- ஓவியம் - செயற்கை அறிவு (AI) -
அன்று காலையில் புறப்படும்போது சூரியன் வரவில்லை. என்றாலும் மழை வரும் என்று காலநிலை அறிக்கையில் இருக்கவில்லை. ஆனாலும் வழமையான அதி எச்சரிக்கையுடன் குடையைக் கொண்டு போங்கள் என்று மனைவி தனது மடிக்கக் கூடிய கடல் நீல நிறக் குடையைத் தந்து விட்டாள். நான் மறுத்தும் கேட்கவில்லை. இப்போதே நீங்கள் ஊகித்திருப்பீர்கள் நான் குடையை மறந்து விட்டு வரப்போகிறேன் என்று. உண்மைதான். எனவே புதிய திருப்பங்களிலாத இந்தக் கதையை இப்போதே மூடி வைத்து விட்டாலும் உங்களுக்கு நேரம் மிச்சம்தான். இலகுவாக மறந்து விட்டு விடக்கூடிய அல்லது தொலைத்து விடக்கூடிய பொருட்கள் என்று அகில உலகத்துக்கும் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தினால் அதில் முதல் இடத்தில் இருக்கக்கூடியது குடைதான் என்று நினைக்கத் தோன்றுகிறது. மேகம் மூடிக் கொண்டிருக்க மழை என்று கொண்டு போவோம். பிறகு சூரியன் சிரித்துக் கொண்டே வரும். அன்றைக்கு பஸ் தரிப்பிடத்திற்கு நடந்த அந்த பதினைந்து நிமிடங்களில் ஒரு துளிதானும் மேலிருந்து விழவில்லை. பிறகு வெய்யில் வந்தாலும் அதுக்கு கொண்டு போன குடையைப் பிடிக்கவும் முடியாது. அதுவும் இந்தக் குளிர் தேசத்தில் வெயிலை ஆனந்தமாகத் தோலில் அள்ளிக் கொள்ள நினைக்கும் எவரும் வெயிலுக்கு குடை பிடிக்கும் யாரையும் பைத்தியங்கள் என்று எண்ணி விடலாமல்லவா?
அன்று மாலை வேலை முடிந்து நகரத்தில் பஸ் ஏறியபோது கிட்டத்தட்ட ஆசனங்கள் எல்லாம் நிரம்பியிருந்தன. கொண்டு போயிருந்த நாவலொன்றை காலையிலேயே பஸ்ஸில் யன்னல் வழி வந்த நல்ல காலைச் சூரிய வெளிச்சத்தில் சர சரவென்று பல பக்கங்களை வாசித்து விட்டிருந்தேன். இப்போது மிகுதியை இந்த மங்கலான சாயங்கால வெளிச்சத்தில் வாசிப்பது அவ்வளவு நல்லதாகப் படவில்லை. கண் பார்வையிலும் சில நாட்களாகப் பிரச்சினை ஒன்று ஏற்பட்டு சிறிய சிகிச்சையும் செய்திருந்ததுதான் காரணம்.
பஸ்ஸில் எனது இருக்கைக்கு மேலே வயோதிபர், அங்கவீனர் அல்லது கர்ப்பிணிப் பெண்களுக்கான முன்னுரிமை ஆசனங்கள் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. ஆனாலும் அவ்வகையான பயணிகள் எவரும் ஏறாததால் எவரும் இந்த ஆசனங்களில் அமர்ந்து கொள்வதில் தடையில்லை. ஆனால் இந்த இருக்கைகள் ஒன்றையொன்று நேர் எதிர்த்தாற் போலிருந்தபடியால் எதிரிலிருப்பவரின் முகத்தை பார்த்துக் கொண்டிருக்கும் சங்கடம் உண்டு. அதைத் தவிர்ப்பதற்காகவே கையில் அலை பேசியை அளைந்து கொண்டிருக்கவோ அல்லது புத்தகமொன்றைப் புரட்டவோ வேண்டியிருக்கிறது. நித்திரை கொள்வது அல்லது அப்படி நடிப்பதும் உசிதமானதுதான். ஊரிலென்றால் முன்னே இருப்பவரைப் பார்த்து 'ஐயா எவ்விடம்' என்று பேச்சைத் தொடங்கி விடலாம். கையில் இரண்டு கனத்த பைகளை தூக்கிக் கொண்டு ஒரு நடுத்தர வயதுப் பெண் ஏறினாள்.
