பாலவியாகரணத்தில் முந்துநூல் தரவுகள்: மதிப்பீடு
1.0 முகப்பு
பாலவியாகரணம் தெலுங்கு மொழிக்குரிய முழுமையான இலக்கணநூலாகக் கருதப்படுகிறது. இதனை யாத்தவர் சின்னயசூரி (கி.பி. 1858). இந்நூல் இக்காலம் வரை கற்றலிலும் கற்பித்தலிலும் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து வந்துள்ளது. அதற்குக் காரணம் பழைமையைப் போற்றும் பண்பே. மேலும், இந்நூல் பயனாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனுள், முந்து நூல்களின் கருத்தியல்களின் ஆட்சியே மிகுதி. அவ்வாட்சியின் விழுக்கட்டைப் பி.சா.சுப்பிரமணியனின் குறிப்புகளை முன்வைத்து மதிப்பீடு செய்வது இக்கட்டுரையின் நோக்கம்.
2.0 பாலவியாகரணமும் முந்து நூல்களும்
சின்னயசூரி, பாலவியாகரணத்தின் மூலம் தெலுங்கு எழுத்துலகை ஒழுங்கமைவுக்கு உட்படுத்தினார். இதனை அந்நூல் வெளிவந்தபிறகு பழைமையான இலக்கியங்களும் திருத்தம் செய்து மீள்பதிப்பாக வெளிவந்தமையின்வழிக் காணலாம்(ஆனைவாரி ஆனந்தன்:1999). அதன் பின்பு இவர் வகுத்த கோட்பாடுகளே நிலைபேறாக்கம் பெற்றன என்பதே உண்மைநிலை. ... மேலும் வாசிக்க

1. திராவிடமொழிக் குடும்பத்தில் தொன்மையானது தமிழ். தமிழை விடத் தெலுங்கு மொழிப் பேசுவோரின் எண்ணிக்கை அதிகம். தமிழ் தனித்தன்மை வாய்ந்தது. இம்மொழிக்குரிய இலக்கண நூலாகிய தொல்காப்பியமும் அத்தன்மை பெற்று விளங்குகிறது. தெலுங்குமொழி சமசுக்கிருத, பிராக்கிருத மொழிகளைச் சார்ந்தது. தெலுங்கின் முதல் இலக்கண நூல் ஆந்திர சப்த சிந்தாமணி (நன்னயப்பட்டு, கி;.பி.11). இந்நூலின் பெரும்பகுதி சமசுக்கிருத மரபைப் பின்பற்றி எழுதப்பட்டுள்ளது. அதன்பின், பன்னூறாண்டுகள் கழித்து மாணவர்களுக்காக தெலுங்கில் பாலவியாகரணம் (சின்னயசூரி, 1858) இயற்றப்பட்டது. தொல்காப்பியத்திலும் பாலவியாகரணத்திலும் எச்சவியல் இடம்பெற்றுள்ளது. அவ்வியல்களின் கருத்தியல்களை ஒப்பீடு செய்வதாக இக்கட்டுரை அமைகிறது. [மின்னஞ்சல் முகவரி:
தற்காலத் தமிழின் நவீன இலக்கியப் படைப்பாளிகளில் தனித்துவம் பெற்ற சிறுகதை. கவிதை, இலக்கியப் படைப்பாளியாகத் திகழ்பவர் வண்ணதாசன் என்கிற கல்யாண்ஜி. 1962ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு மாணவனாக எழுதத் தொடங்கிய வண்ணதாசன் தொடர்ந்து 48 ஆண்டுகளாக இயற்கை சார்ந்த மானுட வளர்ச்சிச் சிந்தனைகளைத் தந்து வருகிறார்.
திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் பன்னிரு திருமுறையில் முதல் மூன்று திருமுறைகளாக அமைந்துள்ளன. திருஞானசம்பந்தர் மூன்று வயது குழந்தையாக இருந்தபோது, உமாதேவியாரின் ஞானப்பாலை உண்டு சிவஞானசம்பந்தரானார். அன்று முதல் பாடல்கள் பாடிவந்தாh, இந்நிகழ்வு இறைவன் திருவருளால் நடைபெற்ற ஒன்றாகும். சம்பந்தரின் பாடல்கள் அனைத்தும் உயிர்த்தன்மை உடையவை. ஓதுபவரை ஈடேற்றும் வல்லமை பெற்றது. இறைவன் அருள் பெற்று அருளிய முதல் பதிகத் திருக்கடைக்காப்பில் ‘திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே” என்று கூறுகிறார். சம்பந்தர் தம்முடைய தேவாரத்தில் மக்கள் பிறப்பிறப்பற்று இறைவனை அடைவதற்குரிய வழிகளைக் கூறியுள்ளார். அத்தகைய வாழ்வியல் கூறுகளை இங்கு காண்போம்.
ஒரு மொழிக்கு மொழித்தூய்மை குறித்த சிந்தனை எப்போது வரும்? பிறமொழித்தாக்கம் ஏற்படும்போது தானே! அஃது இராண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தொல்காப்பியருக்குத் தோன்றிற்று. தோன்றியதின் காரணம் அவர்கால மொழிச்சூழல் எனலாம். அவர் காலத்தில் வடக்கேயிருந்து வந்த சொற்கள் உட்புக முனைந்தன; முனைந்துகொண்டிருந்தன. இதனையறிந்த அவர் அதனை விடுக்க வேண்டும் என எண்ணினார். அது மட்டுமின்றி தம் காலத்திற்குப் பிறகும் பிறமொழித்தாக்கம் விரிந்து நிற்கும் எனவும் அறிந்திருந்தார் போலும். ஆதலின் மொழிக்கான தூய்மைக்கொள்கையை மொழிந்துள்ளார். இக்கொள்கை தமிழ் மொழியை மட்டுமே எண்ணி மொழிந்ததாகத் தெரியவில்லை. திராவிடமொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் போல்வனவற்றிற்கும் அந்நிலை ஏற்படும் என்பதையும் அறிந்து வைத்தது போல் தோன்றுகிறது. அச்சிந்தனை அனைத்துத் திராவிட இலக்கண அறிஞர்களிடமும் காண முடிகின்றது.
மனித இனத்துக்கு எதிராக ஒடுக்குமுறை எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எரித்துப் போராடுவது மனிதனின் இயல்பு என்பதை உலக வரலாறு காலந்தோறும் நிரூபித்துள்ளது. தொடக்க காலம் தொட்டே சமூகத்தின் சரிபாதியான பெண் இனத்தின் மீதான ஒடுக்குமுறை மனிதகுலத்துக்கே அவமானச் சின்னமாக இன்றுவரை இருந்து வருகிறது. போரின் போது முதலாவது பாதிக்கப்படுவதும் பெண், இரண்டாவது பாதிக்கப்படுவதும் பெண் என்ற ஒரு கருத்து உண்டு. போரின் போது பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுதல் என்பது உலக வரலாறு முழுக்க பதிவாகியுள்ளது. இதை ஹிட்லரின் நாசிப்படைகள் முதற்கொண்டு அண்மைய ஈழப்போர் வரையிலும் காணமுடியும். போர்க்காலங்களில் பெண்களை சிறையில் அடைத்து கொடுமை செய்தல், பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்குதல் உள்ளிட்ட கொடுமைகளைச் செய்வது அன்று முதல் இன்று வரை நடைபெற்ற எல்லா போர்களிலும் இந்நிகழ்வுகள் பதிவாகியுள்ளது.
