“சோஷலிஸம் அமெரிக்க விழுமியங்களுக்கு முற்றிலும் முரணானது; அமெரிக்கா கடுமையான கட்டுப்பாடுகளுடனும் ஆதிக்கங்களுடன் பிறந்த நாடல்ல. பூரண சுதந்திரத்துடனும் விடுதலையுடனும் பிறந்த நாடு; ஆகவே அமெரிக்கா ஒருபோதும் ஒரு சோஷலிஸ நாடாகப் போவதில்லை.” இது அண்மையில் இடம்பெற்ற ‘State of the Union’ உரையில் அமெரிக்க அதிபர் டொனல்டு ற்ரம்ப் விடுத்த அறைகூவல். 2020இல் மீண்டும் அதிபராகும் எண்ணத்தின் எதிரொலி. ஜனநாயகக் கட்சியினரைச் சோஷலிஸவாதிகள் எனக் கூறி, அவர்களது முகங்களில் சேறுபூசும் முயற்சி. சோஷலிஸம் என்னும் சொல்லைச் சொல்லிச் சொல்லியே, அமெரிக்க மக்களை அச்சமூட்டித் தம்வயப்படுத்தும் தந்திரம்.
பனிப்போர்க் காலத்தில் சோவியத் யூனியனையும் நேசநாடுகளையும் உதாரணங்காட்டி, அமெரிக்க அரசியல்வாதிகளால் மக்கள் மனங்களில் சோஷலிஸ வெறுப்பை விதைக்க முடிந்தது. சோவியத் யூனியன் சிதறுண்டு, இப்போது மூன்று தசாப்தங்களாகிவிட்டன. ரஷ்யா, சீனா, வடகொரியா, கியூபா மற்றும் முன்னாள் வார்ஸோ ஒப்பந்த நாடுகள் ஒருசிலவும் வார்த்தையளவில்தான் இன்று சோஷலிஸ நாடுகள். இவ்வாறு சோஷலிஸத்தை நடைமுறைப்படுத்துவதில் வழுக்கி விழுந்த நாடுகளைச் சுட்டிக்காட்டி, ‘சோஷலிசம் செத்துவிட்டது’ என அமெரிக்கா தலைமையிலான அனைத்து முதலாளித்துவ நாடுகளும் உலக மக்களை மூளைச் சலவை செய்துவந்தன. ஆயினும் இத்தந்திரோபாய வியூகத்தில் இப்போது ஆங்காங்கே விரிசல்கள் வெளித் தெரியத் துவங்கியுள்ளன.
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அமெரிக்கர்களும் ஐரோப்பிய தாராண்மைச் சீர்திருத்தவாதிகளும் ஒன்றிணைந்து, முதலாளித்துவத்தால் தீர்த்துவைக்க முடியாதிருந்த சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் பலவற்றை, சோஷலிஸத்தைப் பயன்படுத்தித் தீர்க்க முயன்றனர். இதையொத்த, இந்நாளைய முயற்சிகளின் பலாபலன்களை நோர்வே, ஸ்வீடன், டென்மார்க் போன்ற ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே அறுவடை செய்துவருகின்றன. இவ்வாறே முதலாளித்துவத்தின் முதுகெலும்பான அமெரிக்காவிலும் சோஷலிஸம் எனப்படும் சமதர்மம் பின்பற்றப்பட வேண்டும் எனும் குரல் இன்று ஒலிக்க ஆரம்பித்துவிட்டது.
அனைவருக்குமான இலவச ஆரோக்கியப் பராமரிப்பு, இலவசக் கல்வி, பணி ஓய்வுகால உதவி, சமூகநல உதவிக் கொடுப்பனவு போன்ற கொள்கைகளை உள்ளடக்கிய சமதர்ம அம்சம் கொண்ட அரசாங்கமே இப்போது அமெரிக்காவுக்குத் தேவை என்ற கருத்து - குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் - பரவி வருகின்றது. செல்வந்தர்களுக்கு மட்டுமன்றி, சகலருக்குமான ஒரு பொருளாதார முறைமையை உருவாக்குவதுதான் சமதர்மம் என்ற கொள்கைப் பிரகடனத்துடன் 2016இல் அமெரிக்க அதிபர் பதவிக்கென, ஜனநாயகக் கட்சி சார்பில் களமிறங்கிய Bernie Sanders சுமார் 12 மில்லியன் மக்களது ஆதரவைப் பெற்றிருந்தார். இதே கொள்கைகளின் அடிப்படையில் காங்கிரசுக்கான 2018 இடைக்காலத் தேர்தலில், நியூயோர்க்கில் போட்டியிட்ட Alexandria Ocasio-Cortez, மிச்சிக்கனிலிருந்து போட்டியிட்ட Rashida Tlaib ஆகிய இரு இளம் பெண் வேட்பாளர்களும் அமோக வெற்றி பெற்றனர். ‘சோஷலிஸம் என்பது கடுமையான அரச கட்டுப்பாட்டுடன் கூடிய முன்னாள் சோவியத் ஆட்சி முறையல்ல; சோஷலிஸம் என்பது பொதுசன நன்மைகளே’ என்னும் இவர்களது கருத்தினை அமெரிக்க இளந்தலைமுறையினருள் 54 சதவீதத்தினர் நம்புகின்றனர்; 43 சதவீதனர் மட்டுமே இதனை மறுக்கின்றனர்.
