படித்தோம் சொல்கின்றோம்: 'கூற்று' பெண்களின் குரல் 25 வருடங்கள்! மனம்விட்டுப்பேசும் 'வெளிகள்' பெண்கள் மத்தியில் உருவாகவேண்டும்! - முருகபூபதி -
- பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு -
கடந்த ஜூலை மாதம் நடுப்பகுதியில் நான் இலங்கையில் நின்றபோது, கொழும்பில் பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு அவர்களைச் சந்தித்தேன்.
இவருடனான சகோதர வாஞ்சையான உறவு எனக்கு 1970 களிலேயே தொடங்கிவிட்டது. பின்னாளில் எனது இலக்கிய நட்பு வட்டத்தில் இணைந்த பலரதும் பல்கலைக்கழக விரிவுரையாளராகவும், பேராசிரியையாகவும் திகழ்ந்த சித்திரலேகா பற்றி, கடந்த 2022 ஆம் ஆண்டு அனைத்துலக பெண்கள் தினத்தின்போது நான் வெளியிட்ட யாதுமாகி ( 28 பெண் ஆளுமைகள் பற்றியது ) நூலிலும் எழுதியிருக்கின்றேன்.
பல்கலைக்கழக பேராசிரியையாக மாத்திரம் இயங்காமல், இலக்கியவாதியாகவும், பெண்கள் தொடர்பான விழிப்புணர் நடவடிக்கைகளில் தன்னார்வத் தொண்டராகவும் விளங்கியிருக்கும் சித்திரலேகா, சில நூல்கள், மலர்களின் தொகுப்பாசிரியருமாவார்.
பல வருடங்களுக்கு முன்னர் இவர் தொகுத்து வெளியிட்ட சொல்லாத சேதிகள் கவிதை நூல் இன்றளவும் பேசப்படுகிறது.
இம்முறை இவரை நான் சந்தித்தபோது கூற்று என்ற ஆவணத்தொகுப்பு நூலை எனக்கு படிக்கத்தந்தார். 261 பக்கங்களில் வெளியாகியிருக்கும் இத்தொகுப்பினைப் பற்றிய அறிமுகத்தை எழுதுவதற்கு காலதாமதமாகிவிட்டது. நான் தொடர்ச்சியான பயணங்களில் இருந்தமையால், இந்தத் தாமதம் நிகழ்ந்தது.