[இக்கட்டுரை சந்தியா பதிப்பகத்தினரால் எழுத்தாளரும், விமர்சகருமான திரு. வெங்கட் சாமிநாதனின் ஐம்பதாவது ஆண்டு இலக்கியப்பணியினையொட்டி அண்மையில் தமிழகத்தில் வெளியிடப்பட்ட 'வாதங்களும், விவாதங்களும்' நூலுக்காக எழுதப்பட்டது. நூலினை பா.அகிலன், எழுத்தாளர் திலீப்குமார், சத்தியமூர்த்தி ஆகியோர் தொகுத்துள்ளார்கள். ] - 'நான் எழுத்தாளனோ, விமர்சகனோ இல்லை' என்று ஆரம்பத்திலிருந்தே பிரகடனப்படுத்தி வருகின்றேன்" (விவாதங்கள் சர்ச்சைகள், பக்கம்263) என்று தன்னைப்பற்றி வெங்கட் சாமிநாதன் கூறிக்கொண்டாலும் இலக்கியம், இசை, ஓவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற கலையின் பல்வேறு துறைகளிலும் ஆழமான, காத்திரமான பங்களிப்பினைச் செய்த கலை விமர்சகர் இவரென்பது மறுக்கமுடியாதவுண்மை மட்டுமல்ல நன்றியுடன் விதந்துரைக்கப்பட வேண்டியதுமாகும். 1960இல் 'எழுத்து' இதழில் வெளியான 'பாலையும், வாழையும்' கட்டுரையின் மூலம் எழுத்துலகிற்குக் காலடியெடுத்து வைத்த வெ.சா.வின் க்லைத்துறைக்கான பங்களிப்பு ஐம்பதாண்டுகளை அடைந்திருக்கிறது. இந்த ஐம்பதாண்டுக் காலகட்டத்தில் 'சாமிநாதனது பேனா வரிகள் புலிக்குத் தன் காடு பிற காடு வித்தியாசம் கிடையாது என்றபடி சகலதையும் பதம் பார்க்கும்' என்னும் சி.சு.செல்லப்பாவின் கூற்றின்படி அனைவரையும் பதம் பார்த்துத்தான் வந்திருக்கிறது. ஒரு சில வேளைகளில் உக்கிரமாகவும் இருந்திருக்கிறது. ஒரு படைப்பாளியின் படைப்பினை ஆரோக்கியமாக விமர்சனத்துக்குள்ளாக்கி அதன் நிறைகளை மட்டுமல்லாது குறைகளையும் எந்தவிதத் தயக்கங்களுமின்றி வெளிப்படுத்தும் வெ.சா. சில சமயங்களில் அவரது விமர்சனங்களை முன்னுரைகளென்ற பெயரில் கேட்கும் சிலருக்கு நேரிடையாகவே மறுத்துமிருக்கின்றார். தனக்குச் சரியென்று பட்டதை, எந்தவிதத் தயக்கங்களுமின்றி, எந்தவித பயன்களையும் எதிர்பார்க்காதநிலையில் , துணிச்சலுடன் எடுத்துரைக்கும் வெ.சா..வின் போக்கு வெ.சா.வுக்கேயுரிய சிறப்பியல்புகளிலொன்று.
