'டேய் கேசவா, சாந்தா அக்கா செத்துப் போய்விட்டாவாம். தெரியுமா?'
சின்னம்மா வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பியிருந்தார். அவர் என் அம்மாவின் கடைசிச் சகோதரி. இன்னும் உயிருடனிருக்கும் சகோதரி. வயது எண்பதைத்தாண்டி விட்டது. பார்த்தால் ஐம்பதைத்தாண்டாத தோற்றம். மனுசி இன்னும் காலையில் ஒரு மணி நேரம் நடை , யோகா , மரக்கறிச் சாப்பாடு, நிறைய பழங்கள் என்று வாழும் மனுசி.
'என்ன சின்னம்மா, சாந்தா அக்கா செத்துப் போய் விட்டாவா? எப்ப சின்னம்மா?'
"இன்றைக்குத்தான் விடிய ஜேர்மனியிலை போய்விட்டாவாம்."
"என்ன அவ ஜேர்மனியிலையா இருந்தவா? இவ்வளவு நாளும் நான் நினைச்சுக்கொண்டிருக்கிறன் அவ ஊரிலைத்தான் இன்னும் இருக்கிறா என்று. அவ எப்ப ஜேர்மனிக்குப் போனவா சின்னமா?"
"அட உனக்கு விசயமே தெரியாதா? அவ ஜேர்மனிக்கு எயிட்டியிலேயே போய் விட்டாவே"
'அப்படியா சின்னம்மா, எனக்கு உண்மையிலேயே அவ ஜேர்மனிக்குப் போன விசயம் தெரியாது."
சாந்தா அக்கா பற்றிய நினைவுப் பறவைகள் சிறகு விரிக்கின்றன. சாந்தா அக்கா லலிதா அக்காவின் நெருங்கிய சிநேகிதி. லலிதா என் ஒன்று விட்ட அக்கா. அவவுடைய பதின்ம வயதுகளிலை அவவைச் சுற்றி எப்போதும் சிநேகிதிகள் பட்டாளமொன்று சூழந்திருக்கும். நானோ பால்யத்தின் இறுதிக்கட்டத்தில் நின்ற சமயம். அக்காவின் சிநேகிதிகள் பலரையும் அவரவர் வீட்டுக்குக் கொண்டு சேர்க்கும் 'பொடி கார்ட்' வேலை அதாவது பாதுகாவலன் வேலை என்னுடையதாகவிருக்கும். அவர்கள் சில வேளைகளில் நகரத்துத் திரையரங்குகளில் மாட்னி ஷோ பார்த்து வருவார்கள். லலிதா அக்காவுடன் அக்கா வீட்டுக்கு வந்து ஆடிப்பாடிச் செல்வார்கள். அவ்விதம் செல்கையில் மாறி மாறி ஓவ்வொருவரையும் அவரவர் வீட்டுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும். இவை தவிர யாழ் பொது நூலகத்துக்குச் சில சமயங்களில் லலிதா அக்காவும் சாந்தா அக்காவும் செல்வார்கள். அப்போதெல்லாம் என்னையும் துணைக்கு அழைத்துச் செல்வார்கள். நானோ விரைவாக நடையைக் கட்டுவேன். அவர்களால் என் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாது. மூச்சிரைக்க என் வேகத்தைப் பிடிப்பற்காக ஓட்டமும் நடையுமாக வருவார்கள். 'இவனோடை நடக்க ஏலாது. ஏன்டா இப்பிடி நடக்கிறாய். கொஞ்சம் ஸ்லோவாக நடடா' என்று லலிதா அக்கா அவ்வேளைகளில் கெஞ்சுவா. நானோ அவவின் கெஞ்சலைப் பொருட்படுத்தாமல் வேகத்தை இன்னும் சிறிது அதிகரித்து நடையைப் போடுவேன். அதைப்பார்த்து சாந்தா அக்கா இலேசாகச் சிரிப்பா. அவ அவ்விதம் இதழோரத்தில் சிரித்தபடி என்னைப் பார்க்கும் தோற்றம் இன்னும் பசுமையாக என் நெஞ்சிலை இருக்குது.
இவர்களில் சாந்தா அக்கா என்னைப்பொறுத்தவரையில் தனித்துத் தெரிந்தா. அவவுக்கு நான் ஒரு புத்தகப் புழு என்பது நன்கு தெரியும். அவவும் ஒரு வகையில் புத்தகப்புழுதான். கூடவே கதை எழுதும் திறமையும் அவவிடமிருந்தது. இதனால் எனக்கு அவவை வீட்டுக்கொண்டு போறதென்றால் நல்ல விருப்பம். முக்கிய காரணம் அவவை வீட்டுக்குக் கொண்டு போற சமயங்களில் அவவிடமிருந்து ஏதாவது புத்தகமொன்றை வாசிப்பதற்குத் தருவா. அதற்காகவே அவவுக்குப் பாதுகாவலாகச் செல்வதை நான் எதிர்பார்த்து விரும்பிச் செய்தேன்.
