பயணியின் பார்வையில் - அங்கம் 23: தமிழர் வாழ்வியலோடு இணைந்த சடங்குகளை பதிவுசெய்திருக்கும் எதிர்மன்னசிங்கத்தின் ஆய்வு
இந்த அங்கத்தை எழுதுவதற்கு அமர்ந்தபோது, எனக்கு சிறுவயதில் பாட்டி சொன்ன கதையொன்று நினைவுக்கு வந்தது. நான் பிறந்தது வீட்டில். எங்கள் அம்மா தனது ஐந்து பிள்ளைகளையும் வீட்டில்தான் பெற்றார். அதேபோன்று எனது அக்காவும் தனது நான்கு குழந்தைகளையும் வீட்டில்தான் பெற்றார். மருத்துவச்சி வந்து பிரசவம் பார்த்த காலத்தில் நாங்கள் பிறந்தோம். இன்று நிலைமை அப்படியல்ல. நான் பிறந்து, எனது அழுகுரல் கேட்டவுடன் எங்கள் தாத்தா ( அம்மாவின் அப்பா) வீட்டின் கூரையில் ஏறி ஓடுகளைத் தட்டி சத்தம் எழுப்பினாராம். ஆண்குழந்தை பிறந்ததால் அவ்வாறு செய்ததாக பாட்டி எனக்குச்சொன்ன காலத்தில் 1966 ஆம் ஆண்டு எங்கள் அக்காவுக்கு ஆண்குழந்தை முதலில் பிறந்தது. அன்று காலை நான்தான் மருத்துவச்சியை அழைத்துவந்திருந்தேன். குழந்தையின் குரல் கேட்டதும், பாட்டிதான் அறையிலிருந்து முதலில் வெளியே வந்து " ஆம்பிளைப்பிள்ளை" என்றார்கள். உடனே நான் " பாட்டி கூரையில் ஏறி தட்டவா..? " எனக்கேட்டேன். பாட்டியும் என்னை வீட்டின் கேற்றில் ஏற்றிவிட்டார்கள். அதில் ஏறி ஷெரிமரத்தில் கால்வைத்து, கூரைக்குச்சென்று ஓட்டிலே தட்டி ஒரு ஓடையும் உடைத்துவிட்டேன். அதன் பிறகு பாட்டி என்னிடம் ஒரு காகிதமும் பென்ஸிலும் கொடுத்து ( பாட்டிக்கு எழுதத்தெரியாது, கைநாட்டுத்தான்) இவ்வாறு எழுதச்சொன்னார்கள். " பாலகிரிதோசம் இன்றல்ல நாளை" அந்தத்துண்டை வீட்டின் வாசல்கதவு நிலையில் வெளிப்புறமாக ஒட்டினார்கள். அதேபோன்று மற்றும் ஒரு துண்டை எழுதச்செய்து வீட்டின் பின்புற கதவு நிலையிலும் ஒட்டினார்கள். எதற்கு இவ்வாறு எழுதி ஒட்டுகிறீர்கள்? எனக்கேட்டபோது, " வீட்டில் குழந்தை அழும் குரலைக்கேட்கும் எச்சுப்பிசாசு இரவில் வருமாம். அது வந்து வாசலில் இவ்வாறு எழுதியிருப்பதை பார்த்துவிட்டு மறுநாளும் வருமாம். அவ்வாறு தினமும் இரவில் வந்து பார்த்து ஏமாந்துபோய்விடுமாம் அந்தத் தமிழ் வாசிக்கத்தெரிந்த எச்சுப்பிசாசு. காலப்போக்கில், பாட்டியிடம், " தாய்மார் ஆஸ்பத்திரிகளிலும் குழந்தைகளை பிரசவிக்கிறார்கள். அங்கெல்லாம் அந்த எச்சுப்பிசாசுகள் வருவதில்லையா...? அங்கும் இவ்வாறு ஒட்டுகிறார்களா..? சிங்களத்தாய்மாரும் குழந்தைகளை பிரசவிக்கிறார்கள். அப்படியானால் சிங்களம் தெரிந்த பிசாசுகளும் வருமல்லவா..? " எனக்கேட்டிருக்கின்றேன். அதற்குப்பாட்டி, "உன்னைச்சொல்லிக்குற்றமில்லை. இப்படியெல்லாம் நீ பேசுவது கலிகாலத்தில்" என்று எனது வாயில் அடித்தார்கள்.
அன்று மட்டக்களப்பில் எதிர்மன்னசிங்கம் எழுதிய "கிழக்கிலங்கைத்தமிழ் மக்களின் பண்பாட்டுப் பாரம்பரியம்" நூல் வெளியீட்டு விழாவுக்குச்சென்று, நூலாசிரியரிடம் நூலைப்பெற்று அதிலிலிருந்த அணிந்துரையை வாசித்ததும் எனக்கு எங்கள் ஊரில் மறைந்துகொண்டிருக்கும் பண்பாட்டுப்பாரம்பரியம் நினைவுக்கு வந்தது. ஊருக்கு ஊர் இவ்வாறு பல பண்பாட்டுக்கோலங்கள் பலரதும் மனதில் அழியாத கோலங்களாகவே பதிவாகியிருக்கின்றன. கிழக்குப்பல்கலைக்கழகத்தின் மொழித்துறை விரிவுரையாளர் கலாநிதி சி. சந்திரசேகரம் அவர்கள் இந்நூலின் அணிந்துரையில் இவ்வாறு எழுதியுள்ளார்:
" இன்று சில பண்பாட்டுக்கூறுகள் நினைவுகளிலேயே உள்ளன. சில நினைவுகளில் இல்லாமலும் போய்விட்டன. எடுத்துக்காட்டாக, பாரம்பரிய விவசாயச்செய்கையோடு தொடர்புடைய பண்பாடுகள், கோயில் தீர்த்தத்தால் வயலைக்காவல் பண்ணுதல், சூடுபோடும் வழக்குகள், வேளாண்மைத்தொழிலின்போது பாடல்கள் பாடப்படுதல் என்பனவெல்லாம் முற்றாக மறைந்துவிட்டன. அவ்வாறே, பல கிராமிய விளையாட்டுக்கள், திருமணமுறை (பூருதல்), ஆண்கள் கடுக்கன்போடுதல், கன்னக்கொண்டை கட்டுதல், பிள்ளை பிறந்ததும் நிகழும் குறித்த நிகழ்வுகள் ( ஆண்பிள்ளை பிறந்தால் கருங்காலி உலக்கையினையும், பெண்பிள்ளை பிறந்தால் விளக்குமாற்றையும் வீட்டுக்கூரைக்கு மேலாக எறிதல்) எனப் பல்வேறு பண்பாட்டுக்கூறுகள் மறைந்துவிட்டன."

