தருமு சிவராம் (பிரமிள்) நினைவாக..: "ஓடு புத்தரே ! தத்தரே ! பித்தரே ! " நாட்டுப்புறப்பாடலை கவிதையாக்கிய தருமு சிவராம். ஏப்ரில் 20 ஆம் திகதி அவரது பிறந்த தினம்
கவியரசு கண்ணதாசனைத்தேடி தொலைதூரத்திலிருந்து அவரது அபிமான ரசிகர் வந்துள்ளார். " எதற்காக இவ்வளவு தூரத்திலிருந்து என்னைத் தேடிவந்தீர்கள்...?" என்று கண்ணதாசன் அவரைக்கேட்டதும், " உங்கள் பாடல்களும் அதிலிருக்கும் கருத்துக்களும் என்னை பெரிதும் கவர்ந்தன. எனது வாழ்நாளுக்குள் உங்களை நேரில் பார்த்துவிடவேண்டும் என்ற ஆவல்." எனச்சொன்னார் அந்த ரசிகர்.
" தம்பி... மரத்தைப்பார். அதில் பூக்கும் மலர்களையும், காய்க்கும் கனிகளையும் பார். அவற்றை ரசி, புசி. ஆனால், அந்த மரத்தின் வேரைப்பார்க்க முயற்சிக்காதே... மரம் பட்டுவிடும். அதுபோன்று, ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடச்சென்றால், சாப்பிட்டுவிட்டு அதற்குரிய பணத்தை கொடுத்துவிட்டு போய்விடவேண்டும். நீ சாப்பிட்ட உணவு தயாரிக்கும் ஹோட்டலின் சமையலறைப்பக்கம் சென்றுவிடாதே. பிறகு நீ எந்த ஹோட்டலிலும் சாப்பிடமாட்டாய்" என்றார் வாழ்க்கைத்தத்துவப்பாடல்களும் எழுதியிருக்கும் கவியரசர்.
இந்தத்தகவலை எழுதும் எனக்கும் எழுத்தாளர்களை தேடிச்சென்று பார்க்கவேண்டும், அவர்களுடன் உறவாடவேண்டும் என்ற ஆசை எழுத்துலகில் பிரவேசித்த காலம் முதலே தொடருகின்றது. நான் எனது வாழ்நாளில் பல எழுத்தாளர்களை அவர்களின் இருப்பிடம்தேடிச்சென்று நட்புறவை ஏற்படுத்திகொண்டவன். தமிழ்நாடு இடைசெவல் கரிசல் காட்டில் கி. ராஜநாராயணன், குரும்பசிட்டியில் இரசிகமணி கனகசெந்திநாதன், அளவெட்டியில் அ.செ. முருகானந்தன், தலாத்து ஓயாவில் கே. கணேஷ், மினுவாங்கொடையில் தமிழ் அபிமானி ரத்னவன்ச தேரோ, திருகோணமலையில் நா. பாலேஸ்வரி, தொண்டமனாறில் குந்தவை, மாஸ்கோவில் விதாலி ஃபுர்னிக்கா, சென்னையில் ஜெயகாந்தன், எஸ். ராமகிருஷ்ணன், கோயம்புத்தூரில் கோவை ஞானி ..... இவ்வாறு பலரைத் தேடிச்சென்றிருக்கின்றேன். ஆனால், என்றைக்கும் என்னால் சந்திக்கமுடியாமல் மறைந்துவிட்ட, அடிக்கடி நான் நினைத்துப்பார்க்கும் ஒருவர்தான் பல பெயர் மன்னன் தருமுசிவராம். அவர் இன்றிருந்தால் அவருக்கு 78 வயது ( பிறந்த திகதி 20 ஏப்ரில் 1939).