சாந்தா அக்கா கல்கி, குமுதம், விகடன், கல்கண்டு, ராணி போன்ற சஞ்சிகைகளில் வெளியான தொடர்கதைகள் பலவற்றை அழகாக பைண்டு செய்து வைத்திருந்தா. ஒருமுறை அவவிடமிருந்து அரு.ராமநாதனின் 'குண்டு மல்லிகை' யை எடுத்து வந்து வாசித்தேன். குண்டு மல்லிகை என்றதும் எனக்கு எப்பொழுதும் சாந்தா அக்காவின்ற நினைவுதான் தோன்றும்.அவவும் ஒருவகையில் குண்டு மல்லிகைதான். சிறிது பருமனான, நடிகை குஷ்பு போன்ற உடல் வாகு. செந்தளிப்பான முகத்தில் இரு பெரிய அழகான வட்டக் கருவிழிகள். எப்பொழுதும் புன்னகை தவழும் வதனம். இருக்குமிடத்தைக் கலகலப்பாக்கிக்கொண்டிருக்கும் ஆளுமை. இதனால் லலிதா அக்காவுக்கும் அவ மேல் அதிகப் பிரியம் இருந்தது.
சாந்தா அக்கா இலங்கைத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவைக்கு அடிக்கடி இசையும் , கதையும் எழுதி அனுப்பிக்கொண்டிருந்தா. அவவின்ற கதைகள் பல ஒலிபரப்பப்பட்டன. நானும் சிலவற்றைக் கேட்டிருக்கின்றன். அவவின்ற வயதுக்கேற்ற காதல் கதைகளே அவை.
ஒரு சமயம் அக்கா அவவை வீட்டுக்குக் கொண்டு விடும்போதுதான் எழுதி வைத்திருந்ததை எடுத்து வாசிக்கத் தந்தா. என்ன அழகான கையெழுத்து! சாந்தா அக்காவின் கையெழுத்தும் அவவைப்போல் அழகானதுதானென்று அச்சமயம் எண்ணிக்கொண்டேன். அவ்விதம் அச்சமயத்தில் எண்ணிக்கொண்டதும் இன்னும் என் நெஞ்சில் இருப்ப்பதை இத்தருணத்தில் உணர்கின்றேன்.
சில சமயங்களில் இவ்விதம் அடிக்கடி சாந்தா அக்காவை அவவின்ற வீடு வரை கூட்டிச் செல்வது எனக்குச் சிரமமாகவிருக்கும். வேறு ஏதாவது எனக்குப் பிடித்த விடயங்களில் ஈடுபட்டிருக்கும் தருணமொன்றாக அந்நேரம் இருக்கும். அவ்விதமான சமயங்களில் அவவைக் கூட்டிச்செல்வதற்கு எனக்கு விருப்பமில்லாதிருக்கும். அவ்விதமான சமயங்களில் என் மனநிலையை மாற்றுவதற்குச் சாந்தா அக்கா ஒரு தந்திரம் செய்வா. அக்காலகட்டட்த்தில் நான் சாண்டியல்யனின் 'கடல் புறா' நாவலைத் தேடி அலைந்துகொண்டிருந்தேன். யாழ் நூலகத்தில் நாவலின் மூன்று பாகங்களுமிருந்தன. ஆனால் அதற்கான 'டிமாண்ட்' அதிகமாகவிருந்ததால் அதற்காகப் பதிவு செய்து வைத்திருப்பவர்களுக்கே முன்னுரிமை. நானும் பதிவு செய்திருந்தேன். இரண்டு வருடங்களாகியும் கிடைத்த பாடில்லை. இதனால் அது என் கைக்கெட்டாத தூரத்தில் இருந்ததால் அதன் மீதான வெறியும் எனக்கு அதிகமாகிக்கொண்டே சென்றது. அதன் முதலிரு அத்தியாயங்களைப் பழைய குமுதம் இதழ்களில் பார்த்ததிலிருந்து, அவற்றுக்கான ஓவியர் லதாவின் இளைய பல்லவனின் ஓவியங்களைப் பார்த்ததிலிருந்து வெறி இன்னும் அதிகமாகிக்கொண்டே சென்றது. நகரிலிருந்த புத்தகக்கடையொன்றின் 'ஷோகேசில்' மூன்று பாகங்களுமிருந்தன. ஆனால் அவற்றை வாங்கும் நிலையில் நானில்லை. அப்போது அத்தொகுதியின் விலை ரூபா 115. அது எனக்குப் பெரிய தொகையாகவிருந்தது.
கடல்புறா மீதான எனது ஆர்வத்தைச் சாந்தா அக்கா அறிந்து வைத்திருந்தார். அதற்காக அவர் கூறுவார் 'கேசவா, வீடு மட்டும் வாறியா. கட்டாயம் உனக்கு என்ர மாமியிடமிருக்கும் கடல் புறாவை வாங்கித்தருவன்."
"என்ன? உங்கள் மாமியிடம் கடல் புறா இருக்குதா?"
"ஓமடா. சித்தங்கேணி மாமியிடம் இருக்குது. அவவிட்ட கடல்புறா மூன்றுபாகங்களும் குமுதத்திலை வந்தது இருக்கு. வடிவாக் கட்டி வைத்திருக்கிறா. வடிவான படங்களுடன் இருக்கு." என்பார்.