நான் அவளுக்கு இடம் கொடுப்பதற்காக எழும்பும் பாவனையில் ‘யு கான் சிட் ஹியர்’ என்றேன்.
'யு ஆர் ஆல் ரைட்' என்றே சொல்லி விட்டாள்.
ஏன் 'ஐ ஆம் ஆல் ரைட்' என்று சொல்லவில்லை என்று மனதுள் கேட்டேன்.
ஒருவேளை எனக்குரிய ஆசனம் இதுதானென்று மறைமுகமாகச் சொல்கிறாளோ?
பியூஜி ஆப்பிள் நிறத்தைப்போல முகங்கொண்ட ஒரு சிறு பெண்ணும் அவள் தாயாரும் ஏறினார்கள். கன்னத்தில் இரு புறமும் அப்பியிருந்த பிங்க் பூச்சுதான் அவள் முகத்தை பியூஜி ஆப்பிளாகியிருந்தது.
அவர்கள் இருவரும் பின்னே சென்று யாரோ இறங்கியதில் வெறுமையாகி இருந்த ஆசனங்களில் அமர்ந்து கொண்டார்கள். இன்னும் அரை மணிக்கு மேல் இப்படி ஏறி இறங்குவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
குறிப்பாக இறங்கும் போது பஸ்ஸை நிறுத்தும் பொத்தானை அழுத்தியத்திலிருந்தது பஸ் தரிப்பில் நிற்கும் வரையிலான சில செக்கன்களில்தான் பல செயற்பாடுகள் இடம் பெறுகின்றன. முதலில் ஆங்காங்கே பஸ்ஸின் கூரைக்கு முண்டு கொடுத்துக் கொண்டிருக்கும் கம்பிகளில் மறைந்திருக்கும் பஸ்ஸை நிறுத்தும் பொத்தானை தேடி அழுத்திய பின்னர், பஸ்சின் பிரேக்கின் இழுவைக்குத் தடுமாறி விழுந்து விடாது, பின் சரிந்து, முன் சென்று உடல் ஓரளவு சமநிலைக்கு வந்ததும், பஸ் கட்டண மின்னட்டையை ஸ்கான் செய்து, கடைசியில் சாரதிக்கு நன்றி சொல்லிக் கீழே இறங்க வேண்டும்.
பல வகையான ஸ்டைல்களில், குரல்களில் சொல்லப்பட்ட 'தாங்க் யூ' மாதிரிகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
முன்னுள்ள சாரதிக்கு அருகான வாசலால் இறங்காது நடுவிலுள்ள வாசலால் இறங்குபவர்கள் நன்றிக்குப் பதிலாக சாரதிக்கு கையசைத்து விட்டு இறங்குகின்றனர். ஸ்கான் செய்யும்போது கட்டண அட்டையில் பணம் இல்லையென்றால் அந்த மெஷின் பிலாக்கொட்டைக் குருவி கத்துவது போல கீக்கீக் என்று கத்துகிறது. அவர்கள் அவசரமாக இறங்குகின்றனர்.
நாற்பது நிமிடம் கடந்திருக்கும், இப்போது பெரும்பாலும் ஆசனங்கள் வெறுமையாகி விட்டன. காலுக்குக் கீழே வைத்திருந்த தோற்பையையும், குடையையும் எடுத்து பக்கத்தில் வெறுமையாகவிருந்த ஆசனத்தில் வைத்தேன். இதன் பிறகுதான் துரதிஷ்டம் தொடங்கிருக்க வேண்டும். நான் இறங்கும் தரிப்பிற்கு இரண்டு தரிப்புகள் இருந்தன. நான் எனது இறங்கு படல ஒத்திகையை மனதுக்குள் தொடங்கி விட்டேன். இன்னும் பஸ் பிரேக்கில் செல்லும்போது நடந்து செல்வது அவ்வளவு பரிச்சயமாகவில்லை. சர்கஸ்காரன் கயிற்றில் நடப்பது போல சமநிலை தளும்ப நடந்து பிறகு தடுமாறி விழுந்து மற்றவர்களுக்கு கேலிப் பொருளாகி விட விரும்பவில்லை. முன்னொரு முறை இப்படி இறங்கிய ஒருவர் சடன் பிரேக்கில் தடுமாறி முன் விழப்போக பின்னுக்கு நின்ற வாட்ட சாட்டமான ஒருவர் போலீஸ் கள்வனைப் பிடிப்பதுபோல விழுந்தவரின் சட்டைக் கொலரைப் பிடித்து அவரை விழாது நிறுத்தியத்தைக் கண்டிருந்தேன். இருந்தும் பஸ் முற்றாக நிற்கும் வரை காத்திருந்து எவரும் இறங்குவதாகத் தெரியவில்லை. எல்லாருக்கும் அவசரம் என்னைத் தவிர. ஏறும்போது பஸ் முற்றாக நிறுத்திய நிலையிலேயே ஏறுவதால் இந்தப் பிரச்சினை ஒன்றுமில்லை.