எண்பத்தி ஏழு ஆண்டுகால விருட்சம் வீரகேசரி, எத்தனையோ காலமாற்றங்களை சந்தித்தவாறு தனது ஆயுளை நகர்த்திக்கொண்டிருக்கிறது. வீரகேசரி துளிர்விட்ட வருடம் 1930. விருட்சமாக வளரும்போது எத்தனைபேர் அதன் நிழலில் இளைப்பறுவார்கள், எத்தனைபேர் அதற்கு நீர்பாய்ச்சுவார்கள், எத்தனைபேர் அந்த நிழலின் குளிர்மையை நினைத்துகொண்டு கடல் கடந்து செல்வார்கள் என்பதெல்லாம் அதற்குத்தெரியாது. வீரகேசரி ஒரு வழிகாட்டி மரமாக அந்த இடத்திலேயே நிற்கிறது. பின்னாளில் அதன்வழிகாட்டுதலில் வந்தவர்களில் ஒருவர் அது துளிர்த்து சுமார் ஐந்துவருடங்களில் பிறந்தார். அவருக்கு தற்பொழுது 82 வயதும் கடந்துவிட்டது. அவர்தான் வீரகேசரியின் முன்னாள் ஆசிரியர் கந்தசாமி சிவப்பிரகாசம். அவருக்கு கடும் சுகவீனம் என்று அவருடைய நீண்ட கால நண்பரும் பல வருடங்கள் வீரகேசரியில் அவருடன் இணைந்து பணியாற்றியவருமான வீரகேசரியின் முன்னாள் விநியோக - விளம்பர முகாமையாளர் திரு. து. சிவப்பிரகாசம் நேற்று 12 ஆம் திகதி, தொலைபேசியில் சொன்னார். அவருடன் சில நிமிடங்கள் உரையாற்றிவிட்டு வந்து எனது கணினியை பார்த்தேன் நண்பர் செல்லத்துரை மூர்த்தி கனடாவிலிருந்து அதே செய்தியை மிகுந்த கவலையுடன் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார்.
" ஈழநாட்டிலே பல சமூகத்தவர்கள் இருக்கின்றார்களெனினும் தமிழரின் சொந்தப் பண்பாட்டினையும் உரிமைகளையும் எடுத்துரைக்கும்போது, பிறசமூகத்தினரும் இந்நாட்டில் வாழ்ந்துவருகின்றனர் என்பதையுணர்ந்து வேற்றுமையில் ஒற்றுமை காண முயலவேண்டும். ஒற்றையாட்சி( யுள்ள) இந்நாட்டில் மனித உரிமைகளைப்பெறுவது சாத்தியமானதா...? அடிப்படை மனித உரிமைகள் அனைத்தும் நன்கு பாதுகாக்கப்படுமா...? அன்றேல் சமஷ்டிதான் இலங்கைக்கு உகந்ததா...? மாகாண சுயாட்சி முறை எமது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றத்தக்கதா...? இவைபோன்ற கேள்விகளுக்கு விளக்கம் தரும் கருத்தரங்கமாக 'ஈழநாடு' விளங்கும்." -
சென்னையில் வாழும் ஒரு நடுத்தரக்குடும்பம். மனைவி கடைத்தெருவுக்குப் போய்விட்டாள். கணவன் குழந்தையுடன் வீட்டில். தெருவில் சென்ற ஒரு ரிக்ஷாவை காணும் குழந்தை, " அப்பா ரிஷ்க்கா " என்று சொல்கிறது. உடனே தகப்பன், " அது ரிஷ்க்கா இல்லையம்மா.... ரிக்ஷா" என்று திருத்திச்சொல்கிறார். குழந்தை மீண்டும் ரிஷ்க்கா எனச்சொல்கிறது. தகப்பன் மீண்டும் திருத்துகிறார். ஒவ்வொரு எழுத்தாக சொல்லிக்கொடுக்கிறார். " ரி... க்...ஷா..." குழந்தையும் அவ்வாறே, " ரி...க்...ஷா..." எனச்சொல்லிவிட்டு, மீண்டும் ரிஷ்க்கா" என்கிறது. தகப்பன் பொறுமையாக, மீண்டும் மீண்டும் சொல்லி குழந்தையின் உச்சரிப்பை திருத்தப்பார்க்கிறார். ஒவ்வொரு எழுத்தையும் அழகாக உச்சரிக்கும் குழந்தை, முடிவில் "ரிஷ்க்கா" என்றே சொல்கிறது. தகப்பன் எப்படியும் குழந்தை வாயிலிருந்து சரியான உச்சரிப்பு வந்துவிடவேண்டும் என்று நிதானமாக சகிப்புத்தன்மையுடன் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொடுக்கிறார். ஆனால், குழந்தை மீண்டும் மீண்டும் ரிஷ்க்கா என்றே தவறாக உச்சரிக்கிறது. அப்பொழுது கடைத்தெருவுக்குச் சென்ற மனைவி திரும்பிவருகிறாள். சென்ற இடத்தில் நினைவு மறதியாக குடையை விட்டுவிட்டு வந்துவிட்டதாகச் சொல்கிறாள். " பரவாயில்லை, ஒரு ரிஷ்க்காவில் போய் எடுத்துவா..." என்கிறார் கணவன். மனைவி திடுக்கிட்டு, " என்ன சொன்னீங்க...?" எனக்கேட்கிறாள். " ரிக்ஷாவில் போய் எடுத்துவா" எனச்சொன்னேன். " இல்லை... இல்லை... நீங்கள் வேறு என்னவோ சொன்னீர்கள்...!!!" இத்துடன் இச்சிறுகதை முடிகிறது. இதனை சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் வாழ்விலே ஒரு முறை என்ற சிறுகதைத்தொகுப்பில் படித்திருக்கின்றேன். ஒரு குழந்தைக்கும் தந்தைக்கும் இடையே நடக்கும் உரையாடலில் ஆழ்ந்திருக்கும் படிமத்தை அதில் கண்டு வியந்தோம். 
