தர்மிஸ்டர் ஜே.ஆர்.ஜெயவர்தனா: சாணக்கியரா? சாதுரியக்காரரா?
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனாவின் நினைவு தினம் நவம்பர் 1.

இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் 1943 ஆம் ஆண்டு நடந்த சட்ட சபைத்தேர்தலில் ஒருவர் வெற்றிபெற்றார். களனி பிரதேசத்திலிருந்து முதல் முதலாக அவர் தெரிவாகும்போது அவரது வயது 37. இலங்கையில் நீதித்துறை சார்ந்த ஒரு பெரியவருக்கும் செல்வந்த குடும்பத்திலிருந்து வந்த ஒரு பெண்மணிக்கும் பிறந்தவர்தான் அந்த களனி தொகுதியை பின்னாளில் பிரதிநிதித்துவப்படுத்தியவர். அவர் பிறந்த இல்லம் எது...? என்பதைச் சொன்னால் எவருக்கும் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை! அந்த இல்லம் கொழும்பு வடக்கில், களனி கங்கைக்கும் ஆமர் வீதிக்கும் நடுவில் வரும் கிராண்ட்பாஸ் வீதியில் 185 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ளது. இன்றும் நீங்கள் அந்த இல்லத்தின் முகப்பினை பார்க்கலாம். அந்த இல்லத்தில், நீதிக்கும் செல்வச்செழிப்பிற்கும் பெயர் பெற்ற அந்தக்குடும்பம் வாழ்ந்த காலத்தில் 1906 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி பிறந்த குழந்தையின் பெயர் ஜூனியஸ் ரிச்சர்ட் ஜெயவர்தனா.
இலங்கை அரசியல் வரலாற்றின் ஏடுகளில் இவரது ஆளுமை குறிப்பிடத்தகுந்தது. எத்தனையோ சவால்களை முறியடித்து, தான் நினைத்தவற்றை பல்வேறு தந்திரோபாயங்களுடன் சாதித்தவர். இவரை ஜே.ஆர். எனவும் ஜே.ஆர். ஜெயவர்தனா எனவும் அழைப்பர். 1977 இல் நடந்த பொதுத்தேர்தலில் அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதையடுத்து, தார்மீக சமுதாயம் அமைப்பதுதான் தனது நோக்கம் என்றும் சொல்லி, அதனை தமது தாய் மொழியில் தர்மிஷ்ட சமாஜய என வர்ணித்தார். ஆனால், அந்த தார்மீக ஆட்சியில் 1977 – 1981 -1983 ஆம் ஆண்டுகளின் காலப்பகுதியில் நடந்த பல சம்பவங்களை பார்க்கும்போதும் அகில இலங்கை எங்கும் நிகழ்ந்த வன்முறைகள், தீவைப்புகள், படுகொலைகள் அனைத்தையும் சீர்தூக்கிப்பார்க்கும்போதும், அதுதான் அவர் கனவு கண்ட தார்மீக சமுதாயமா..? எனவும் கேட்கத்தோன்றும்.
இவரது பதவிக்காலத்தில்தான் யாழ்ப்பாணம் பொதுநூலகமும் கயவர்கள் ஏவிவிட்ட தீ அரக்கனுக்கும் பலியாகியது. அவரது அரசியல் எதிரிகள் அவரை "மிஸ்டர் தர்மிஸ்டர்" எனவும் அழைத்தனர். பதினொரு பிள்ளைகளில் மூத்த புதல்வனாக அவர் பிறந்த இல்லம்தான் ஒன்பது தசாப்தங்களுக்கு முன்பிருந்து வீரகேசரி நாளிதழ் வெளியாகும் கட்டிடம்!
இலங்கை பிரித்தானியரின் ஆளுகைக்குள் இருந்த காலப்பகுதியில் பிறந்திருக்கும் ஜே.ஆர்., ஒரு கத்தோலிக்க குடும்பப்பின்னணியை கொண்டிருந்தவர். அவரது பெயரிலிருந்தே அதனையும் தெரிந்துகொள்ளமுடிகிறது. அவர் மட்டுமல்ல, சொலமன் டயஸ் பண்டாரநாயக்கா, ஃபீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா ஆகியோரும் கத்தோலிக்கப் பின்னணி கொண்டிருந்தவர்கள்தான்.



