தமிழரின் பண்பாட்டு மரபாக இருந்து வருவது நடுகல் வழிபாடாகும். இவ்வழிபாடு இன்று ஆண், பெண் இரண்டு தெய்வங்களுக்கும் நிகழ்த்தப்படுகிறது. ஆனால் தொடக்க காலத்தில் நடுகல் வழிபாடு போரில் உயிர் நீத்த வீரனுக்கும், ஆநிரை மீட்டலின் போது இறந்த வீரனுக்காகவும் நடுகல் எழுப்பப் பட்டு வழிபடப்பட்டன. இம்மரபு பண்பாட்டில் தொடா்மரபாக இருப்பினும் அதன் தன்மை சிதையும் நிலையில் இருக்கிறது. நடுகல், நெடுங்கல் என்று பொதுப் பெயா் கொண்டு அழைக்கப்பட்ட நெடுங்கல்கள் எல்லாம் மாற்றுப் பெயா்கள் (நட்டுக்கல் முனியாண்டி, கருப்பசாமி கல், முனிஸ்வரன் கல்) இட்டு அழைக்கப்பட்டு வருகின்றன. அந்நெடுங்கல்லுக்கான தள அதிகாரம் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு முக்கியத்துவப் படுத்தப்படுகிறது. அதில் வழிபாடு நடத்தும் அதிகாரமும் அவா்களுக்கு உரித்தானதாகக் கொள்ளப்படுகிறது. இம்மரபு தொடா்மரபாக பண்பாட்டில் நிகழ்ந்து வந்தால் அதன் தொண்மை மறைக்கபடும். அதன் பெயா் மாற்றமும் மாற்றப்படும். அது குறித்து களஆய்வு செய்து வெளியிடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகம்.
நெடுங்கல் நடும் மரபு
“பெருங்கற்காலப் பண்பாட்டின் தொடக்கம் காலம் கி.மு. ஆயிரம் ஆகும். இப்பண்பாடு தமிழகத்தில் வடக்கிலிருந்து தெற்காக முன்னேறிச்சென்றதாகும். அவ்வாறு செல்லச் செல்ல இதன் காலம் பின்னோக்கிச் சென்றன என்று தொல்லியல் அறிஞர் க. ராஜன் அவர்கள் கூறுகிறார்.”1 ஏனென்றால் வடக்கில் தகடூரிலிருந்து கொங்கு நாடு வரையிலுள்ள பகுதிகளில் தான் அதிகமான நடுகற்கள் கிடைத்துள்ளன. தெற்கு மதுரை, திருநெல்வேலி ஆகிய ஊா்களுக்கு இடம் பெயரும்போது அதிகமாக முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. இத்தன்மையைக் கொண்டு தென்பகுதிகளில் கிடைக்கும் நடுகல்கள் அனைத்தும் காலத்தால் பிந்தியவை எனக் கருதமுடிகிறது. பெரும்பான்மையான தொல்லியல் அறிஞகர்கள் இக்கருத்துக்களுக்கு உடன்படுகின்றனர்.
தமிழகத்தில் கிடைக்கின்ற பெருங்கற்கால சின்னங்களில் நெடுங்கல், நடுகல், கற்பதுக்கை ஆகிய அனைத்தும் தகடூர் பகுதியிலும், கொங்கு நாட்டில் கொடுமணல் பகுதிகளிலும் அதிகம் கிடைத்துள்ளன. தென்னாட்டில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, விருதுநகா் மாவட்டம் குன்னூர் போன்ற ஊர்களிலும் இந்நடுகல்கள் நெடுங்கல்லாகக் கிடைத்துள்ளன. இவ்விரு பகுதிகளும் குறிஞ்சி, முல்லை நிலத்தோடு தொடர்பு கொண்டுள்ள நிலமாகும். இந்நிலங்கள் கால்நடைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. சங்க காலத்தில் முல்ல நிலத்தில் ஏற்பட்ட ஆநிரை கவர்தல், கவா்ந்த பசுக்களை மீட்டல் இவைகளினால் இறப்பவர்க்கு நடுகல் நடுவதும், கற்பதுக்கை அமைப்பதும் பண்டைய மரபாக இருந்துள்ளன. இது குறித்து சங்க இலக்கியமும் தொல்காப்பியமும் திறம்படக் உறுதி படுத்துகின்றன.
