தாய் நாட்டிலிருந்து பொருள் ஈட்டுவதற்காக வெளிநாடுகளுக்குச் செல்பவா்களுக்கு வாழ்க்கையில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக குடும்பத்தை பிரிந்து வாழ்வதால் உறவினரின் சுக துக்கங்களில் பங்கு கொள்ள முடியாமல் தவிர்ப்பதையும் அதனால் ஏற்படும் இன்னல்கள் குறித்தும் வெளிநாட்டிற்குச் சென்று சரியான வேலையாக அமைந்து பொருளீட்டி மாதம் தவறாமல் வீட்டிற்கு பணம் அனுப்புவதால் வீடு வளம் பெறுவதைப் பற்றியும் ஹிமானா சையத் தம் சிறுகதைகளில் உணர்வுப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளார். மேற்கண்டவற்றை விரிவாக ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஹிமானா சையத் சிறுகதைகளில் அதிகமாக வெளிநாட்டில் பணிபுரிவோரின் வாழ்வியல் சிக்கல்கள் கதைக்கருவாகக் காணப்படுகின்றன. இதற்கு அவரே பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்.
“ஒரு நூலை வெளியிடும் போது அந்த நூலின் வெற்றி விற்பனை சார்ந்ததாக இருக்கிறது. அப்படி பார்க்கும் போது இதுவரை வெளிவந்த என் நூல்களில் சுமார் ஐம்பது சதவீதம் அரபுநாடுகள், புருனை, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் உள்ள தமிழ் வாசகா்களால் வாங்கப்பட்டுள்ள உண்மை தெரிகிறது. எனவே என் சிறுகதைத் தொகுதிகளில் இந்தச் சகோதரா்களுக்காக அவா்களது வாழ்க்கையை மையமாகக் கொண்டு நான் எழுதிய கதைகளைச் சேர்ந்தாக வேண்டிய புரிந்துணா்வும் கடமை சார்ந்ததாகி விடுகிறது ”1
என்பதாக “உங்களோடு ஒரு நிமிடம்…” என்னும் பகுதியில் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பின் மீதான மோகம்
கல்வியின்மை, வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, குறுகிய காலத்தில் அதிகமாகப் பொருளீட்ட வேண்டும் என்ற பேராசை ஆகியவை வெளிநாட்டு வேலைவாய்ப்பைத் தூண்டுகின்றன. கல்வியிலும் பொருளாதாரத்திலும் பெரிதும் பின்தங்கியுள்ள முஸ்லிம் சமுதாய மக்களை இந்தச் சமூக அவலம் பெரிதும் வாட்டுகிறது. ‘பாதை’ என்னும் கதையில் கபீர் என்பவரின் மனம் வெளிநாட்டு வேலை வாய்ப்பினை வட்டமிடுவதை ஹிமானா சையத்,
“உள்நாட்டில் இருந்து கொண்டு இதைச் செய்வதை விட சில ஆண்டுகள் வெளிநாடு சென்று திரும்ப வேண்டும் என்பதைச் சுற்றியே மனம் வட்டமிட்டுக் கொண்டிருந்தது ”2
எனக் காட்டுகிறார்.
பணிச்சிக்கல்
வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்பவர்களின் துயர வாழ்க்கை மற்றும் அவா்களின் வேலையின் கடினம் பற்றி ‘முதிர்ச்சி’ என்னும் கதையில் காலித் என்பவன் கடின வேலைகள் பழகாமல் வந்து சிரமப்படுவதை அறையில் தங்கியிருக்கும் கபீர் என்பவா் நினைத்துப்பார்ப்பதாக ஹிமானா சையத் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
“துபை நகரை அடுத்த சோனாப்பூர் கேம்ப்பில் அவா்கள் தங்கியிருந்தார்கள். முப்பத்தைந்து கிலோ மீட்டருக்கப்பால் கட்டுமானப் பணியில் வேலைக்குச் சென்று திரும்ப வேண்டும். ஷிஃப்ட் வேலை மாறிமாறி டியூட்டி போடுவார்கள். சூப்பா்வைசர் ஜெய்லானி பக்கத்து ஊா்க்காரா் கொஞ்சம் அனுசரித்து டியூட்டி போடுவார். அதிலும் காலித் கொஞ்சம் படித்தவன். இந்த மாதிரி கடின வேலைக்கெல்லாம் பழகாதவன். ஏதோ ஒரு நிர்பந்தத்தில் இந்த வேலைக்கு வந்திருக்கான் என்பது தெரியும்”3
என்பதன் வழி உணர்த்துகிறார்.