மாஸ்டர் சிவலிங்கம் தொடர்பாக கடந்த 22 ஆம் அங்கத்தில் எழுதியிருந்த குறிப்புகளில் 1964 ஆம் ஆண்டு யாழ். ஸ்ரான்லி கல்லூரியில் நான் படிக்கின்ற காலத்தில் வந்தாறுமூலை மத்திய கல்லூரியிலிருந்து வருகைதந்த மாணவர்களின் வள்ளி திருமணம் கூத்து அரங்காற்றுகையை ரசித்த தகவலை எழுதியிருந்தேன். அதனைப்படித்திருக்கும் தம்பிராஜா பவானந்தராஜா என்பவர் எழுதியிருந்த குறுஞ்செய்தியை பதிவுகள் இணைய இதழ் நடத்தும் நண்பர் கிரிதரன் எனக்கு அனுப்பியிருந்தார். குறிப்பிட்ட வள்ளிதிருமணம் கூத்தை மாணவர்களுக்கு பயிற்றுவித்தவர்தான் பவானந்தராஜாவின் தந்தையார் அண்ணாவியார் தம்பிராஜா. 1965 இல் யாழ். மகாஜனாக்கல்லூரியில் நடந்த அகில இலங்கை ரீதியிலான போட்டியிலும் அண்ணாவியார் தம்பிராஜாவின் குருக்கேத்திரன் போர் என்ற கூத்து முதல் பரிசுபெற்றதாகவும் , பேராசிரியர் மௌனகுரு அவர்களும் தமது தந்தையாரிடம் கூத்து பயின்ற மாணவர்களில் ஒருவர் எனவும் அவரது செய்தி மேலும் தெரிவிக்கின்றது. 53 வருடங்களுக்கு முன்னர் பார்த்து ரசித்த வள்ளிதிருமணம் கூத்து எனக்கு நினைவிலிருக்கிறது. அதன் அண்ணாவியாரின் பெயர் மறந்துவிட்டது. நினைவுபடுத்திய அண்ணாவியார் மகனுக்கு நன்றி.
மகாபாரதக்கதையை வியாசர் முதல் ஜெயமோகன் வரையில் பலரும் எழுதியிருக்கின்றனர். தற்போது ஜெயமோகன் வெண்முரசு என்னும் தலைப்பில் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்கங்களில் எழுதிக்கொண்டிருக்கிறார். அதனை ஒரு தவப்பணியாகவே மேற்கொண்டு வருவது தெரிகிறது. 2014 ஆம் ஆண்டில் விஷ்ணுபுரம் விருது விழா முடிந்து வீடு திரும்பியதும், தனது குழந்தைகளுக்கு மகா பாரதக்கதையைச் சொல்லி, அதில் வரும் பாத்திரங்களின் இயல்புகளையும் விபரித்திருக்கிறார். அவர் கதைசொல்லும் பாங்கினால் உற்சாகமடைந்த அவரது குழந்தைகள், " அப்பா, இந்தக்கதையையே இனி எழுதுங்கள்." என்று வேண்டுகோள் விடுத்ததும், அவர் அன்றைய தினமே மகா பாரதக்கதைக்கு வெண்முரசு என்று தலைப்பிட்டு ஒவ்வொரு பாகமும் சுமார் 500 பக்கங்கள் கொண்டிருக்கத்தக்கதாக இன்று வரையில் எழுதிக்கொண்டிருக்கிறார். நாளை மறுதினம் ஒக்டோபர் மாதம் பிறந்தால் ஜெயமோகன் எழுதும் வெண்முரசுவுக்கு வயது மூன்று ஆண்டுகள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் விரும்பிய காவியம்தான் மகா பாரதம். இலங்கைப்பயணம் தொடர்பான பத்தி எழுத்தில் ஏன் மகாபாரதம் வருகிறது, ஜெயமோகன் வருகிறார் என்று வாசகர்கள் யோசிக்கக்கூடும். இலங்கையில் ஒரு காலகட்டத்தில் மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் மகா பாரதக்கதையைச் சொல்லிக்கொண்டிருந்த இரத்தினம் சிவலிங்கம் என்ற இயற்பெயர்கொண்ட மாஸ்டர் சிவலிங்கம் அவர்களைத்தான் அன்று பார்ப்பதற்கு புறப்பட்டுக்கொண்டிருந்தேன்.