“பெருங்கற்காலப் பண்பாட்டுச் சின்னங்கள் குறித்து அன்மையில் களஆய்வு மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர்கள் கொங்கு நாட்டில் அதிகமான பெருங்கற்காலச் சின்னங்களும் அதன் அருகிலே நீண்ட நெடிய நெடுங்கல்லும் இருப்பதை கண்டறிந்தனர்.”2 நினைவுச் சின்னங்கள் அமைக்கும்போது அதன் அருகில் நீண்ட நெடிய நெடுங்கல் அடையாளமாக அமைக்கும் பழக்கத்தையும் பண்டையோர் மரபாகக் கொண்டுள்ளதுடன் அந்நெடுங்கல்லிற்கு நீர்ப்படையிட்டு படையல்கள் படைத்து வழிபட்டு வந்துள்ளனர். ஆகையால் வடபகுதியில் நெடுங்கல்லுக்குச் செய்துவந்த சடங்குகள் போன்று பாண்டிய நாட்டில் கிடைத்த நெடுங்கல்லிற்கும் இச்சடங்குகள் முறையாகச் செய்து வந்துள்ளனர். சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்டுவன் வடக்கில் இமய மலையிலிருந்து கண்ணகிக்கு கல்லெடுத்து கங்கையில் நீராட்டி சேரநாட்டில் கோவில் அமைத்து வழிபட்டு வந்தான் என்று சிலப்பதிகாரம் வாயிலாக அறியமுடிகிறது. ஆகையால் நடுகல் நட்டு வழிபடும் மரபு வடக்கிலிருந்தே தொடங்கப் பட்டவையாகும்.
நெடுங்கல் – விளக்கம்
நெடுங்கல் என்பது பெருங்கற்காலத்தில் எழுப்பட்ட ஈமச்சின்னமாகும். இக்கல் இறந்தவர்கள் நினைவாக இறந்தவர்களைப் புதைத்த இடத்தில் எழுப்பப்படுவதாகும். “தன் கீழே அல்லது அருகில் கல்அறை, கல்வட்டம், கல்படை, கல்குவை, கல்திட்டை, கற்கிடை முதலியவைகள் காணப்படும். சில இடங்களில் எந்த வித ஈமப்பொருட்களும் இல்லாமல் வெறும் நெடுங்கல் மட்டும் காணப்படும். இக்கல்லின் மேற்புறம் கூர்முனையுடன் காணப்படும். சில இடங்களில் நெடுங்கற்கள் ஒரு கல் அளவிற்கு வட்டத்தின் பகுதியாகவும் அமைந்துள்ளன.”3 இவை தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில், மலைகள் மற்றும் பாறைகள் கிடைக்கும் இடங்களில் காணப்படுகின்றன. ஈரோடு மாவட்டத்தில் கொடுமணல் தகடூா் பகுதியில் திருமால்வாடி, மதுரை மாவட்டத்தில் ச.பாப்பாநாயக்கன்பட்டி, விருதுநகா் மாவட்டத்தில் குன்னூா் உட்பட பல ஊர்களில் இவை காணப்படுகின்றன. இதனை நாட்டுக்கல் என்றும் அழைக்கப்படுகிறது. நடுகல் என்பது நெடுங்கல்லின் வளர்ச்சியடைந்த வகையாகும்.
கற்பதுக்கை அமைத்த பின்னா் அதன் அருகில் நடப்படுவது நெடுங்கல். இதனை சங்க இலக்கியம் திறம்படக் கூறுகிறது.