பிரிவுத்துயர்
உறவினா்கள், சொந்தஊர், சொந்தநாடு ஆகிய அனைத்தையும் விடுத்து அயல்நாடுகளில் பிழைப்புத்தேடி செல்லும் பெரும்பாலோரைப் பிரிவுத்துயர் என்னும் சிக்கலே பெரிதும் பாதிக்கிறது. ‘பொறுமை’ என்னும் கதையில் மர்சூக் என்பவன் மனைவி பிள்ளைகளைப் பிரிந்து கடினமாக உழைத்து வருவதை,
“எட்டுமணி நேர வேலை முடிந்ததும் பரபரப்பாக அஜ்மானுக்குத் திரும்பி, குளித்து சாப்பிட்டு விட்டு, இன்னொரு தனியார் கம்பெனி கோடௌனில் சென்ட்ரி வேலை, நியாயமான வருமானம், கடன்கள் ஓரளவு தீர்ந்துவிட்டன. பூர்வீகக் காலி மனையில் வீடுகட்டும் பணியையும் தொடங்கியிருந்தான் அதனாலேயே இரண்டாண்டுகள் முடிந்தவுடன் கிடைத்த விடுமுறையைக் கூட பயன் படுத்திக் கொள்ளமால் பணியில் தொடர்ந்து இருந்தான். வீட்டு நினைவு அடிக்கடி, மனைவி பிள்ளைகள் சர்வசதா காலமும் மனதில் வலம் வந்து கொண்டிருந்தார்கள்”4 என்ற வரிகளில் சுட்டுகிறார் ஹிமானா சையத்.
வெளிநாட்டு வேலையினால் பொருளாதார முன்னேற்றம்
வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று சரியான வேலையில் அமர்ந்து பணம் சம்பாதித்து மாதம் தவறாமல் வீட்டிற்கு பணம் அனுப்புவதால் வீடு வளம் பெறுவதைப் பல கதைகளில் ஹிமானா சையத் குறிப்பிடுகிறார். ‘அன்புள்ள அம்மா’ என்னும் கதையில் ராஸிக் தன் தாய்க்கு கடிதம் எழுதும் போது வெளிநாட்டு வாழ்க்கையால் பெற்ற பயனை,
“அந்த உழைப்பின் பயனாக நம் அவலங்கள் மறைய ஆரம்பித்தன. ஒத்திக்கு வைத்த நன்செய் நம்மிடமே திரும்பியது. அடமானத்தில் கிடந்த அட்டியல் மீண்டு வந்தது… நம்பழைய வீடு புதிய தோற்றம் பெற விலகிப்போன நமது சொந்த பந்தங்கள், திடீரென விழித்துக்கொண்டு உன்னைச் சுற்றி வர - ஊரிலுள்ள பணக்காரா்கள் எல்லாம் உன்னிடம் மாப்பிள்ளை கேட்டு தூது அனுப்ப – சும்மா சொல்லக்கூடாது நீ மகிழ்ச்சியின் உச்சியின் நின்றாய்”5
என்ற வரிகளில் வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்ததால் உள்நாட்டில் ராஸிக் வாழ்வில் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறுகிறார் ஹிமானா சையத்.
