- மக்சிம் கார்க்கியின் இறுதி நாவலான கிளிம் சாம்கினின் வாழ்க்கை 2000 பக்கங்களைக் கொண்ட , நான்கு பாகப் பெரு நாவல். அதன் மூன்றாம் பாகமே தற்போது நிழல்வண்ணன் (இந்தியா), எல்.ஜோதிகுமார் (இலங்கை) மொழிபெயர்ப்பில் வெளியான 'இன்னும் சில கங்குகள்' . சவுத விஷன் புக்ஸ் (தமிழநாடு), நந்தலாலா (இலங்கை) ஆகிய பதிப்பகங்கள் இணைந்து வெளியிட்ட நாவல். -
I
இந்நூல், மக்சிம் கார்க்கி யின் அனைத்து நூல்களிலும் இருந்து வித்தியாசம் பெற்றது. இவ்வித்தியாச நூலை பின் வருமாறு வரையறுத்துக் கொள்கின்றார் கார்க்கி : ''இந்நூல் என் வாழ்நாள் சவால்... என் வாழ்நாள் சாதனை ”.
நான்கு தொகுதிகளாய் (கிட்டத்தட்ட 2000 பக்கங்களாய்,) விரியும் இந்நூலின் இறுதி தொகுதியை கார்க்கி எழுதிக்கொண்டிருக்கும் போது, மரணித்தார். “இப்போதுள்ள என் ஒரே பயம் - இந்நான்காம் தொகுதியை நான் நிறைவு செய்யும் முன்னமே மரணம் என்னை தழுவி விடுமோ” என்பதேயாகும். கார்க்கி பயந்தது நிறைவேறியது. இருந்தும், தொகுதி நான்கின், அரைவாசிக்கும் மேலான பகுதியை, அவரே நிறைவு செய்யக் கூடியதாக இருந்தது. மிகுதி அரைவாசியை, அவரது குறிப்புகளையும் வரைவுகளையும் ஆதாரமாகக் கொண்ட ஒரு எழுத்தாளர் குழுவினர் அதனை நிறைவு செய்தனர்.
உலக நடப்புகளில், இது போன்ற நிகழ்வுகள் ஏற்கெனவே நடந்தேறிய ஒன்றுதான். பெரும் கலைஞர்களின் தவிர்க்க முடியாமைகளை உலகம் இவ்வாறுதான் கையாண்டு வந்தது. இருந்தும், அந்த மகா புருடனுக்கும், ஒரு எழுத்தாளர் குழுவுக்கும் இடையே காணப்படும் வித்தியாசங்கள் அனந்தம்.
இந்நூலின் விடயதானம் எனப்படுவது, கார்க்கி யின் சிந்தனையில் ஒரு 40 வருட காலம், இடைவிடாது, தொடர்ச்சியாய் ஓடி புடம் போடப்பட்ட ஒன்று என்றால் அது மிகையாகாது. இதற்கான தடயங்களை, கார்க்கி யிலேயே, பல்வேறு சந்தர்ப்பங்களில், வெளிப்படுத்தப்பட்டு இருந்தாலும் இந்நூலிலேயே அவை தீர்க்கமாகவும், படிவுற்றும், பொறிக்கப்பட்டும் உள்ளன.
மனுக்குலத்தின் ஒரு மிகப் பெரிய சுமையை அல்லது கடமையைத் தன் தோளில் சுமக்க முன்வருவது ஒருவரது இதயத்தின் உறுதியையும் நாகரிகத்தையும் மாத்திரம் அல்ல-மாறாக குறித்த தோள்களின் திராணியையும் பொறுத்ததாகின்றது. இவையிரண்டும் ஒரு பார்வையில் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்ததுதான். பாரதி, தன் பாஞ்சாலி சபதத்தை எழுதத் துணிந்த போது, தன் எழுதுகோலை அவன் நோக்கிய விதம் -இறைவன் வியாசரை அழைத்து அவருக்கு 60 வயது முடிந்தாகி விட்டது, இனி அவன் ஒரு மகா பாரதத்தை ஆரம்பிக்கலாம் எனும் ஐதிகங்கள் போன்றே - கார்க்கி யும் இந்நூல்“என் இறுதி சவால்” என்று தேர்ந்து கொள்கின்றான்.
