1. கண்டிட்ட நன்றியெலாமிவர் மறந்தார்!
பெற்றிட்ட உதவிகளின் தரமறியார்.
பேணிட்ட நட்பின் உயர்வறியார்.
கற்றிட்ட கல்வியின் பொருளறியார்.
கிடைத்திட்ட உறவின் உயர்வறியார்.
உற்றிட்ட நன்மைகளின் நலனறியார்.
உதவிட்ட நட்புகளின் உளமறியார்.
கொண்டிட்ட வாழ்வின் கோலத்தில்
கண்டிட்டநன்றியெலாமிவர்மறந்தார்.
2. வாழ்வில் நன்மைகள் கண்டிடலாம்!
நேர்மையாய் வாழ்ந்திடுவோம்.
நிம்மதியாய் இருந்திடுவோம்.
உண்மையாய் நடந்திடுவோம்.
உழைப்பைப் போற்றிடுவோம்.
நல்லவற்றை நினைந்திடுவோம்.
நன்றிமறவாது பழகிடுவோம்.
மற்றவர்களுடன் நமைஒப்பிடோம்.
முயற்சிகளை நாம்கைவிட்டிடோம்.
தானங்கள் கொடுத்திடுவோம்.
தர்மங்கள் பலசெய்திடுவோம்.
வன்ம்ங்கள் நாம் மறந்திடுவோம்.
வாழ்வில் நன்மைகள் கண்டிடலாம்.
3. அன்றுமின்றுமென்றுமென்நிலையிதுவே!
உள்ளத்தின் குமுறல் தனைநான்
உம்மில் சிலருடன் பகிர்கின்றேன்.
வள்ளத்தின் ஓட்டையை உடனேயே
வகையாய் அடைத்திடல் நன்றன்றோ.
பள்ளத்தில் நாம் வீழ்ந்திடாமல்
பக்குவமாய்நடந்திடவிழித்திருப்போம்.
கள்ளத்தில் கூறுவதாய் எண்ணிடாதீர்.
கருமமதில் கவனமாய் இருந்திடுவீர்.
எண்ணத்தில் எழுந்த கருத்ததனை
எழுத்தினிலே கவிவடிவில் வடித்து
வண்ணத்தில்வடிவமைத்துவகையாக
வலிகளுடன்தருகின்றேன்படித்திடுவீர்.
புலத்தினில் எனையறிந்தோர் சிலர்.
புலம்பெயர்நாட்டினில்பழகியோர்சிலர்.
மனத்தினில் கொண்ட தமிழ்ப்பற்றால்
மனம்விட்டுக்கதைக்கும் நண்பர்சிலர்.
நெஞ்சத்தில்கொண்டிட்டகருத்ததனை
நேர்மை உளத்தோடு கதைத்திடுவோர்.
வஞ்சத்தில் வீழ்ந்து போயிடாது
வலிமை கொடுத்து இணைந்திட்டோர்.
இதயத்தில் நட்போடும் நன்றியோடும்
இணைந்து பணிபுரியும் இனியவர்
எடுத்துமக்கு நட்புடனே இன்தமிழில்
என் நிலையைச் சொல்கின்றேனின்று.
கவிதை எழுத விளைந்தேன்.
கதையும் சொல்ல முனைந்தேன்.
விதையை விதைக்க நினைத்தேன்.
விளைவைக் காலம் கணிக்கும்.
பலதைப் பாட்டில் வடித்தேன்.
பகையும் பெற்றுக் கொண்டேன்.
சிலதைப் பற்றிச் சொன்னால்
சிலர்க்கோ மனதினில் வெறுப்பு.
பொழுதைக் போக்கிடப் பலரிங்கு
பொதுப்பணி பற்றிக் கதைக்கின்றார்.
முழுதையும் இங்கு சொல்லிடின்
மூச்சிருக்கும் வரை எதிர்த்திடுவர்.
கருத்தை உணர்ந்திட முனைந்திடார்.
களத்தில் இறங்கி இயங்கிடார்.
விழுதை அறிந்திடா இவர்களுடன்
விவாதம் செய்வதில் பயன்தானென்ன?
நல்லதை எண்ணிநான் நகர்கின்றேன்.
நடப்பதைக் காலம் கணித்திடுமன்றோ.
நடிப்பதை நான் வெறுக்கின்றேன்.
நல்லவன் பெயர்பெறல் கடினமன்றோ.
புலத்தை நினைந்து இயங்குகின்றேன்.
பொதுச்சேவைகளிலுழைக்கின்றேன்.
பலத்தை நிலத்தில் மீட்டிடவிரும்பியே
பகைவென்றுபலதும்செய்கின்றேன்.
எதையும் செய்து என்னதான்கண்டேன்.
எம்மவர்சிலர்வெறுப்பைகொண்டேன்.
அதையும்மீறிசிலதைச்செய்கின்றேன்.
அன்றுமின்றுமென்றுமென்நிலையிதுவே.
4. தட்டிக் கொடுத்துத் தாங்குவோர் நண்பர்!
தட்டிக் கொடுத்துத் தளர்வு போக்கி
தொட்டுக் காட்டித் துயரம் களைந்து
விட்டுக் கொடுத்து வலிகள் குறைத்து
வாட்டும் துன்பம் போக்குவோர் நண்பர்.
வாட்டம் காண்கையில் வலிமை தந்து
வேட்டு வைப்போரைச் சுட்டிக் காட்டி
நட்டநயம் பாராது நன்றி மறவாது
நட்புக் காட்டுவோர் நல்ல நண்பர்.
சட்டம் பேசிச் சலிப்புக் கொடாது
சேட்டை புரிந்து சினத்தைக் கூட்டாது
திட்டம் போட்டுக் குழப்பம் செய்யாது
தேட்டம் பாராது உதவுவோர் நண்பர்.
காட்டம்கொண்டுபொறாமைகொளாது
கொட்டம் காட்டிக் குறைகள் கூறாது
துட்டக் குணத்துடன் கெடுதல்தாராது
தட்டிக்கொடுத்துத்தாங்குவோர்நண்பர்.
5. புலத்தினில் பலமதைக் கொடுக்கலாம்!
மனதினில் சேவை உணர்வுடன்
மதியினில் நேர்மைக் குணத்துடன்
மன்றினில் பணிகள் புரிந்திடின்
மக்களின் வாழ்விற்கு உதவிடலாம்.
பொதுவேலைகளில் ஆர்வம் கொண்டு
புத்துணர்வுடன் பணிகள் ஆற்றவரின்
புதுமைகள் பலதும் படைக்கலாம்.
புலத்தினில் பலமதைக் கொடுக்கலாம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.