என் கொல்லைப்புறத்துக் காதலிகள் எழுதிய ஜே.கே.யின் இரண்டாவது கதைத்தொகுதி சமாதானத்தின் கதை. எவரும், நூலின் தலைப்பினைப் பார்த்ததும், “ இது ஏதோ இலங்கையில் நீடித்த போர்க்காலத்தில் இடையில் வந்த சமாதான காலத்தின் கதையோ..? “ என்றுதான் எண்ணக்கூடும். இலங்கை, இந்தியா உட்பட பல நாடுகளில் வீதியிலும் நகரம், கிராமத்திலும் நாம் அன்றாடம் காணக்கூடிய பரிதாபத்துக்குரிய பாத்திரம்தான் அந்த சமாதானம். அத்தகைய பாத்திரங்களின் நதிமூலம், ரிஷி மூலம் எவருக்கும் தெரியாது.
அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் விலங்கு மருத்துவர் நடேசன், கடந்த மூன்று தசாப்த காலமாக இலக்கியப் பிரதிகளும் ( சிறுகதை, நாவல், பயண இலக்கியம் ) பத்தி எழுத்துக்களும், தமது தொழில் சார்ந்த புனைவுசாராத படைப்புகளையும் எழுதி வருபவர். இவரது சிறுகதைகளும் நாவல்களும் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளன. ஏற்கனவே இவர் எழுதிய 'வண்ணாத்திக்குளம்', 'உனையே மயல்கொண்டு' ஆகிய நாவல்கள் ஆங்கிலத்திலும், வண்ணாத்திக்குளம் , மலேசியன் ஏர்லைன் 370 ( கதைத் தொகுதி ) என்பன சிங்கள மொழியிலும் வெளிவந்துள்ளன. உனையே மயல்கொண்டு நாவலும் Lost in you என்ற பெயரில் ஆங்கிலத்தில் வரவாகியுள்ளது. அவுஸ்திரேலியாவில் மொழிபெயர்ப்பு முயற்சிகள் என்ற எனது கட்டுரையில் ஏற்கனவே இந்தத் தகவல்கள் குறித்து விரிவாக எழுதியிருக்கின்றேன்.
இந்த 2020 ஆண்டு கொரோனோவுடன் பிறந்து எனக்குப்பிரியமான சிலரையும் மரணிக்கச்செய்துவிட்டது. தொடர்ந்து வரும் மரணச்செய்திகள் மனதில் சஞ்சலத்தையும் பதற்றத்தையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தி, நானும் மாரடைப்புக்குள்ளாகி, மருத்துவமனை சென்று திரும்பினாலும், துயரச்செய்திகள் அடுத்தடுத்து வந்துகொண்டுதானிருக்கின்றன. இலட்சக்கணக்காக மக்கள், கண்ணுக்குத்தெரியாத எதிரியால் கொல்லப்பட்டுக்கொண்டும் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் காலப்பகுதியில் கடந்த ஜனவரி மாதம் முதல் இந்தப்பதிவினை எழுதும் ஜூலை மாதம் இறுதிவரையில் எனக்குப்பிரியமான சிலரை இழந்துவிட்டேன்.
ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் கோயம்புத்தூரில் மாலைநேர தனது வீதியுலாவுக்கு என்னை அழைத்துச்சென்ற மூத்த இலக்கிய விமர்சகர் கோவை ஞானி பற்றிய நினைவுகள் மனதில் அலைமோதுகின்றன. இம்மாதம் ( ஜூலை ) முதலாம் திகதிதான் அவர் தமது 85 வயது அகவையை நிறைவுசெய்துகொண்டு, அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தவர். 2013 ஆம் ஆண்டு தமிழகம் சென்றிருந்தபோது, யுகமாயினி சித்தனுடன், சென்று அவரைப்பார்த்துவிட்டுத் திரும்பி, ஒரு பதிவும் எழுதியிருக்கின்றேன். அன்றைய தினம் பசுமையானது. நெடும்பகல் பொழுது. முதல் நாள் இரவு கோயம்புத்தூரில் இறங்கி, சித்தன் இல்லத்தில் தங்கிவிட்டு மறுநாள் காலை ஞானியைப் பார்க்கப்புறப்பட்டேன். வழித்துணை சித்தன். இலக்கிய உலகில் நான் பிரவேசித்த காலப்பகுதியில் எனக்கு இரண்டுபேரின் பெயர்கள் சற்று மயக்கத்தை கொடுக்கும். ஒருவர் பரீக்ஷா ஞாநி. மற்றவர் கோவை ஞானி.
ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் சிறந்த பங்களிப்பை வழங்கியவரும், தனது பள்ளிப்பருவத்திலிருந்தே இலக்கிய எழுத்தூழியத்தில் ஈடுபட்டவருமான சகோதரி திருமதி பத்மா சோமகாந்தன் நேற்றையதினம் ஜூலை 15 ஆம் திகதி கொழும்பில் மறைந்தார் என்ற துயரமான செய்தி எம்மை வந்தடைந்தது. இறுதியாக கடந்த ஆண்டு கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடந்த எனது “ இலங்கையில் பாரதி “ நூலின் வெளீயீட்டு அரங்கில்தான் சந்தித்தேன். ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலமாக அவரை நன்கு அறிவேன். நெருங்கிய உறவொன்றை இழந்த உணர்வோடு, இந்த அஞ்சலிக்குறிப்பினை கனத்த மனதுடன் எழுதுகின்றேன். அவர் இருக்கும்போது நான் அவரைப்பற்றி எழுதிய ஒரு கட்டுரையை வாசித்துவிட்டு, மிகுந்த உற்சாகத்துடன் கொழும்பிலிருந்து தொலைபேசி ஊடாக என்னை வாழ்த்தி பாராட்டினார். எங்கள் நீர்கொழும்பூரின் சமய - தமிழ்ப்பணிக்கெல்லாம் அவரும் அவரது கணவர் மறைந்த சோமகாந்தனும் நீண்ட காலமாக முன்னின்று பங்களிப்பு செய்தவர்கள். அதனால், எங்கள் ஊர் மக்கள் சார்பாகவும் நான் எழுதவேண்டும். முன்னர் நான் அவர் பற்றி எழுதிய ஆக்கத்தை படித்துவிட்டு, அவ்வெழுத்துக்களில் தான் பழைய நினைவுகளில் சஞ்சரித்ததாகச் சொன்னார். அவர் அன்று சஞ்சரித்த அந்த கடந்த கால செய்திகளுடன் மீண்டும் இந்த குறிப்புகளை பதிவுசெய்கின்றேன்.
மெல்பனில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக என்னுடனும் மற்றும் அனைவருடனும் சிரித்த முகத்துடனும் பண்பான இயல்புகளுடனும் உறவாடிய அன்பர் இராஜநாயகம் இராஜேந்திரா அவர்கள் மறைந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன்.
எனது வாழ்நாளில் நான் சந்தித்து பேசுவதற்கு பெரிதும் விரும்பியவர்கள் பலர். குறிப்பாக கவிஞர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்களைத்தான் நான் சந்திப்பதற்கு மிகவும் விரும்புவேன். ஏனென்றால் நானும் அவர்களின் வர்க்கத்தைச் சேர்ந்தவன்.
தமிழ் ஈழக்கனவுடன் வாழ்ந்த மண்டூர் மகேந்திரன் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தி எம்மை வந்தடைந்துள்ளது.

விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனை தளமாகக்கொண்டிருந்து இயங்கிய தமிழ்ச்சங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் புனர் வாழ்வுக்கழகம், மற்றும் 3 CR வானொலி தமிழ்க்குரல் ஒலிப்பரப்புச்சேவை முதலானவற்றில் நீண்டகாலமாக ஈடுபட்டுழைத்திருக்கும் சண்முகம் சபேசன் இன்று ( 29 -05 – 2020 ) ஆம் திகதி அதிகாலை மெல்னில் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தி எம்மை வந்தடைந்தது.