1909 இல்,கார்க்கி கூறுவதாவது:
“கூடிய சிக்கிரம் யாராவது நேர்மையுள்ள தைரியமுள்ள ஓர் ஆசாமி, ‘மனித ஆளுமையின் உடைவு’ என்ற தலைப்பில் சோகம் ததும்பும் ஒரு நாவலை எழுதக் கூடும்”.
ஆனால், இருபது வருடங்கள் கழிந்த நிலையில், தனது மரணத்தின் காலம் நெருங்கிய நாட்களிலேயே அவர் உணரத் தலைபடுகின்றார்:
“இனியும்,அந்த வரகவிக்காக இங்கு நான் காத்திருக்க முடியாது. அந்தக் கடமையை முடிந்தளவு என் தோள்களிலேயே சுமந்தாக வேண்டியுள்ளது” என.
II
இதனை நாவல், நவீனம், பேரிலக்கியம் என வகைப்படுத்திக் கொள்வதை விட மனுக்குலத்தின் ஞானத்திரட்சி -என வகைப்படுத்திக் கொள்ளல் வசதியானது. காரணம், கிட்டத்தட்ட ஓர் ஆயிரம் அல்லது இரண்டாயிரம் காலப்பகுதியில் மனித வாழ்வு அதன் ஜீவிதம்-அதன் எதிர்ப்பலைகள், போராட்டங்கள், எழுச்சி.வீழ்ச்சிகள் - இவை தோன்றிய விதங்கள் - அதன் விமர்சனங்கள் - அவற்றின் விதிவிலக்குகள் - கொந்தளிப்புகள் - இவை அனைத்தையும் தொட்டுச் செல்லக் கூடிய வகையில் கார்க்கி இந்நூலை வடிவமைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்தை எதிர்கொண்டவராகின்றார். நூல், மேலெழுந்த ரீதியாய், வெளிப்படையாகக் கூற வருவது ஒரு 40 வருட காலத்து, தனி மனிதன் ஒருவனது ஜீவிதம் என்பதே.
ஒரு கோணத்தில் - அக்குறித்த மனிதனின் வாழ்வு அது மலர்ந்த விதம் அல்லது அதன் வெளி, அதன் எல்லைப்பாடு, வரையறைகள் மற்றும் அது அப்படி விரிந்த அப்பரப்பின் குணாம்சங்கள் -அல்லது வாழ்வின் ஸ்பரிசங்கள் - இவை அனைத்தும் இந்நூலுடன் சம்பந்தமுறும் விடயங்கள் ஆகின்றன. மறு கோணத்தில் - அந்த மனிதன் வாழ்ந்த காலப்பகுதியின் - குறுக்குவெட்டு முகம் தனிமனித சமூக வாழ்வு என்பவற்றின் பிணைப்பு, அதன் வரலாறு, அதன் உறவுமுறை - இவையும் படைத்துக் காட்டப்பட வேண்டியதாகின்றது. இனி, இவற்றையெல்லாம் தாண்டி, அதன் உண்மைக் கருப்பொருள் அதாவது, மனுக்குலத்தின் ஆரம்ப காலம் தொட்டு இன்று வரை மலர்ந்திருக்கக்கூடிய வாழ்க்கைப் பகுதியில் ஓர் அந்நியப்பட்ட, சமூக விரோதம் பூண்ட ஒரு தனிமனித வளர்ச்சி அதன் வீழ்ச்சி - அதன் சிதைவு - இவை பொறுத்து தீர்க்கமாக செதுக்கி காட்டப்பட வேண்டியுள்ளது.
தனிமனித வீழ்ச்சி, எழுச்சி எனும் போது, டாஸ்தாவாஸ்கியின் நினைவு அழுத்தமாய்த் தட்டுப்படுவது தவிர்க்கமுடியாதததாகின்றது. கார்க்கி யே கூறுவான்:
“டாஸ்தாவாஸ்கியின் மேதைமையானது கேள்விகளுக்கு அப்பாற்பட்டது. ஒரு விடயத்தைக் காட்சிப்படுத்தும் அவரது திறமையானது, சில வேளை, சே‘க்ஸ்பியருக்கு அடுத்தபடியாக மாத்திரமே நிறுத்தப்படக்கூடியது”.