ஏறினால் கட்டில், இறங்கினால் சக்கரநாற்காலி. அத்தகைய ஒரு வாழ்க்கையை அவுஸ்திரேலியா சிட்னியில் கடந்துகொண்டிருக்கும் ஈழத்தின் மூத்த கவிஞர் அம்பி அவர்கள் அண்மையில் தனது 88 ஆவது வயதைக் கடந்திருக்கிறார். எனினும், நினைவாற்றலுடன் தனது கடந்த கால வாழ்க்கைப் பயணத்தை நம்முடன் தொலைபேசி ஊடாக பகிர்ந்துகொண்டார். அன்பின் மறுபெயர் அம்பி என சில வருடங்களுக்கு முன்னர் மல்லிகை, ஞானம் அட்டைப்பட அதிதி கட்டுரையில் இவர் பற்றி எழுதியிருக்கின்றேன். நான் எழுதப்புகுந்த 1970 காலப்பகுதியிலிருந்து இவருடனான எனது இலக்கிய நட்புறவு குடும்ப நட்புறவாகவும் நெருங்கியமைக்கு அம்பியின் நல்லியல்புகளே அடிப்படை.

இலங்கைத்தமிழ்ச்சூழலில் ஒருவர் முழு நேர எழுத்தாளராக வாழ்வதன் கொடுமையை வாழ்ந்து பார்த்து அனுபவித்தால்தான் புரியும். எனக்குத்தெரிய பல முழுநேர தமிழ் எழுத்தாளர்கள் எத்தகைய துன்பங்களை, ஏமாற்றங்களை, தோல்விகளை, வஞ்சனைகளை, சோதனைகளை சந்தித்தார்கள் என்பதை மனதில் பதிவு செய்யத்தொடங்கியபோது அவர்களின் வாழ்வு எனக்கும் புத்திக்கொள்முதலானது. நான் எழுத்துலகில் பிரவேசித்த காலப்பகுதியில் மினுவாங்கொடையைச் சேர்ந்த நண்பர் மு.பஷீர், எங்கள் இலக்கியவட்டத்தின் கலந்துரையாடல்களின்போது குறிப்பிடும் பெயர்:- இளங்கீரன். இவரது இயற்பெயர் சுபைர். இவரும் முழு நேர எழுத்தாளராக வாழ்ந்தவர்.
இலக்கியச்சிந்தனை அமைப்பின் விழா சென்னையில் ஏ.வி.எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் 1984 ஏப்ரில் மாதம் நடந்தவேளையில் அங்கு சென்றிருந்தேன். அந்த நிகழ்வில் சுஜாதா பேசி முடித்தபின்னர், மேடைக்குச்சென்று அவருடன் உரையாடியபொழுது, " இலங்கை திரும்பு முன்னர் சென்னையில் ஓடிக்கொண்டிருக்கும் அர்த் சத்யா படத்தையும் பார்த்துவிட்டுச்செல்லுங்கள். " என்றார்.
கந்தையா நடேசன் என்ற இயற்பெயர்கொண்டவரும், இலக்கிய ஊடகத்துறைகளில் தெணியான் என அழைக்கப்பட்டவருமான ஈழத்தின் மூத்த இலக்கிய ஆளுமையின் பிறந்த தினம் இன்றாகும். வடமராட்சியில் பொலிகண்டியில் கந்தையா - சின்னம்மா தம்பதியருக்கு 06-01-1942 இல் பிறந்த நடேசு, இலக்கியஉலகில் பிரவேசித்ததும் தெணியான் என்ற பெயரில் எழுதத்தொடங்கியவர். தான் கல்வி கற்ற கரவெட்டி தேவரையாளி இந்துக்கல்லூரியிலேயே நீண்டகாலம் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள தெணியானை மற்றும் ஒரு மூத்த எழுத்தாளர் கே. டானியலின் வாரிசு எனவும் வர்ணிக்கப்பட்டவர். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் பல நாவல்களும் சில விமர்சனக் கட்டுரைத்தொகுதிகளையும் தமிழ் இலக்கியத்திற்கு வரவாக்கியிருக்கும் தெணியானின் பாதுகாப்பு என்ற யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதியில் வெளிவந்தது. இச்சிறுகதை தற்போது இலங்கைப்பாடசாலைகளில் 11 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான தமிழ் பாட நூலிலும் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து முன்னர் வெளியான விவேகி என்ற இதழில் 1964 இல் தெணியானின் முதல் சிறுகதை பிணைப்பு வெளியாகியது. அதனைத்தொடர்ந்து, மல்லிகை, ஞானம், யாழ். முரசொலி உட்பட பல இதழ்களில் அயராமல் எழுதியிருப்பவர். இவருடைய கழுகுகள் (நாவல்) சொத்து (சிறுகதைத்தொகுதி) என்பன தமிழ்நாட்டில் பிரபல பிரசுர நிறுவனங்களான நர்மதா பதிப்பகம், என்.சி.பி.எச் வெளியீடுகளின் ஊடாக தமிழக வாசகர்களையும் சென்றடைந்துள்ளன.

