முதல் சந்திப்பு: கலை, இலக்கிய, மனித உரிமை ஆர்வலர் தன்னார்வத் தொண்டர் லயனல் போப்பகே ! - முருகபூபதி -
- லயனல் போப்பகே -
இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் 1971 ஆம் ஆண்டு தென்னிலங்கையில் நடந்த சிங்கள இளைஞர்களின் ஆயுதக்கிளர்ச்சியை மறந்திருக்கமாட்டீர்கள். பல்கலைக்கழக மாணவர்களும், படித்துவிட்டு வேலை வாய்ப்பில்லாமல் அவதியுற்ற ஏழை – மத்தியதர இளைஞர்களும் தென்பகுதியில் முன்னெடுத்த அந்தப் போராட்டம் குறுகிய காலத்தில் அரசின் தீவிர அடக்குமுறையினால் முறியடிக்கப்பட்டது. அப்போது கைதானவர்கள்தான் ரோகண விஜேவீரா, லயனல் போப்பகே, டி. ஐ. ஜி. தர்மசேகர, விக்டர் ஐவன், உபதிஸ்ஸ கமநாயக்க முதலான இளைஞர்கள். இவர்களில் ரோகண விஜேவீரா, ரஷ்யாவில் லுமும்பா பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு திரும்பியிருந்தவர். லயனல் போப்பகே பேராதனை பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடத்தில் படித்தவர்.
இந்தப்பெயர்களை, அன்றைய ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா – என். எம். பெரேரா – பீட்டர்கெனமன் ஆகியோரின் ( ஶ்ரீல. சுதந்திரக்கட்சி – சமசமாஜக்கட்சி – கம்யூனிஸ்ட் கட்சி ) கூட்டரசாங்கத்தின் காலத்தில் நீதியரசர் அலஸ் தலைமையில் நடந்த குற்றவியல் நீதி ஆணைக்குழுவின் விசாரணைகளின்போது வெளியான செய்திகளிலிருந்து அறிந்திருந்தேன்.
தோழர் பாலாதம்பு குறிப்பிட்ட அரசியல் கைதிகளுக்காக வாதிட்டார். எனினும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் நீண்ட காலம் சிறையிலிருந்தனர். கிளர்ச்சி நடந்தபோது ஆயிரக்கணக்கான இளைஞர்கள், யுவதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பலரது சடலங்கள் மாணிக்க கங்கையிலும், களனி கங்கையிலும் மிதந்தன.