திருகோணமலையிலிருந்து புறப்பட்டு, மட்டக்களப்பில் ஆறுமுகத்தான் குடியிருப்புக்கு சமீபமாக ஓரிடத்தில் இறங்கினேன். அந்தப்பிரதேசத்தில் எஹெட் என்ற வெளிநாட்டு தன்னார்வ தொண்டுநிறுவனம் சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் அமைத்துக்கொடுத்திருக்கிறது. அவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு குடும்பம் பாண்டிருப்பிலிருந்து அங்கு வந்து குடியேறியிருந்தது. அந்தக்குடும்பத்தலைவனும் அந்தக்குடும்பத்தைச்சேர்ந்த மேலும் சில உறுப்பினர்களும் போர்க்காலத்தில் ஆயுதப்படைகளினால் காணாமலாக்கப்பட்டவர்கள். சோதனைமேல் சோதனை போதுமடா சாமி என்பார்கள். அந்தக்குடும்ப உறுப்பினர்கள் சிலர் குறிப்பாக குழுந்தைகள் உட்பட பத்துப்பேரளவில் சுனாமி கடற்கோளில் காணாமல் போய்விட்டார்கள். அந்தக்குடும்பத்தை சாமி காப்பாற்றியதாகத்தெரியவில்லை. அடுத்தடுத்து போரும், சுநாமியும் காவுகொண்ட பல குடும்பங்கள் இலங்கையில் இழப்புகளையும் கடும் துயர்களையும் கடந்து வந்துள்ளன. குறிப்பிட்ட பாண்டிருப்பு குடும்பத்தினரை சுநாமி காலத்திலும் சென்று பார்த்திருக்கின்றேன். அதில் ஒரு குடும்பத்துப்பிள்ளைகளுக்கு எமது இலங்கை மாணவர் கல்வி நிதியமும் உதவுகிறது.
தமிழே மூச்சாக வாழ்ந்தவரின் இறுதி மூச்சு அடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த பராமரிப்பு நிலையத்தில் அவரைப்பார்த்தபோது, அவரது பார்வை நிலைகுத்தியிருந்தது. அருகிலிருந்த அவரது அன்புத்துணைவியார் மருத்துவ கலாநிதி நளாயினி, " அப்பா... யார் வந்திருக்கிறார்கள் தெரிகிறதா..?" எனக்கேட்கிறார். அவரது நீண்ட கால நண்பர் சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரனும், படைப்பாளியும் ஊடகவியலாளருமான தெய்வீகனும், விக்ரோரியா ஈழத்தமிழ்ச்சங்கத்தலைவர் பரமநாதனும் - நானும் அவரை பார்த்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால், தம்மை பார்க்க வந்திருப்பது யார் என்பது அவருக்குத் தெரியுமா...? தெரியாதா...? என்பதும் எமக்குத்தெரியாது. அவர் கடந்த சில வருடங்களாகவே மரணத்துள் வாழ்ந்துகொண்டிருந்தவர் என்பது மாத்திரமே எமக்குத்தெரியும். எமது நினைவுகளில் என்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ்ப்பற்றாளர், மருத்துவர் பொன். சத்தியநாதன் கடந்த சில வருடங்களாகவே நினைவு மறதி உபாதையினால் பாதிக்கப்பட்டு, மரணத்துள் வாழ்ந்து - பராமரிப்பிலிருந்து கடந்த 15 ஆம் திகதி வெள்ளியிரவு மரணவாழ்வுக்கும் விடைகொடுத்து மறைந்துவிட்டார். இலங்கையில வடபுலத்தில் கரவெட்டியில் 1948 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி பிறந்திருக்கும் இவர், தமது இளம் பராயத்திலேயே பகுத்தறிவுச் சிந்தனை வயப்பட்டவராக தமது ஆசான்களுடனும் மதபீடத்தினருடனும் வாதம் செய்திருக்கும் முற்போக்காளர். மார்க்சீயப் பற்றேதுமின்றியும் பெரியாரிஸம் பேசாமலும் கடவுள் மறுப்புக்கொள்கையுடன் வாழ்ந்தவர். அவர் பற்றுக்கொண்டிருந்தது தமிழில்தான். தமிழுக்காக எதனையும் செய்யும் இயல்பும் அவரிடமிருந்தமையால், அவர் இழந்ததும் அதிகம். தியாகம் செய்ததும் அதிகம்.
அவுஸ்திரேலியாவில் இயங்கும் எமது இலங்கை மாணவர் கல்வி நிதியம், இலங்கையில் நீடித்த போரினால் பெற்றவர்ளை, குடும்பத்தின் மூல உழைப்பாளியான தனயனை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக 1988 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து தங்கு தடையின்றி இயங்கும் இந்தத்தன்னார்வத்தொண்டு நிறுவனம், இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இதுவரையில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உதவி, அவர்களில் நூற்றுக்கணக்கான மாணவர்களை பல்கலைக்கழகம் வரையில் அனுப்பியிருப்பதுடன் தொடர்ந்தும் செயலூக்கமுடன் பணியாற்றிவருகிறது. அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக அனுமதி கிடைப்பதில்லை. அவ்வாறு அங்கு செல்லமுடியாத மாணவர்கள் தொழில் நுட்பக்கல்லூரிகளில் இணையும் வரையிலும் இந்நிதியம் உதவி வருகிறது. கடந்த காலங்களில் திருகோணமலை மாவட்டத்தில் பல கிராமங்களைச்சேர்ந்த மாணவர்கள் இந்நிதியத்தினால் பயனடைந்தனர்.
