பேராசிரியர் கைலாசபதி அவர்களின் 29 வது நினைவு தினம் டிசெம்பர் 6.2011. எமது தெற்காசிய சூழலில் செப்டம்பர் 26 என்பது அண்மைக் காலத்தில் வேறொரு வகையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியாவில் முஸ்லீம் தீவிரவாத தாக்குதலின் நினைவு கூரலுக்குரியது அது. சர்வதேச ரீதியாக செப்டம்பர் 11 என்பது இதுபோல முக்கியத்துவம் பெற்றுள்ளமையை அறிவோம். உலக மேலாதிக்க வாத நாடான அமெரிக்க மீது முஸ்லிம் தீவிர வாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நாள் செப்டம்பர் 11. எமது பிராந்திய மேலாதிக்கவாத நாட்டுக்கும் உலக மேலாதிக்கவாத நாட்டுக்கும் முஸ்லிம் தீவிரவாதம் பிரதான அச்சுறுத்தலாக மாறியுள்ள சூழலில் , இனி உலக செல்நெறி வர்க்க மோதலாக அன்றிப் பண்பாட்டு மோதலாகவே அமையும் , என்ற தர்க்கமும் முன்வைக்கப்பட்டு வருவதை அறிவோம். இலங்கையில் சிங்கள- தமிழ் -முஸ்லிம் -மலையக தேசியவாதப் பிளவில் சமூக வேறுபாடுகள் வலுபெற்றுள்ளது. தமிழியல் இன்று அதிகம் கரிசனைகொல்வதாக வர்க்க அக்கறை இன்றி தலித்தியம் ,பெண்ணியம் ,தேசிய இனப்பிரச்சனை என்பனவே மேலோங்கி உள்ளன.
இத்தகைய சூழலில் கைலாசபதியின் வர்க்கபார்வை சார்ந்த சிந்தனை முறை பொய்த்துப் போய் விட்டதா? தமிழியலை வர்க்க அடிப்படையில் அணுகி புதிய பார்வைகளை வெளிகொனர்ந்ததில் அவர் முன்னோடியாக அமைந்த அம்சங்கள் வேண்டபடாதவையாக ஒதுக்கத்தக்கனவா? இல்லை! அவரது ஆய்வு முறையியல் இன்னும் வலுமையாக கற்றரியப்பட்டு வளர்தெடுக்கப்படுவது வாயிலாக மட்டுமே இன்றைய குழப்பமான சூழல் கடக்கப்பட்டு மக்கள் விடுதலை எட்டப்பட இயலும் என்ற நிதர்சனமே மென்மேலும் உறுதிப்பட்டு வருகிறது. கைலாசபதி வர்க்க பார்வை என்ற முட்டு சந்தில் முடங்கிப்போய் சாதி , தேசம் பற்றிய ஏனைய சமூகப் பிரச்சனைகளை புறந்தள்ளியவர் என்ற குற்றசாட்டு முன்வைக்கப்படுவதுண்டு. அவரை முழுமையாக அணுக முயலாமல் சொல்லப்படும் அபாண்டம் அது.
