தொடர் நாவல்: நவீன விக்கிரமாதித்தன் (23) - நான் மீண்டும் விக்கிரமாதித்தன் பேசுகின்றேன்! - வ.ந.கிரிதரன் -
இதுவரை இங்கு நான் கூறியவற்றிலிருந்து நிச்சயம் நீங்கள் நவீன விக்கிரமாதித்தனாகிய இவனைப்பற்றிச் சிறிதளவாவது அறிந்திருப்பீர்கள் என்று நிச்சயமாக நிம்புகின்றேன். ஏற்கனவே நான் கூறியதுபோல் நவீன ஓவியப்பாணியான கியூபிசப் பாணியில் உருவங்கள் அவை எவையாயினும் அவை உருவாக்கப்பட்ட கேத்திரகணித வடிவங்களின் அடிப்படையில் அடையாளம் காணப்படும். உணரப்படும். அவ்வடிவங்களிலிருந்து உருவங்கள் உய்த்துணரப்படுமென்பது அப்பாணி பற்றிய எளிமையானதொரு விளக்கம் மட்டுமே. கியூபிசப் பாணியில் உருவங்களின் இருபரிமாணங்களே முக்கியமாகக் கையாளப்பட்டன. மூன்றாவது பரிமாணமான ஆழப்பரிமாணம் அங்கு முக்கியமானதொன்றல்ல. ஆனால் அதே சமயம் உருவங்கள் கேத்திரகணித வடிவங்களின் சேர்க்கையாக அவதானிக்கப்பட்டாலும் அவை ஒரு கோணத்திலிருந்து மட்டும் அவதானிக்கப்படவில்லை. அங்கமொன்று பல்வேறு கோணங்களிலிருந்து அவதானிக்கப்பட்டன. உதாரணத்துக்கு முகம் ஒரு கோணத்தில் பார்க்கப்படலாம். கண்கள் இன்னுமொரு கோணத்தில் பார்க்கப்படலாம். இவற்றிலிருந்து பார்க்கப்படும் காட்சியை , அது வெளிப்படுத்தும் உணர்வை உய்த்துணர வேண்டும். பிக்காசோவின் கியூபிசப் பாணி ஓவியங்கள் நவீன விக்கிரமாதித்தனுக்கு மிகவும் பிடித்தவை. ஓவியமொன்றினை இவ்விதம் உய்த்துணர்வது போன்றதுதான் மனிதரின் ஒருவரின் ஆளுமையினை அறிந்து கொள்வதும்.
இதுவரை இங்கு நீங்கள் வாசித்தவற்றிலிருந்து ஓரளவுக்கு என்னைப்பற்றி , என் ஆளுமையைப் பற்றி நீங்கள் அறிந்திருந்தால் அது ஓரளவுக்குப் போதுமானது. ஏனென்றால் நேரம் கிடைக்கும்போது நான் மீண்டும் நவீன விக்கிரமாதித்தனாகிய இவனின் வாழ்க்கை அனுபவங்களை விபரிக்கக்கூடும். அப்போது இவனைப்பற்றி இன்னும் நன்கு புரிவதற்கு இதுவரை விபரித்த விபரிப்புகள் நிச்சயம் உதவுமென்றும் நிச்சயமாக நம்புகின்றேன்.