“உங்களுடைய கையெழுத்து அழகாக இருக்கிறது” என்றேன். “தலை எழுத்து அப்படி அல்ல” என்றார் கனகராசன். சொல்லும் போது மந்தகாசமான புன்னகை. பல எழுத்தாளர்களின் தலை எழுத்து அவர் சொன்னது போன்று அழகாக அமையவில்லை என்பது என்னவோ உண்மைதான். வேறு எந்தத் தொழிலும் தெரியாமல் எழுத்தை மட்டுமே நம்பிவாழ்வைத் தொடங்கியவர்களின் வரிசையில் இடம் பெற்றவர் மு.கனகராசன். இவர் பணியாற்றிய பத்திரிகைகள் பல. இலக்கியச் சிற்றேடுகள் சிலவற்றுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். நான் அறிந்த வரையில் மு.க. என எம்மால் அழைக்கப்பட்ட மு. கனகராசன் சுதந்திரன் - தேசாபிமானி - புதுயுகம் , தினகரன் முதலான பத்திரிகைககளிலும் சோவியத்நாடு இதழிலும் பணியாற்றியவர். 
" நான் ஒரு பத்திரிகை தொடங்கப்போகின்றேன். நீங்களும் ஆதரவு தரவேண்டும்." என்று 35 வயதுள்ள அவர், நடிகர்திலகம் சிவாஜிகணேசனிடம் கேட்கிறார். நகைச்சுவை நாடகங்களிலும் சில திரைப்படங்களிலும் அறிமுகமாகியிருந்த அவர், சட்டமும் படித்திருந்தார். உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். சில வர்த்தக நிறுவனங்களின் சட்ட ஆலோசகராகவும் விளங்கினார். எதனையும் தர்க்கரீதியில் விவாதிக்கும் திறமையும் அவருக்கிருந்தது. இவ்வளவு ஆற்றலும் இருந்தும், எதற்காக பத்திரிகையும் நடத்தி வீணாக நட்டப்படவேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே சிவாஜி அவருக்கு புத்திமதி சொன்னார். 
இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை இன்றுவரையில் தீராதிருப்பதற்கு பலரும் பல காரணங்களைச்சொல்லி வருகிறார்கள். விதேசியர்கள் வந்து சூறையாட வேண்டியதையெல்லாம் அள்ளிக்கொண்டு, இனி எக்கேடும் கெட்டுப்போங்கள் என புறப்பட்டார்கள். அவர்கள் தந்த சுதந்திரம் எமது அரசியல்வாதிகளுக்கு தந்திரமானதுதான் மிச்சம். இந்தப்பின்னணியில் முதல் பிரதமராக பதவிக்கு வந்த டீ.எஸ். சேனாநாயக்கா, 1952 இல் காலிமுகத்திடலில் குதிரை சவாரிக்குச்சென்று விழுந்து இறந்ததும், அடுத்த பிரதமர் யார்...? என்ற பதவிப்போட்டியில் வேரோடியிருந்த இனப்பிரச்சினை இன்னமும் தீரவில்லை. சிங்களத்தலைவர்கள் பதவிக்கு வரவேண்டுமானால் இலங்கை தேசிய சிறுபான்மை இனங்கள் பலிக்கடாவாகவேண்டும். 