தற்போது யுத்தம் முடிவுற்றிருக்கிறது. எப்படி முடிவுற்றதாயினும் அது நல்லதே. யுத்தம் எனப்படுவது தீவிரமாகத் தொந்தரவு தரும் செயற்பாடொன்றென்பதால் அவ்வாறான ஒன்று இல்லாமலிருப்பதே நல்லது. எனினும் அண்மைக்கால அரசின் நிலைப்பாட்டையும் பேரம் பேசும் சக்தியையும் அடையாளத்தையும் தொடர்ந்தும் கொண்டு செல்வது நியாயமான பலத்தினாலல்ல. பொருளாதார பலத்தினாலும் மட்டுமல்ல. ஆயுத சக்தி எனப்படுவது உலக பலத்தைச் சமப்படுத்துவதில் பங்குகொள்ளும் ஒன்றென்பது பூகோள அரசியல் யதார்த்தத்தின் மூலமாகத் தெளிவாகும் ஒன்று. அதி நவீன ஆயுத பலங்களைக் கொண்டிருக்கும் அமெரிக்காவானது, எக் கணத்திலும் தமது சித்தாந்தங்களுக்கு எதிராகச் செல்லும், அதாவது முதலாளித்துவத்துக்கு எதிராகக் கிளம்பும் எந்தவொரு நாட்டின் மீதும் போர் தொடுக்கத் தயாராகவுள்ளது. அவர்கள் யுத்தம் செய்வது தாம் விரும்பும் விதத்தில் நிலத்தையும், நிலத்தில் வாழும் மனிதர்களையும் சுரண்டித் தின்பதற்கேயன்றி, பொதுமகனுக்கு நன்மையைக் கொண்டு வருவதற்காகவல்ல. அதனாலேயே இம் மாபெரும் சக்தி படைத்தவனின் குறிக்கோளை பூலோக அரசியல் சங்கிலியிலுள்ள ஏனைய நாடுகளும் பின்பற்றுவதை உணர்ந்துகொள்ள முடிகிறது. உலகத்தில் உண்மையான சமாதானத்தை உருவாக்க வேண்டுமெனில் அமெரிக்காவானது தனது அணுசக்தியை கைவிட்டு விட வேண்டுமென அருந்ததி ராய் போன்ற செயற்பாட்டாளர்கள் கூறுவது அதனாலேயே. அணுசக்தி ஆயுதப் பாவனை குறித்த பலம்வாய்ந்த கருத்துவேறுபாடு அமெரிக்காவுக்குள்ளேயே இருக்கிறது. அமெரிக்காவின் ஆயுத பலத்தை நேசிப்பவர்கள், அந்த ஆயுத எதிர்ப்பாளர்களை துரோகிகளாகவே அறிமுகப்படுத்துகிறார்கள்.
[சிங்கை நகர் வன்னிப் பகுதியில் இருந்ததாக கலாநிதி குணராசா , கலாநிதி புஷ்பரட்ணம் ஆகியோர் கருதுவார்கள். ஆனால் சிங்கை நகர் வல்லுபுரத்திலேயே இருந்திருக்க வேண்டுமென்பதுதான் இக்கட்டுரையாளரின் கருத்து. நல்லூர் இராஜதானி நகர அமைப்பு ஆய்வின் இரண்டாம் பதிப்பு நூலாக வெளிவரும்போது இந்தக் கட்டுரையும் உள்ளடக்கியே வெளிவரும். இக்கட்டுரை ஏற்கனவே திண்ணை, பதிவுகள் ஆகிய இணைய இதழ்களில் வெளிவந்தது. இப்பொழுது மீள்பிரசுரமாக வெளிவருகிறது ஒரு பதிவுக்காக.. - வ.ந.கி -] சிங்கை நகர் நல்லூர் தமிழரசர்களின் இராஜதானியாக விளங்குவதற்கு முன்னர் விளங்கிய நகர். இதன் இருப்பு பற்றிப் பல்வேறு விதமான ஊகங்கள், கருதுகோள்கள் நிலவுகின்றன. ஒன்றிற்குப் பின் முரண்பாடான ஊகங்கள் ஆய்வாளர்களை மேலும் மேலும் குழப்பத்திலாத்தி வைப்பனவாகவுள்ளன. முதலியார் இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் போன்றோர் வல்லிபுரமே சிங்கை நகராக இருந்திருக்கக் கூடிய சாத்தியங்கள் உள்ளதாகக் கருதுவர். பேராசிரியர் சிற்றம்பலமோ நல்லூரே சிங்கைநகரெனக் கருதுவார். கலாநிதி க.குணராசா, கலாநிதி ப.புஷ்பரட்ணம் ஆகியோர் பூநகரிப் பகுதியிலேயே சிங்கை நகர் அமைந்திருந்ததாகக் கருதுவர். ஆனால் கலாநிதி புஷ்பரடணத்தை மேற்கோள் காட்டி கலாநிதி குணராசா சிங்கை நகர் பூநகரிப் பகுதியில் இருந்ததை வலியுறுத்துவார்.