மகாகவி பாரதியின் ஞானகுரு அல்வாய் அருளம்பலம் சாமி அவர்கள் தோன்றிய இலங்கையின் வடபுலத்தில் அல்வாய் பிரதேசம், பல கலை, இலக்கியவாதிகளையும் தமிழ் அறிஞர்களையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. அவ்வூரிலிருந்து 2007 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் முதல் வெளிவரத்தொடங்கிய ஜீவநதி கலை, இலக்கிய மாத இதழ் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், தனது 136 ஆவது இதழை ஆண்டுமலராக வெளிக்கொணர்ந்துள்ளது. இதன் ஆசிரியர் கலாமணி பரணீதரன் ஈழத்து இலக்கிய உலகில் இளம் தலைமுறையைச் சேர்ந்தவர். யாழ்குடா நாட்டிலிருந்து மறுமலர்ச்சி முதல் மல்லிகை வரையில் பல இதழ்கள் தோன்றி காலப்போக்கில் மறைந்துவிட்ட சூழலில் அங்கு ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஜீவநதியாக ஊற்றெடுத்து வந்தது இந்த இதழ். இலங்கையில் நீடித்த போர்க்காலம் முடிவுறாத காலப்பகுதியில் வடக்கிலிருந்து வெளிவரத்தொடங்கிய ஜீவநதி, ஈழத்து சிற்றிதழ் இலக்கிய வரலாற்றில் கூடுதலான சிறப்பிதழ்களை வெளியிட்டிருக்கும் பெருமையும் பெற்றது. கடந்த பதின்மூன்று ஆண்டுகளுக்குள் இருபது சிறப்பிதழ்களையாவது ஜீவநதி வெளியிட்டிருக்கும் என்பது எமது கணிப்பு. ஜீவநதி அவுஸ்திரேலியா – கனடா சிறப்பிதழ்களையும் முன்னர் வெளியிட்டு இந்த நாடுகளிலிருந்து எழுதிவரும் படைப்பாளிகளையும் ஊக்கிவித்துள்ளது. அத்துடன் சில ஈழத்து இலக்கிய ஆளுமைகளின் வரிசையில் எழுத்தாளர்கள் கே.எஸ். சிவகுமாரன், க. சட்டநாதன், செங்கைஆழியான், தெணியான், குழந்தை சண்முகலிங்கம் ஆகியோரை கௌரவிக்கும் வகையிலும் சிறப்பிதழ்களையும் வெளியிட்டிருக்கிறது. இவை தவிர, பெண்கள் சிறப்பிதழ் , கவிதைச் சிறப்பிதழ் , உளவியல் சிறப்பிதழ் , இளம் எழுத்தாளர்கள் சிறப்பிதழ் , சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் , மலையக சிறப்பிதழ் , திருகோணமலை சிறப்பிதழ் , ஈழம்- கவிதை சிறப்பிதழ் , ஈழத்து பெண் எழுத்தாளர்கள் சிறப்பிதழ், சிறுவர் இலக்கிய சிறப்பிதழ், ஈழம் ஹைக்கூ கவிதைச் சிறப்பிதழ் முதலானவற்றையும் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் கொழும்பிலிருந்து நீண்டகாலமாக வெளிவந்துகொண்டிருக்கும் ஞானம் மாத இதழின் இம்மாதத்திற்குரிய ( 2020 ஏப்ரில் ) பிரதி கிடைக்கப் பெற்றோம். உலகெங்கும் அச்சுறுத்திவரும் கண்ணுக்குத் தெரியாத எதிரியை முறியடிக்க ஒவ்வொரு தேசமும் போராடிக்கொண்டிருக்கும் சமகாலத்தில், இந்த எதிரியின் தோற்றம் வளர்ச்சி குறித்த விரிவான பார்வையுடன், இம்மாதம் 01 ஆம் திகதிவரையில் கிடைக்கப்பெற்ற பாதிப்பு தொடர்பான புள்ளிவிபரங்களுடனும், இலங்கை எதிர்நோக்கும் நெருக்கடியை சமாளிப்பதற்கு பொதுமக்கள் எவ்வாறு தங்களது அன்றாட வாழ்க்கை முறைகளை தேசத்தின் நலன் கருதி மாற்றிக்கொள்ள வேண்டுமென்பதை அறிவுறுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஆசிரியர் தி. ஞானசேகரன் விரிவானதோர் ஆசிரியத்தலையங்கம் எழுதியுள்ளார். ஆசிரியர் தி. ஞானசேகரன் தொழில்முறையில் முன்னர் மருத்துவராக இலங்கையின் மலையகப்பிரதேசங்களில் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. முன்னைய காலங்களில் சில வைரஸ் அச்சுறுத்தலை சந்தித்த சில உலக நாடுகளில் நேர்ந்த தாக்கங்கள் குறித்தும், அதிலிருந்து அந்நாட்டு மக்கள் மீண்டெழுவதற்கு தேவைப்பட்ட காலப்பகுதி பற்றியும் விரிவாக பதிவுசெய்துள்ளார். சமூகப்பிரக்ஞையுடன் ஒரு கலை, இலக்கிய இதழாசிரியர் இந்த ஆசிரியத் தலையங்கத்தை எழுதியிருப்பது பாராட்டத்தக்க செயலாகும்.
