சிலப்பதிகாரம் காட்டிநிற்கும் புரட்சிச் சிந்தனைகள் - மகாதேவஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
சிலம்பின் சிறப்பு
சிலப்பதிகாரத்தை ஏன் படிக்க வேண்டும்? சிலப்பதிகாரத்தில் அப்படி என்னதான் பொதிந்து கிடக்கிறது ! சிலப்பதிகாரத்தைவிட வேறு காப்பியங்கள் தமிழில் சிறந்து விளங்கவில்லையா ? என்றெல்லாம் எம க்குமுன்னே பல ஐயங்கள் வந்து நிற்கும் . சிலப்பதிகாரத்தைப் பற்றிய சிறப்பும் அதன் சிந்தனைகருத் துக்களும் சரியான முறையில் எம்மிடம் புகுந்துவிடுமானால் இப்படியான ஐயம் எழுவதற்கே இடமில் லாமல் போய்விடும் என்பது எனது மனக்கருத்தாகும்.தமிழில் வந்த முதல்காப்பியமாக சிலப்பதிகாரமே விளங்குகிறது.
இயற்றமிழ் , இசைத்தமிழ் , நாடகத்தமிழ் , மூன்றையும் கொண்ட முதல் தமிழ் காப்பியம் என்னும் பெருமையையும் கொண்டு நிற்கிறது. சேர, சோழ, பாண்டிய, நாடுகளான முத்தமிழ் நாட்டினையும் முழுமைபெறச் செய்த காப்பியமாகவும் அமைந்திருக்கிறது.இலக்கிய உன்னதத்தை வெளிப்படுத்தும் காப்பியமாகவும் இருக்கிறது.
தமிழர்களின் பன்முகப்பட்ட சமூகப் பண்பாட்டினைக் காட்டி நிற்கும் காப்பியமாகவும் திகழ்கிறது. வாழ்வியல் நெறிகள், வழிபாட்டு முறைகள், கலைகள், அரசுமுறைகள்,நீதி நிர்வாகம், பெண்களின் சமு தாய நிலை, என்று பலவற்றைக் காட்டி நிற்கும் காப்பியமாக சிலப்பதிகாரம் திகழ்கிறது எனலாம். இக் காப்பியத்தை புரட்சிக் காப்பியம், குடிமக்கள் காப்பியம், சமுதாயக் காப்பியம், வரலாற்றுக் காப்பியம், தேசியக் காப்பியம், நாடகம் காப்பியம் என்றெல்லாம் பன்முகப் பார்வையில் நின்றும் பாராட்டப்படும் நிலையும் காணப்படுகிறது. இதனால் காலத்தை வென்று நிற்கும் காப்பியமாக சிலப்பதிகாரம் இருக்கி றது என்பது மறுத்துவிட முடியாத உண்மையெனலாம்.
இதனால் அன்றோ தேசியக்கவி பாரதி " நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் " என்று விதந்தோதி நின்றார் போலும் ! பாரதியின் வாக்கு எத்தனை வலிமையும் பெறுமதியுமானது என்பதிலிருந்தே சிலப்பின் சிறப்புப் புலனாகி நிற்கிறதல்லவா ! சிலப்பதிகாரம் தமிழ் தேசியக் காப்பி யம். சிலப்பதிகாரம் தமிழின் சொத்தாக நிற்கும் காப்பியம். சிலம்பைப் படித்தால் சிந்தனை வளரும் ! சிலம்பை நினைத்தால் பெருமிதம் நிலைக்கும் !