ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?முன்னுரை
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையுடையது சங்கச் செவ்வியல் காலம். பாட்டும் தொகையுமாகிய சங்க நூல்களுள் நற்றிணை முதலிடம் பெற்றுள்ளது. நற்றிணை நானூறு என வழங்கப்பெறும் நற்றிணைப் பாடல்களில் சங்கச் சான்றோர்களின் மனிதநேய உணர்வுகள் மேலோங்கி நிற்கின்றது. மனிதன் சகமனிதனிடத்து வெளிப்படுத்தும் மனிதநேயம் மனிதன் மனிதன் அல்லாத பிறஉயிர்களிடத்து காட்டும் மனிதநேயம் என்று மனித மனத்தில் பொதிந்து கிடக்கும் அன்பு, அருள், இரக்கம், அரவணைப்பின் மூலமாக வெளிப்படுகின்ற மனிதநேயம் நற்றிணை முழுவதும் பரந்து காணப்படுகிறது. நற்றிணை வழி வெளிப்பட்டுள்ள சங்கச் சான்றோர்களின் மனிதநேய உணர்வுகளை வெளிக்காண்பிப்பதாக இக்கட்டுரை அமைகிறது. 

அன்புடைமை
உலகம் நிலைபெற்று நீடுவாழ்வதற்கு அன்பு தலையாய ஒன்று. பிற உயிர்களிடத்து அன்பு செலுத்தி அரவைணைத்து வாழுகின்ற வாழ்க்கையில் அனைத்து உயிர்களும் இன்பம் எய்துகிறது. நற்றிணையில் தலைவி தன் சுற்றத்தாரிடத்தும் ஆயத்தாரிடத்தும் கொள்கின்ற அன்பின் மிகுதி அவளுக்கிருக்கின்ற மனிதநேயத்தை வெளிப்படுத்துகிறது. உடன்போக்கிற்காகத் துணிந்த தலைவி பிறர் அறிந்திடாதவாறு தம் கால்களிடத்து அணிந்திருந்த சிலம்பினைக் கழற்றி விளையாட்டுப் பொருட்கள் நிறைந்த கூடையில் வைப்பதற்குச் செல்கிறாள். அப்பொழுது அவளையும் அறியாமல் அவள் கண்கள் நீரைச் சொரிந்தன. விடியும்பொழுது தான் (உடன்போகிவிட்டால்) இல்லையென்பதை வரிகள் மேலிட்ட பந்தும் சிலம்பும் உணர்த்தும். அதனைக் காணும்போதெல்லாம் தன் சுற்றத்தினரும் ஆயத்தினரும் துன்பமுற்று வருந்துவர் என்று உடன்போவதைத் தவிர்த்தாள். இச்செய்தியை,

அரியமை சிலம்பு கழீஇப் பன்மாண் 
வரிப்புணை பந்தொடு வைஇய செல்வோள்
இவைகாண் டோறும் நோவர் மாதோ 
அளியரோ அளியர்என் ஆயத் தோர் (நற். பா. 12)

என்னும் பாடல் வரிகள் குறிப்பிடுகின்றன.

உள்ளத்தின் உணர்வுப் பெருக்காகத் திகழும் அன்பைக் கட்டுப்படுத்துவதற்கும் மறைப்பதற்கும் இயலாது என்பதை வள்ளுவரும்

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புண்கண்ணீர் புசல் தரும் (குறள். 71)


என்னும் குறட்பாவின் வழி அன்பின் மிகுதியைக் குறிப்பிடுகின்றார். தலைவி உடன்போகாமைக்குக் காரணம் அவள் சுற்றத்தினர் மீதும் ஆயத்தினர் மீதும் கொண்டிருந்த அன்பு போற்றுகின்ற மனிதநேயப் பண்பாகும்.

 

விருந்தோம்பல்
தமிழர் பண்பாட்டில் தலையாயது விருந்தோம்பும் பண்பு. எந்த நாட்டவராயினும் எந்த ஊரினராயினும் தன் வாயில் தேடி வந்தவரை இனிதே வரவேற்று மகிழுகின்ற நல்லுள்ளம் கொண்டவர் தமிழ்மக்கள். தம்முடைய சுற்றமாயினும் பிற அயலாராயினும் முகம் கூம்பாமல் விருந்தோம்பும் பண்புடையவர். விருந்தோம்பும் பண்பிற்கு அடிப்படையாக அமைவது மனிதநேயப் பண்பாகும். விருந்தோம்பலின் சிறப்பு கருதியே வள்ளுவர் அதற்கென்று தனியொரு அதிகாரம் அமைத்திருக்கின்றார்.