இன- மத- சாதி- பாலின பேதங்கள் கடந்து ,உற்பத்திஉறவில் சொத்துடையோர்க்கு எதிராக இழப்பதற்கு எதுவுமற்ற பாட்டாளி வர்க்க சக்திகள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் போராட்டம் வாயிலாக சமத்துவ சமூகம் படைக்கப்பட இயலும் . அத்தகைய புதிய உலகம் ஒன்றில் இன-மத- சாதி -பாலின பேதங்கள் தகர்க்கப்பட்டு "எல்லோரும் ஓர்நிறை, எல்லோரும் ஓர்விலை எல்லோரும் இந்நாட்டு மன்னர்" எனும்நிலை சித்திக்கும் எனக் கைலாசபதி வலியுறுத்தி வந்தார் என்பது உண்மைதான்.அதற்காக இன-மத -சாதி-பாலின பேதங்கள் சார்ந்த சமூகப் பண்பாட்டு மோதல்களை அவர் கவனம் கொள்ளாதுவிட்டார் என்பது பொருளில்லை. இவ்விடயத்தில் இலங்கை நிலைவரத்தில் இருதினங்கள் வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளன.அவற்றில் அவரது நிலைப்பாட்டினை அறியும்போது மட்டுமே அவரது வரலாற்றுப் பங்களிப்பினை முழுமையாக விளங்கிக் கொள்ளமுடியும். அவை ஒக்ரோபர் 21 மற்றும் மே 18 . சாதி முறை தகரட்டும் சமத்துவ நீதிஒங்கட்டும் என்ற முழக்கத்துடன் 1966 ஒக்ரோபர் 21 எழுர்ச்சி ஊர்வலம் முட்டிய தீச்சுவாளையிளிருந்து தீண்டாமைக் கொடுமையின் அடிப்படைகளை தகர்க்க இயலுமாயிற்று.முதலாளித்துவ ஜனநாயகத்தை வேன்றேடுக்கவேண்டுமாயின் முதலில் தீண்டாமை எனும் அநாகரிகம் ஒழிக்கப்பட்டு சாதிகளிடையே சமத்துவம் பேணப்படுதல் அவசியம்.இந்த முதல்படி சாத்தியமானால் புனிதமான ஏதாயினும் சாதி அல்லது சாதிகள் என்றகருத்தியல் தகர்க்கப் படுவதற்கான தடை அகலும்.அதற்கான வாய்ப்பை ஒக்ரோபர் 21 மார்க்கம் வகுத்துத் தந்தது.அதன் வழியை வளர்த்து எடுத்தது."தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் " . தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் முதல் மாநாடு 1969 இல் இடம் பெற்றது. சாதியத் தகர்ப்பு போராட்டத்தை ஒருமுகப் படுத்தி வலி ப்படுத்துவதாய் அது அமைந்தது.மாநாட்டு சிறப்புமலர் இந்தக் கைங்கரியத்தை சிறப்பாக செய்திருந்தது. சாதியத் தகர்ப்பு போராட்டத்தை ஆரம்பம் முதலாக ஆதரித்து வந்த க.கைலாசபதி இம்மாநாட்டு மலருக்கு அரியதொரு கட்டுரையை வழங்கி இருந்தார்."சாதிப் பிரச்சினை அடிப்படையில் ஒரு தேசியப் பிரச்சினை "எனும் அதிமுக்கியத்துவம் மிக்க கருத்தினை அக் கட்டுரையில் வலியுறுத்தியிருந்தார்.
ஒடுக்கப் பட்ட மக்களின் பண்ணை அடிமைத் தனத்தை தகர்க்கும் தேசியப் பிரச்சினைக்கு எதிராக வெறும் மொழிவெறியை தமிழின தேசியப் பிரச்சினையாக காட்டமுயன்ற ஆளும் சாதித் தேசியம் அன்றைய மக்கள் விடுதலை செல்நெறிக்கு எதிராக இயங்கியது. ஆக, ஒடுக்கப் பட்ட மக்களின் தேசியம் ,எதிர் ஆளும் சாதித் தேசியம் என்ற இரட்டைத தேசிய நிதர்சனமுடையது எமது வரலாறு என்பதைக் கண்டறியும் வண்ணம், வளர்த்து எடுக்கத் தக்கதாக க.கைலாசபதியின் "சாதிப்பிரச்சினை அடிப்படையில் ஒரு தேசியப் பிரச்சினை "எனும் கருத்து அமைந்துள்ளது.
ஆளும் சாதித் தேசியத்தின் அகங்காரம் பிறர் எனக் கருதப் படுவோரை தீண்டாமை நோக்கில் புறந்தள்ளி ஐக்கியப்படுத்தத் தவறுவதால் எத்தகைய அவலத்துக்கு உள்ளாகும் என்பதற்கான இலங்கை அனுபவம் மே 18.ஒன்பது நாடுகள் கூட்டாகச் சேர்ந்து ஒருவனைக் கொலைபண்ணுவது வீரமல்ல; துரோகம்" எனப் புலம் பெயர் நாடுகளில் பணம் பறிக்க வசனம் எழுதுகிறவர்கள் தொடரும் அவலத்தில், குளிர் காய்பவர்கள் சொந்த மக்களையும் "ஒன்பதுனாடுகளையும்" பகைத்துத் தனிமைப்பட்டு ,போராட்டம் பெறு பேற்றைக் கழித்தல் பெறுமானத்திற்கு இட்டுச் சென்ற கருத்தியல் பலவீனங்களை அவர்கள் கவனத்தில் கொள்ளப் போவதில்லை. மக்கள் விடுதலையை நேசிக்கிறவர் மே 18 இன் படிப்பினையைக் கற்பது அவசியம்.