மாத்தளையிலிருந்து புறப்பட்டு கண்டிவந்து, அங்கிருந்து நீர்கொழும்பு வந்து இறங்கியதும், நண்பர் நுஃமானுடன் தொடர்புகொண்டு சுகமாக வந்து சேர்ந்துவிட்டதாகச்சொன்னேன். அவர்தான் முதல்நாள் என்னை பேராதனை பல்கலைக்கழகத்திலிருந்து கண்டி பஸ்நிலையத்திற்கு அழைத்துவந்தவர். துரைமனோகரனும் உடன் வந்து கண்டி பஸ்ஸில் ஏற்றிவிட்டார். அங்கிருந்து இரவு மாத்தளையில் உறவினர்களை பார்க்கச்சென்று, மறுநாள் அதிகாலை புறப்பட்டு, ஊர் திரும்பியதும் வழியனுப்பியவருக்கு சொல்லவேண்டும் என்ற எண்ணத்தில் நுஃமானைத்தொடர்புகொண்டதும், அவர் " எங்கள் நாடு முன்னேறவில்லை என்று யார் சொன்னது...? நேற்றுக்காலை கொழும்பில் மாலையில் கண்டியில், மறுநாள் காலை நீர்கொழும்பில், ஆகா.... இலங்கையில் பொதுப்போக்குவரத்தின் வேகம் அசத்துகிறது" என்றார். அவர் சொல்வதும் உண்மைதான். அகலப்பாதைகளுடன் போதியளவு போக்குவரத்து வசதிகளும் இருப்பதனால் நாம் போகவேண்டிய ஊர்களுக்கு துரிதமாகச்செல்ல முடிகிறது.
சமகாலத்தில் எழுத்தாளர்கள் சந்தித்துக்கொண்டால் பரஸ்பரம் கேட்டுக்கொள்ளும் ஒரு முக்கியமான கேள்வி, " இறுதியாக படித்த நூல் எது...? " சற்று யோசிப்பார்கள். உடனடியாக பதில் வராது. ஆனால், தமது முகநூலில் என்ன வந்திருக்கிறது..? யார்... யாருடன் விவாதித்தோம் முதலான விவகாரங்கள் பற்றி உற்சாகத்துடன் அல்லது சோர்வுடன் சொல்வார்கள். என்னிடத்தில் முகவரிதான் இருக்கிறது. முகநூல் இல்லையென்பதனால், அவ்வாறு முகநூல்காரர்கள் சொல்லும்போது சகிப்புடன் கேட்டுக்கொள்வேன். மாணவர்களையும் இந்த முகநூல் ஆக்கிரமித்துள்ளது. இம்முறை இலங்கைப்பயணத்தின்போது தகைமைசார் பேராசிரியர், எனது நீண்ட கால நண்பர் எம். ஏ. நுஃமான், பேராதனைப்பல்கலைக்கழகத்திற்கு வந்து உரையாற்றுமாறு அழைத்தார். அங்கு தமிழ்த்துறை தலைவராக பணியிலிருக்கும் பேராசிரியர் வ. மகேஸ்வரனும் தொடர்புகொண்டு அழைத்தார். கடந்த 2015 இலும் இவ்வாறு இவர்கள் அழைத்து சென்றிருக்கின்றேன். அந்தப்பயணம் பற்றியும் முன்னர் பதிவுசெய்துள்ளேன்.
இலங்கை வானொலி தொடங்கப்பட்டு 92 வருடங்களாகின்றன. தொலைக்காட்சியின் வருகைக்குப்பின்னர் உலகெங்கும் வானொலி கேட்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தது. அதன்பின்னர் கணினியின் தோற்றத்தையடுத்து இணையத்தளத்தின் அறிமுகம் வந்ததும், மேலும் வானொலி நேயர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டது. ஆயினும், இன்றும் வானொலி நேயர்களின் ரசனைக்கும் பயன்பாட்டிற்கும் வானொலிகள் இயங்கியவண்ணமிருக்கின்றன. வாகனத்தை செலுத்திக்கொண்டே வானொலியை இயக்கவிட்டு கேட்டுக்கொண்டு பயணிப்பவர்கள், கைத்தொலைபேசியில் கேட்பவர்கள், இணையத்தின் வழியே கேட்பவர்களின் எண்ணிக்கை குறையவேயில்லை. இந்தப்பின்னணிகளுடன்தான் கொழும்பு ரேடியோ என்ற பெயரில் 1925 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இலங்கை வானொலிதான் உலகிலேயே இரண்டாவது வானொலி நிலையம் என்ற பெருமையும் பெற்றிருக்கிறது.
வடமாகாண பயணத்தை முடித்துக்கொண்டு கிளிநொச்சியிலிருந்து அன்று காலை புறப்பட்டபோது, " உங்களை அம்மாச்சியிடம் அழைத்துச்செல்லப்போகின்றேன்" என்றார் நண்பர் கருணாகரன். " எங்கே..? " எனக்கேட்டேன். " அம்மாச்சி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா..?" என்றார். அவர் என்னை அண்ணாச்சி என்றுதான் அழைப்பார். அக்காச்சி, அண்ணாச்சி, அம்மாச்சி என்பவை எமது தமிழர் வாழ்வில் பேசுபொருள். அப்படி யாரோ ஒரு அம்மாச்சியின் வீட்டுக்கு அழைத்துச்செல்லப்போகிறார் என்றுதான் முதலில் நினைத்தேன். வடக்கு பணிகள் முடிந்துவிட்டதால், அடுத்து கிழக்கு மாகாணம் செல்லவேண்டியிருந்தது. அதற்கிடையில் கொழும்பு, கண்டி, மாத்தளை பயணங்களும் இருந்தன. எனது அவசரத்தை அவரிடம் சொன்னேன். நான் புறப்படும்வேளையில் அதிபர் பங்கயற்செல்வன் வந்து, தங்களது தொண்டு நிறுவனத்திற்கும் வந்து செல்லுமாறு கேட்டார். எனது பயணநெருக்கடியை அவரிடம் பக்குவமாகச்சொல்லிவிட்டு, கருணாகரனுடன் புறப்பட்டேன். அவர் அழைத்துச்சென்றது அம்மாச்சி உணவகம். கிளிநொச்சியில் கண்டி வீதியிலிருப்பதனால், வெளியூர்களிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வருபவர்களையும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியூர்களுக்கு செல்பவர்களையும் அழைக்கிறாள்.