தோற்பையை கொழுவிக் கொண்டு ஒருவாறு இறங்கு படலத்தை முடித்துக் கொண்டு தெருக்கரையின் பஸ் பிளாட்பாரத்தில் இறங்கி நிற்க பஸ் புறப்பட்டது. அப்போதுதான் குடையை எடுக்கவில்லை என்று எண்ணம் மூளைக்குள் மின்னலென தெறித்தது. இனி பஸ்ஸை நிற்பாட்ட முடியாது. குடையை பறி கொடுத்து விட்டு பஸ்சையும் அதன் சாரதியையும் பார்த்துக் கொண்டிருந்த என் நிலை கிட்டத்தட்ட நரியிடம் வடையைக் கொடுத்த ஏமாந்த காகத்தின் நிலைமைதான். இங்கே நரித்தனமாக யாரும் ஏதும் செய்து விடவில்லையென்றாலும் நான்தான் கொஞ்சம் காகத்தனமாக ஏமாந்திருக்கிறேன்.
அந்த பஸ் கடைசியாகத் தரித்து நிற்குமிடம் வீட்டிலிருந்த ஏழு கிலோ மீற்றர்தான். காரில் பத்து நிமிடத்தில் போய் விடலாம். ஆனால் நான் இறங்கிய இடத்திலிருந்து வீட்டுக்குப் போய் காரை எடுத்துக் கொண்டு போய் சேர்வதற்கே குறைந்தது முப்பது நிமிடமாகி விடும். அதற்குள் பஸ் அந்த இறுதி தரிப்பை தனது ஆரம்பத் தரிப்பாகக் கொண்டு, போர்ட்டையும் மாற்றிக் கொண்டு மீண்டும் நகரை நோக்கிப் புறப்பட்டு விடும். அவசரப்பட்டுப் போயும் பயனில்லை. அல்லது அதோ தெருவின் மறு கரையில் இருக்கும் தரிப்பில் நின்று நகருக்கு ஐந்து நிமிடத்திற்கொருதரம் செல்லும் பஸ்களை ஆனையிறவில் ஆமி மறிப்பது போல மறித்து ஒவ்வொரு பஸ்சிலும் ஏறிப் பார்க்க வேண்டும். உதெல்லாம் சரிப்பட்டு வராது. கண்டவர்கள் அரைப் பைத்தியம் என்றெண்ணி விடலாம். கொண்டு போயிருந்த தோற்பைக்குள் குடையை வைக்காத என் முட்டாள்த்தனத்தை நொந்து கொள்வதுதான் அப்போது செய்யக் கூடிய ஒரு விடயமாகவிருந்தது.
வீட்டுக்கு வந்தாயிற்று. கோபத்தின் தாக்கத்ததைக் குறைப்பதற்காக மனைவியிடம் குடையை விட்டு விட்டு வந்ததை வேறு சில சந்தோஷமான கதைகளுக்கிடையில் கலந்து சொன்னேன். ஆனாலும் அவளால் தனது குடை தவறிப் போனதை தாங்கி கொள்ள முடியவில்லை. இறுதியில் என்னிடம் குடையைத் தந்தது தன் தவறுதான் என்று சொன்னாள். அதை நானும் ஆமோதித்தேன்.
நாளைக்கு காலையில் வேளைக்குப் போய் நகரத்திலுள்ள பஸ் அலுவலகத்தில் குடையைக் கேட்டுப் பார்க்குமாறும் கட்டாயம் அந்த பஸ் சாரதி அங்கு கொடுத்திருப்பார் என்றும் உறுதியாக சொன்னாள் .