“சிறை – நாங்கள் எல்லோருமே ஏதோ ஒரு சிறையினுள்தான் எப்பொழுதும் வாழ்ந்தபடி உள்ளோம். என்று நாம் சிறிய அளவுகொண்ட இடப்பரப்பினுள் அடைபடுகின்றோமோ அன்றுதான் சிறையை உணர்கிறோம்.” கொமடோர் போயாகொடவின் A Long Watch பிரதியின் வாசிப்பனுபவமும் இவ்வாறானதாகத்தான் அமையப்போகின்றது. சமகாலத்தில், கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலினால், நமக்கு நாமே உத்தரவிட்டு, வீட்டுக்குள் சிறைப்பட்டுள்ள இவ்வேளையில் இந்த நூலையும் வாசித்து அதன் அனுபவத்தை எழுத நேர்ந்துள்ளமையும் எதிர்பாராததுதான். இலங்கைத் தீவினைச்சுற்றியிருந்த இந்து மகா சமுத்திரத்தில் ஊர்ந்தும் விரைந்தும்கொண்டிருந்த சாகரவர்த்தனா கப்பல் பற்றி அறிந்திருப்பீர்கள். அது மன்னார் கடல் பரப்பில் 1994 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதி கடற்புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் பாரிய சேதத்திற்குள்ளாக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் வசமும் மன அழுத்தங்களுடன் சில வருடங்கள் வாழ்ந்திருக்கும் இவர், விடுதலையாகி வந்தபின்னரும் இலங்கை அரசின் பாராமுகத்தினாலும் புறக்கணிப்புகளினாலும் மன அழுத்தங்களுக்கு ஆளாகியிருந்தவர். அனைத்து அழுத்தங்களிலுமிருந்து விடுதலை பெறவேண்டுமானால், அந்த அழுத்தங்களினால் பெற்ற அனுபவங்களை பதிவு செய்யவேண்டும். அதனால், நீண்ட மௌனத்தின் பின்னர் அஜித் போயாகொட மனம் திறக்கிறார். அவர் சொல்லச்சொல்ல கேட்டு எழுதுகிறார் சுனிலா கலப்பதி.
இலங்கையின் மூத்த தமிழ் நாடக, திரைப்படக்கலைஞர் ஏ.ரகுநாதன் பிரான்ஸில் மறைந்தார் என்ற அதிர்ச்சி தரும் செய்தி வந்தது. சமீபகாலமாக உலகெங்கும் அச்சுறுத்திவரும் கண்ணுக்கு புலப்படாத எதிரி, எங்கள் தேசத்தின் கலைஞனையும் புலத்தில் காவுகொண்டுவிட்டது. இறுதியாக கடந்த 2019 ஆம் ஆண்டு முற்பகுதியில் பாரிஸ் சென்றபோது, அங்கிருக்கும் நண்பர் எழுத்தாளர் ‘ ஓசை ‘ மனோகரனுடன் ரகுநாதனைப் பார்க்கச்சென்றேன். பாரிஸிலும் வைரஸின் தாக்கம் உக்கிரமடைந்தபோது, அங்கிருக்கும் கலை, இலக்கிய நண்பர்களிடம் ரகுநாதன் குறித்தும் விசாரிக்கத்தவறுவதில்லை. காரணம், அவர் கடந்த சிலவருடங்களாக சிறுநீரக உபாதையினால் தொடர்ந்து சிகிச்சைக்கு சென்று வந்துகொண்டிருந்தவர். கடந்த சில நாட்களாக நான் அடிக்கடி நினைத்துக்கொண்டிருந்த நண்பர் ரகுநாதனும் தற்போது நிரந்தரமாக நினைவுகளாகிவிட்டார் என்பதை கனத்த மனதுடன் உள்வாங்கிக்கொண்டு இந்தப்பதிவை எழுதுகின்றேன்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