" கவியரசு கண்ணதாசன் மறைந்துவிட்டார்" என்ற ஒரு தொலைபேசித் தகவல் சென்னையில் பலரையும் பரபரப்புக்குள்ளாக்கிவிட்டது. அவருடைய நெருங்கிய நண்பர்கள் பலர் கவிஞரின் வீட்டுக்கு படையெடுத்துவிட்டனர். அதில் ஒருவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன். அவர் நெஞ்சிலே அடித்து புலம்பிக்கொண்டு ஓடிவந்துள்ளார். ஆனால், இவர்களெல்லாம் அதிசயிக்கும்வகையில் ஆசனத்தில் அமர்ந்து சிரித்துக்கொண்டிருந்தார் கவிஞர். அந்த அநாமதேய தொலைபேசி அழைப்பை பலருக்கும் அனுப்பியவரே அவர்தான் என்பது தெரிந்தது. குரலை மாற்றி அவ்வாறு சொல்லி பலரையும் தான் பதட்டப்படவைத்தமைக்கு காரணமும் சொன்னாராம். தான் இறந்துவிட்டால் என்ன நடக்கும் என்பதை தான் உயிரோடு இருக்கும்போதே தெரிந்துகொள்ள வேண்டும் என்ற விபரீத ஆசை நெடுநாளாக இருந்ததாம். அன்று அந்த ஆசையை நிறைவேற்றிக்கொண்டதுடன், அவ்வாறு உயிரோடு இருக்கும்போதே இறந்துவிட்டதாக செய்தி வெளியானால் இன்னும் அதிக காலம் வாழமுடியும் என்று ஒரு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் அன்று துக்கம் விசாரிக்க வந்தவர்களிடம் சொல்லிச்சிரித்தாராம். அவர் சொன்னவாறே அதன் பிறகு பல வருடங்கள் வாழ்ந்து விட்டுத்தான் இயற்கை எய்தினார். இலங்கையில் தமிழ் புத்தக இறக்குமதி விற்பனை விநியோகத்தில் பெரும் புகழ்பெற்றிருக்கும் பூபாலசிங்கம் புத்தகசாலையின் ஸ்தாபகர் ஆர். ஆர். பூபாலசிங்கம் அவர்களைப்பற்றி நினைக்கும்போது கண்ணதாசனும் நினைவுக்கு வருவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. கொழும்பு பொரளையில் கொட்டாவீதியில் அமைந்திருந்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (மாஸ்கோ சார்பு) தலைமை அலுவலகத்திற்கு 1972 - 1977 காலப்பகுதியில் அடிக்கடி சென்றுவருவேன். அங்கிருந்துதான் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசாபிமானி, புதுயுகம் முதலான பத்திரிகைகளும் அத்த என்ற சிங்கள நாளேடும் வெளியாகின. தமிழ் பத்திரிகைகள், வாரவெளியீடுகள்தான். அத்த பத்திரிகையில் ஒரு நாள், யாழ்ப்பாணத்தில் பூபாலசிங்கம் மறைந்துவிட்டார் என்ற செய்தி வெளியாகியிருந்தது. கொழும்பில் வசித்த கட்சியைச்சார்ந்த தமிழ்த்தோழர்கள் உடனடியாக யாழ்ப்பாணத்திற்கு தொடர்புகொண்டபோது அந்தச்செய்தி தவறானது என்பது ஊர்ஜிதமானது. இது நிகழ்ந்து பலவருடங்களின் பின்னர்தான் 1982 இல் புத்தகக்கடை பூபாலசிங்கம் மறைந்தார். அவரது பெயரில் வாழ்ந்த மற்றும் ஒருவர் இறந்த செய்தியை அன்றைய அத்த பத்திரிகை வெளியிட்டு, பின்னர் மன்னிப்பும் கேட்டது. அத்த என்றால் தமிழ் அர்த்தம் உண்மை. உண்மைக்குப்புறம்பான செய்தியை வெளியிட்டு கட்சித்தோழர்களிடம் திட்டும் வாங்கியது அந்தப்பத்திரிகை. இதுபோன்று அ.செ. முருகானந்தனுக்கும் நடந்திருக்கிறது.
