அளவில் கோயில்கள் இருந்தன. ஒல்லாந்தர் காலத்தின் கடைசிச் சில பத்தாண்டுகளில் மதங்கள் தொடர்பான கடும்போக்கில் தளர்வு ஏற்பட்ட பின்னர் யாழ்ப்பாண நகரப் பகுதியில் உருவான முதல் இந்துக் கோயில்களுள் வண்ணார்பண்ணைச் சிவன் கோவில் எனப்படும் வைத்தீஸ்வரன் கோயில் முக்கியமானது.
ஒல்லாந்தர் காலத்தில் பல்வேறு அரசாங்கக் குத்தகைகள், பிற வணிக முயற்சிகள் ஊடாகப் பெரும் பணம் சேர்த்தவரும், ஒல்லாந்த உயர் அதிகாரிகளுக்கு மிக நெருக்கமானவருமான வைத்திலிங்கம் செட்டியார் இக்கோயிலைக் கட்டினார். 1787ஆம் ஆண்டு தொடங்கிய வேலைகள், 1790 ஆம் ஆண்டில் நிறைவெய்தின. அக்காலத்தில் கட்டப்பட்ட கோயில்களுள் இதுவே பெரியது. யாழ்ப்பாணத்துப் பிற கோயில்களைப் போல் தனித்த கோயிலாக மட்டுமன்றி, வண்ணார்பண்ணை வடமேற்கில், ஐயனார் கோயில், காளி கோயில் என்பவற்றையும்; கொட்டடியில் முத்துமாரியம்மன் கோயிலையும்; பெரியகடைப் பகுதியில் வேம்படிப் பிள்ளையார் கோயிலையும் பரிவாரக் கோயில்களாகக் கொண்டு அமைந்தது இக்கோயில். இதனால், இச்சிவன் கோயிலின் செல்வாக்கு வட்டம் வண்ணார்பண்ணையின் பெரும்பாலான பகுதிகளில் பரந்து இருந்தது. இப்பரிவாரக் கோயில்களும் வைத்திலிங்கம் செட்டியார் காலத்திலேயே கட்டப்பட்டன.
அத்துடன், வண்ணார்பண்ணைப் பகுதியின் வளர்ச்சியின் பல்வேறு அம்சங்களுடன், குறிப்பாக, பல்வேறு சமூகக் குழுக்களின் குடியேற்றம், கலை வளர்ச்சி, இந்து நிறுவனங்களின் உருவாக்கம் போன்றவற்றோடு, இக்கோயிலுக்குத் தொடர்பு இருந்துள்ளது. 19 ஆம் நூற்றாண்டில் சைவ சமயத்தை வளர்த்தெடுப்பதில் ஆறுமுக நாவலரின் முயற்சிகளுக்கு நிலைக்களனாக அமைந்ததும் இக்கோயிலே. இக்கோயில் கட்டப்பட்ட காலத்தில் வழமையான இந்துக் கோயிலில் காணப்படுகின்ற புராணக் கதைகளைத் தழுவிய சிற்பங்களும், ஓவியங்களும் இங்கும் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இவற்றுடன், அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்த ஒல்லாந்தக் கட்டளைத் தளபதியோ அல்லது வேறொரு உயர் அதிகாரியோ குதிரையிற் செல்லும் காட்சி ஓவியமாகக் கோயில் முன்புறச் சுவரில் வரையப்பட்டிருந்ததை 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் எடுக்கப்பட்ட ஒளிப்படமொன்றில் காணமுடிகின்றது. (படத்தில் காண்க) நீண்ட காலத்துக்கு முன்னரே இந்த ஓவியத்தின்மீது புதிய நிறப்பூச்சுப் பூசி அழித்துவிட்டதாகவே தெரிகின்றது. எனது வாழ்க்கைக் காலத்தில் இவ்வோவியத்தைக் கண்டதாக எனக்கு ஞாபகம் இல்லை.
ஆனால், இக்கோயிலின் கருவறைக்கு மேலுள்ள விமானத்திலும் ஒல்லாந்த அதிகாரி ஒருவர் குதிரையில் செல்லும் காட்சி சிலை வடிவில் இருந்ததை 1960களில் நான் சிறுவனாக இருந்தபோது பார்த்துள்ளேன். வெள்ளைக்காரர்களின் சிற்பத்தைக் கோயிலில் ஏன் செதுக்கியுள்ளார்கள் என அக்காலத்தில் நான் எண்ணியது உண்டு. கோயிலைக் கட்டுவதற்கு அனுமதி அளித்ததற்காகவோ, அல்லது கோயிலைக் கட்டிய வைத்திலிங்கம் செட்டியாருக்கு ஒல்லாந்த அதிகாரிகள் மீதிருந்த அபிமானத்தினாலோ கோயிலில் இவை இடம்பெற்றிருக்கலாம். இவை அண்மைக் காலப் போர்ச் சூழலில் அழிந்திருக்கக்கூடும். இந்தச் சிற்பங்களைப் பார்த்த வேறெவராவது இவற்றைக் குறித்து எழுதியுள்ளார்களா என்பது தெரியவில்லை.
யாழ்ப்பாண நகரத்தில் வண்ணார்பண்ணைப் பகுதியின் வளர்ச்சியில் இக்கோயிலின் பங்கு குறித்து ஆழமான ஆய்வுகள் தேவை.
நன்றி - யாழ்ப்பாண நகரம் - வயது 400 (முகநூற் குழுமம்)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.