எனக்கோ கடல்புறாவை உடனடியாக வாசிக்க வேண்டும்போலிருக்கும்,
"கட்டாயம் அடுத்த கிழமை அவவிடமிருந்து எடுத்த வாறன்" என்பார். ஆனால் இறுதிவரை அவர் கடல் புறாவைச் சித்தங்கேணி மாமியிடமிருந்து எடுத்து வந்ததேயில்லை. என் ஆசையும் நிறைவேறினதேயில்லை. ஆனால் கடல் புறாவை காரணம் காட்டியே அவரை அவர் வீடு மட்டும் பல தடவைகள் கொண்டுபோய் விட்டிருப்பேன்.
இப்பொழுதும் சாந்தா அக்காவை நினைத்ததும் முதலில் நினைவுக்கு வருவது என் பால்ய பருவத்தில் சாந்தா அக்கா கடல் புறாவைக் காரணம் காட்டி என்னை ஏமாற்றியதுதான். அந்த சாந்தா அக்காதான் இப்போது போய்விட்டதாகச் சின்னம்மா கூறுகின்றா.
நான் பால்ய பருவத்திலிருந்து பதின்ம வயதுக்குள் அடியெடுத்து வைக்கும்போது லலித அக்கா கனடா சென்று விட்டா. அவ கனடா சென்றதுமே அவவுடைய சிநேகிதிகளைக் காண்பதும் குறைந்து விட்டது. அவ்வப்போது சாந்தா அக்காவை வீதிகளில் காணும்போது சிரித்தபடியே 'இப்ப எப்படியடா இருக்கிறாய் கேசவா' என்பார். பதிலுக்கு நண்பர்களுடன் நகரிலில் 'சுழட்'டித் திரியும் நானும் 'நல்லாயிருக்கிறன் சாந்தா அக்கா" என்று கத்தியபடியே செல்வேன். இவ்விதமாகக் காலம் சென்று ஓடிக்கொண்டிருக்கையில் ஒரு நாள் வழியில் சாந்தா அக்காவை இன்னுமொரு நடிகரைப்போன்ற இளைஞர் ஒருவருடன் கண்டேன்.
என்னைக் கண்டதும் சாந்தா அக்கா "இங்கை வாடா கேசவா" என்றா.
சைக்கிளில் சென்று கொண்டிருந்த நான் இறங்கி அவ அருகில் சென்றேன்.
"கேசவா, இவர் என்ர ஹஸ்பண்ட்" என்றவ தன் கணவர் பக்கம் திரும்பி "நான் சொல்லுவனே, எங்கட பொடி கார்ட் கேசவனென்று . அவன் இவன் தான். " என்றா.
பதிலுக்கு ஒரு புன்னகையைத் தவள விட்டார் நடிகர்.
அதுதான் நான் சாந்தா அக்காவைக் கடைசியாகப் பார்த்தது. நாட்டின் நிலைமை கலவரம்,போர்ச்சூழலுக்குள் சென்று விட்டது. அவ பற்றிய நினைப்பே எனக்கு வருவதில்லை. போர் முடிவுக்கு வந்து ஆண்டுகள் பல சென்று விட்ட நிலையில் சாந்தா அக்கா பற்றிச் சின்னம்மா கூறியதும் ஆழ் மனக் குளத்தின் ஆழத்தில் புதையுண்டு கிடந்த சிந்தனை மீன்கள் மீண்டும் மீளுயிர்பெற்று எழுந்து வந்து நீச்சலடிக்கத்தொடங்கின. சாந்தா அக்கா பற்றிய நினைவுகள் எல்லாம் பசுமையாக மீண்டும் நினைவுக்கு வந்தன. பால்ய பருவத்து அழியாத கோலங்கள் எப்பொழுதும் இன்பம் தருபவை. சாந்த அக்கா பற்றிய நினைவுகளும் அத்தகையவைதாமே.
"டாடி"
என் சின்னவள் அழைத்தாள்.
பதிலுக்கு " என்னம்மா" என்றேன்.
"டாடி, டோண்ட் ஃபொர்கெட் டு பிக் மி அப் டு நைட்?" என்றாள்.
இன்றைக்கு என் சின்ன மகள் தன் சிநேகிதிகள் சிலருடன் , 'டொரோண்டோ'மாநகரின் 'டவுன் டவுனி'லுள்ள இத்தாலிய உணவகமொன்றுக்குச் செல்கிறாள். அவளைப் போய் பாதுகாப்பாக அழைத்து வரவேண்டும். அதைத்தான் அவள் நினைவூட்டுகின்றாள்.
எனக்குப் பால்ய பருவத்தில் சாந்தா அக்காவின் 'பொடி கார்ட்டா'கச் சென்று திரிந்தது நினைவுக்கு வந்தது. இலேசானதொரு புன்னகையும் முகத்தில் படர்ந்தது. எதற்காக அப்பா இப்படிப் புன்னகைக்கின்றார் என்பது தெரியாமல் சிறிது வியப்புடன் நோக்கினாள் என் இளைய மகள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.