வெளிநாட்டு வாழ்க்கையில் உருவாகும் சிக்கல்கள்
வெளிநாடு செல்பவர்கள் அங்கேயே திருமணம் முடித்துக் கொள்கின்றனர். அதனால், தமிழ்நாட்டின் மீதான பற்று குறைகிறது. ‘பெற்றகடன்’ என்னும் கதையில் யூசுப் அலி என்பவன் வெளிநாட்டில் சீனப் பெண்ணைத் திருமணம் முடித்துக்கொண்டு தன் தாயைக் கவனிக்காமல் இருப்பதை ஹிமானா சையத்,
“அப்படிப்பட்ட ஒரு தாயின் துடிப்பை உணராது ஏதோ ஒரு சீனப் பெண்ணை மணந்து கொண்டு கண்காணாச் சீமையில் அவன் வாழ்கின்ற சிறப்பான வாழ்வு எந்த வகையைச் சோ்ந்து என்பது அருக்குப் புரியவில்லை மாதா மாதாம் பணம் அனுப்பிவிட்டால் மட்டும் போதும் பெற்ற கடமை முடிந்துவிட்டது என்ற அவனது கணிப்பு எவ்வளவு கொடுமைனயாது?“6 என்ற வரிகளில் சுட்டுகிறார்.
வீண் செலவு
வெளிநாட்டில் கணவன் சிரமப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை வீட்டிலுள்ள பெண்கள் கண்டபடி வீண்செலவு செய்வதால் ஏற்படும் நிலை குறித்து ‘நிதானம்’ என்னும் கதையில் மரியம் மூலம் குறிப்பிடுகிறார் ஹிமானா சையத்.
“இந்த ஹமீதாவுக்கு எத்தனை தடவை உதவி செய்திருக்கிறேன்! ஆயிரம் ஆயிரமாய் அவர் அனுப்பும் போது எத்தனை பேர் வந்து கைமாத்து வாங்கிப்போவார்கள்?
பணம் நிறைய வரும்போதெலாம் கண்டபடி அள்ளி இறைக்காமல் கொஞ்சம் சேமித்து வைத்திருந்தால் இப்பொழுது வசதியாக இருந்திருக்குமே என்று இப்போது தான் ஞானோதயம் வருகிறது”7 என்ற வரிகள் மூலம் பணத்தை வீண்விரயம் செய்வதால் ஏற்படும் நிலையை குறிப்பிட்டுள்ளார் ஹிமானா சையத்
இதுகாறும் கூறியவற்றான் வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று பல துன்பங்களை அனுபவித்தாலும் தம் குடும்ப பொருளாதாரம் முன்னேற்றம் அடைவதை நினைத்தும், தாயகம் திரும்பி குடும்பத்தினரை நேரில் சந்திக்கும் போது தாங்கள் அடைந்த பிரிவுத்துயா் போன்ற துன்பங்களை மறந்து இன்பம் காண்கின்றனா். என்பது இக்கட்டுரையின் வாயிலாக அறியப்படுகின்றது.
அடிக்குறிப்புகள்
1. ஹிமானா சையத், பெருநாள் சட்டை, ப.209
2. மேலது, ருசி, ப.128
3. மேலது, பெருநாள் சட்டை, ப.181
4. மேலது, பெருநாள் சட்டை, ப.88
5. மேலது, ருசி, பக். 191-192
6. மேலது, விருந்து ப.15
7. மேலது, சிங்கப்பூர் சேலை ப.32
துணை நூற்பட்டியல்
1. ஹிமானா சையத் விருந்து
மல்லாரி பதிப்பகம்,
சித்தார் கோட்டை, இராமநாதபுரம்.
முதற் பதிப்பு- ஜனவரி 1990
2. ஹிமானா சையத் ருசி
மல்லாரி பதிப்பகம்,
சித்தார் கோட்டை, இராமநாதபுரம்.
முதற் பதிப்பு- ஜனவரி 1990
3. ஹிமானா சையத் பெருநாள் சட்டை
மல்லாரி பதிப்பகம்,
சித்தார் கோட்டை, இராமநாதபுரம்.
முதற் பதிப்பு- நவம்பர் 1997
4.ஹிமானாசையத் சிங்கப்பூர்சேலை
மல்லாரி பதிப்பகம்,
சித்தார் கோட்டை, இராமநாதபுரம்.
முதற் பதிப்பு- 1998
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
* கட்டுரையாளர்: - அ.அஸ்கா், உதவிப்பேராசிரியா், பகுதி நேர முனைவா் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி (தன்னாட்சி), வாணியம்பாடி 635 752
635 752
-