எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் நினைவு தினம் பெப்ருவரி 14!
அ.ந.கந்தசாமியின் 'எதிர்காலச் சித்தன் பாடல்!'
எழுத்தாளர் அ.ந.கந்தசாமி (அறிஞர் அ.ந.கந்தசாமி என்ற அழைக்கப்பட்டவர்) அவர்களின் நினைவு தினம் பெப்ருவரி 14. அவர் நினைவாக இந்நினைவுக் குறிப்பு வெளியாகினறது. கதை, கவிதை, நாடகம், விமர்சனம், மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் சகல துறைகளிலும் காத்திரமாகக் கால் பதித்தவர் அ.ந.க. பத்திரிகையாசிரியராக (தேசாபிமானி, ஆரம்பகால சுதந்திரன், இதழாசிரியராகவும் (இலங்கைத் தகவற் திணைக்கள வெளியீடான ஶ்ரீலங்கா சஞ்சிகை) அவரது பங்களிப்பு பரந்து பட்டது. இதுவரை அவரது வெளிவந்த படைப்புகள்: வெற்றியின் இரகசியங்கள் , உளவியல் நூல் (பாரி நிலையம், 1966), மதமாற்றம் (நாடகம், வெளியீடு: தேசிய கலையிலக்கியப் பேரவை), மனக்கண் (மின்னூல்,அமேசன் - கிண்டில் பதிப்பு, வெளியீடு: பதிவுகள்.காம்), 'நான் ஏன் எழுதுகிறேன்' (மின்னூல், அமேசன்-கிண்டில் பதிப்பு, 14 கட்டுரைகளின் தொகுப்பு), எதிர்காலச்சித்தன் பாடல் (கவிதைத்தொகுப்பு, மின்னூல்: அமேசன் - கிண்டில் பதிப்பு, வெளியீடு : பதிவுகள்.காம்). மார்க்சியக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்ட அ.ந.க சமூக, அரசியற் செயற்பாட்டாளராகவும் விளங்கியவர். இலங்கைத் தமிழ் முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளிலொருவராகக் கருதப்படுபவர்.
தமிழ்க் கவிதைப்பரப்பில் குறிப்பாக இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதைப்பரப்பில் எழுதப்பட்ட முக்கியமான கவிதைகளிலொன்றாக நான் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) 'எதிர்காலச் சித்தன் பாடல்' என்னும் கவிதையினைக் கூறுவேன். ஆனால் இலங்கைப் பேராசிரியர்கள் அல்லது இந்திய விமர்சக வித்தகர்களின் பார்வையில் இக்கவிதை ஏன் படவில்லை என்பது புரியாத புதிர் என்பேன். பேராசிரியர் நுஃமானின் பார்வையில் கூட அ.ந.க.வின் சிறந்த கவிதைகள் எதுவும் பட்டதாக இதுவரை அவர் எழுதிய விமர்சனக் கட்டுரைகள் எவற்றிலும் நான் கண்டதில்லை (அ.ந.க.வின் ஒரு மொழிபெயர்ப்புக் கவிதையை மட்டும் . 'தேன்மொழி' கவிதையிதழின் ஐப்பசி 1955 பதிப்பில் வெளியான 'கடைசி நம்பிக்கை' என்னும் கவிதையை மட்டும் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்). விமர்சகர்கள் எவரது பார்வையிலும் படாத அ.ந.க.வின் சிறந்த கவிதைகளைப்பற்றி எழுத்தாளர்கள் பலர் குறிப்பிட்டிருக்கின்றார்கள். அந்தனி ஜீவா, அகஸ்தியர் , முருகையன் என்று பலர் குறிப்பிட்டிருக்கின்றார்கள். கவிஞர் முருகையன் இக்கவிதையின் சிறப்பைச் சிலாகித்துக் கூறியிருந்ததை வாசித்திருக்கின்றேன். (இன்று இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதிவரும் சி.ரமேஷ் கூட அ.ந.க.வின் படைப்புகளைத் தவற விட்டிருக்கின்றார். அண்மையில் ஜீவநதி பதிப்பகம் வெளியிட்ட 'ஈழத்து நாவல் சிறப்பித'ழில் ஈழத்து நாவல்கள் பற்றிய சி.ரமேஷின் நீண்ட நெடுங்கட்டுரையில் தினகரனில் வெளியாகி வாசகர்களின் பாராட்டுதல்களைப்பெற்ற 'மனக்கண்' நாவல் பற்றியோ, அவர் மொழிபெயர்ப்பில் சுதந்திரன் பத்திரிகையில் வெளியான எமிலி சோலாவின் 'நானா' நாவல் பற்றியோ குறிப்புகள் எவற்றையும் காண முடியவில்லை. இத்தனைக்கும் அ.ந.க.வின் படைப்புகள் இணையத்தில் நிறையவே கிடைக்கின்றன. ஜெயமோகன் கூடத் தனது தமிழ் நாவல் இலக்கியம் பற்றிய நூலில் அ.ந.க.வின் 'மனக்கண்' பற்றிக் குறிப்பிடத்தவறவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.)