1955 இல் பிரதமராக யாழ்ப்பாணம் சென்ற சேர். ஜோன் கொத்தலாவலை, வடபுலத்து மக்கள் வழங்கிய மாலை மரியாதை வரவேற்பினால் மனம் குளிர்ந்து, " தமிழுக்கும் சிங்களத்திற்கும் சம அந்தஸ்து வழங்க சட்டம் கொண்டுவருவேன்" என்றார். இதனை தவறாகப்புரிந்துகொண்ட எச். எல். மேத்தானந்தா என்ற ஒரு பௌத்த மத தீவிரவாதி " சரிதான், இனிமேல் சிங்களவர்களும் தமிழ்தான் படிக்கவேண்டிவரும் " என்று தென்னிலங்கையில் வகுப்புவாதம் கக்கத்தொடங்கினார். அதனை தனக்குச்சாதமாக்கினார் பண்டாரநாயக்கா. இதனைப்புரிந்துகொண்ட கொத்தலாவலை, தாமதிக்காமல் ஒரு பல்டி அடித்தார். 1956 இல் களனியில் ஐ.தே.கட்சி மாநாட்டில், தனிச்சிங்களமே ஆட்சி மொழி என்றார். பண்டாரநாயக்கா அதன் பிறகும் சும்மா இருப்பாரா...? தாம் பதவிக்கு வந்தால் 24 மணிநேரத்தில் சிங்களத்தை ஆட்சிமொழியாக்குவேன் என்றார். ஐ.தே.க.வை தோற்கடிக்க ஐம்பெரும் சக்திகளை (பஞ்சமா பலவேகய) திரட்டிக்கொண்டு தேர்தலில் வென்ற பண்டாரநாயக்காவுக்கு உண்மையில் அப்படி ஒரு எண்ணம் இருக்கவில்லை. டீ.எஸ். சேனாநாயக்காவுக்குப்பிறகு தனக்கு வரவேண்டிய சந்தர்ப்பம் டட்லிக்கும் அவரையடுத்து கொத்தலாவலைக்கும் சென்றதுதான் அவரை சிங்கள தீவிரவாதம் பேசக்காரணமாக இருந்திருக்கிறது. அதற்குப்பின்னாலிருந்து நெருப்பு மூட்டியவர்கள் மேத்தானந்தா, புத்தரகித்த தேரோ ஆகியோர்.
கடந்த பதினொரு ஆண்டுகளுக்குள் (2005 -2016) நான் மூன்று தடவைகள் சந்தித்த தமிழச்சியின் ஆற்றலும் ஆளுமையும் தோழமையும் அவரின் வளர்ச்சியினூடே எனக்குத் தென்பட்ட வியத்தகு அம்சங்கள். கட்டிடக்காட்டினுள் வாழத்தலைப்பட்டபோதிலும் உள்ளார்ந்தமாக நேசித்த கரிசல்காட்டின் நினைவுகளுடன் அந்த மண்ணின் மக்களை தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் அவர் தற்கால தமிழக இலக்கிய சூழலில் நிரம்பவும் பேசப்படுபவர். 2005 இல் சென்னை ராணிமேரி கல்லூரியின் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராக அவுஸ்திரேலியாவுக்கு தனது முனைவர் பட்ட ஆய்விற்காக வந்தபோது முதல் முதலில் சந்தித்தேன். 2009 இல் தி.மு.க.வின் இளைஞர் அணி மாநாட்டை திருநெல்வேலியில் கொடியேற்றி தொடக்கிவைத்த அவரது அரசியல் பிரவேசத்தைக்கண்டேன். 2013 இல் கரிசல்காட்டின் வாசம் நிரம்பிய சில நூல்களின் படைப்பாளியாக பார்த்தேன். குறிப்பிட்ட இந்த எட்டு ஆண்டுகளுக்குள் ஒரு சந்தர்ப்பத்தில் லோகசபைத்தேர்தலில் ஒரு எம்.பி.யாக நிற்பதற்கு வேட்புமனு தாக்கல்செய்யவேண்டிய தருணத்தில் எதிர்பாராதவிதமாக வேலூரில் கார்விபத்தில் சிக்கியதனால் அந்த வாய்ப்பையும் இழந்து, அதனால் சில மாதங்கள் படுக்கையிலிருந்தபோதிலும் மீண்டு எழுந்துவந்து கவிதைகள், கட்டுரைகள் படைத்தார். பாதியில் நின்ற ஆய்வேட்டை பூர்த்திசெய்து முனைவர் பட்டமும் பெற்றுக்கொண்டார்.