புறநானூறு இதனை,
“பரலுடை மருங்கின் பதுக்கை சேர்த்தி
இனி நட்டனரே கல்லும்” (புறம்.264).
அகநானூறு இதனை,
“சிலை ஏறட்ட கணைவீழ் வம்பலர்
உயர்பதுக்கு இவர்ந்த அதர்கொடி அதிரல்
நெடுநிலைநடுகல்” (அகம்.289) என்றும்,
“பிடிமடித் தன்ன குறும்பொறை
நட்ட போலும் நடாஅ நெடுங்கல்” (அகம்.269)
என்றும் குறிப்பிடுகின்றன. இந்நெடுநிலைக் கற்களே பிற்காலத்தில் நடுகற்களாக மாற்றம் பெற்றன. இந்நடுகற்கள் “மறவர், எயினர், மழவர், வேடர், கோவலர், வடுகர், கள்வர், பறையர், பாணர் ஆகிய குடிகளைச் சேர்ந்த சேவகன், இளமக்கள், இளையோர், ஆள், இளமகன், அடியாள், அடியார், மன்றாடி, தொறுவாளன் ஆகியோருக்கே பெரும்பாலும் எடுக்கப்பட்டன.”4 என்று புலவா் செ.ராசு கல்வெட்டு ஆய்வாளா் அவா்கள் தொல்லியல் நோக்கில் சங்க காலம் எனும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இக்குடிகள் எல்லாம் சங்க காலப் பண்பாட்டின் தொல்குடிகளாகும்.
நெடுங்கல் வழிபாடு
வழிபாடு தொல்குடிமக்களிடத்தில் பெருங்கற்காலத்திற்கு முன்பு வழக்கில் இருந்து வருகின்றன. அதில் இறந்தவா்களை வணங்கும் மரபு பெருங்கற்காலப் பண்பாட்டிற்குப் பின்பு வளா்ச்சி பெற்றன. தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் இது பற்றி விரிவாகப் பேசுகிறது. இச்சடங்குகள் எல்லாம் உயிர் நீத்தவரின் நினைவாக கல்நட்டு வழிபடும் மரபாக இருந்தன. சில இடங்களில் தாழியில் இட்டு புதைக்கும் வழக்கமும் இருந்துள்ளன.
தொல்காப்பியர் நெடுங்கல்கள் எழுப்பப்படும்போது கடைபிடிக்க வேண்டிய சடங்குகள் குறித்தும் விரிவாகப் பொருளதிகாரத்தில் கூறியுள்ளார்.
“காட்சி கால்கோள் நீர்படை நடுகல்
சீர்த்தகு சிறப்பின் பெரும்படை வாழ்த்தல்" (தொல்.பொரு.2-5)
என்று வரிசைப்படுத்திக் கூறுகிறது. அவையாவன,
காட்சி:
இறந்தவரை அவரது சுற்றத்தார் கண்டு வணங்குதல் பொருட்டுக் காட்சிப்படுத்துவதைக் காட்சி என்று அழைத்தனர்.
கால்கோள்
இறந்தோரை ஒரு இடத்தில் வைத்துப் பஞ்ச பூதங்களும் அவற்றை எடுத்துக் கொள்ள அழைப்பதைக் கால்கோள் என்று அழைத்தனர்.
நீர்படை
எஞ்சிய எலும்புகளை எடுத்து வந்து தூய்மைப்படுத்தி நீர் இடுவதை நீர்படை என்று அழைத்தனர்.
