திரும்பிப்பார்க்கின்றேன் - 02: வாழ்வில் எது எஞ்சும்? எது மிஞ்சும்? பயணத்தை திசை திருப்பிய ‘மாணிக்ஸ்’ மாணிக்கவாசகர் –
“இவர் ஓர் எழுத்தாளர் அல்லர். ஆனால், எப்பொழுதுமே எழுத்தாளர்களுக்கு மத்தியிலே காணப்படுபவர். எழுத்தாளர்களுக்காக எதையும் செய்யத்துணிபவரும் கூட.குறிப்பாக முற்போக்கு எழுத்தாளர்களால் நன்கு அறியப்பட்டவர். மாணிக்கவாசகர்தான் அவரது பெயர்.” - இவ்வாறு மல்லிகை 2010 அக்டோபர் இதழில், தமது வாழும் நினைவுகள் தொடரில் பதிவு செய்கிறார் நண்பர் திக்குவல்லை கமால். கமாலின் வார்த்தைகளை நான் மட்டுமல்ல மாணிக்கவாசகரை நன்கு தெரிந்த அனைவருமே அங்கீகரிப்பார்கள். எனது வாழ்வை ஒருகட்டத்தில் திசை திருப்பியவர்தான் இந்த மாணிக்கவாசகர். 1973-1976 காலப்பகுதியில் நிரந்தரமான வேலை எதுவும் இல்லாமல் அலைந்துகொண்டிருந்தேன். காலிமுகத்திடலில் வீதி அகலமாக்கும் நிர்மாணப்பணியில் ஒப்பந்த அடிப்படையில் அங்கு வேலை செய்த தொழிலாளர்களை ‘மேய்க்கும்’ ஓவர்ஸீயர் வேலையையும் ஒப்பந்தம் முடிந்ததும் இழக்கநேர்ந்தது. எனது நிலைமையைப்பார்த்து பரிதாபப்பட்ட பிரேம்ஜியும் சோமகாந்தனும் எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பக வேலைகளுக்காக என்னை உள்வாங்கி மாதம் 150 ரூபா அலவன்ஸ் தந்தார்கள். நானும் நீர்கொழும்பு – கொழும்புஎன தினசரி பஸ்ஸ_க்கு செலவழித்து பயணித்துக்கொண்டிருந்தேன். முற்போக்குஎழுத்தாளர் சங்கம் மற்றும் கூட்டுறவுப்பதிப்பகத்தின் பணிகளின்போதுதான் மாணிக்ஸ்அறிமுகமானார். அவருடன் அறிமுகமான மற்றுமொருவர் சிவராசா மாஸ்டர். இருவருமே கம்யூனிஸ்ட் கட்சியின் (மாஸ்கோ) ஆதரவாளர்கள். அத்துடன் இருவரும் ஆசிரியர்களாக கொழும்பில் பணியிலிருந்தவர்கள்.

“புதுமைப்பித்தனது வாழ்க்கை தமிழ் எழுத்தாளர் ஒருவரின் சோக நாடகம், உயிருள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை” – என்று எழுதிய தொ.மு.சிதம்பரரகுநாதன் தமது 79 ஆவது வயதில் திருநெல்வேலியில் மறைந்தார் என்ற அதிர்ச்சியும் துயரமும் கலந்த செய்தியை தாங்கிய கடிதம் 2001 ஆம் ஆண்டு இறுதியில் இலங்கையிலிருந்து நண்பர் கே.கணேஷிடமிருந்து எனக்கு வந்தது. வாராந்தம் கொழும்புப் பத்திரிகைகள் இங்கு திங்கள் அல்லது செவ்வாய் கிடைத்துவிடும். ஆனால் அவற்றில் இந்த மறைவுச் செய்தியை காணமுடியவில்லை. திருநெல்வேலி பெருமாள்புரத்தில்தான் இப்பொழுதும் அவர் வசிக்கிறார் என நம்பிக்கொண்டிருந்தேன். இறுதியாக 90 இல் அவரது இல்லத்திற்கு குடும்பத்தோடு விருந்தினராகச் சென்றேன். எனது அப்பாவின் வழியில் அவர் எனது நெருங்கிய உறவினர் என்பது எனக்கு எப்பொழுதும் பெருமை தரும் விஷயம். அவரது மருமகள் (மகனின் மனைவி) மாலதி ஹரீந்திரன் எனக்கு அண்ணி முறை. இந்த உறவு முறைகளுக்கெல்லாம் அப்பால் ரகுநாதனை நான் பெரிதும் மதிப்பதற்கு பல காரணங்கள் இருந்தன. அதனாலேயே அவரது மறைவின் பின்னர் எனது பறவைகள் நாவலை அவருக்கே சமர்ப்பணம் செய்திருந்தேன். புதுமைப்பித்தனின் நெருங்கிய சகாவான ரகுநாதன், அவர் குறித்து கொண்டிருந்த – எமக்குப் புகட்டும் பாடம் என்ன? என்பதையே இந்த ஆக்கத்தின் ஆரம்பத்தில் குறிப்பிட்டேன். எனவே ரகுநாதன் குறித்து என்னால் சொல்லக்கூடியது இதுதான்:- ‘ரகுநாதனது வாழ்க்கை சமரசங்களுக்குட்படாத ஒருவரின் துணிவு, உயிருள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு முன்னுதாரணம்.’