வள்ளுவர் கம்பன் இளங்கோ பாரதி முதலான முன்னோடிகளை நாம் நேரில் பார்க்காமல் இவர்கள்தான் அவர்கள் என்று ஓவியங்கள் உருவப்படங்கள் சிலைகள் மூலம் தெரிந்துகொள்கின்றோம். இவர்களில் பாரதியின் ஒரிஜினல் படத்தை நம்மில் பலர் பார்த்திருந்தாலும், கறுப்புக் கோர்ட் வெள்ளை தலைப்பாகை தீட்சண்யமான கண்களுடன் பரவலாக அறிமுகம்பெற்ற படத்தைத்தான் பார்த்து வருகின்றோம். அந்தவரிசையில் வீரபாண்டிய கட்டபொம்மனை நடிகர் திலகம் சிவாஜியின் உருவத்தில் திரைப்படத்தில் பார்த்துவிட்டு அவரது சிம்ம கர்ஜனையை கேட்டு வியந்தோம். பிரிட்டிஷாரின் கிழக்கிந்தியக்கம்பனிக்கு அஞ்சாநெஞ்சனாகத் திகழ்ந்து இறுதியில் தூக்கில் தொங்கவிடப்பட்ட வீரபாண்டியகட்டபொம்மன் மடிந்த மண் கயத்தாறைக் கடந்து 1984 இல் திருநெல்வேலிக்குச் சென்றேன். கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட அந்தப் புளியமரம் இப்பொழுது அங்கே இல்லை. கட்டபொம்மன் பற்றிய பல கதைகள் இருக்கின்றன. அவன் ஒரு தெலுங்கு மொழிபேசும் குறுநில மன்னன் என்றும் வழிப்பறிக்கொள்ளைக்காரன் எனவும் எழுதப்பட்ட பதிவுகளை படித்திருக்கின்றேன். இவ்வாறு கட்டபொம்மனைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கு முன்பே எனது இளம்பருவ பாடசாலைக்காலத்தில் இலங்கை வானொலியில் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் சக்தி கிருஷ்ணசாமியின் அனல்கக்கும் வசனங்களை சிவாஜிகணேசனின் கர்ஜனையில் அடிக்கடி கேட்டதன்பின்பு- அந்த வசனங்களை மனப்பாடம்செய்து பாடசாலையில் மாதாந்தம் நடக்கும் மாணவர் இலக்கிய மன்ற கூட்டத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் வேடம் தரித்து நடித்தேன். ஜாக்சன் துரையாக நடித்த மாணவப்பருவத்து நண்பன் சபேசன் தற்பொழுது லண்டனிலிருக்கிறான். இடைசெவலைக் கடந்துதான் திருநெல்வேலிக்குப்போக வேண்டும். வழியில் வருகிறது கயத்தாறு. அந்த இடத்தில் இறங்கி கட்டபொம்மன் சிலையைப்பார்த்தேன். பாடசாலைப்பருவமும் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படமும் நினைவுக்கு வந்தன. அவ்விடத்தில் அந்தச்சிலை தோன்றுவதற்கு முன்னர் மக்கள் தாமாகவே ஒரு நினைவுச்சின்னத்தை எழுப்பியிருந்தார்களாம். எப்படி...?
பதிவுகள் இணையத்தில் கிரிதரன் குறிப்பிட்டிருப்பது போன்று இன்றைய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் எழுத்தாளர் மட்டுமல்ல, அவர் சிறந்த வாசகர். அத்துடன் நல்ல நினைவாற்றலும் பல்துறை ஆற்றலும் மிக்கவர்.தினமும் அவர் நூல்கள் படிப்பவர். அவர் ஆங்கில இலக்கியம் படித்தவர். அவர் சினிமாவுக்கு வந்தது ஒரு விபத்து. தொடர்ந்து கல்லூரியில் படித்து பட்டம் பெறுவதற்கே விரும்பியிருந்தவர். தாய் நடிகை சந்தியாவிடம், பத்மினி பிக்ஷர்ஸ் பந்துலுவும், சித்ராலய ஶ்ரீதரும் கேட்டதனாலேயே அம்மு என்று அழைக்கப்பட்ட ஜெயலலிதா தமிழ்த் திரையுலகிற்கு வந்தார்.
தமிழ்நாட்டில் கடலூரில் 24-04-1934 ஆம் திகதி பிறந்து தமது 81 வயதில் கடந்த 08-04-2015 ஆம் திகதி சென்னையில் மறைந்த மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தன் - படைப்பிலக்கியவாதி - பத்திரிகையாளர் - சினிமா வசனகர்த்தா - பாடலாசிரியர் - திரைப்பட இயக்குநர் என பன்முக ஆளுமை கொண்டிருந்தவர். அவரது வாழ்வும் எழுத்தும் கம்பீரமானது. அவர் நீண்டகாலம் ஈடுபட்ட துறைகள் குறித்து ஏற்கனவே ஏராளமான மதிப்பீடுகள் வெளியாகியிருக்கின்றன.