ஐந்து வருடங்களின் முன்னர் “குமுதம்” வார இதழின் அரசு கேள்வி - பதில் பகுதியில் ஒரு கேள்வி, “ உண்மையில் பாரதி ஒரு நாத்திகரா” என்பதாக கேட்கபட்டிருந்தது. எல்லாம்வல்ல ஒரு இறைவன் இயக்க- தான் தாம் ஒரு கருவியாக செயற்படுவது அல்லாமல், ‘ நான் கிருத யுகம் படைக்க நீ ஆமென் என்று வழிமொழிந்து இரும்’ என்பதுட்பட மக்கள் செயற்பாட்டுக்கான சக்தியாக மட்டுப்படுத்தி கடவுளைக்காட்டும் பாரதி வரிகளை எடுத்துக் காட்டிய பின்னர் - இப்படியெல்லாம் பார்க்கும் போது பாரதியை ஒரு நாத்திகராகவே காண முடிகிறது” என்பதாக அரசின் பதில் அமைந்திருந்தது. தேசிய விடுதலை- சாதியொழிப்பு- பெண்விடுதலை- வறுமைத் தகர்ப்பு – சமத்துவ சமூக படைப்பு என்பவற்றுக்காக மக்களைச் கிளர்ச்சிக் கொள்ள உணர்வூட்டும் படைப்புகளையும் செய்தி வெளிப்பாடுகளையும் எழுதுவதையே தனது தொழில் துறையாகக் கொண்டிருந்தார் பாரதி. கடவுளின் கருவியாக மனிதனை- மனுசியைப் பார்ப்பதை விட்டொழித்து , மனித சக்தியின் கருவியாக கடவுள் உணர்வை மடைமாற்றிவிடும் அவரது பண்பு அவரை முழுமையாக ஆன்மீகவாதியாக தரிசிக்க இடம் தரவில்லை என்பதால் அரசு பதிலில் பாரதி நாத்திகவாதியாகக் காட்டப்படுகிறார்.
தமிழ் இலக்கியங்களைப் பொருத்தவரை சமய இலக்கியங்களை ஒதுக்கிவிட்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றை முழுமைப்படுத்தி எழுத இயலாது. அந்த அளவு இடைக்காலத் தமிழக வரலாற்றை அறிய சமய நூல்கள் துணைசெய்கின்றன. இச்சமய இலக்கியங்களில் நல்ல பயிற்சிபெற்று, இன்று வாழும் அறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் முனைவர் நா.சுப்பிரமணியன் அவர்கள் ஆவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கிப் பல நூறு தமிழ் மாணவர்களை உருவாக்கியவர். தமிழ் சமயம் சார்ந்த அரிய நூல்கள் வரைந்தவர். தமிழகத்திலும் இலங்கை, கனடாவிலும் பேருரைகள் வழியாகத் தமிழ்வளர்ப்பவர். சமயத்தின் ஊடாகத் தமிழ் வளர்க்கும் இந்தச் சான்றோர் இப்பொழுது கனடாவில வாழ்ந்துவருகின்றார். அவர்தம் தமிழ் வாழ்க்கையை இங்கு எண்ணிப்பார்ப்போம். நா.சுப்பிரமணியம் அவர்கள் இலங்கையில் அமைந்துள்ள முள்ளியவளை (முல்லை மாவட்டம்) என்ற சிற்றூரில் பிறந்தவர். பெற்றோர் நாகராசன், நீலாம்பாள்.இவர்களுக்கு இரண்டாவது மகனாக 25-12-1942இல் பிறந்தவர். தமிழகத்தின் தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சார்ந்தவர்களான தந்தையும் தாயும் 1930 ஆம் ஆண்டுகளில் ஈழத்தில் குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சுப்பிரமணியன் அவர்கள் முள்ளியவளையிலுள்ள சைவப்பிரகாச வித்தியாசாலை மற்றும் வித்தியானந்தக் கல்லூரி ஆகியவற்றிலே