நடுகல்
இறந்தவர்களுக்காக (உயிர் நீத்தேர்களுக்காக) எழுப்பப்படும் நினைவுச் சின்னத்தை நடுகல் என்றும், இந்நினைவுச் சின்னத்தில் இறந்தவர்களுக்காக வைக்கப்படுகின்ற பொருட்களைப் பெரும்படை என்றும் பின்னர் இறந்து பட்டவரைப் பற்றி அவரது நற்செயல்களை, பண்புகளை வாழ்த்துதல் என்றும் பெருங்கற்படைச் சின்னம் உருவான விதத்தையும் அதற்காகக் கடைப்பிடிக்கக் கூடிய பல்வேறு சடங்குகள் பற்றியும் தொல்காப்பியம் தெளிவுறக் கூறுகிறது.
சங்க இலக்கியத்தில் இறந்தவர்களுக்காக நடப்பட்ட நடுகல்லை பல்வேறு பெயரிட்டு அழைத்தனர். எழுத்துடை நடுகல் (அகம்.53), முதிர் நடுகல் (அகம்.297), நடுகல் ஆயினன் (புறம்.221) என்று பல்வேறு பாடல்களில் இக்குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. நடுகல் நடப்பட்டதுடன் அக்கல்லுக்கு எடுக்கப்பட்ட சடங்குகள் பற்றியும் பதிவுகள் உள்ளன. புறநானூற்றில் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் இது குறித்து கூறும்போது
“இல்அடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்
புடைநடு கல்லின் நாட்பலி ஊட்டி
நல்நீராட்டி நெய்ந்நறைக் கொளீ,ய
மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும்” (புறம்.329.1-4)
என்ற பாடல் மூதின் முல்லை தன்மையை எடுத்துரைக்கிறது. இப்பாடல் வாயிலாக தொல்காப்பியா் கூறிய நடுகல் வழிபாட்டுச் சடங்குகளை விளங்கிக் கொள்ள முடிகிறது. இம்மரபு இன்றும் பண்பாட்டில் தொடா்மரபாக மக்கள் கடைபிடித்து வருகின்றனா்.
நட்டுக்கல் முனியாண்டி வரலாறு
விருதுநகா் மாவட்டத்தில் திருத்தங்கல், வத்திராயிருப்பு குன்னூா் மூவரை வென்றான், நத்தம்பட்டி, நெடுங்குளம் போன்ற ஊா்கள் பெருங்கற்காலப் பண்பாட்டோடு தொடா்புடைய ஊா்களாகும். இங்கு கிடைத்த தாழிகள் சிவப்பு கருப்பு கலந்த பானை ஓடுகளுடன் கூடியன். நெடுங்கல்கள் அடிப்புறம் ஆறு அடி முதல் எட்டு அடிவரையிலும் மேல்பகுதி ஒரு அடிமுதல் இரண்டு அடிவரை அமைந்துள்ளது.
விருதுநகா், ஸ்ரீவில்லிப்புத்தூா், சங்கரன்கோவில் திருத்தங்கல், குன்னூா், வத்திராயிருப்பு ஆகிய ஊா்கள் பிற்காலப் பாண்டியா்களின் ஆட்சித்திறம் நிகழ்ந்துள்ள ஊா்களாகும். சான்றாக ஸ்ரீவில்லிப்புத்தூா் வட்டத்தில் அமைந்துள்ளன. “குன்னூா்“ எனும் ஊரை கி.பி.815 முதல் 862 வரை ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் ஆட்சி செய்து வந்தான். அவனது ஆட்சிகாலத்தில் அவன் மகன் பராந்தக நெடுஞ்சடையன் என்பவன் ஆண்டு வந்தான். அவனது ஆட்சியாண்டில் குன்னூா் எனும் ஊரில் 815 -862 ல் மிகப்பெரிய போர் ஒன்று நடந்தன. அப்போரில் ஸ்ரீமாற ஸ்ரீவல்லவன் கலந்து கொண்டு போரிட்டான். அப்போரில் வெற்றி பெற்று குன்னூரை கைப்பற்றியதுடன் அவ்ஊருக்கு “கருநிலக்குடிநாடு“ என்று பெயர் மாற்றிக் கொண்டான். இது குறித்து பிற்காலக் கல்வெட்டுகள் தெளிவுபடுத்துகின்றன. இச்செய்தியை பள்ளிமடம் கல்வெட்டும் உறுதி செய்கிறது. இம்மன்னனின் கல்வெட்டுகள் சாத்தூா், இருக்கன்குடி, நென்மேனி போன்ற ஊா்களில் காணப்படுகின்றன. இப்போரில் பல்வேறு வீரா்கள் இறந்துள்ளனா். அவா்களுக்கு நடுகல்லும் எடுக்கப்பட்டுள்ளன.” 5என்று விருதுநகா் மாவட்ட கையேடு குறிப்பிடுகிறது.
