இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும், அழகும் செழிப்பும் மிக்க இலங்கையில் பிறந்த எங்களை, அந்த நாட்டில் வாழவிடாமல் துரத்திய விடயங்கள் எங்களுக்கு ஆற்றொணா வேதனைகளையும் இழப்புகளையும் விளைவாக்கியிருந்தாலும்கூட, பல்வேறு நன்மைகளையும் செய்திருக்கின்றன என்பதை எவரும் மறுக்கமுடியாது.
உதாரணத்துக்கு, புலம்பெயர்ந்த நாடுகளில் எங்களுக்குக் கிடைத்திருக்கும் குடியுரிமை நாங்கள் வாழ்கின்ற நாடுகளுக்குள் மட்டுமன்றி, வெளியேயும் எங்களுக்குப் பல தரப்பட்ட அனுகூலங்களை அள்ளித்தந்திருக்கிறது. அவ்வகையில் உலகெங்கும் சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும் வசதியைப் பயன்படுத்தி அவுஸ்ரேலியாவுக்குப் போகவேண்டுமென்பதுதான் என் நீண்டநாள் கனவாக இருந்தது. என் உற்ற சினேகிதிகள், சகமாணவர்கள், அயலவர்கள் என மனதுக்கு நெருக்கமான பலர் வாழும் அவுஸ்ரேலியாவில்தான் சொந்தச் சகோதரங்களைவிட மேலான சகோதர வாஞ்சையுடன் பழகும் முருகபூபதி அண்ணாவும் வாழ்கிறார் என்பதும் அதன்மேலான மோகத்துக்கும் தாபத்துக்கும் காரணமெனலாம்.
கொள்ளுப்பிட்டி மெதடிஸ்ற் கல்லூரியில் நான் கற்பித்துக்கொண்டிருந்த காலங்களில், சில்லையூர் செல்வராஜன், கமலினி செல்வராஜன், யோகா பாலச்சந்திரன், ராஐ ஶ்ரீகாந்தன், சோமகாந்தன், பத்மா சோமகாந்தன் எனப் பல இலக்கியக்காரரின் அறிமுகம் கிடைத்திருந்தது. அவ்வகையில் அறிமுகமாகியிருந்த முருகபூபதி அண்ணாவுடனான உறவு அவர் என் அப்பாவின் மாணவர் என்ற முறையில் இன்னும் சற்று நெருங்கியதாகவே இருந்தது.
பின்னர் விதி எங்களில் பலரை எங்கெல்லோமே விரட்டியதில், எண்பதுகளின் இறுதிப்பகுதியில் வளர்த்திருந்த அந்த உறவை மீளவும் புதுப்பிக்கும் வாய்ப்பு 2007இலேயே எனக்குக் கிடைத்திருந்தது. ரொறன்ரோவிலிருந்து அவர் புறப்படும்போது, அவுஸ்ரேலியாவில் சந்திப்போம் என நான் கதையோடு கதையாக அன்று கூறியது, 15 வருடங்களின் பின் இவ்வருடம் சாத்தியப்படுமென எங்கோ எழுதியிருந்திருக்கிறது.
திவ்வியா இருந்த இடம் Heathrow விமானநிலையத்திலிருந்து தூரத்திலிருந்ததால், காலைநேரப் போக்குவரத்து நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக அதிகாலை 5½ மணிக்கே நான் அங்கிருந்து புறப்பட்டு விட்டேன்.
எனது Uber வாகனச் சாரதியாக வந்திருந்த பஞ்சாப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் பயணத்தின்போது பேசிக்கொண்டே வந்தார். தொழில் தேடித் தான் லண்டனுக்கு வந்ததாகவும், தற்போது தன்னுடைய இரண்டு வயது மகளுடன் அதிகநேரத்தைச் செலவிடுவதற்காக அதிகாலையிலும் இரவிலும் மட்டும் Uber ஓட்டுவதைத் தெரிவுசெய்திருப்பதாகவும் கூறினார். அந்தத் தந்தையின் அன்பும் அர்ப்பணிப்பும் என் மனதைத் தொட்டன. ரொறன்ரோவுக்கு வந்திருந்தபோது, நானும் ஒருவகையில் இதேபோலத்தான் இருந்தேன். பிள்ளைகளை அரைநித்திரையில் daycareஇல் கொண்டுபோய் விட்டுவிட்டு, காலில் சில்லுப்பூட்டியதுபோல ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையை விரும்பாததால், படிப்புக்கேற்ற ஒரு பயிற்சியைப் பெற்று நிரந்தரமானதொரு வேலையைத் தேடிக்கொள்ள வேண்டுமென்ற என் கனவை மனதில் ஆழமாகவே புதைத்திருந்தேன். அதனால், அந்தக் காலகட்டத்தில் பொருளாதரக் கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டியிருந்தபோதும், மனதுக்கு நிம்மதி இருந்தது உண்மைதான்.