தமது தொடக்கக் கல்வியையும் இடைநிலைக் கல்வியையும் பயின்றவர். பின்னர் பேராதனையிலுள்ள இலங்கைப் பல்கலைக் கழகத்தில் தமிழைச் சிறப்புப்பாடமாகப் பயின்ற இவர் 1969இல் இளங்கலை சிறப்பு(B.A.Hons)ப் பட்டம் பெற்றவர். தொடர்ந்து அதே பல்கலைக்கழகத்தில் "ஈழத்துத் தமிழ் நாவல்கள்" என்ற தலைப்பில் ஆய்வு நிகழ்த்தி 1972 இல் தமிழில் முதுகலை(M.A)ப் பட்டத்தைப் பெற்றவர். பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் "தமிழ் யாப்பு வளர்ச்சி" என்ற தலைப்பில் ஆய்வு செய்து 1985இல் முனைவர்(Ph.D.) பட்டத்தையும் பெற்றவர். (கி.பி 11ஆம் நூற்றாண்டுக்குப் பின் 19ஆம் நூற்றறாண்டின் இறுதிவரையான காலப்பகுதியின் தமிழ் யாப்பு வளர்ச்சியை நுட்பமாக நோக்குவதாக அமைந்த இவருடைய முனைவர் பட்ட ஆய்வேடானது தேர்வாளர்களால் மிக உயர்வாகப் பேசப்பட்டது.
சங்ககால இலக்கியமான பத்துப்பாட்டினுள் ஒன்றாக விளங்குவது மாங்குடி மருதனார் இயற்றிய மதுரைக்காஞ்சியாகும். இந்நூல் எழுநூற்று எண்பது அடிகளை உடைய நெடும்பாடலாகும். இப்பாடலில் சங்ககால அறங்கள் எடுத்துரைக்கப் பெறுகின்றன. அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற நால்வகை வருணத்தாருக்கு உரிய அறங்கள், சமண, பௌத்த மதத்தோருக்கான அறங்கள், அறத்தைக் காக்கும் குழுக்களின் செயல்பாடுகள். பெண்களுக்கு உரிய அறங்கள் ஆகியன தெளிவு பட எடுத்துரைக்கப் பெற்றுள்ளன. இக்கருத்துகளின் முலம் சங்ககால அறங்கள் பற்றிய தெளிவினைப் பெற முடிகின்றது.
பேராசிரியர் கைலாசபதி அவர்களின் 29 வது நினைவு தினம் டிசெம்பர் 6.2011. எமது தெற்காசிய சூழலில் செப்டம்பர் 26 என்பது அண்மைக் காலத்தில் வேறொரு வகையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியாவில் முஸ்லீம் தீவிரவாத தாக்குதலின் நினைவு கூரலுக்குரியது அது. சர்வதேச ரீதியாக செப்டம்பர் 11 என்பது இதுபோல முக்கியத்துவம் பெற்றுள்ளமையை அறிவோம். உலக மேலாதிக்க வாத நாடான அமெரிக்க மீது முஸ்லிம் தீவிர வாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நாள் செப்டம்பர் 11. எமது பிராந்திய மேலாதிக்கவாத நாட்டுக்கும் உலக மேலாதிக்கவாத நாட்டுக்கும் முஸ்லிம் தீவிரவாதம் பிரதான அச்சுறுத்தலாக மாறியுள்ள சூழலில் , இனி உலக செல்நெறி வர்க்க மோதலாக அன்றிப் பண்பாட்டு மோதலாகவே அமையும் , என்ற தர்க்கமும் முன்வைக்கப்பட்டு வருவதை அறிவோம். இலங்கையில் சிங்கள- தமிழ் -முஸ்லிம் -மலையக தேசியவாதப் பிளவில் சமூக வேறுபாடுகள் வலுபெற்றுள்ளது. தமிழியல் இன்று அதிகம் கரிசனைகொல்வதாக வர்க்க அக்கறை இன்றி தலித்தியம் ,பெண்ணியம் ,தேசிய இனப்பிரச்சனை என்பனவே மேலோங்கி உள்ளன.