அந்த ஆளும் சாதிப் பண்பு மேவிய தமிழ் இனவாத தேசியத்தை க.கை. ஒரு போதும் ஏற்றவரல்ல.அதேவேளை அதிகார வர்க்க -ஆளும் சாதி எதிர்ப்புடன் மக்கள் நல நாட்டமுள்ள தமிழ்த் தேசியம் எழுச்சி கொள்ள இருந்த வாய்ப்பை அவர் ஆதரித்துள்ளார். தமிழார் விடுதலைக் கூட்டணியின் ஆளும் சாதி -அதிகார வர்க்க தமிழினவாத தேசியத்திற்கு இளைஞர் எழுச்சியை வேண்டிநிற்பவராக அவர் இருந்தார். அதற்கான அரும்பு நிலை தோன்றிய 1982 இல் அவர் மறைந்தார். முன்று வருடங்களுக்குள் அந்த அரும்பு நிலையம் கருகிப் போனது.
அந்த அரும்பு நிலை வளர்ச்சி கண்டு மார்க்சிய வழியில் தமிழ்த் தேசிய வரலாற்றை முன்னெடுத்து இருப்பார்களாயின் ஒக்ரோபர் 21 எழுச்சி மார்க்கத்தைக் கற்றிருப்பார். சாதி முறையைத் தகர்க்கும் அந்தப் போராட்டத்தில் எந்த ஒரு சாதியையும் எதிரிச் சாதியாக கட்டமைக்கப் படவில்லை. பிராமணரை அல்லது ஆளும் சாதியினரை எதிரிச் சாதியாக கட்டமைக்கும் இந்தியப் போராட்ட வழிமுறைகள் இறுதியில் தோல்விகளைத் தழுவுகின்றன. இந்த 'எதிரிச் சாதி ' என்ற தேடல் அருகில் உள்ள ஐக்கியத்துக்குரிய சாதியை எதிரியாகக் காண வழிப்படுத்துவதால் ஒவ்வொரு தனித்தனி சாதிகளுமே அங்கு போராட வேண்டியுள்ளது. தலித்திய வாதம் எழுச்சி கொள்ளத் தொடங்கி ஏறத்தாள முன்று தசாப்தங்கலாகியும் தமிழகத்தில் குறைந்த பட்சம் தலித்சாதிகள் இரண்டை எனும் ஐக்கியப் படுத்தி ஒரு அமைப்பை உருவாக்க இயலவில்லை. மாறாக,ஒக்ரோபர் 21 எழுச்சி மார்க்கம் ஆளும் சாதியினரான வேளாளரையும் ஐக்கியப்படுத்தி தீ-ஒழிப்பு -வெகுஜன இயக்கம் ஐக்கியக் கட்டமைத்துத் தனது இலக்கை வெற்றிகண்டது. சாதிப் போராட்டம் ஒன்றை சாதிகளுக்கிடையே ஆனதாய் ஆகாமல், விடுதலை உணர்விற்கான திசை வழிகளில் முன்னெடுக்க இயலுமானதாக ஆக்கியது எப்படி? அங்கே தான் மார்க்சியம் பயனுள்ள சிந்தனை முறையாக அமைந்தது .வர்க்க அணுகுமுறையில் சமூக மாற்ற போக்கின் ஓரங்கமாக சாதிதகர்ப்பு போராட்டத்தை முன்னேடுத்தமையால் சாதிகளுக்கிடையேயான மோதலாக அல்லாமல் ஆரோக்கியமான திசையில் வளர்தெடுக்கப்பட்டது .அதன் வளர்ச்சியாக இரட்டைத் தேசிய கோட்பாட்டை வந்தடைய இயலுமாயிற்று.
