ஆய்வு: அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனார் – பத்தொன்பதாம் நூற்றாண்டு பகுத்தறிவு கருத்தியல்காலனிய ஆட்சி காலத்தில் இந்து மதத்தின் பண்பாட்டுச் சூழலையும் தகவமைப்புக்களையும் உடைத்தெறிந்து விமர்சனத்துக்குட்படுத்திய நூல் இந்துமத ஆசார ஆபாச தரிசினி. 1882 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இந்நூல் இந்து மதத்தினைக் கடுமையான முறையில் எதிர்த்தும் அ.வெங்கடாசலனார் பொது வெளியில் அடையாளம் தெரியாத நபராகவே இருந்திருக்கிறார்.

இவரது சிந்தனைப்போக்கு 16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் மலர்ந்த நவீன அறிவு மரபினையொட்டியதாகவும் சமூகத்தின் அத்தனை செயல்பாடுகளுக்கும் அறிவு தெளிவினைப் பெற வேண்டிய நோக்கத்தினைக் கொண்டதாகவும் இருக்கிறது. மத்திய கால ஐரோப்பாவில் சமூகத்தின் அனைத்து நடைமுறைகளுக்கான விளக்கங்களும் மதத்தில் இருந்து பெறப்பட்டன. ஆனால் 16 ஆம் நூற்றாண்டிற்குப் பின் தத்துவம், மதம், சமூகம் என எல்லாவற்றிற்குமான விளக்கங்கள் விஞ்ஞானங்களில் இருந்து தெளிவு பெற வேண்டும் என்ற தூண்டுகோளை விதைத்தவர் தெகார்த்.

‘பதினாறாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் தோன்றிய முக்கியத் தத்துவவாதிகளை அனுபவ வாதிகள், அறிவுவாதிகள் என வகைப்படுத்தலாம். அனுபவவாதிகள் புலனுணர்வுக்கும் புலனறிவுக்கும் முதன்மை தந்தார்கள். அறிவுவாதிகளோ மனித மனத்தில் உள்ளார்ததும், புறஉலகைப் புரிந்துகொண்டு விளக்கவல்லதும் எனத் தாங்கள் கருதிய அறிவுக்கு முதன்மை வழங்கினர். (எஸ்.வி.ராஜதுரை, இருத்தலியமும் மார்க்ஸியமும், விடியல், ப. 53) இரண்டு அணுமுறையாளர்களும் சமுதாயம், மனிதன், இயற்கை ஆகியன பற்றி அன்றைய கத்தோலிக்கத் திருச்சபை கூறிவந்த பொதுவான விடயங்களை விமர்சித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுவரை உலகத்தில் இருந்துவந்த கருத்தியல்களுக்கான மூல ஆதாரங்கள் மதத்தில் இருந்துதான் பெறப்பட்டிருக்கின்றன. இத்தகைய அதிகாரத்துவத்தைப் பெயர்த்துப்போட்ட நிகழ்வுகள் கோப்பர்நிக்கஸ், கலிலியோ, நியூட்டனில் இருந்து காண்ட் அளவிலான தத்துவ விளக்கங்களாக வளர்ச்சியடைந்தது.

இதேபோன்றதொரு உறுதியான சமூக ஊட்டாட்டங்கள் இந்தியச் சமூகத்தில் நடைபெறவில்லையென்றாலும் காலம் கடந்துவிட்ட காலனியக்கால கல்வி வாய்ப்புகளிலும் காலனியத்தின் நிர்வாகம் மற்றும் தொழில் முறைகளினால் இந்தியாவில் சீர்த்திருத்த அமைப்புகளாக உருப்பெற்றன. காலனிய காலத்தில் உண்டான சமூகச் சீர்த்திருத்த அமைப்புகள் பெரும்பாலும் மதத்தைப் புதிய நெறிமுறைகளில் வளர்ப்பதாகத்தான் இருந்தனவேயன்றி விஞ்ஞானப் பார்வையைக் கொண்டதாக இல்லை. இப்படியிருந்த ஒரு சமூகத்தில்தான் அ.வெங்கடாசலனார் இந்து மதத்தின் சடங்குகள், மத நம்பிக்கைகள், ஒழுக்க விதிகளைக் கட்டவிழ்த்து தகர்க்கிறார்.