கிளிநொச்சி ஊடக அமையத்தின் சந்திப்பு நிறைவடைவதற்கு சற்று காலதாமதமானது. தொழுநோய் தடுப்பு விழிப்புணர்வு சம்பந்தமாக உரையாற்றுவதற்கு சில சகோதரிகள் வந்திருந்தார்கள். ஒரு கத்தோலிக்க மதகுருவினால் நடத்தப்படும் மருத்துவ ஆலோசனை அமைப்பிலிருந்து வந்திருந்த அவர்களுடைய உரை சமூகப்பெறுமதியானது. எனினும் அங்கு மிகவும் குறைந்த எண்ணிக்கையினரே கேட்டனர் என்பது எனக்கு ஏமாற்றமே. கத்தோலிக்க மதபீடங்கள் இவ்வாறு இலங்கையில் பல விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதை தொடர்ச்சியாக அவதானிக்க முடிகிறது. அத்துடன் கத்தோலிக்க வணக்கத்துக்குரிய சகோதரிகளும் அன்னையரும் பெற்றவர்களை இழந்தவர்களையும் பராமரிப்பின்றி அனாதரவான முதியவர்களையும் ஆங்காங்கே இல்லங்கள் அமைத்து கவனித்துவருகின்றனர். மருத்துவ முகாம்கள் நடத்துகின்றனர். வன்னிப்பிரதேசங்களில் இவ்வாறு நடைபெற்றாலும், கிழக்கில் சில மதபீடங்கள் மத மாற்றவேலைகளில் கச்சிதமாக ஈடுபடுவதையும் அவதானித்தேன். அதுபற்றி கிழக்கிலங்கை பயணம் தொடர்பான பத்தியில் எழுதுவேன்.
‘வாணி, உன் வீடும் வளவும் அறிவேன். அக் காணி முழுவதும் கலகலப்பே அல்லவோ?’- கவிஞர் மகாகவி உருத்திரமூர்த்தி எழுதியிருக்கும் இந்தக்கவிதை வரிகள், யாழ். மகாஜனாக்கல்லூரியை நினைவுகூருகிறது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய நண்பர் என். சண்முகலிங்கன், " சமூக மாற்றங்களிடையும் பண்பாட்டின் செழுமையான கூறுகளைக் கைவிடாத இந்தப்புலத்தின் சிறப்பினைக்கண்டுதான் படைப்புச்சக்தியாய்ப் பண்பாடு கண்ட கலைத்தெய்வமான வாணியும் தன்வீடாக மகாஜனாவைத் தேர்ந்தெடுத்து, தென்தமிழ் யாழ் மீட்டிச் சிரித்தபடி வீற்றிருக்கிறாள். – என்று தமது கட்டுரையொன்றில் பதிவுசெய்துள்ளார். சமூக மாற்றங்களுக்கு பிரதானமாகத்திகழும் கல்வியும் கலை, இலக்கியங்களும் உருவாகும்-வளரும் ஸ்தாபனம் மகாகவி குறிப்பிடும் கலகலப்பான கலாசாலைதான்.
" உங்களுடைய கையெழுத்து அழகாக இருக்கிறது” என்றேன். “தலை எழுத்து அப்படி அல்ல” என்றார் கனகராசன். சொல்லும் போது மந்தகாசமான புன்னகை. பல எழுத்தாளர்களின் தலை எழுத்து அவர் சொன்னது போன்று அழகாக அமையவில்லை என்பது என்னவோ உண்மைதான். வேறு எந்தத் தொழிலும் தெரியாமல் எழுத்தை மட்டுமே நம்பிவாழ்வைத் தொடங்கியவர்களின் வரிசையில் இடம் பெற்றவர் மு.கனகராசன். இவர் பணியாற்றிய பத்திரிகைகள் பல. இலக்கியச் சிற்றேடுகள் சிலவற்றுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். நான் அறிந்த வரையில் மு.க. என எம்மால் அழைக்கப்பட்ட மு. கனகராசன், சுதந்திரன் - தேசாபிமானி - புதுயுகம் , தினகரன் முதலான பத்திரிகைககளிலும் சோவியத்நாடு இதழிலும் பணியாற்றியவர். சிற்பி சரவணபவனின் கலைச்செல்வி, செல்வராஜாவின் அஞ்சலி முதலான இலக்கியச் சிற்றேடுகளில் வேலை செய்திருக்கிறார். மல்லிகை ஜீவாவுக்கும் மல்லிகை தொடர்பாக அவ்வப்போது ஆலோசகராக இயங்கினார். மரணப்படுக்கையில் விழுவதற்கு முன்னர் இறுதியாக தினகரனில் வாரமஞ்சரியை கவனித்துக்கொண்டிருந்தார். கவிதை, சிறுகதை , நாடகம், மொழிபெயர்ப்பு, இதழியல் முதலான துறைகளில் ஈடுபாடு கொண்டிருந்த மு.க சிறிது காலம் சோவியத் தூதுவராலயத்தின் தகவல் பிரிவிலும் வேலை செய்தார். எழுத்தாற்றல் மிக்க இவரது படைப்புக்கள் நூலாக வெளிவருவதில்தான் எத்தனை தடைகள், தடங்கல்கள் ஏமாற்றங்கள். ‘கெமுனுவின் காதலி’ என்ற சிறிய நாடக நூலை அச்சுக்கூடத்திலிருந்து பெறுவதற்கு முடியாமல் பொருளாதார நெருக்கடியில் தவித்தார். ‘முட்கள்’ கவிதை நூலிற்கு பேராசிரியர் க.கைலாசபதியின் முன்னுரையைப் பெற்று அச்சடித்து ஒப்புநோக்கப்பட்ட படிகளை மாத்திரம் சுமார் ஒரு வருடகாலம் கொண்டலைந்து இறுதியில் ஒருவாறு அச்சிட்டு வெளியிட்டார். ‘பகவானின் பாதங்கள்’ கதைத் தொகுதியும் பல சிரமங்களுக்கு மத்தியில் வெளியானது. இந்தத்தொகுப்பு சற்று வித்தியாசமானது. இதில் இடம்பெற்ற ஒவ்வொரு சிறுகதை பற்றியும் அதனைப்படித்தவர்கள் எழுதிய நயப்புரையையும் இணைத்து நூலை தொகுத்திருந்தார்.