மட்டுமன்றி ,சமூக ஏற்றத்தாழ்வு ஐரோப்பாவைப் போன்று ,வர்க்கப்பிளவால் மட்டுமே ஏற்ப்பட்டதில்லை; எமக்குரியதான ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சுரண்டும் ஆளும் சாதி வரலாறு தனித்துவமானது என்பதையும் கண்டறிய முடிந்தது. இங்கு ஆளும் சாதிகளுக்கிடையேயான சமூக மாற்றம் பண்பாட்டுப் புரட்சிகள் வாயிலாகவே சாத்தியமாயின. செட்டி பனியா அதிகாரத்தை ஏற்படுத்திய பௌத்த - சமண எழுர்ச்சிக்கான புரட்சி வணிக ஆதிக்க சமூக அமைப்பைக் கட்டமைத்தது; சைவ- வைணவ பக்தி பெரியக்கப் புரட்சி வெள்ளாளர்- பிராமணர் போன்ற நிலப்பிரபுத்துவ சாதிகளது அதிகாரத்தைக் கட்டமைத்தது. இனியும், ஐரோப்பாவில் போல அரசியல் புரட்சியைத் தேடிக்கொண்டிருக்காமல் பண்பாட்டுப் புரட்சியை முன்மைப் படுத்தும் அரசியல் செல்நெறியைத் தேடவேண்டியவர்கலாகவே இருக்கிறோம்.
"பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும்", "அடியும் முடியும்" , "ஒப்பியல் இலக்கியம்" என்ற நூல்கள் வாயிலாக எமது வரலாற்றுப் போக்கின் தனிப் பண்புகளை எடுத்துணர்த்திய க. கை ., தீ ,ஒ ,வெ, இ மலர்க் கட்டுரை வாயிலாக மேலும் வளர்த்தெடுக்கப்பட இயலுமான சிந்தனை முறையை வழங்கிச் சென்றார். சாதி சமூகமாயினும் ,சாதிய (தலித்திய) சிந்தனை முறை அழிவுகளைத் தரும் என்பதற்கு இந்திய அனுபவங்கள் நிறைய உண்டு; மாறாக சாதித் தகர்ப்பு போராட்டத்தை வர்க்கப் பார்வையில் முன்னேடுத்தமையால் ,இலங்கையில் பெற்ற அனுபவம் மார்க்சியப் பிரயோகத்திலான வளர்ச்சியைக் குறிப்பதாகும்.
இன்றும்கூட ஏற்றத் தாழ்வுச் சமூக உருவாக்கத்தை வர்க்க முறையில் மட்டுமே காண்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மார்க்ஸ்- லெனின் -மாவோ சேதுங் ஆகியோர்களது வசனக்கள் மீற இயலாத பக்தி விசுவாசத்துக்கு உரியன என அழுங்குப் பிடியாக இருப்பார். மாறாக மார்சிய -லெனினிச -மாவோ சேதுங் சிந்தனை வாயிலான ஆய்வுநெறி ,பகவத்கீதையோ ,பைபிளோ போன்ற புனித நூல் வகைப் பட்டதல்ல. மாறிவரும் சூழலுக்கும், வரலாற்றுக் கட்டத்துக்கும் ஏற்றதாக வளர்த்தெடுத்துப் பிரயோகிகப்படவேண்டிய சிந்தனை முறை அது.
மார்க்சியத்தைத் தேங்கிப் பாசி படரும் குட்டையாக அன்றி வார்ந்தோடும் நிரூடையாக அர்தப்படுத்திய கைலாசபதியின் சிந்தனைக் கருவூலங்களைக் கற்றுச் செயலாற்றும் வகையில் வளர்தெடுத்துப் பிரயோகிக்கும் போது எமக்கான தேசிய- இன -சாதிய- பாலின -வர்க்கப் பிரச்சனைகளை வெற்றிகொண்டவர்களாவோம்!!!
அனுப்பியவர்: லெனின் மதிவானம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.