காலனியத்திற்கு முன்பிருந்த ஆட்சி முறைகள் இத்தகைய சிந்தனை முறைக்கு வழிவகுக்கவில்லை. காரணம் தமிழக நிலங்கள் பாளையங்களாகவும் ஜமீன்களாகவும் பல படித்தான போர்களையும் வரி அழுத்தங்களையும் கொண்டிருந்த சமூகப் பின்னணியில் இனம் சார்ந்த ஒற்றுமை எண்ணங்களைக் காலனிய ஆட்சியால்தான் விதைக்க முடிந்தது.

 

‘சோழ நாடு, பாண்டிய நாடு, சேர நாடு என்றும் அந்தப் பாளையம், இந்தப் பாளையம் என்றும் அந்த ஜமீன், இந்த ஜமீன் என்றும் தங்களை அடையாளப்படுத்தி வந்தவர்கள் சென்னை மாகாணம் என்றும் தமிழ்நாடு என்றும் இந்தியா என்றும் பேசத் துவங்கினர். அரசியல் வாழ்விலும் சமூகப் பிரச்சினைகளிலும் கவனத்தைச் செலுத்தக்கூடிய மனிதர்களின் வட்டத்தை விரிவுபடுத்தியது. மேற்குலகக் கல்விமுறை இங்கு வந்ததும் இதற்கு உதவியாய் அமைந்தது’ (அருணன், தமிழகத்தில் சமூக சீர்த்திருத்தம் இரு நூற்றாண்டு வரலாறு, வசந்தம் வெளியீட்டகம், ப.26) இதன் பின்னணியில்தான் பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுந்த மாற்றுக் குரல்களைப் பார்க்க வேண்டும். இக்காலக்கட்டத்தில் சமூகத்தை வியாக்கியானம் செய்த தத்துவவிவேசினியின் எழுத்துக்களும் குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்தது.

இத்தகைய சமூகப் பின்னணியில் தான் அ.வெங்கடாசலனார் தனது சிந்தனைமுறையை விருத்தப்பாக்களாக இந்து மத ஆசார ஆபாச தரிசினி என்ற பெயரில் தொகுக்கிறார். வன்னியச் சமூகப் பற்றாளர், தொண்டை மண்டல குடிகளின் நிலங்களை மீட்டவர் என்றளவில் மட்டுமே இவரைப் பற்றிய கருத்துக்கள் அறியப்பட்டிருக்கின்றன. ஆனால் மனுநீதியை அடிப்படையாகக் கொண்ட சமூக ஒழுக்க முறைகளையும், பெண்ணடிமை நிலையினையும் படிநிலை அமைப்பிலான சாதிய பாகுபாடுகளையும் சமூக வேற்றுமைகளினால் இன்னொரு சமூகத்தார் அவல நிலைக்குத் தள்ளப்படும் இயல்புகளையும் அ.வெங்கடாசலனார் விமர்சனம் செய்கிறார். இந்நூலைக் குறித்து வீ.அரசு ‘இந்துமத ஆசார ஆபாச தரிசினி (1882) என்னும் ஆக்கம் தமிழ்ச்சூழலில் உருவான சுயமரியாதை இயக்க மரபுக்கு முன்னோடியாக அமைகிறது. இதற்குமுன் தமிழர்தம் சுயமரியாதை குறித்து இந்தக் கண்ணோட்டத்தில் பேசியதற்கான ஏதுக்கள் இருந்ததாக அறியமுடியவில்லை’ (அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனார் ஆக்கங்கள் திரட்டு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், ப.104) என்கிறார். ஏனெனில் இவரின் எழுத்துக்கு முன்னர் வரை பின்பற்றப்பட்டு வந்த வைதீக மரபு முழுக்க முழுக்க மனுநீதியைக் கடைப்பிடிப்பதாகவே அமைந்திருந்தன. அதனையொட்டியே ஆபாசத்தைத் தரிசித்தல் என்ற சொல்லாடலைப் பயன்படுத்துகிறார். இத்தகைய கடுமையான விமர்சனங்களை எழுதிய காலத்தில்தான் மதச்சீர்த்திருத்த மேனிலையாக்கம் போன்றவை இந்தியா முழுவதும் கைகொள்ளப்பட்டது என்பதையும் உற்றுநோக்க வேண்டியுள்ளது. இதிலிருந்து மாறுபட்டுத் தனித்த கொள்கையுடையவராக இருந்திருக்கிறார் அ.வெங்கடாசலனார்.