தமிழரின் வாழ்வியல் களஞ்சியமாகப் போற்றப்படுகின்ற தொல்காப்பியம் இல்லற மகளிர்க்குரிய நல்லறங்களாக 

விருந்துபுறந் தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்  (தொல். நூ. 150)


விருந்தோம்பும் பண்பினைக் குறிப்பிடுகின்றது. தமிழ்ப்பண்பாட்டுக் காப்பியமாகத் திகழும் சிலப்பதிகாரமும் 

அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோன் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை  (சிலப் . 71-73)

விருந்தோம்பலின் மாண்வு பற்றி குறிப்பிடுகின்றது. 

சிலப்பதிகாரத்தில் கண்ணகி விருந்தோம்பும் பேற்றினை இழந்தமைக்காக வாடுவதைப் போன்று

தண்டுரை ஊரன் தண்டாப் பரத்தைமை 
புலவாய் அன்றி தோழி புலக்குவென் 
நளிமனை நல்விருந் தயரும்
கைதூ வின்மையான் எய்தா மாறே  (நற். பா. 280)

நற்றிணையில் தலைவி விருந்தோம்பும் பேற்றினை இழந்தைமைக்காக ஊடுகின்றாள். 

தலைவன் பரத்தமை ஒழுக்கம் புரிந்ததற்காகத் தோழி தலைவனுக்காகத் தலைவியிடம் வாயில் வேண்டுகிறாள். தலைவி, தோழியின் கருத்துக்கு முரண்பட்டு தலைவனுடன் ஊடப்போவதாகக் குறிப்பிடுகின்றாள். தலைவன் தன்னைத் தனிமையில் தவிக்கவிட்டு பரத்தைமாட்டு சென்றமைக்காக அவள் வருந்தவில்லை. மாறாகத் தன்னை விட்டு தலைவன் பிரிந்ததனால் இல்லற மகளிர்க்குரிய விருந்தோம்பும் பேற்றினையும், சுற்றம் காக்கின்ற முறைமையையும் தன்னால் மேற்கொள்ள இயலாததை எண்ணி ஊடுவதாகக் குறிப்பிடுகின்றாள். இங்கு தலைவியின் விருந்தோம்பும் பண்பு அவளுக்குரிய மனிதநேயத்தை வெளிப்படுத்துகிறது. 

நற்றிணையின் மற்றொரு பாடல் தலைவி விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று மகிழ்ந்து உபசரிப்பதாகக் குறிப்பிடுகின்றது. அதனை,

சில்காழ் செறித்த மெல்விரல் சேப்ப
வாளை  யீர்ந்தடி வல்லிதின் வகைஇப்
புகையுண் டமர்த்த கண்ணள் தகைபெறப் 
பிறைநுதற் பொறித்த சிறுநுண் பல்வியர்
அந்துகிற் றலையின் துடையினள் நப்புலத்
தட்டி யோளே …………………………………………………………………………………
வருகதில் லம்ம விருந்தே சிவப்பான்று 
சிறுமுள் ளெயிறு தோன்ற 
முறுவள் கொண்ட முகங்காண் கம்மே.  (நற். பா. 120)


என்னும் பாடல் வரிகள் குறிப்பிடுகின்றன. தலைவி அடுக்களையில் சமைப்பதானல் எழுந்த புகை அவளுடைய கண்களில் நீரை வார்த்தது. பிறையாகிய நெற்றியில் வியர்வை அவரும்பியது. வெம்மையால் முகம் சிவந்தது. அதனைப் பொருட்படுத்தாத தலைவி, முந்தானையின் தலைப்பில் தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு விருந்தினரை வரவேற்று மகி்ழ்கிறாள்.

தலைவி அரிவையாக இருந்தபோதும் பணிச்சுமையைப் பெரிதாக எண்ணாமல் வருவோரைப் புன்னகைத்து வரவேற்பது அவளின் மனிதநேயத்தை வெளிப்படுத்துகிறது. விருந்து உபசரிப்பின்போது முகமலர்ந்து வரவேற்க வேண்டும் என்பதை வள்ளுவரும்,

மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து (குறள். 90)


என்று சிறப்பாக எடுத்துரைக்கின்றார். உலகத்தில் உள்ள உயிர்களுக்கெல்லாம் இன்றியமையாதது உணவு. அந்த உணவினைப் பிறருக்கு அளிப்பதில் உள்ள உயர்வினை,

மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே (மணி. 95 – 96)

என்று மணிமேகலை குறிப்பிடுகின்றது. 

