![]()
வேட்கை
சிவப்புக்கம்பள விரிப்புகள்
உயரதிகாரிகளுக்கானவை.
மாப்பிள்ளை அழைப்பும் மகிழவே நிகழும்
மணவறை மலர்கள் மணம் சற்றே பரப்ப
இருமனங்கள் இணையும் தருணம்
பொருள் புரியா மந்திரங்கள் பாரதத்துக்கானவை.
கழுத்தில் மஞ்சள் மிளிரும் தாலியின் சரடு
வாழையிலை விருந்து குலதெய்வங்களை
விசாரித்து முடிகிறது.
நாவில் இனிப்பின் சுவை.
அதன்பின் அம்மாவின் முன்னோள்
பெரியம்மாவுடன் சந்திப்புக்குறிக்கப்பட்டிருந்தது.
வீடுதேடி பூட்டிய கதவினைச் சாவிகொண்டு திறக்க
நீண்ட பாதையை வேகமாகக் கடந்துவந்து
அவன் முகம் தடவிப்பார்க்கிறாள்.
கறுப்புத்தழும்பதனைச்சுட்டி
கண்ணாடியணிந்ததாலா கேட்கும் அவளது
முகத்தில் வயோதிகம் சுருக்கங்களை வரைந்திருக்கிறது.
இருகரம் பற்றி ஒருமகன்தானா என்றவள்
நல்லாப்படிக்கணும் பள்ளிக்கூடம் கட்டணும்
சொல்லிக்கொண்டே இருந்தாள்.
வேறு சொற்களில்லை அவளிடம்.
விழிகளில் நதியின் பெருக்கம்.
கடந்த பயணத்தில்
கல்விக்கான வேட்கை விண்ணளக்கிறது.
ஏகலைவர்கள் கலைவல்லவர்கள்
வாழ்வின் வன்முகங்களை எதிர்கொள்ளும்
பரந்த தோள்கள் பெருவலிமைகொள்கின்றன.
நட்புக்காலம்!
முதுமையின் தவிக்கும் மணித்துளிகள்
கயிற்றுக்கட்டிலிலா பாயிலா
துடிக்கும் இதயம்
நீள் சாலைகள்
மலையின் பிரமாண்டம் ஆறுதல் தருகிறது.
புலனம் பகிர்ந்த பதிவின் வழியில் மகிழ்வுந்து
மகிழஞ்செடி மணக்கும் வாசல்
வளையும் நெற்கதிர்களென உருவம்
காற்றில் அலைபாய கரங்களில் ஏந்தினேன்.
மிதிவண்டியிலேயே நகரெங்கும் அளந்த பாதங்கள்
எழுபதின் இரண்டைக் கடந்தவை,
போர் வீரனின் பாதங்களென வீறுகொள்பவை,
இன்று ஓய்வில்.
அரிதாரம் பூசாத அன்புக்கனியின் சுவை அதீதமானது.
உண்ணாமல் போகாதே என்று தளையிட்டது.
வாழ்வின் நீட்சிக்கான ஏக்கம் நிறைந்த
கண்களைச் சந்தித்து
அன்புடனே சேர்த்துப்பரிமாறப்பட்ட
உணவின் சுவை பாராட்ட
உங்கள் வீட்டுக்கறியைவிடவா
சிரிக்கும் அவன் கண்களில்
எந்தையின் நட்புக்காலம் வசந்தம் கொண்டது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