முடிவில், விமானநிலையத்துக்கு ஏழு மணிக்கு முன்பே சென்றுவிட்டேன், நான் பதிவுசெய்திருந்த Malaysia Airlines 7:30 மணிக்கே சேவைகளை ஆரம்பிக்கும் என்றிருந்தது. சரி, எல்லாமே எட்டு மணிக்கிடையில் முடிந்துவிடும், பதினொரு மணி விமானத்துக்கான நீண்ட நேரக் காத்திருப்பின்போது மண்டூர் அசோகாவின் எழுதப்படாத கவிதைகளை வாசிக்கலாமென நினைத்துக் கொண்டேன்.
மூன்றாவது நபராக check-in பண்ணச்சென்ற என்னிடம், விசா எங்கே என்று கேட்ட அங்கிருந்த பணிப்பெண்ணுக்கு, நான் ஒரு கனேடியன், எனக்கு விசா தேவையில்லையெனப் பெருமையுடன் பதிலளித்தேன். அவுஸ்ரேலியாவுக்கு செல்வதற்கான அனுமதி கேட்டு கனேடியரும் விண்ணப்பிக்க வேண்டியிருக்குமென நான் நினைக்கவேயில்லை. பயணத்துக்கான அங்கீகாரம் உனக்கும் தேவையெனச் சொன்ன அந்தப் பெண் விண்ணப்பிப்பதற்கான வலைத்தள முகவரியைத் தந்தா. வெட்கமும் பதற்றமும் என்னை ஆக்கிரமித்துக் கொண்டன.
கவுண்டரிலிருந்து அப்பால் தள்ளிநின்று விண்ணப்பிக்க முயன்றபோதுதான் விசா தேவையற்ற நாடுகளிலிருந்து போவோர் பற்றியும் அவுஸ்ரேலிய அரசாங்கத்துக்குத் தெரியவேண்டுமாம் என்பது விளங்கியது. கடவுச்சீட்டைப் படமெடுப்பது, தங்கியிருக்கும் முகவரி கொடுப்பது போன்ற பல வேலைகளை எனது தொலைபேசியின் சின்னத் திரையில் மிகச் சிரமப்பட்டுச் செய்யவேண்டியிருந்தது. முடிவில், அங்கீகாரம் கிடைக்க 24 மணித்தியாலம்வரை எடுக்கலாமெனப் பதில் வந்தது. பீதி என்னைப் பற்றிக்கொண்டது. அந்தச் செய்தியை அந்தப் பெண்ணுடன் பகிர்ந்தபோது, நேரத்துக்கு அது கிடைக்காவிடில் நீ போகமுடியாதென எந்தவித உணர்ச்சியுமில்லாமல் கூறிவிட்டு தன் வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்டா அவ. இப்படி எத்தனைபேரை அவ சந்தித்திருப்பா. அவவுக்கு இது நாளாந்த நிகழ்வு, ஆனால் எனக்கோ என்ன செய்வதெனத் தெரியவில்லை. இப்படியான சந்தர்ப்பங்களில் பொதுவாகப் பிள்ளைகளைத்தான் அழைப்பதுண்டு. ஆனால் ரொறன்ரோவில் அது அதிகாலை மூன்று மணி என்பதால் அதையும் செய்யமுடியவில்லை. முடிவில் மின்னஞ்சல் வந்திருக்கிறது என்பதை அறிவிக்கும் ஒலி கேட்டபோதே என் இதயம் ஒழுங்காகத் துடிக்கத் தொடங்கியது.
ஒரு மாதிரி எல்லாம் சரி என விமானம் ஏறுமிடத்துக்குப் போனால், விமானத்தில் ஏதோ பிரச்சினையாம், 3 மணி நேரம் தாமதமாகும் என்றார்கள். இதென்னடா எல்லாம் குழப்பமாக இருக்கிறது. இனி கோலாலம்பூரிலிருந்து மெல்பேர்ன் புறப்படும் விமானத்தைத் தவறவிட்டிடுவேனே, என்ன நடக்குமென அந்த விமானப் பணிப்பெண்களைக் கேட்டேன். அதற்கு அவர்கள் அதை நீ அங்கு போய்த்தான் பார்க்கவேண்டுமென்றனர். எதுவும் செய்யமுடியாமை எனக்கு மலேசியன் ஏயர் லைனில் எரிச்சலைத்தான் ஏற்படுத்தியது.