" ஆஸ்திரேலியாவில் தமிழர்கள் புலம்பெயர்ந்த காலம் முதல் எத்தனையோ தமிழ்பத்திரிகைகள், பல்வேறு தமிழ் இதழ்கள் - சஞ்சிகைகள் என்று தொடராக ஆரம்பித்து பெரும்பாலும் எவையும் நிலைத்ததில்லை. காலப்பெருஞ்சுழலின் உக்கிரமான வேகத்துக்கு முகம்கொடுக்க முடியாமல் காணாமல்போய்விட்டன. பொதுவிலே இன்று அச்சு ஊடகங்களின் இருப்பெனப்படுவது பாரிய கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்ற விடயம். ஆஸ்திரேலியாவின் பல முன்னணி அச்சு ஊடகங்கள் தங்கள் பத்திரிகை வடிவங்களை சிறிதாக அமைத்துக்கொண்டுவிட்டன. இன்னும் சில ஆண்டுகளில் தாங்கள் முற்று முழுதாகவே இணையத்துக்கு குடிபெயர்ந்துவிடப்போவதாக அறிவித்தும்விட்டன." 
நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் கௌரி அனந்தன் தொகுத்திருந்த மௌனவலிகளின் வாக்குமூலம் வெளியீட்டு விழா நடந்துகொண்டிருந்தபோது, எனக்குத்தெரிந்த யாழ். குடாநாட்டு எழுத்தாளர்கள் யாராவது வந்திருக்கிறார்களா... என்று கண்களை சுழற்றி நோட்டமிட்டேன். எவரும் தென்படவில்லை. அருகில் கெளரி அனந்தன் இருந்தார். நண்பரும் எழுத்தாளரும் சீர்மியத்தொண்டருமான சந்திரசேகர சர்மா நிகழ்ச்சி முடிந்ததும் என்னை தமது வீட்டுக்கு அழைத்துச்செல்ல வந்திருந்தார். மேடையில் பேசிக்கொண்டிருந்த சமூகச்சிற்பிகள் தன்னார்வத்தொண்டு அமைப்பைச்சேர்ந்த ஷெரீன் சேவியர் தமது உரையில், " இங்கே வெற்றிச்செல்வியும் வந்திருக்கிறார்." எனச்சொன்னதும் முகத்தை திருப்பி மீண்டும் கண்களை சுழலவிட்டேன். வெற்றிச்செல்வியின் படத்தையும் அவரது படைப்புலகம் பற்றிய குறிப்புகளையும் ஏற்கனவே இணைய ஊடகங்களில்தான் பார்த்திருக்கின்றேன். வந்தவிடத்தில் அவரையும் பார்த்துப்பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்கும் மகிழ்ச்சியோடு மேடை நிகழ்ச்சிகள் முடிவடையும் வரையில் காத்திருந்து எழுந்தேன். கௌரி அனந்தன் எனக்கு வெற்றிச்செல்வியை அறிமுகப்படுத்தினார்.
அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவிபெறும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா மாவட்ட மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவும் தகவல் அமர்வும் மாணவர் ஒன்றுகூடலும் அண்மையில் நடைபெற்றன. இலங்கையில் நீடித்த போரில் தந்தையை அல்லது தாயை (குடும்பத்தின் மூல உழைப்பாளியை) இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலிருக்கும் அன்பர்களின் ஆதரவுடன் உதவிவரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தினால் இந்த ஆண்டுக்கான இரண்டாம் காலாண்டுக்குரிய நிதிக்கொடுப்பனவுகள் வழங்கப்படும் நிகழ்ச்சிகள் அண்மையில் யாழ்ப்பாணம் அரசாங்க செயலகத்திலும் ( யாழ். கச்சேரி) முல்லைத்தீவில் விசுவமடுவிலும் வவுனியா வேப்பங்குளத்திலும் நடைபெற்றன. இவற்றில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் பரிபாலன சபை உறுப்பினர்கள் திருவாளர்கள் அ. சதானந்தவேல், முருகபூபதி ஆகியோரும் வருகை தந்து உரையாற்றினர். வன்னியில் 2009 இல் நடந்த இறுதிக்கட்டப்போரில் தந்தையை இழந்த பல மாணவர்களுக்கு இலங்கை மாணவர் கல்வி நிதியம் உதவி வருகின்றது. அத்துடன் ஏற்கனவே கடந்த பலவருடங்களாக வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் கிழக்கு மாகாணத்திலும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இந்நிதியம் உதவிவருகிறது. 