இந்நூலை எழுதுவதற்கான நோக்கமாகப் பார்ப்பனர்களின் சடங்கு முறைகளினாலும் மத நடவடிக்கைகளினாலும் மக்கள் தங்கள் செல்வங்களை இழந்து மூடர்களாக இருக்கிறார்கள் என்றும் ஆதிக்கச் சாதிகளாக இருக்கின்ற வேளாளர்கள் வன்னியச் சமூகத்தினரின் நிலங்களைப் பிடுங்கிக் கொள்கின்றனர் (265, 224, 227) என்றும் பதிவு செய்கிறார். மிக அழுத்தமாக அவரது நோக்கம் மதம், கடவுள், பார்ப்பனர், வேளாளர் என்று ஆதிக்க நிலைப்பாடுகளைக் கேள்வி எழுப்புவதாகவும் அதன் மீதுள்ள பற்றுகளை நீக்க வேண்டியவர்களாக மக்கள் வளர வேண்டும் எனப் பதிவு செய்கிறார்.  இந்தியா முழுவதும் மதத்தில் சீர்திருத்தம் வேண்டும் என்று பேசிய தருணத்தில் மதத்தின் அடிப்படையையே தகர்த்து எறிவதாக இவரது கருத்துக்கள் அமைகின்றன.

இத்தகைய அடிப்படையினை ஐரோப்பிய Rationalist தெகார்த் அவர்களின் கோட்பாடுகளிலிருந்தும் பெற முடிகிறது. காரணம் அதுவரை இருந்த மரபு அதிகாரங்களை ஒழித்துவிட்டு சுய அறிவினைப் பெற வேண்டும் என்று விரும்பிய மெய்யியலார் தெகார்த் ஆவார். தத்துவம், இறையியல் தளத்திலிருந்து விஞ்ஞான தளத்திற்குக் கடத்தப்படுவதனை இங்கு வெளிப்படையாகக் கண்டுகொள்ள முடிகிறது. இதற்கு இவர் கையாண்ட முறை ஐயவாதம். எல்லாவற்றையும் சந்தேகத்திற்கு உட்படுத்தினார். அதனால் பெறப்படுகின்ற உறுதியான உண்மையினை மட்டும் எடுத்துக் கொள்ளலாம் என்பது இவரது முடிவு. கணித வல்லுநராக தெகார்த் கணித அளவையியல் என்பது முற்றும் முழுதான சந்தேகத்திற்கு இடமில்லாத உண்மை. அதைப்போலவே உலகத்தில் உள்ள அனைத்தையும் விளக்க இயலும் என்று நிரூபித்துக் காட்டியவர்.

“டேக்கார்ட் ஒரு அறிவுமுதல் வாதி ஆவார். அறிவு முதல்வாதம் என்பது ஒருவகை முறையாகும். அங்கு உண்மையின் அளவுகோலாக இருப்பது புலக்காட்சி அனுபவம் அல்ல; அறிவுரீதியான முடிவுதான் அங்குப் பெறப்படுகிறது. … கணித உண்மைகளும் இவ்வாறுதான் (அனுபவம்  சாராதது என) எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இயற்கை மர்மமானது அல்ல. கணிதத்தினால் அதனை அறியலாம்” (எம்.எஸ்.எம். அனஸ், மெய்யியல் கிரேக்கம் முதல் தற்காலம் வரை, அடையாளம், ப.155) என்றார். எல்லா பொருள்களையும் அறிவின்மூலம் உணர்ந்து கொள்ள முடியும் என்ற ரீதியில் கடவுள், மதம் போன்றவற்றின் தேவை இல்லாமல் போகிறது. இந்த அறிவு முறையியல்தான் அ.வெங்கடாசலனார் பார்வையாக இருக்கிறது.