அதனால் அடுத்த நாள் 7.00 மணி பஸ்ஸிப் பிடித்து அந்த அலுவலகத்துக்குப் போனால் தானியங்கிக் கண்ணாடிக் கதவு திறந்தது. உள்ளே எவருமில்லை. வரவேற்புக் கவுண்டரில் கதிகரைகளுமில்லை. நெஞ்சளவு உயர்ந்த நீண்ட பலகைத் தட்டுப் போன்ற மேசையின் ஒரு மூலையில் அழைப்பு மணியிருந்தது. அடித்தும் எவரும் வரவில்லை. முன்பெல்லாம் மனு நீதிச் சோழனின் அரண்மனையில் மாடு மணி அடித்தாலும் அதுக்கொரு மதிப்பிருந்தது. இந்தக் காலத்தில் மனுசருக்கே மதிப்பில்லை.
அலுவலகம் போய் மதிய இடைவேளையில் போக்குவரத்து கம்பனியின் இலக்கத்துக்கு போன் எடுத்தால், இசை, விளம்பரங்கள் என்று நீண்ட பல நிமிடங்களின் பின்னர் பேசிய பெண்மணி பஸ்ஸில் தொலைந்த பொருட்களை பதிவு செய்யும் வலைத்தளத்தில் விபரங்களை பதியுமாறும், எனது குடை கிடைத்தால் இரண்டு, மூன்று நாட்களில் தகவல் மின்னஞ்சலில் வரும் என்றும் சொன்னாள். நானே போய் தொலைந்த பொருட்களை வைத்துள்ள களஞ்சியத்தில் தேடித் பார்க்கலாமா என்றேன். எல்லா பஸ்களிலுமிருந்து தவற விடப்பட்ட பொருட்களை கூரியர் மூலம் இன்னொரு நகரத்திலுள்ள களஞ்சியத்துக்கு எடுத்துச் சென்று அங்கே ஒரு மாதத்திற்கு வைத்திருப்போம் என்றாள். அதிஷ்டவசமாக அந்த நகரம் வீட்டிலிருந்து 2 கிலோ மீட்டரில்தான் இருந்தது.
நான் மனைவியிடம் வந்து குடை தொலைந்து விடவில்லை. மறந்து விடப்பட்டது அவ்வளவுதான் என்றேன்.
எப்படி?
சிவானந்தம் மாஸ்டரின் கதை முன்னர் உனக்குச் சொன்னேனில்லையா?
இல்லையே என்று தலையாட்டினாள்
சிவானந்தம் மாஸ்டர் எனக்கு மூன்றாம், நாலாம் வகுப்புகளில் வகுப்பாசிரியர். காற்றுக்கு சாய்ந்திருக்கும் பயிரைப் போல உச்சி பிரிக்காது தலை மயிரை மேலே வாரி விட்டிருப்பார். வெள்ளை அரைக்கை சேர்ட்டும் கலர்ப் பாண்சும் போடுவார். எப்போதுமே பேசிக் கொண்டிருப்பார். மற்றவர்கள் கேட்கிறார்களோ அல்லது அவரது உரையாடலில் ஆர்வமாகவிருக்கிறார்களோ என்றெல்லாம் பொருட்படுத்தமாட்டார். பேசும் போது இடையில் தனக்குத்தானே ஆமோதிப்பது போல தலையை பெண்டுலம் போல இடமும் வலமும் ஆட்டிக் கொள்வார். அது அவருக்கு அவரே பதிலளிப்பது போல இருக்கும்.
அவரது மனைவியும் வேறொரு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியர். அவரையும் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வந்து பள்ளியில் விடுவதும் கூட்டிச் செல்வதும் சிவானந்தம் மாஸ்டர்தான். மனைவி அதிகம் பேசாதவர். சிவானந்தம் மாஸ்டருக்கு அதுவும் வாய்ப்பானதுதான்.
