
எங்களது படகின் அடுத்த தரிப்பு, பவேரியா மாநிலத்தில் நூரம்பேக் நகரமாக இருந்தது. ஆனால், படகின் வழிகாட்டும் பொறுப்பாளர்கள் . “இலவசமாக நகரத்தின் மத்திய பகுதிகளை நாங்கள் சுற்றிக் காட்டுவோம். ஆனால், நீங்கள் குறிப்பிட்ட பணம் கொடுத்தால், ஹிட்லரது நாஜி கட்சியினது முக்கிய தலைவர்கள் , அதிகாரிகளுக்கு எதிராக, நேசநாடுகளால் நடத்தப்பட்ட வழக்கு நடந்த இராணுவ நீதிமன்றத்திற்கும் , ஹிட்லரது கட்சி பிரசாரத்திற்கும், கூட்டங்கள், அணிவகுப்புகளுக்கு எனக் கட்டப்பட்ட ஸ்ரேடியம், அணிவகுப்பு மைதானம் போன்ற பகுதிகளுக்கு உங்களை பஸ்சில் கொண்டு சென்று, உங்களுக்குக் காட்டுவதுடன், ஆங்கிலத்தில் விடயங்களைத் தெளிவாக விளக்குவதற்கு ஒருவரை ஒழுங்கு பண்ணமுடியும்“ என முதல் நாள் இரவே சொன்னபோது அங்கு செல்வது எனது நோக்கமாகியது.
இப்படியான வரலாற்றில் விருப்பம் இல்லாத போதும், சியாமளா வருவதற்கு சம்மதித்ததால் காலையில் பஸ்சில் ஏறினோம்.
அது ஓர் அழகான கோடைக்காலத்து நாள்: பிரகாசமாக வெயில் அடித்தது. எங்கள் பஸ் நகரத்தூடாக சென்றது. அப்பொழுது எமது வழிகாட்டி இது இங்கிலாந்தில் லிவர்பூல், மான்செஸ்டர் போன்று தொழிற்சாலைகள் , தொழிலாளர்களைப் பெரிதளவு கொண்ட நகரம் எனப் பிரித்தானியத் தொனியில் சொன்னது எனது காதில் விழுந்தது. ஆனால், கண்கள் வெளியே பார்த்தன. மனத்தில் ஹிட்லரது பன்னிரண்டு வருட கால ஆட்சிபற்றி இதுவரை கேட்ட , படித்த , திரைப்படங்களில் பார்த்த காட்சிகளோடு கலந்து அரைத்த ஆந்திரா மிளகாய்த் தூளாக மனத்தில் காரமாகத் பற்றி எரிந்தது.
இலங்கையில் விடுதலைப்புலிகள் தோற்றப்பின்பு, இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளும் வெளிநாட்டுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்களும் பத்து வருடங்களுக்கு மேலாக இலங்கையிலுள்ள இராஜபக்ஸ அரசை ஹெக் என்ற ஒல்லாந்து நகரத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஏற்றுவோம் எனச் சூளுரைத்த பேச்சுகளைக் கேட்டு நான் காது புளித்தவன். மேலும் ஜெனிவா மனித உரிமை ஆணையத்திற்கு இரு முறை சென்றுள்ளதால் ஓரளவு அதன் நடைமுறைகளைப் பார்த்தவன். எப்பொழுதும் வென்றவர்களே நியாயம், அநியாயம், நீதி என்பவற்றைத் தீர்மானிப்பார்கள். அக்காலத்தில் ரோமர்கள் எந்த அநியாயமான போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை என வரலாற்றில் படித்தவன். அதுபோல் தற்காலத்தில் அமெரிக்கர்கள் நியாயமற்ற போரில் ஈடுபடுவதில்லை என்பதும் தெரிந்தவன் என்பதால் நூரம்பேக்கில் நடந்த இராணுவ நீதிமன்றத்தின் அமைப்பையே பார்க்க விரும்பினேன்.
நூரம்பேக்கில் 1945இல் நடந்த இராணுவ நீதிமன்றத்தில் போட்ட முட்டையில் அடைகாத்துப் பின்பு பொரித்த கோழிக்குஞ்சே ஹெக் ( ICC) நீதிமன்றம். மேற்கு நாடுகள் சில, ஆபிரிக்காவில் சில சர்வாதிகாரிகளோடு சேபியாவின் தலைவர்களைத் தண்டித்ததோடு களைத்துவிட்டது.
அக்காலத்தில் நூரம்பேக் இராணுவ நீதிமன்றத்தை முன்னின்று நடத்திய அமெரிக்கா, தற்போது இஸ்ரேல் பிரதமர் நெத்தனியாகுவை பாதுகாப்பதுடன், ரஸ்ய அதிபர் புட்டினை நீதிமன்றத்தின் முன் நிறுத்த விரும்புகிறது. தற்கால அரசியல் இத்துடன் முடிகிறது.