பிற உயிர்களைப் போற்றுதல்
பேரன்பும் கழிவிரக்கமும் அருளுடைமையும் மண்ணில் தோன்றிய அனைத்து உயிர்களிடத்தும் மனிதநேயம் கொள்ள முனையும். மனிதன் பிறமனிதனிடத்தில் அன்பு பாராட்டுவது இயல்பு. மனிதன் அல்லாத பிறஉயிர்களிடத்தில் கருணை கொள்வது அவரவர் விருப்பு. அஃறிணையை உயர்திணையாக்கி தனக்கு ஒப்பாக வைத்துக் கருதுவது மனிதநேயத்தின் சிறப்பு. நற்றிணைப் பாடல் ஒன்றில் அஃறிணையாகிய புன்னை மரத்தைச் சகோதரியாகப் பாவிக்கின்ற மனிதநேய உயர்வு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இச்செய்தியை, 

விளையா டாயமொடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ்முளை அகைய 
நெய்பெய் தீம்பால் பெய்தனம் வளர்ப்ப 
நும்மிற் சிறந்தது நுவ்வை யாகுமென் 
றன்னை கூறினாள் புன்னையது  சிறப்பே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே. (நற். பா. 172)


என்னும் பாடல் வரிகள் குறிப்பிடுகின்றன. தலைவி சிறுமியாக இருக்கும்பொழுது தோழியர்களோடு புன்னைக் காயை வைத்து விளையாடி அதனை மறந்து மண்ணில் அழுத்தி விடுகின்றாள். நாளடைவில் அப்புன்னைக்காய் முளைத்தெழ அதற்கு நெய், பால் முதலியவற்றை ஊற்றி வளர்க்க நன்றாக வளர்ந்தது. அதைக் கண்ட அவளது அன்னை புன்னைமரம் உனக்குச் சகோதரி முறை என்று குறிப்பிட்டாள். தலைவியின் களவு வாழ்க்கையில் தலைவன் குறியிடம் வேண்டி புன்னைமரத்தின் கீழ் நின்றபோது இப்புன்னை மரம் வெறும் மரம் அல்ல எனக்குச் சகோதரி முறையாவாள். எனவே என் சகோதரியின் முன்பு உன்னோடு உரையாடுவதற்கு நாணமடைவதாகத் தலைவி குறிப்பிடுகின்றாள். 

இப்பாடலில் புன்னை மரத்தைத் தன் மகளாக ஏற்றுக் கொண்ட தாயின் மனிதநேயம் வெளிப்படுகிறது. அன்னை புன்னை மரத்தைச் சகோதரி முறையென்று சொல்லியதற்காகத் தலைவியும் புன்னை மரத்தைச் சகோதரியாக ஏற்றுக் கொண்டு நாணம் அடைந்தது அவளின் மனிதநேயத்தின் உச்சமாக இருக்கிறது. “பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகல்“ (கலி. 133) என்று கலித்தொகை விளக்கம் அளிக்கிறது. அத்தகைய பண்பு மனிதநேயம் மிக்கவரிடத்து இயல்பாக அமைந்திருக்கும். 

அரவணைத்தல்
அன்பின் முதிர்ச்சி நற்பண்பி்ன் அடையாளமாக வெளிப்படும். நற்பண்பு மனிதநேயத்தின் பிறப்பிடமாகும். இத்தகைய நற்பண்பும் மனிதநேயமும் கொண்ட தலைவனை நற்றிணை படம்பிடித்துக் காட்டுகிறது. தலைவனின் மனிதநேயப் பண்பினை,

வினையமை பாவையின் இயலி நுந்தை
மனைவரை இறந்து வந்தனை ஆயின்
கடுஞ்செம் மூதாய் கண்டும் கொண்டும் 
நீ விளையாடுக ------------ -------------------- ---------
மணலிடு மருங்கின் இரும்புறம் பொருந்தி
அமர்வரின் அஞ்சேன் பெயர்க்குவென்
நுமர்வரின் மறைகுவென் மாஅயோளே. (நற். பா. 362)