ஒரு நாள் வழமை போல சைக்கிளின் பின் கரியறில் மனைவி உட்கார்ந்திருக்க பேசிக்கொண்டே சைக்கிளை மிதித்துக்கொண்டு சென்றவர் தெருக்கரையின் ஒரு மின்சாரக் கம்பத்துக்கு மிக அருகாக சைக்கிள் செல்ல காலை பக்கவாட்டில் நீட்டிகொண்டிருந்த மனைவியின் கால் அதில் தட்டுப்பட்டு மனைவி கீழே விழுந்து விட்டார். இது சிவானந்தத்துக்கு தெரியாமலே தொடர்ந்து தன்னுரையாடலில் பேசிக்கொண்டே வீடு வரை சென்று விட்டார். பாரம் குறைந்தது தெரியாதளவுக்கு மனைவிக்கு மெலிந்த தேகம். வீட்டுப் படலையடியில் அவர் சைக்கிளை நிறுத்தவும் அதே நேரமே அவர் மனைவியும் படலைக்கு நடந்து வந்து விட்டார். சிவானந்தம் மனைவியைப் பார்த்து நீ தொலைந்து விடவில்லை, மறந்து விடப்பட்டாய் என்றார்.
சிவானந்த மாஸ்டர் சைக்கிள் ஓடும் வேகத்தை கிண்டல் செய்வும் இந்தக் கதையை எங்களுக்கு ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் சொன்னார்கள்.
மனைவிக்கு இது சிரிப்பை வரவழைக்கவில்லை. அவளும் மெல்லிதாகவே இருந்தாள்.
தொலைத்த பொருள் விண்ணப்பத்தை சரியாக நிரப்பினீர்களா என்றாள்.
விண்ணப் படிவத்தில் குடையின் நிறத்துக்கு கடல் நீலம் என்று எழுதியிருந்தேன்.
மனைவியோ அது மெல்லிய நீலமல்லவா? என்று கேட்டாள். இல்லை கடல் நீலம் என்றேன்.
கடலுக்குத்தான் எத்தனையோ நீலம் இருக்கிறதே! சமுத்திரத் தண்ணீரைக் கையில் அள்ளினால் எங்கே நிறம் தெரிகிறது? என்றாள்.
குடை கிடைத்தது பற்றிய தகவல் வராததால் ஒரு வாரம் கழித்து ஒரு காலையில் தொலைந்த பொருட் களஞ்சியம் சென்றேன்.
விபரங்களை அங்கிருந்த பெண்ணிடம் சொல்ல உள்ளே சென்று விரித்து வைக்கப்பட்டிருந்த ஏழெட்டுக் குடைகளை எடுத்து வந்து காட்டினாள். அங்கே ஒரேயொரு மென்னீலக் குடையைத் தவிர மற்றையதெல்லாம் வேறு நிறங்கள். என்னுடையது இங்கில்லை என்றேன்.
‘உங்கள் குடை பெரும்பாலும் தொலைந்து விட்டது. ஏனென்றால் எல்லாச் சாரதிகளும் கடைசியாக கண்டெடுக்கும் பொருட்களை ஒப்படைப்பதில்லை. அவ்வப்போது இது நிகழ்கிறது. வருந்துகிறோம். ’ என்றாள் அந்தப் பெண்.
வீட்டுக்கு வந்து மனைவியிடம் சொல்ல அந்த மென்னீலக் குடையை நன்றாக பார்த்தீர்களா என்றாள்.
நிச்சசயமாக அது இல்லை என்றேன்.
ஏதோ ஒன்று பொறி தட்டியதுபோல ஒரு வேளை அன்று மழை வராததால் நான் விரிக்காத குடை கடல் நீலமாக தெரிந்திருக்குமோ? என்று தோன்றியது. குடையை விரித்துப் பார்த்திருந்தால் மென்நீலமாக இருந்திருக்குமோ? சமுத்திரத் தண்ணீரைக் கையில் அள்ள நிறமில்லாதிருப்பதுபோல.
ஏதோ உந்தித் தள்ள மீண்டும் அந்தக் களஞ்சியத்துக்குச் சென்றேன். இப்போது வேறு குடைகள் வந்திருந்தன. ஆனால் அந்தக் குடை அங்கே இல்லை. பிறகு குடையைப் பற்றி பல வாரங்களாகப் பேசுவதை நிறுத்தி விட்டோம். மழையும் நீண்ட நாட்களாக வராததும் ஒரு காரணம். குளிர் காலத்தின் இறுதி பகுதியை நெருங்கி விட்டோம். இன்று திடீரென்று அந்தக் களஞ்சியம் சென்று இன்னொரு தரம் பாருங்கள் என்றாள் மனைவி. ஆனால் நான் போகவில்லை. நான் ஒரு குடை வாங்க கடைக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்..
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.