எழுத்தாளர் , கல்விமான், மார்க்சியவாதி என அறியப்பட்ட லெனின் மதிவானம் மலையகத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவர். அவரின் மறைவுச் செய்தி அதிர்ச்சி தருமொன்று. 2013, 2014 ஆண்டுகளில் பதிவுளில் இவரது கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள் பற்றிய தகவல்களைப் பதிவுகளின் நிகழ்வுகள் பகுதிக்கு அனுப்பிக்கொண்டிருந்தார். அதன் பின்னர் அவரைப் பெரிதும் பொதுவெளியில் காணவில்லை. ஏன் ஒதுங்கிப்போனார் என்பதை இப்பொழுதுதான் அறிய முடிகின்றது. உடல் நிலை சீரற்றுப் போன காரணத்தினாலேயே அவர் ஒதுங்கி விட்டார் என்பதை வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது இழப்பால் பெருந்துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தவர், உறவினர்கள், நண்பர்கள் , கலை, இலக்கிய ஆர்வலர்கள் அனைவர்தம் துயரில் பதிவுகளும் இணைந்து கொள்கின்றது.
இத்தருணத்தில் அவர் பதிவுகள் இணைய இதழில் எழுதிய ஸி. வி. வேலுப்பிள்ளை நூற்றாண்டு நிறைவு நினைவு ஒரு முன்னோட்டம்! ' , 'பிரேம்ஜி வகுத்த தனிப்பாதை! ' ஆகிய கட்டுரைகளை மிள்பிரசுரம் செய்வதுடன், அவர் பதிவுகள் இணைய இதழின் நிகழ்வுகள் பகுதிக்கு அனுப்பிய தகவல்கள் சிலவற்றையும் பகிர்ந்துகொள்கின்றோம்.
ஸி. வி. வேலுப்பிள்ளை நூற்றாண்டு நிறைவு நினைவு ஒரு முன்னோட்டம்! - லெனின் மதிவானம் -
செப்டம்பர் பதினான்காம் திகதி ஸி.வி வேலுப்பிள்ளை நூற்றாண்டாகும். அவர் மலையக இலக்கியத்தின் தலைமகனாக விளங்கியவர். அவரது நூற்றாண்டை எதிர்நோக்கியிருக்கின்ற இவ்வேளையிலே அவர் பொறுத்த காத்திரமான ஆய்வுகள், மதிப்பீடுகள், விவரணங்கள், செய்திகள், நினைவுக் குறிப்புகள் என்பன வெளிவரவில்லையாயினும் சில குறிப்பிடத்தக்க எழுத்துக்கள் பிரசுரமாகியிருக்கின்றன என்பது மனங்கொள்ளத்தக்கவையாகும். அவ்வாறு குறிப்பிடத்தக்கவற்றுள் பெரும்பாலானவை முற்போக்கு மார்க்ஸியர்களால் எழுதப்பட்டவையாகும். இர.சிவலிங்கம், மு.நித்தியானந்தன், சாரல் நாடன், தெளிவத்தை ஜோசப், அந்தனி ஜீவா, ஓ.ஏ. இராமையா, லெனின் மதிவானம், சுப்பையா இராஜசேகர், மல்லியப்புசந்தி திலகர் முதலானோரின் எழுத்துக்கள் குறிப்பிடத்தக்கவையாகும். இவற்றுள் சாரல் நாடனின் 'சி.வி. சில சிந்தனைகள' என்ற நூலே ஸி.வி பற்றிய தேடலுக்கு காத்திரமான அடித்தளத்தை வழங்கியது. இவ்வெழுத்துக்களிடையே தத்துவார்த்த வேறுபாடுகள் இருப்பினும் ஸி.வி.யின் ஆளுமை பண்முகப்பாட்டை வெவ்வேறு விதங்களில் வெளிக்கொணர்பவையாக அமைந்திருக்கின்றன.