“ஒரு வகை நம்பிக்கைகள், நாம் நமது பெற்றோர், ஆசிரியர், பெரியவர்கள் ஆகியோரின் வழி பெறுவதாகும். இவை மெய்ப்பிக்கப்பட்ட உண்மைகளாக விளங்காமல் தலைமுறை தலைமுறையாகச் சமூகத்தின் கலாச்சார நம்பிக்கைகளாக வழங்கி வருகின்றன. சமூக வாழ்க்கைக்கு இவை தேவையானவையாகக் கூட இருக்கலாம். ஆயின் இவற்றின் உண்மைத் தன்மை மெய்ப்பிக்கப் படாததாகும்” (ந.முத்துமோகன், ஐரோப்பியத் தத்துவங்கள், காவ்யா, 2000, ப. 60) இதுபோன்ற விவாதங்களின் மூலம் தெகார்த் ஏராளமான தெளிவற்ற விஷயங்களை முறையியல் ரீதியாக விலக்குகிறார். பரந்துபட்ட பார்வையின் வழியாகப் பெறப்படுகின்ற முறையியல் தெளிவற்ற எல்லாவற்றையும் சந்தேகம் கொள்ளச் செய்கிறது.

பாதகர் பிழைக்கச் செய்த பல சடங்குகளை நம்பி
வேதியர் என்ற பார்ப்பார் விதித்த மாமாயைக் காட்பட்டு    (10)
தாவிய சர்ப்பம் பட்சி தடையிலா மிருக முண்டை    (28)

கண்டுநற் கிணற்றின் ஆற்றினில் ஊற்றிற் குளத்திடல் குடித்திடல் நன்றாம்  (366)
… … … வினையென்று எண்ணி
தீர்ந்திடப் பொங்கல் காவு திருமந்திரம் பேயென்று ஆழ்வார்    (374)

நாள்பார்த்து மாத்திரஞ் செய்து                    (398)

இவர்கடம் பகட்டை பார்த்தே எவர்களும் மெய்யென்று எண்ணித்
தவம் இதற்கினை வேறில்லை சாந்திடு முக்தி மோஷம்        (368)

எனப் பலவாறு சமூகத்தில் வழக்கத்தில் உள்ள சடங்குமுறைகளை எள்ளி நகையாடுகிறார். அறிவிற்குப் பொருந்தாத நிரூபணம் செய்யவியலாத இத்தகைய சடங்குகள் பார்ப்பனர்களின் பொருள் குவிக்கும் ஆசைக்கு வாய்ப்பாக அமைகிறது என்பதே இவரின் கருத்தியலாக இருக்கிறது. காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் இத்தகைய அர்த்தமில்லாத சடங்குகள் புனிதத்தன்மை வாய்ந்தவை என்று சொல்லப்படுவதற்கு யாதொரு காரணமும் இல்லை என்கிறார்.

உத்தமர் அருளினாலே உற்பவச் சிசுக்கள் எல்லாம்
சத்துவம் இவையெண்ணாமற் சமயத்துக்கு ஏற்றதாம்
நத்தியப் பொருள் பறிக்க நாட்டிய தோஷங் காட்டி
நித்தியச் சிசுவைக் கூட நிறைந்த கானகத்திற் சேர்ப்பார்    (22)

நன்றெனத் தேசமெல்லாம் நாட்டினர் சிவமதத்தை     (239)

கனவினில் சுவாமி வந்தனர் என்று கற்பித்தே மயக்குவர்    (292)

விட்டார்கள் மூடரத்த்தை விளங்க பார்த்தறிகிலாமல்    (336)

என்று கடவுள், மதம் என்ற புனிதத்தின் அதிகாரத்தைக் கட்டுடைக்கிறார். காரணம் அதிகார மையங்கள் மக்களைக் கட்டுப்படுத்தி வைத்துக் கொள்வதற்கான, சிந்திக்காமல் வைப்பதற்கான மூலம் என்பதனை உணர்ந்திருக்கிறார். உயிர்த் தோற்றத்துடனான கடவுள் நம்பிக்கை குறித்த சந்தேகத்தையும் எழுப்புகிறார். இவ்விடத்தில் அனுபவமாகவோ, அறிவு ரீதியாகவோ பார்க்காமல் கருத்துக்களை முன்வைப்பதை மறுதலிக்கிறார்.