அவுஸ்திரேலியாவில் கடந்த 29 வருடங்களுக்கும் மேலாக இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம், எதிர்வரும் 20 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை வரையில் யாழ். மாவட்ட அரச செயலகத்தில் ( கச்சேரியில்) குறிப்பிட்ட நிதியத்தின் உதவியுடன் கல்வியைத் தொடரும் யாழ். மாவட்ட மாணவர்களுடனான ஒன்றுகூடலை நடத்துகிறது. அவுஸ்திரேலியாவிலிருந்து நீண்ட காலமாக இயங்கும் தன்னார்வத்தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர்கல்வி நிதியம் அவுஸ்திரேலியாவில் விக்ரோரியா மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட அமைப்பாகும். கல்வி நிதியத்தின் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்ட மாணவர் கண்காணிப்பு தொடர்பாடல் நிறுவனமான சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையம் மேற்குறித்த மாணவர் ஒன்று கூடலை ஏற்பாடு செய்துள்ளது. இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஆதரவுடன் கல்வியை இடைநிறுத்தாமல் தொடரும் வடக்கு, கிழக்கு உட்பட போர் உக்கிரமடைந்த காலப்பகுதியில் பெரிதும் பாதிக்கப்பட்l வன்னி மாவட்ட மாணவர்களுக்கான ஒன்றுகூடல், தகவல் அமர்வு என்பன இந்த மே மாதத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. முதலாவது நிகழ்ச்சி எதிர்வரும் 20 ஆம் திகதி சனிக்கிழமை யாழ். அரச செயலகத்தில் (கச்சேரி மண்டபத்தில்) ஆரம்பமாகிறது. யாழ். அரச அதிபர் திரு. என். வேதநாயகம் பிரதம அதிதியாக கலந்துகொள்வார். மங்கல விளக்கேற்றலுடன் நீடித்த போரில் உயிரpழந்த மக்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டு நிகழ்ச்சிகள் தொடக்கிவைக்கப்படும். யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலைய பரிபாலன சபை உறுப்பினர், திரு. த. ஜெயந்தன் வரவேற்புரையும், நிறைவேற்றுப்பணிப்பாளர் திரு. சொ. யோகநாதன் தகவல் அமர்வு உரையும் நிகழ்த்துவர்.


" புத்தாண்டின் முன்னிரவுப்பொழுது. வறண்ட கோடையின் மத்தியில் வெக்கையானதொரு இரவு. திசையெங்கும் திணறடிக்கும் கும்மிருட்டு..! காய்ந்த ஓடைப்பாதையின் புதர்மூடிய வரப்புகளும் கண்ணுக்குத்தென்படாத காரிருள். வானைக் கருமேகமெதுவும் சூழ்ந்திருக்கவில்லை. வறண்ட நிலத்தின் புழுதிப்படலமும் தொலைதூரத்தில் எங்கோ எரியும் காட்டுத்தீயின் புகையுமே அந்த இரவின் இருளைக்கனக்கச்செய்திருந்தன." இவ்வாறு ஆரம்பிக்கிறது ஹென்றி லோசனின் ஒற்றைச்சக்கர வண்டி என்ற சிறுகதை.
வவுனியாவின் எல்லையில் மடுக்கந்தை என்ற அந்த அழகிய கிராமத்தில் வசித்த மக்கள் துயில் எழுந்திருக்காத புலராத பொழுதிலே, அந்தச்சிறுவன் அதிகாலை 4 மணிக்கு முன்பே எழுந்து, கால்நடையாக சுமார் 6 மைல் தூரம் ஒற்றையடிப்பாதையிலும் வயல் வரப்புகளிலும் நடந்து சமணங்குளம் தமிழ்ப்பண்டிதரிடம் வருவான். அவ்வேளையில் அவன் வவுனியா இரட்டைப்பெரிய குளத்தில் தனது ஆரம்பக்கல்வியைத் தொடர்ந்துகொண்டிருந்தான். தாய் மொழியும் வீட்டு மொழியும் சிங்களம். ஆங்கிலம் படிக்க சரியான வசதி வாய்ப்புகள் இல்லை. அயல் கிராமங்களில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள். அதனால், அவர்களுடன் பழகி உறவாடும் சந்தர்ப்பங்களும் அச்சிறுவயதில் அவனுக்கு கிடைக்கிறது. தமிழைப்பேசவும் புரிந்துகொள்ளவும் பழகிவிடுகின்றான். ஆங்கிலம் அந்நிய தேசத்திலிருந்து வந்த மொழி. அருகிலேயே தொன்மையான தமிழ் மொழி வாழ்கிறது. இதனைவிட்டு விட்டு எதற்காக அந்நியமொழிக்காக ஏங்கவேண்டும் என்ற சிந்தனை அந்த இளம் உள்ளத்தில் பிறக்கிறது. அயலில் சமணங்குளத்தில் பண்டிதர் கந்தையா என்றொருவர் ஆசிரியராகவும் அதேசமயத்தில் விவசாயியாகவும் வசிப்பதாக அறிந்துகொள்கின்றான். அவரைத்தேடி நடந்த சென்று, தனக்கு தமிழ் சொல்லித்தரும்படி கேட்கின்றான். அவர் ஒரு நிபந்தனை வைக்கிறார். "என்னிடம் தமிழ் படிக்கவருவதாயிருந்தால், அதிகாலை 4 மணிக்கு முன்பே வந்துவிடவேண்டும். நான் காலை 6 மணிக்கெல்லாம் வயலுக்குப்போய்விடுவேன். அதன் பின்னர் பாடசாலைக்குச்செல்வேன். மாலையில் வீடு திரும்பினாலும் உனக்கு தமிழ்ப்பாடம் சொல்லித்தருவதற்கு எனக்கு நேரம் இல்லை. மீண்டும் வயல், தோட்டம் என்று போய்விடுவேன். அதனால் உனக்கு தமிழ் சொல்லித்தருவதற்கு அதிகாலை வேளைதான் உகந்தது. அதற்கு சம்மதமாயிருந்தால் நாளை முதல் வந்துவிடு." அதிகாலைக்குளிரில் வீட்டில் போர்த்திப்படுத்திருக்கவேண்டிய அச்சிறுவன் தமிழ் மீது கொண்டிருந்த காதலினால், " காலை எழுந்தவுடன் படிப்பு" என்று பாடிக்கொண்டே காடு, மேடு, குளம், குட்டை கடந்து ஒற்றையடிப்பாதையால் வந்து பண்டிதர் கந்தையா அவர்களிடம் தமிழ் எழுதவும் பேசவும் கற்றுக்கொள்கின்றான்.


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