வீரகேசரியால் எனக்குக்கிடைத்த நண்பர்கள் அதிகம். ஊடகத்துறையானது நண்பர்களையும் எதிரிகளையும் சம்பாதித்துக்கொடுக்கும். ஆனால், பொருளாதார ரீதியில்தான் சம்பாத்தியம் குறைவானது. வீரகேசரிக்கு நூறு வயது விரைவில் நெருங்கவிருக்கிறது. மகாகவி பாரதியின் உற்ற நண்பர் வ.ராமசாமி (வ.ரா) அவர்களும் முன்னொரு காலத்தில் இதில் ஆசிரியராக பணியாற்றியவர்தான். புதுமைப்பித்தனுக்கும் பிறிதொரு காலத்தில் அச்சந்தர்ப்பம் வந்தது. ஆனால், அவர் சினிமாவுக்கு வசனம் எழுதச் சென்னைக்குச் சென்றமையால், இலங்கைக்கு வரவில்லை. கே.பி. ஹரன், அன்டன் பாலசிங்கம், செ.கதிர்காமநாதன், கே.வி. எஸ்.வாஸ், காசிநாதன், கோபாலரத்தினம், க. சிவப்பிரகாசம், டேவிட் ராஜூ, பொன். ராஜகோபால், சிவநேசச்செல்வன், நடராஜா, கார்மேகம், டி.பி.எஸ். ஜெயராஜ், அஸ்வர், கனக. அரசரத்தினம், சுபாஷ் சந்திரபோஸ் உட்பட பலர் பணியாற்றிய பத்திரிகை வீரகேசரி. வீரகேசரி குடும்பத்தில் இருந்த சிலரைப்பற்றி ஏற்கனவே எழுதியிருக்கின்றேன். மின்னஞ்சல் - இணையத்தள வசதிகள் இல்லாத அக்காலத்தில் அங்கு பணியாற்றியவர்களின் வாழ்க்கையை இன்று நினைத்துப் பார்க்கும்பொழுது சுவாரஸ்யங்களும் துயரங்களும் கெடுபிடிகளும் சவால்களும் நெருக்கடிகளும்தான் நினைவுகளில் வந்து அலைமோதுகின்றன. அத்தகைய ஒரு கால கட்டத்தில்தான் வரதராஜா வீரகேசரியில் இணைந்திருந்தார்.அவர் அங்கு அலுவலக நிருபராக பணியாற்றினார். எனக்கு வீரகேசரியுடனான தொடர்பு 1972 இலிருந்து தொடங்கியது. அப்பொழுது நீர்கொழும்பு பிரதேச நிருபராகவே அங்கு இணைந்தேன்.
அண்மையில் தமது பவளவிழாவை சந்தித்த நண்பர் பத்மநாப ஐயர் பற்றிய பதிவொன்றை எழுதியிருந்தேன். அதனைப்படித்த பலரும் தொடர்புகொண்டு மின்னஞ்சலில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். சிலர் அவருடைய தொலைபேசி இலக்கம் கேட்டிருந்தனர். என்னிடமும் இருக்கவில்லை.. லண்டனில் வதியும் இலக்கிய நண்பர்களிடம் கேட்டிருந்தேன். அதற்கிடையில் பத்மநாப ஐயரே மின்னஞ்சலில் வந்தார். நீண்ட இடைவெளிக்குப்பின்னர் அவருடன் உரையாடினேன். அந்தப்பதிவில் நான் குறிப்பிட்டிருந்த அவருடைய மைத்துனர், நீர்கொழும்பில் சமூகப்பணிகள் மேற்கொண்ட சுந்தரம் ஐயர் சென்னையில் காலமாகிவிட்ட எனக்குத்தெரியாத தகவலும் தந்தார். காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்த ஓட்டத்தில் எம்முடன் பயணித்த பலரும் விடைபெறுவது இயல்புதான்.
இரண்டு வயதில் வாசிக்கத்தொடங்கி, நான்கு வயதில் கட்டுரை எழுதி, பதினேழு வயதில் சLateKuramagalிறுகதை படைத்து, உயர்கல்வியில் தேர்ச்சியடைந்து, ஆசிரியராகி, வெளிவாரி பட்டப்படிப்புடன் நாடகத்துறையிலும் பயின்று, எழுத்தாளராக, பெண்ணிய ஆளுமையாக, சமூகச்செயற்பாட்டளராக, பேச்சாளராக பரிமளித்து அயற்சியின்றி இயங்கி, கனடாவில் மௌனமாக விடைபெற்ற ஈழத்தின் மூத்த எழுத்தாளர் பற்றி அறிந்திருக்கிறீர்களா...? அவர்தான் வள்ளிநாயகி என்ற இயற்பெயருடனும் குறமகள் என்ற புனைபெயருடனும் வாழ்ந்து தமது 83 ஆவது வயதில் இம்மாதம் 15 ஆம் திகதி கனடா ரொரண்டோவில் மறைந்த இலக்கியவாதி.