என் சினேகிதி பாமினி தன் கணவருடன் விமானநிலையம் வந்து என்னை அழைத்துச்செல்வதாக இருந்தது. அது ஒரு கிழமை நாள் என்பதால் அவர்களுக்குச் சிரமம் கொடுக்கக்கூடாதென்பதற்காக இரவு 8:15 அளவில் அங்கு போய்ச்சேரக்கூடியதாக ரிக்கற் எடுத்திருந்தேன். இனி எப்படி அவர்களைச் சாமத்தில் காத்திருக்கச் சொல்வது எனக் குழப்பமாக இருந்தால் பாமினியை அழைத்து எனக்காகக் காத்திராதீர்கள். நேரத்துடன் வந்தால் நான் அறிவிக்கிறேன் என்றேன். ஒரு பிரச்சினையுமில்லை, ஒண்டுக்கும் யோசிக்காதேயுங்கோ எண்டு அவ எனக்குச் சொன்னாலும் எனக்கு அமைதியில்லாமல் இருந்தது. அந்த விமானத்துக்குக் காத்திருந்த இன்னொரு மெல்பேர்ன் வாசி, அந்த வசதியை விட்டுவிடாதேயுங்கோ, பிறகு இரவில் கஷ்டப்படுவீர்களென எனக்குப் பாவம் பார்த்தார்.
பிள்ளைகள் எழும்பியதும் என் செய்திகளைப் பார்த்துவிட்டு அழைத்தார்கள். என் விமானத்துக்கான இணைப்பைத் தவறவிட்டால் அடுத்த விமானம் 12 மணி நேரத்துக்குப் பின்பாகவே இருக்கும் எனவே, “ஹோட்டல் வசதி செய்துதருவார்கள், நீங்கள் மலேசியாவைப் பார்க்கலாம்,” என ஆறுதல் சொன்னார்கள்.
அவுஸ்ரேலியாவுக்கு வருகிறேன் எனச் சொன்ன நேரத்திலிருந்து அதுபற்றி அடிக்கடி அதுபற்றிப் பேசிக்கொண்டிருந்த பூபதி அண்ணாவும் நிலைமைகள் பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தார். பாஸ்போட் கவனம், செல்போனை மறந்துபோய் எங்காவது விட்டுவிடாதேயுங்கோ என அக்கறையாக மீளவும் ஞாபகப்படுத்தினார். ஏதாவது மருந்து எடுக்கிறனீங்கள் எண்டால் அதையும் கொண்டுவாறியள் தானே என மீளவும் உறுதிப்படுத்திக்கொண்டார்.
முடிவில் அந்த இணைப்பு விமானத்தை எங்களுக்காக கோலாலம்பூரில் ஒரு மணி நேரம் நிறுத்தி வைத்திருந்தார்கள். வழமையான நடைமுறைகளைத் தவிர்த்து எங்களை விசேட பாதையால் கூட்டிச் சென்று மீளவும் விமானத்தில் ஏற்றிவிட்டார்கள். அதனால் 8:15க்குச் செல்ல வேண்டிய நான் 9:30க்குப் போய்ச் சேர்ந்துவிட்டேன். அதனால் மிகவும் ஆறுதலாக இருந்தது.
இப்படியாக அவுஸ்ரேலியாவுக்குச் செல்வதில் தடங்கல்களை அனுபவித்தாலும், மெல்பேர்ன் விமானநிலையத்திலிருந்து பாமினியுடன் அவ வீட்டுக்குச் சென்ற நேரத்திலிருந்து சிட்னியிலிலுள்ள விஜி வீட்டிலிருந்து நான் புறப்படும்வரை, என் வீட்டில் நானில்லை என்பதை உணராதளவுக்கு வசதியாகவும் மகிழ்ச்சியாகவும் நானிருந்தேன்.
கிட்டத்தட்ட 35 வருடங்களின்பின் மெல்பேரினில் பாமினியும் நானும் சந்தித்திருந்தபோதும், 12ஆம் வகுப்பில் எப்படிப் பேசினோமா அப்படியே இயல்பாகப் பேசிக்கொண்டோம். பருப்புக் கறிக்குச் சீரகம், மிளகு அரைத்துப் போடுவது அவவின்குடும்பத்தினருக்குப் பிடிக்காது என்பதால் நான் நிற்கும்போதுதான் அப்படிச் சமைத்துச் சாப்பிட முடிகிறதெனப் பாமினி சொன்னபோது யாழ்ப்பாணத்துக்குள்ளேயே சமையல்முறைகளும் ரசனைகளும் எப்படி வேறுபடுகின்றன என்றும் பேசிக்கொண்டோம்.
பாமினியின் முற்றத்தில் பல்வேறு வர்ணங்களில் பூத்திருந்த அழகிய, பெரியரோசாப்பூக்களையும், பின்வளவில் இலை தெரியாதளவுக்கு மரத்தை நிறைத்திருந்த தோடம்பழங்களையும், சடைத்திருந்த கறிவேப்பிலை மரத்தையும் விட்டுக் கண்களைஅகற்ற என்னால் முடியவில்லை. அங்கிருந்த காலநிலையை அனுபவித்தபோதும், அங்கிருக்கும் தொழில்வாய்ப்புக்களைப் பற்றி அறிந்தபோதும், அங்கேயே நாங்களும் புலம்பெயர்ந்திருக்கலாமோ, வளவெல்லாம் சோலையாக்கி தெல்லிப்பழையிலிருக்கும் நினைப்புடன் வாழ்ந்திருக்கலாமோ என ஆதங்கமாகவிருந்தது.
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.