குன்னூரிலிருந்து மேற்குநோக்கி இரண்டு கிலோமீட்டா் தூரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் முனியாண்டி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் ஒரே ஒரு நெடுங்கல்லைக் கொண்டு அமையப்பெற்றவையாகும். இக்கல்லின் உயரம் 25 அடிக்கு மேல் இருக்கும். அதன் அகலம் அடிப்பகுதி 6அடி கொண்டு இருக்கும். இக்கல் கிழக்கு நோக்கி அமையப்பட்டிருக்கின்றன. அக்கல் அமைந்துள்ள ஊருக்கு நட்டுக்கல் முனியாண்டி கோவில் என்பது இன்றைய பெயா். அதிலிருந்து இரண்டு கிலோமீட்டா் தூரத்தில் கிருட்டிணன்கோவில் எனும் ஊா் அமைந்துள்ளது. அதன் அருகிலே மிக உயரமான குன்று ஒன்று உள்ளது. அக்குன்றின் மீது தரகு மாதா கோவில் ஒன்று இருந்து வருகிறது. இவ்வுா் செம்மண் நிலமாகும். முல்லை நிலத்தோடு தொடர்புடையது. மானவரி பயிறிடும் முறை மட்டும் அதிகம் நிகழ்கிறது. அத்தகைய சிறப்பு பெற்ற அவ்ஊரில் உள்ள நட்டுக்கல் முனியாண்டி முத்தொழில்களையும் (காத்தல், படைத்தல், அழித்தல்) செய்யக்கூடிய ஈஸ்வரன், முனிஷ்வரனாகக் காட்சி தந்து மக்களுக்கு அருள் பலித்து வருகிறார். குன்னூரில் நடைபெற்ற போரில் பல்வேறு வீரா்கள் வீரமரணம் அடைந்துள்ளனா். அத்தகைய வீரமரணம் அடைந்த வீரனுக்கு, அல்லது குன்னூா் ஆநிரைகள் அதிகம் இருந்துள்ள முல்லை நிலமாகும். ஆநிரைகளைக் கவா்ந்தவா்களிடமிருந்து மீட்டு வரும்போது உயிர்நீத்த ஒரு வீரனுக்காக நடப்பட்ட கல் இந்நெடுங்கல். இன்று மக்கள் அதனை தெய்வமாக வழிபட்டு வருகின்றனா். அவ்ஊரின் காவல் தெய்வமாகவும் இந்நடுகல் இருந்து வருகிறது.
நட்டுக்கல் முனியான்டி வழிபாடு
நடுகல்லை வழிபாடும் மரபு சங்க காலத்திலிருந்து தொடா்ந்து இருந்து வருகிறது என்பதை முன்பு அறிந்தாலும் புறநானூற்றில் முல்லைநிலத்தில் வாழ்ந்த மனைவி ஒருத்தி தன் கணவன் போரில் அரசனுடன் சோ்ந்து வெற்றி பெற்றுச் செல்வத்துடன் வந்து விருந்து படைத்துத் தரும் வாழ்க்கையைத் தனக்குக் கொடுக்க வேண்டும் என்று நடப்பட்ட நடுகல்லை வழிபட்டாள். என்று புறநானூறு கூறுகிறது. இதனை,
ஒலிமென் கூந்தல் ஒன்றுதல் அரிவை
நடுகல் கைதொழுது பரவும்” (புறம் 306.3-4)
என்ற பாடல் வரி இதனை உறுதி செய்கிறது. அம்மரபு இன்றும் மக்களிடத்தில் வழக்கில் நிலவி வருகிறது. இருப்பினும் அன்று இறந்த வீரனின் நினைவாக நடுகல் நட்டு அதனை வழிபட்டு வந்தனா். ஆனால் இன்று அந்நடுகல் வேண்டியோர்க்கு வேண்டியதைக் கொடுக்கும் தெய்வக்கூடமாகக் காட்சியளிக்கிறது.