"படைப்பு இலக்கியமா -? , அரசியலா - ? இதில் எனது இறுதித்தெரிவு எது ? எனக்கேட்டால், படைப்பு இலக்கியம்தான் எனச்சொல்வேன். எனது படைப்புக்கூடாக சமூகத்தை பார்க்கும்போது தோன்றும் நெருக்கடிகளிலிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ள அரசியல் ஒரு கவசமாகியது. எனினும், எனது சமூகம்சார்ந்த பணியில் படைப்பு இலக்கியமே இறுதித்தேர்வாக அமையும் " என்று தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த எழுத்தாளரும் சமூகச்செயற்பாட்டாளருமான சல்மா, கடந்த ஞாயிறன்று மெல்பனில் Mulgrave Neighborhood House மண்டபத்தில் நடைபெற்ற இலக்கியச்சந்திப்பு நிகழ்ச்சியில் குறிப்பிட்டார். அவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்து மாநிலத்தில் நடைபெற்ற Byron bay எழுத்தாளர் விழாவில் பங்குபற்ற வருதைந்திருந்த சல்மா, சிட்னியில் இரண்டு தமிழ் அமைப்புகள் ஒழுங்குசெய்த சந்திப்பு கலந்துரையாடலில் பங்கேற்றபின்னர் மெல்பனில் நடந்த நிகழ்ச்சியிலும் உரையாற்றினார்..
மின்னஞ்சல் யுகம் வந்த பின்னர் காகிதமும் பேனையும் எடுத்து கடிதம் எழுதி தபாலில் அனுப்பும் வழக்கம் அரிதாகிவிட்டது. தொலைபேசி, கைப்பேசி, ஸ்கைப், டுவிட்டர், வைபர், வாட்ஸ்அப் முதலான சாதனங்கள் விஞ்ஞானம் எமக்களித்த வரப்பிரசாதமாயிருந்தபோதிலும் , அந்நாட்களில் பேனையால் எழுதப்பட்ட கடிதங்கள் தொடர்பாடலை ஆரோக்கியமாக வளர்த்து மனித நெஞ்சங்களிடையே உணர்வுபூர்வமான நெருக்கத்தையே வழங்கிவந்தன. உலகம் கிராமமாகச் சுருங்கிவரும் அதே சமயம் மனித மனங்களும் இந்த அவசர யுகத்தில் சுருங்கிவருகின்றன. 
" செ.கதிர்காமநாதன் பட்டப்படிப்பு முடிந்ததும் இலங்கையின் பிரபல்யமான பத்திரிகை நிறுவனம் ஒன்றில் சில ஆண்டுகள் பணிபுரிந்தார். இக்காலம் மிக இக்கட்டான காலம். தக்க ஊதியமே இவருக்கு கிட்டவில்லை. எழுத்தாளரான இவருக்குக் கிடைத்த மாதச்சம்பளத்தையே சொல்லத்தயங்கினார். தன் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்று வருந்தினார். மனம் நொந்தார். கூடிய ஊதியம் கிடைக்கத்தக்க இடங்களிலெல்லாம் வேலைக்காக முயன்றுகொண்டேயிருந்தார். பத்திரிகையில் பணியாற்றியவேளை ஒரு நாவலையும் அதே இதழில் தொடராக எழுதினார். அதற்குத்தனியாக பணம் கிடைத்ததா ? என்று கேட்டேன். கிடைத்த தொகையை வேதனையோடுதான் கூறினார். வழமையான லாப நோக்காகவா ? அவரது உழைப்பிற்கு நன்றிக்கடனாகவா ? இலக்கிய ஆர்வத்தினாலேயா? தெரியவில்லை. அவரது மொழிபெயர்ப்புக்கதை ஒன்றையும் முன்னர் வெளியிட்ட மூன்று சிறுகதைகளையும் சேர்த்து இன்று நூலாக வெளியிட்டுள்ளனர், அவர் பணியாற்றிய நிறுவனத்தினர். 113 பக்கம். கிரவுன் 1/8 மடித்தாளில் நியுஸ் பிரிண்ட் பேப்பரில் அச்சிடப்பட்ட இந்நூலின் விலை ரூ.2/25. மலிவுப் பதிப்பு நூல்களை வெளியிட்டு வெற்றி (இலாபத்தில்) பெற்று விட்டதாகக்கூறும் இவர்கள் தந்த நூல்களில் இதுவே முதன்மைபெறுகிறது. நூலின் பெயர்:நான் சாகமாட்டேன்." 

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