கொழும்பில் இயங்கும் இலங்கை முற்போக்கு கலை, இலக்கிய மன்றம் கடந்த 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் முன்னோடி, முற்போக்கு எழுத்தாளர்கள் ஒன்பதுபேரை கௌரவித்து பாராட்டுவதற்காக ஒரு விழாவை நடத்தியதாக அறியக்கிடைத்தது. நல்ல செய்தி. வாழும் காலத்திலேயே ஒருவரை பாராட்டுவதென்பது முன்மாதிரியான செயல். இந்தச்செயல் இலங்கையில் ஒரு மரபாக பின்பற்றப்பட்டு வருவதும் மகிழ்ச்சியானது. பொன்னாடைகள் யாவும் பன்னாடைகளாகிக்கொண்டிருக்கும் சமகாலத்தில் இலங்கையில் முற்போக்கு இலக்கியப்பணியை இயக்கமாகவே நடத்திவந்த முன்னோடிகள் பற்றிய தகவல்களையும் இன்றைய தலைமுறையினர் இந்த நிகழ்வின் ஊடாகவும் தெரிந்துகொள்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்னர் ஒரு காலத்தில் முற்போக்கு என்றவுடன் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்தான் நினைவுக்கு வரும். தமிழ்நாட்டிலும் அந்தப்பெயரில் ஒரு சங்கம் இயங்குகிறது. மாக்சிஸ்ட் – லெனினிஸ்ட் சிந்தனையுள்ள இடது கம்யூனிஸ்ட் கட்சி அதற்கு பின்பலமாகவும் பின்புலமாகவும் இருக்கிறது. செம்மலர் என்ற சிற்றேட்டையும் அந்த அமைப்பு வெளியிடுகிறது. அதேசமயம் வலதுகம்யூனிஸ்ட் (மாஸ்கோ சார்பு) இயக்கமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் இயங்குவது தமிழ்நாடு கலை, இலக்கிய பெருமன்றம். அதன் ஸ்தாபகர் தோழர் ஜீவானந்தம். அவர் ஆசிரியராக பணியாற்றி வெளியானது தாமரை இதழ். பின்னர் யார் யாரோ அதற்கு ஆசிரியரானார்கள். இலங்கையில் இந்த நிலைமை இருக்கவில்லை.