நட்டுக்கல்லு முனியாண்டிக்கு கொடுக்கும் சடங்குகள்
நெடுங்கல்லை நட்டுக்கல்லு முனியாண்டி என்று பெயரிட்டு அழைத்தாலும் முனிஷ்வரன் கோவில் என்றும் ஒரு சாரார் கூறுகின்றனா். வாரத்தில் ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் விமரிசையாகத் திருவிழாக்கள் போன்று வழிபாடு நிகழும். குழந்தை இல்லாதவா்களுக்கு குழந்தைப்பேறு வழங்குவதாகவும், உடல் நிலை நோய்வாய்ப்பட்டவா்களுக்கு நோய்நீக்கி தருவதாகவும், திருமண தோசம், செய்வினை போன்ற நம்பிக்ககைகளும் இங்கு வருவதால் நிவா்த்தியாகிறது என்ற நம்பிக்கையும் மக்கள் கைக்கொள்கின்றனா்.
வழிபாட்டுப் பொருட்களாகச் சங்க இலக்கியத்தில் நெடுங்கல்லுக்கு எத்தகைய சடங்குகள், படையல்கள் நிகழ்த்தினார்களோ அதே பின்னணியில் சடங்குகள் நிகழ்கிறது. உயிர்பலியும் சோ்த்து இச்சடங்கோடு நிகழ்கிறது. சடங்குப் பொருட்களாக, (படையல்களாக) 21 முட்டை, ஆடு, கோழி, வெண்பொங்கல், சக்கரைப்பொங்கல், முனியாண்டிக்கு எட்டு முலம் வெள்ளை வேட்டி(நெடுங்கல்லின் அடிப்பகுதியில் சுற்றுவதற்கு), சந்தணம், குங்குமம், பீடி, சுருட்டு, மதுபானம், வெற்றிலை, பாக்கு, 21எலுமிச்சை மாலை, தேங்காய், பழம், பொறி, அவுல், இரண்டு கிலோ ஆப்பில், அரஞ்சு, திரட்சை, சவ்வாது, வெள்ளிக்காப்பு, நோ்த்திக்கடனாக மொட்டை போடுதல், காதுகுத்துல், கோயில் காணிக்கையாக 1001 பணம் போன்றவை படையாளாகப் படைக்கப்படுகிறது. இப்பொருட்களில் பெரும்பாண்மை தொடக்க காலத்தில் நடுகல்லுக்குப் படைக்கப்பட்டவையாகும். இன்றும் இம்மரபு தொடா்கிறது.
