தொண்டைமான் இளந்திரையனின் குடிமரபினர் காஞ்சிமாநகரை முதன்மை இடமாகக் கொண்டு ஆண்டு வந்தனர் என்பதை இலக்கியங்கள் காட்டுகின்றன. பண்டைய இலக்கியங்களில் காஞ்சிமாநகரைக் கச்சி, கச்சப்பேடு, கச்சிப்பேடு, கச்சிமூதூர், கச்சிமுற்றம், என்று அழைத்துள்ளனர். இம்மாநகரை ஆண்ட மன்னர்களையும் வேந்தர்களையும் அரசர்களையும் தலைவர்களையும் வள்ளல்களையும் இலக்கியங்களில் கச்சியோன், கச்சியர், கச்சிவேந்தன், கச்சிக்காவலன், கச்சியர்கள் என்று அழைக்கப்பட்டுள்ளனர். கச்சி என்ற சொல்லானது காஞ்சிமாநகரைக் குறிக்கும் சொல்லாகும். இது இன்றையக் காஞ்சிபுரப் பகுதியாகும் என்பதைத் தமிழ்மொழி அகராதி, மதுரைத் தமிழ்ப்பேரகராதி, அபிதான சிந்தாமணி, கழகத்தமிழ் அகராதி, சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி, வரலாற்றுமுறைத் தமிழ் இலக்கியப் பேரகராதி, தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி போன்ற அகராதிகள் குறிப்பிடுகின்றன. பெரும்பாணாற்றுப்படையில் கச்சிமூதூரின் சிறப்புகள் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. கச்சிமூதூருக்கு உள்ள நிலப்பரப்பு, மக்களின் பண்பாட்டுக்கூறுகள், வழக்காற்றுக்கூறுகள், பாணனின் வறுமை, பரிசில் பெற்றோரின் செல்வநிலை, தொண்டைமான் இளந்திரையனின் மாண்பு, ஆட்சியின் பெருமை, உப்புவணிகர் செல்லும்வழி, கழுதைச் சாத்தொடு செல்லும் காட்டுவழி, எழினர் குடிசை, புல்லரிசி எடுத்தல், எயிற்றியர் அளிக்கும் உணவு, பாலை நிலக் கானவர்களின் வேட்டை, எயினர் அரண்களில் பெறும் பொருள்கள், குறிஞ்சி நிலமக்களின் வாழ்க்கை, கோவலர் குடியிருப்பு, கோவலரின் குழலிசை, முல்லை நிலத்தில் கிடைக்கும் பொருள், மருதநிலம் சார்ந்த முல்லைநிலம், மருதநிலக் காட்சிகள், நெல்வயல்கள், நெல்லரிந்து கடாவிடுதல், மருதநிலத்து ஊர்களில் பெறும்உணவுகள், கருப்பம்சாறு, வலைஞர் குடியிருப்பு, வலைஞர் குடியில் பெறும்உணவு, தாமரைமலரை நீக்கி ஏனைய மலர்களைச்சூடுதல் அந்தணர் குடியிருப்பும் அங்குப் பெறும்உணவும் , நீர்ப்பெயற்று என்னும் ஊர், அத்துறைமுகப் பட்டினத்தின் சிறப்பு, பட்டினத்து மக்களின் விருந்தோம்பல் பண்பு, ஒதுக்குப்புற நாடுகளின்வளம், திருவெஃகாவின் சிறப்பும் திருமால்வழிபாடும், கச்சிமூதூரின் சிறப்பு, இளந்திரையனின் போர்வெற்றி, அரசனது முற்றச்சிறப்பு, திரையன் மந்திரச்சுற்றமொடு அரசுவீற்றிருக்கும் காட்சி பாணன் அரசனைப் போற்றியவகை, பாணர்க்கு விருப்புடன் உணவளித்தல், பரிசுவழங்குதல், இளந்திரையனது மலையின் பெருமை முதலான செய்திகள் அதில் கூறப்பட்டுள்ளது. சிறுபாணாற்றுப்படை, மலைபடுகாடாம், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களில் கச்சிமாநகரின் குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.
கச்சி என்ற சொல் மணிமேகலையில், பூங்கொடி கச்சிமாநகர் புக்கதும் (மணி.பதி.90), பூங்கொடி கச்சிமாநகர் ஆதலின் (மணி.28:152), கச்சிமுற் றத்து நின்உயிர் கடைகொள (மணி.21:174), பொன்எயில் காஞ்சி நகர்கவின் அழிய (மணி.21:148), பொன்எயில் காஞ்சி நாடுகவின் அழிந்து (மணி.28:156), செறிதொடி காஞ்சி மாநகர் சேர்குவை (மணி.21:154), என்றும் பெருபாணாற்றுப்படையில் கச்சியோனே கைவண் தோன்றல் (பெரும்பாண்.420) எனவும் காஞ்சி அல்லது கச்சிமாநகர் பற்றிய குறிப்புகள் காணக்கிடக்கின்றன. சங்ககாலத்திற்கு முன்பிருந்தே கச்சி என்ற காஞ்சிமாநகர் களப்பிரர்காலத்திலும் பல்லவர் காலத்திலும் பிற்காலச் சோழர்காலத்திலும் விசயநகரப் பேரரசுக்காலத்திலும் ஆங்கிலேயர்காலத்திலும் சிறந்து விளங்கியுள்ளது என்பது வரலற்று உண்மையாகும். கச்சிப்பேடு என்றிருந்த காஞ்சிபுரம் திருஞானசம்பந்தரின் திருக்கடைக்காப்பிலும் திருநாவுக்கரசரின் தேவாரத்திலும் கச்சி என்றும் காஞ்சி என்றும் பாடப்பட்டுள்ளது. கி.பி.7-ஆம் நூற்றாண்டுத் தமிழ்நூல்களிலும் இது பற்றிய குறிப்புகள் காணக்கிடக்கிறது.