ஆர்ப்பாட்டம் எதுவுமின்றி அமைதியாக இலக்கியப்பணியாற்றுபவர்களை இக்காலத்தில் காண்பது அபூர்வம்தான். தழும்பாத நிறைகுடமாக எம்மத்தியிலிருப்பவர் கே.எஸ்..சிவகுமாரன். இதுவரையில் தமிழில் 22 நூல்களையும் ஆங்கிலத்தில் இரண்டு நூல்களையும் வரவாக்கிவிட்டு தொடர்ந்தும் அயராமல் ஆங்கில, தமிழ் இதழ்களில் எழுதிக்கொண்டிருக்கிறார். தங்கள் நூல்களைப்பற்றி ஆங்கில, தமிழ் ஊடகங்களில் சிற்றிதழ்களில் கே.எஸ்.எஸ். எழுதமாட்டாரா? என்று காத்திருக்கும் படைப்பிலக்கியவாதிகளும் எம்மத்தியிலிருக்கிறார்கள். சிவகுமாரன் தன்னை ஒரு இலக்கியவிமர்சகன் என்று சொல்லிக்கொள்ள விரும்பாதவர். இன்றும் தான் ஒரு திறனாய்வாளன்தான் என்று அடக்கமாகச்சொல்லிக்கொள்ளும் இவர், சிறுகதை எழுத்தாளருமாவார். அத்துடன் ஆங்கிலத்திலும் தமிழிலும் கவிதைகளும் எழுதியிருக்கிறார். ஆயினும் ஒரு விமர்சகராக, திறனாய்வாளராக, பத்தி எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராகத்தான் வெளியுலகிற்கு அறியப்பட்டிருக்கிறார். இருமை, சிவகுமாரன் கதைகள் ஆகிய இரண்டு சிறுகதைத்தொகுப்புகள் இதுவரையில் வெளியாகியிருக்கின்றன. பெரும்பாலான இவரது கதைகள் உளவியல் சார்ந்திருக்கும். விரைவில் பவளவிழாக்காணவுள்ள கே.எஸ்.எஸ்., பேராதனைப்பல்கலைக்கழக ஆங்கிலப்பட்டதாரி. தமது வாழ்நாளில் பெரும்பகுதியை இலக்கியத்திற்கும் ஊடகம் மற்றும் இதழியலுக்கும், மொழிபெயர்ப்பிற்கும் கல்வித்துறைக்கும் அர்ப்பணித்திருப்பவர். தன்னை எங்கும் எதிலும் முதனிலைப்படுத்திக்கொள்ள விரும்பாத அளவுக்கு அதிகமான தன்னடக்க இயல்புகொண்டவர். விமர்சகர்கள் விமர்சனத்துக்கும் கண்டனத்துக்கும் ஆளாகும் இயல்பினர் என்பதனாலோ என்னவோ, தம்மை ஒரு திரனாய்வாளர் என்று சொல்லிக்கொள்வதில் அமைதிகாண்பவர். எவரையும் தமது எழுத்துக்களினால் காயப்படுத்தத்தெரியாதவர்.

அடுத்தடுத்து எம்மிடமிருந்து விடைபெறுபவர்களின் வரிசையில் இலக்கிய நண்பர் கே. விஜயனும் அண்மையில் இணைந்துகொண்டு எம்மிடமிருந்து அகன்றுவிட்டார். இவருடைய பெயரில் சென்னையில் ஒரு திரைப்பட இயக்குநர் இருந்தார். ஜெயகாந்தனின் நண்பர். அதனால் ஈழத்து எழுத்தாளர் விஜயனை நான் காணும் சந்தர்ப்பங்களில் " எப்படி இயக்குநர் சார்?" என்று வேடிக்கையாக அழைப்பதுண்டு. கே. விஜயன் என்ற பெயர் ஈழத்து இலக்கிய உலகிலும் தமிழ்ப்பத்திரிகைச்சூழலிலும் நன்கு பிரசித்தி பெற்றிருந்தது. சிறுகதை, தொடர்கதை, நாவல், கட்டுரை, விமர்சனம், பத்தி எழுத்துக்கள், கலை இலக்கிய நிகழ்ச்சிகள் பற்றிய விவரணச் சித்திரம் என நிறைய எழுதிக்குவித்தவர்தான் விஜயன். அத்துடன் வீரகேசரி, சுடரொளி ஆகிய பத்திரிகைகளிலும் பணியாற்றியவர். நான் எழுதத்தொடங்கிய காலத்திற்கு முன்னே எழுதியவர். இவருடைய தொடர்கதை ஒன்று மித்திரன் நாளிதழில் வெளியான சமயத்தில் அதனை (Proof Reading) ஒப்பு நோக்கியிருக்கின்றேன். அச்சமயத்தில் அவர் வெள்ளவத்தையில் ஒரு ஆடைத்தொழிற்சாலையில் பணியிலிருந்தார்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