இறந்திடில் தெய்வம் ராசன் என்றுமே ஒன்று சேர்ந்தே    (263)

ஒன்றினால் விளைந்திருக்க ஒன்றென்றே இதனிற்காட்டித்
துன்றிய கிரக தோஷந் தோஷமே எனச் சாதிப்பார்    (185)

நச்சிய பேர்கள் நோயை நீக்குவேன் நாட்டுவேன் என்று
அச்சறச் செய்வாரில்லை அவர்கள் மந்திரத்தில் ஆழ்வார்     (407)

வினை, மறுபிறப்பு, அரசு, அதிகாரம் எல்லாவற்றையும் கொட்டிக் கவிழ்ப்பதே அ.வெங்கடாசலனாரின் தத்துவ முறையியலாக இருக்கிறது. காரணமில்லாமல் எவற்றையும் ஏற்றக்கொள்ளவியலாத முறையியலைக் கண்டடைய இங்கு முடிகிறது.
மையத்தைக் கவிழ்த்தல்

அதிகாரம் செலுத்தும் ஆதாரங்களின் மீதுள்ள பற்றுதலைப் போக்குவதன் மூலம் எளிமையான வாழ்க்கையை வாழ இயலும் என்ற கருத்தியலைக் கொண்டவராக இருந்திருக்கிறார் அ.வெங்கடாசலனார்.
இப்படி அனேகந் சேந்தோர்க்கு இணையில் ஆண்குறியைக் காட்ட

அப்படி ஒழிவில்லாமல் அரும்பொருள் தானில்லாமல்
தப்பிடும் ஏழையோர்க்கு தணிந்திட லிங்கம் யோனி
உப்பிடச் செய்து நாட்டியொழுங்குடன் தொழு போ வென்றார் (148)

ஆண்குறியைத் தெய்வம் என்று வழிபடும் புனிதத்தினை எள்ளி நகையாடுகிறார். வடமொழியை தேவமார் பாஷை (273) என்று தென்னகத்தாரை இழிவுபடுத்தும் மேன்மையையும் இல்லாமல் ஆக்குறார். தனுர்வே மந்திரம் (396) மந்திர வேதச் சொல்லாடல்களின் புனிதத்தையும் உடைக்கிறார்.

அறிவியல் கண்ணோட்டம்
பல விடயங்களில் அறிவியலையொட்டி காரணங்களை விளக்கிக்காட்டுகிற அறிவு வாத முறையியலைப் பின்பற்றுகிறார். நோய்களுக்கு மருந்து உட்கொள்ளாமல் பிரார்த்தனை செய்யும் மூடத்தனத்தையும் பலியிடுதலையும் சாடுகிறார் (307). சாத்திரங்கள், தும்மல், சகுனங்கள், மந்திரங்கள் யாவற்றையும் கேள்விக்குட்படுத்துகிறார் (415). தத்தமது அறிவைக் கொண்டு தளர்விலா முயற்சி செய்து சிந்தையைப் பெருக்கினால் உண்மையினைக் கண்டடையலாம் (395). அறிவியல் விஞ்ஞான அடிப்படையிலான முன்னேற்றங்களைப் பெருக்க வேண்டும் அதன் வழியான வாழ்வியல் முறையைக் கைக்கொள்ள வேண்டும் என்பதே இவரது கருத்தியலாக அமைகிறது.