என்னும் பாடல்வரிகள் குறிப்பிடுகி்ன்றன. தலைவனுடன் உடன்போகும் தலைவி இதற்கு முன்பு தன் மனையை நீங்கி வேறு இடம் புகாதவள். அவளின் மென்மையான பாதங்கள் கடுமையான பாதைகளை அறியாதவை. தலைவியின் அச்சத்தை உணர்ந்துகொண்ட தலைவன் தாம் செல்லவிருக்கின்ற பாதை குறித்து விளக்குகின்றான். நாம் செல்லும் பாதைகள் அரிய வெஞ்சுரம் அல்ல மாறாகப் பசுமை நிறைந்த வண்டல்மண் மேட்டினை உடையது. அங்கு நிறைந்திருக்கின்ற தம்பலப்பூச்சிகள் நீ மகிழ்ந்து விளையாடுவதற்கு ஏதுவாக இருக்கும். நீ விளையாடுகின்ற நேரத்தில் அருகிலுள்ள வேங்கை மரத்தின் பின்புறம் மறைந்து கொள்வேன். நம்மைப் பின்தொடர்ந்து பகைவர் வந்தால் எதிர்த்துப் போரிடுவேன். உன்னுடைய சுற்றத்தினர் வந்தால் அங்கேயே மறைந்து கொள்கிறேன் என்று குறிப்பிடுகின்றான். 

இப்பாடலில் தலைவனின் மனிதநேயம் இரண்டு வகைகளில் வெளிப்பட்டு நிற்கிறது. ஒன்று, தலைவி வினவுவதற்கு முன்பாகவே வழியின் ஏதமின்மை பற்றி விளக்கி அவளின் அச்சத்தைப் போக்கியது. இரண்டு பகைவரை எதிர்த்துப் போரிடுகின்ற ஆண்மையுடையவனாய் இருந்தபோதிலும் தலைவியின் தமர் முன்பு மறைந்தொழுகும் தன்மையுடையவனாய்த் திகழுதல். தலைவியைப் பிரிந்த துயரில் சுற்றத்தினர் கோபத்தில் இருப்பர். சில சுடு சொற்களைச் சொல்ல நேரிடும். தன்மீதும் குற்றம் இருக்கிறது. எனவேதான் தமர் முன்பு மறைந்தொழுக எண்ணுகின்றான். பிறரிடத்துக்கொண்ட கருணை அவனுடைய மனிதநேயப் பண்பிற்குச் சான்றாக அமைகின்றது. அதனை

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்புஎனும் நாடாச் சிறப்பு (குறள். 74)


என்று திருவள்ளுவர் சிறப்பித்துக் கூறுகின்றார். அன்பு நிறையப் பெற்ற மனித உள்ளம் மனிதநேயம் மிகுந்த நற்பண்பாக வெளிப்படுவதை அறியமுடிகின்றது. 

முடிவுரை
அறஇலக்கியமாயினும், புறஇலக்கியமாயினும் சங்கப் புலவர்கள் மக்களையும் அவர்களின் வாழ்வியற் சிந்தனைகளையும் வாழ்க்கை முறைமைகளையும் பதிவு செய்துள்ளனர். மனிதனுக்குரிய இயல்புகளாகத் திகழும் மனிதநேய உணர்வுகளை உள்ளுறை மற்றும் உவமைகள்வழி வெளிப்படுத்தியுள்ளனர். அவ்வகையில் மனிதனுக்குப் பிறமனிதனிடத்தில் இருக்கின்ற மனிதநேய உணர்வுகளையும் மனிதனுக்கு மனிதரல்லாத பிற உயிர்களிடத்தில் இருக்கின்ற மனிதநேய உணர்வுகளையும் நற்றிணை வெளிப்படுத்துகின்றது. 

குறிப்புகள்
1. இளம்பூரணர் (உ.ஆ), தொல்காப்பியம் – பொருளதிகாரம், சாரதா பதிப்பகம், சென்னை. ஆறாம் பதிப்பு – 2008. 
2. சந்திரன். ஸ்ரீ, சிலப்பதிகாரம் மூலமும், தெளிவுரையும், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை. ஒன்பதாம் பதிப்பு – 2001.
3.சந்திரன். ஸ்ரீ மணிமேகலை மூலமும் தெளிவுரையும், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை. மூன்றாம் பதிப்பு – 2002.
4. சேயோன் திருக்குறள், அமுதமொழி, மயிலைத்திருவள்ளுவர், தமிழ்ச்சங்கம் சென்னை. இரண்டாம் பதிப்பு – 2003.
5. துரைசாமிப் பிள்ளை.சு ஔவை, செவ்விலக்கியக் கருவூலம் – 2,  நற்றிணை – 1, 2, 3, 4 தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை. முதற்பதிப்பு – 2008.
6. விசுவநாதன்.அ (உ.ஆ) கலித்தொகை மூலமும் உரையும், நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, முதற்பதிப்பு – 2004.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

*கட்டுரையாளர்: முனைவர் ப. அமிர்தவள்ளி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, பவ்டா கலை மற்றும் அறிவியல் கல்லூரி , கொல்லியங்குணம்


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R