குறிசொல்லும் அதிகாரம்
இக்கோவிலில் குறிசொல்லும் அதிகாரம் ஆண், பெண் இருவருக்கும் இருந்து வருகிறது. ஆனால் கோயில் தள அதிகாரம் (இடம்) அனைத்தும் பள்ளா், பறையா் இனத்தைச் சார்ந்தவா்கள் கையில் எடுத்துள்ளனா். கோயில் குறிசொல்பவா் பெரும்பாலும் பள்ளா் இனத்தைச் சோ்ந்தவா்களே ஆவார். நடுகல்லுக்குப் படைக்கப்படும் பொருட்கள் காணிக்கைகள் அனைத்தும் குறிசொல்லுபவா்களே எடுத்துச் செல்கின்றனா். குறி சொல்லுதலுக்கு ஒருவா் மட்டும் அமா்த்தப்படவில்லை. முனிஷ்வரன் சாமி யார் யாருக்கு எல்லாம் வருகிறதோ அவா்கள் எல்லாம் வந்து தனித்தனியாக அக்கல்லைச் சுற்றி வணங்கி வருகின்றவா்களிடம் 51ரூ காணிக்கை வாங்கிக் கொண்டு சுருட்டைப் பற்றவைத்துக் குடித்துக்கொண்டு குறிசொல்லுகிறார்கள். குறியாக திருமணம், குழந்தைவரம், குடும்ப ஒற்றுமை , செய்வினை நிவா்த்தி என பல்வேறு துன்பங்களுக்கும் குறி கூறி வருகின்றனா். இவ்வழக்கம் இன்று தொடா்ந்து நிகழ்ந்து வருகிறது.
முடிவுகள்
நெடுங்கல்லை வழிபடும் மரபு இன்று தெய்வமாக ஆக்கப்பட்ட நிலையில் அதன் கீழ் அல்லது அதனைச்சுற்றி தொல்பொருள்கள் நிரம்பக் காணப்படும். அத்தகைய பொருட்களை இனிவரும் காலங்களில் தொடர்ந்து ஆய்வு செய்ய முடியும் என்றால் அவ்விடங்கள் தொல்லியல் துறையிடம் செல்லும்போது மட்டுமே அவை ஆய்வுக்கு உட்படுத்த முடியும், ஏனென்றால் இன்றைய அரசியல், சமூக காழ்ப்புணா்ச்சியில் அத்தொகுதிகள் தனித்தொகுதிகளாகத் தோ்தலில் இருந்து வருகிறது. அவை எல்லாம் அந்தந்த மக்களுக்கு உரித்தானது என்று கைக்கொள்ளும்போது அரசு அதன் ஆழம் எண்ணவென்று தெரியாமல் ஆட்சி என்ற நிலையில் ஒரு சார்பு நிலையிலே இயங்க முற்படும். இதனால் தமிழரின் தொல்மரபினை வெளிக்கொண்டு வரும் நிலை அடியோடு மழுங்கடிக்கப்படும். இதனால் தமிழரின் மரபும் தொடா்ந்து சிதைவுகளைச் சந்தித்து தீரும். ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்தில் நொய்யல் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள கொடுமணல் ஊருக்கு அருகிலுள்ள சென்னிமலையிலும் நெடுங்கல்லின் நிலைமை இதே தன்மையைப் பெற்றுத் தான் இருந்து வருகிறது. இப்போக்குகள் எல்லாம் தெய்வம் என்ற பெயா்கொண்டு தாங்கும்போது இவ்வழிபாட்டுமுறைகள் எல்லாம் தொடா்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கும்.
துணை நூற்பட்டியல்
க.ராஜன். தொல்லியல் நோக்கில் சங்க இலக்கியம் – உலகத்தமிழாராய்சி நிறுவனம், சென்னை-113, முதல் பதிப்பு.2004. ப.33
புலவா் செ. இராசு. - தென் கொங்கு ஆய்வு மையம், தொல்லியல் நோக்கில் சங்க இலக்கியம் (கட்டுரை), ப.1
புலவா் செ. இராசு. - தென் கொங்கு ஆய்வு மையம், தொல்லியல் நோக்கில் சங்க இலக்கியம்(கட்டுரை), ப.3
மேலது ப.3
விருதுநகா் மாவட்ட கையேடு, தமிழ்நாடு அரசு வெளியீடு,ப.156
புறம்.264
அகம்.289
அகம்.269
தொல்.பொரு.2-5
புறம்.329.1-4
புறம் 306.3-4
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
* கட்டுரையாளர் - - முனைவா் இரா. மூர்த்தி , உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீராமகிருஷ்ணமிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் -20 -