பகுத்தறிவு பார்வை
வானத்தைக் கண்ணாடியால் பார்த்து உணர்ந்து கொள்ளும் அறிவியல் அறிவு (192), பல மத மார்க்கங்கள் அவற்றின் குறிகளைக் கொண்டாடுதல், விந்தையான விக்கிரங்கள் அவசியமற்றவை (193), அரசக் கதையில் வரும் பாண்டவர்களுக்குக் கோயில் எதற்கு??? (196), இறந்தவர்களைத் தெய்வமாகப் பாவித்தல் கபடம் (198), ஐயனாரப்பனையும் சிவனையும் இணைப்பது பெரு மதக்கட்டமைப்பு (203), தேவைக்காகக் கோயில்களில் தாசி குலத்தை வளர்ப்பது (304), திரேதாயுகத்தில் நடந்ததாகச் சொல்லும் இராமன் சீதை கதையை எதற்குத் தற்போது மதப்பரப்பலுக்குப் பயன்படுத்த வேண்டும் ??? (290), பலிக் கொடுத்தால் மனித உயிரைத் திரும்பப் பெறுதல் எப்படி சாத்தியம் ??? (469), மறுமணத்தை எதிர்ப்பது (588), ரத்தக் கலப்பு சாதியத்தை நீக்குவதற்குப் பதிலாக இன்னொரு புது சாதியை உருவாக்கும் தாழ்ந்த சமூகம் (593), வள்ளி புராணக்கதை – கட்டுக்கதை (608), மனிதர்கள் பயத்தினால்தான் இறைவனை உண்டாக்கினார்கள் (640), மதத்தை உண்டாக்கி/ பெருக்கி மனிதர்களை மூடர்களாக மாற்றிவிட்டார்கள் (652), விதியென்பது இல்லை (656), அறிவை விளக்காமல் விதியை நம்பி பயன் இல்லை (657).

எனப் பல வழிகளில் சமூகத்தால் பின்பற்றப்படும் காரணமில்லாத பழக்க வழக்கங்களைச் சாடியிருக்கிறார். சமூகச் சீர்திருத்த வாதியாக அடையாளம் காட்டப்படும் அயோத்திதாசர் காலகட்டத்தைச் சார்ந்த அ.வெங்கடாசலனார் பகுத்தறிவுவாதியாகவும் கலகக்காரராகவும் அடையாளம் காட்டப்படாமல் போனது வரலாற்றின் பிழையே ஆகும்.

கடவுள், மதம், சாதி, வருண படிநிலை, பெண்ணடிமை, சடங்கு எல்லாவற்றையும் எதிர்த்து அதன் புனிதத்தைக் கொட்டிக் கவிழ்த்து கலக்காரராக இருந்த அ.வெங்கடாசலனார் பெரியார் போன்று இறைவன் இல்லை இல்லவே இல்லை என்ற முடிவான கருத்துநிலையை மட்டும் தெளிவுபடுத்தவில்லை. அறிவுவாதத்தைப் பேசிய தெகார்த்/ ஸ்பினோஸா போன்றோர் ஐரோப்பியத் திருச்சபைக்குப் பயந்துகொண்டு கடவுளின் இருப்பை மட்டும் தகர்க்காமல் ஏற்றுக் கொண்டனர். ஆனால் உலகை/இயற்கையைப் புரிந்துகொள்ள அவர்களுக்குக் கடவுள் அவசியப்படவில்லை. விஞ்ஞானம், கணிதம் மட்டுமே போதுமானதாக இருந்தது. மத உலகிலிருந்து மீண்ட விஞ்ஞானத்தின் தொடக்கம் இப்படித்தான் ஐரோப்பாவிலிருந்தது. தமிழ்ச் சமூகத்திலும் பகுத்தறிவின் தொடக்கம் புனிதத்தைக் கொட்டி கவிழ்த்தல் என்பதாகத்தான் ஆரம்பமாகியது. இத்தனை மாற்றங்களும் புதிய பாதைகளும் காலனியத்தின் தாக்கத்தால் நிகழ்ந்தது என்பதனை அ.வெங்கடாசலனார் தெளிவாக உணர்ந்திருந்தார். இழிவு போக்கும் புதிய மாற்றத்தை விஞ்ஞானத்திலும் கல்வியிலும் கண்டடைந்தார்.

பயன்பட்ட நூல்கள்
அருணன், தமிழகத்தில் சமூக சீர்திருத்தம், வசந்தம் வெளியீட்டகம், 2013
வீ. அரசு (பதிப்பாசிரியர்), அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனார் ஆக்கங்கள் திரட்டு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 2013
எம்.எஸ்.எம். அனஸ், மெய்யியல் கிரேக்கம் முதல் தற்காலம் வரை, அடையாளம், 2013
ந.முத்துமோகன், ஐரோப்பியத் தத்துவங்கள், காவ்யா, 2000
எஸ்.வி.ராஜதுரை, இருத்தலியமும் மார்க்ஸியமும், விடியல், 2011

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R