நூறு ஆண்டுகளுக்கொரு முறைதான் மகாகவிகள் தோன்றுகிறார்கள். இந்திய இலக்கிய வரலாற்றில் ஒரே காலக்கட்டத்தில் இரு மகாகவிகள் கவியாட்சி புரிந்தார்கள் என்றால் அவரகள் மகாகவி பாரதியம் தாகூரும்தான். எளிய சந்தம். எளிய மொழிநடை, எளிய மக்கள் என்பதாக எழுதி நாட்டிலும், சமுதாயத்திலும், படைப்பிலக்கிய வடிவத்திலும் மாற்றத்தைக் கொண்டு வந்த பாரதி. அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குச் சமமாக இந்திய இறையியலை உலகமொழியில் மொழிபெயர்த்துக் கீதாஞ்சலிசெய்து நோபல்பரிசினைத் தட்டி வந்த இரவீந்திரநாத் தாகூர் ஆகிய இருவரின் கவிதைகளை ஒப்பிடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர், பத்து ஆண்டுகளைச் சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராகவும் உயர்ந்து, தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்ட பெருமகனார் தான் ஜீவா என்ற ஜீவானந்தம் ஆவார். கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவா அவர்கள் பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தார். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்யப் பாடல்கள் பலவற்றைப் பாடினார். பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ்ப் பண்பாட்டுடன், கட்சியை வளர்த்த பெருமை ஜீவாவையே சாரும். இத்தகைய பெருமைக்குரிய ஜீவா என்ற ஜீவானந்தம் நாகர்கோயிலை அடுத்த பூதப்பாண்டி என்ற கிராமத்தில் 1907-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 21-ஆம் தேதி, பட்டப்பிள்ளை-உமையம்மாள் ஆகியோரின் மகனாகப் பிறந்தார். அவருக்கு பெற்றோர் ஐயனார் என்ற கிராம தெய்வத்தின் பெயரான சொரிமுத்து எனும் பெயரை இட்டனர்.
ஈழத்தமிழர்களின் யாழ்ப்பாண அரசர்களின் காலத்தில் இராஜதானியாகத் திகழ்ந்த நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு எவ்விதம் இருந்திருக்கலாமென்பதை வரலாற்று நூல்கள், வெளிக்கள ஆய்வுகள் (Field Work) , தென்னிந்தியக் கட்டடக் கலை நூல்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில் விளைந்த தர்க்கத்தின் அடிப்படையில் உய்த்துணர முயன்றதின் விளைவாக உருவானதே இந்த நூல். இதன் முதற்பதிப்பு ஏற்கனவே 1996 டிசம்பரில் ஸ்நேகா (தமிழகம்) மற்றம் மங்கை பதிப்பகம் (கனடா) ஆகிய பதிப்பகங்களின் கூட்டு முயற்சியாக வெளிவந்திருந்தது. இது பற்றிய மதிப்புரைகள் கணயாழி, ஆறாந்திணை (இணைய இதழ்) மற்றும் மறுமொழி (கனடா) ஆகிய சஞ்சிகை இணைய இதழ்களில் வெளிவந்திருந்தன. இலங்கையிலிருந்து கே.எஸ்.சிவகுமாரன் இலங்கையிலிருந்து வெளிவரும் 'டெய்லி நியூஸ்' பத்திரிகையில் இதுபற்றியதொரு விமரிசனத்தை எழுதியிருந்தார். ஈழத்திலிருந்து வேறெந்தப் பத்திரிகை, சஞ்சிகைகளில் இதுபற்றிய தகவல்கள் அல்லது விமரிசனங்களேதாவது வந்ததாயென்பதை நானாறியேன். இருந்தால் அறியத்தாருங்கள் (ஒரு பதிவுக்காக).

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