பொதுமக்கள் நலனை நோக்கமாகக் கொண்டு செயற்படும் நாடுகளில் செலவினங்களைச் சமாளிப்பதற்கென, அரசாங்கங்கள் உச்ச வரிவிதிப்பை நடைமுறைப்படுத்த நிர்ப்பந்திக்கப்படுகின்றன. இது சமதர்மக் கொள்கைகளால் விளையும் மிகப்பெரும் ஆபத்தென அமெரிக்க சோஷலிஸ விரோதிகள் பிரலாபிக்கின்றனர். பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் உச்ச வரிவிதிப்புத்தான் முன்னொருபோது அமெரிக்காவில் காலனித்துவ எதிர்ப்புப் புரட்சிக்கும், அமெரிக்க விடுதலைப் போராட்டத்திற்கும் கால்கோளிட்டதாக ஆதாரம் காட்டுகின்றனர். இவ்வாறான கசப்பான அனுபவங்களின் காரணமாக, வரியுயர்வு என்பது அமெரிக்காவில் உவப்பான செயற்பாடாக ஒருபோதும் இருந்ததில்லை. பொது மக்கள் நலனுக்காக வரியுயர்வை வலியுறுத்தும் சோஷலிஸ்ட்டுக்களை அமெரிக்கரல்லாதோராகவும் அமெரிக்க எதிரிகளாகவும் கூறிக் கரிபூசும் கைங்கரியம், காலா காலமாக அங்கு கடைப்பிடிக்கபட்டு வருகின்றது.
ஆனால் இவ்வாறு சமதர்மத்தை ஒரு சமூக விரோத கொள்கையாகக் கருதும் மெத்தனப் போக்கில் இப்போது மெல்ல மெல்ல மாற்றங்கள் எற்பட ஆரம்பித்திருக்கின்றன. சோஷல் டெமோகிறஸி எனப்படும் சமூக மக்களாட்சியில் வரியுயர்வு தவிர்க்க முடியாததுதான் என இளைய தலைமுறையினர் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால் வருடாந்தம் பல மில்லியன் டொலரை வருமானமாகப் பெறுவோரிடமிருந்து அதிக வரிப்பணத்தை அறவிட்டு, அதனை ஈடுசெய்யலாம் என 70 சதவீத அமெரிக்கர்கள் கருதுகின்றனர்.
எனவே, சாதாரண பொதுமக்களது நலன்களில் அதிக அக்கறை காட்டும் அரசியல் கோட்பாடுகளே இன்றைய அவசிய தேவையென 30 வயதுக்குட்பட்ட அமெரிக்கர்கள் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர். ஆக 30 வயதுக்குட்பட்டோருள் 15 சதவீதத்தினரும், 65 வயதுக்கு மேற்பட்டோரில் 45 சதவீதத்தினரும் மட்டுமே தம்மைச் சோஷலிஸ்ட் எனக் கூறுவதை ஓர் அவமானமாகக் கருதுகின்றனர். ‘சோஷலிஸம் அமெரிக்காவில் இனிமேலும் ஒரு கெட்ட சொல்லல்ல’ என்பதையும், ‘சோஷலிஸம் இன்னமும் செத்துப்போகவில்லை’ என்பதையும் இப்புள்ளிவிபரங்கள் உறுதிசெய்கின்றன.
ஆகவே, சோஷலிஸத்தின் மீது அமெரிக்க அதிபர் ஆரம்பித்திருக்கும் புதிய யுத்தம், அதனை அழிப்பதற்குப் பதிலாக, ஆற்றுப்படுத்துவதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன. சமதர்மத்தின் பலவீனங்கள் மக்களாட்சியைப் பலப்படுத்திய ஒரு காலகட்டம் இருந்தது. இதே மக்களாட்சியின் பலவீனங்கள் சமதர்மத்தைப் பலப்படுத்தும் காலம் இப்போது நெருங்கிக்கொண்டிருகின்றது. ‘மக்களாட்சியே சமதர்மத்தின் மார்க்கம்’ என, சமதர்மக் கோட்பாட்டின் பிதாமகர் கார்ல் மார்க்ஸ், காரணமின்றிக் கூறியிருக்க மாட்டாரல்லவா!
உசாத்துணை:
E.J. Dionne Jr. , ‘Trump’s war on socialism will fail,’ The Washington Post
Peter Bloom, ‘Socialism is not a dirty word:’ The Open University
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.