“அவரது எழுத்துக்கள் தொடர்பில் நான் இந்தளவில் நேரத்தை கழிக்க நேர்ந்தற்கான காரணம் அவர் பொறுத்த ஒரு சரியான கணிப்பின்றி, ரஷ்ய இலக்கியத்தின் ‘சடுதியான’ திருப்பு முனைகளை அல்லது புது திசை மாற்றங்களைப் புரிந்து கொள்ள முடியாது”.
“டாஸ்தாவாஸ்க்கி ஒரு உண்மையின் தேடகர் '; என வர்ணிக்கப்படுவதும் உண்டு. உண்மையாக இருக்கலாம் - அவர் தேடியது உண்மை எனில், அத்தேடலின் இறுதி கண்டுணர்வு மனிதனில் பொதிந்துள்ள விலங்குணர்வு என்பதுவே ஆகும். இனி, இந்தக் கண்டுப்பிடிப்பை, அதாவது மனித உணர்வுகளின் இந்த விலங்கியல் கூ;றை அவரால் இறுதிவரை அடையாளப்படுத்த முடியவில்லை. மாறாக, அதனை நியாயப்படுத்துதலையே அவர் எடுத்துரைக்க முனைந்தார் எனலாம். ஆம். மனிதனில், பலதும் பட்ட, ஊறி வெளிக்கிளம்பும், இவ்விலங்கியல் உணர்வுகளை, நொடிதோறும் அவனில் விதைத்து வருவது இந்த சமூக நலன்களே, கட்டுமானங்களே, ஏற்றத் தாழ்வுகளே என்பதும் இதன் காரணத்தினாலேயே இவை அவனில் ஜீவித்து வருகின்றன என்பதும் இந்த ‘கண்டுப்பிடிக்கும்’ ஆசானுக்கு அந்நியமான ஒன்றாகவே இருந்தது”
கார்க்கி இப்படி மிகக் கடுமையாக டாஸ்தாவாஸ்கியை சாடுவதற்கான காரணம் அவர் டாஸ்தாவாஸ்கியின் ஆழ் அரசியலை கண்டுணர்ந்ததே எனவும் கூறலாம்.
கார்க்கி கண்டுணர்ந்த டாஸ்தாவாஸ்கியின் அரசியல் வருமாறு: “இஸ்தான்புல் நகரானது துருக்கியர்களிடம் இருந்து பிய்த்து எடுக்கப்பட வேண்டும் என்பதும், அடிமைச் சமூகமானது நிலவுடைமையாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான லட்சிய உறவை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது” என்பது போன்ற டாஸ்தாவாஸ்கியின் அசைக்க முடியாத, நம்பிக்கைகளே, ஜார் சம்பந்தமான, அவரது பத்தாம் பசலி அரசியல் நம்பிக்கைகளுக்கு அடிப்படையாக அமைந்தன என்பதில் சந்தேகம் கொள்ளல் ஆகாது.'
III
தொகுதி மூன்று, மதம் என்ற கருப்பொருளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகவும் உள்ளது மதம் முன்னெடுக்ககூடிய வரலாற்றுப் பாத்திரம் தொடர்பிலும், இது போன்றே,விவசாய பின்புலத்தின் அல்லது அவ்விவசாயப் பின்புலங்கள் அல்லது விவசாய கருவூலங்கள் முன்னெடுக்கக்கூடிய வரலாற்றுப் போக்குகள் தொடர்பிலும் நாவலானது மிகுந்த அக்கறை செலுத்தி உள்ளது எனலாம். எமது சமூக அமைப்பை தாங்கிப் பிடிக்கும் தூண்களில் ஒன்றாய் மதம் உருவாகிநிற்பதும் - இன்றைய அல்லது நேற்றைய நிகழ்வுகள் மாத்திரம் சம்பந்தமானது அல்ல.
நவீன தமிழ் இலக்கியம் அல்லது அதன் இலக்கியவாதிகள் அல்லது அவர்களது செயற்பாடுகள் என்பவற்றின் அடியாழத்தில், மதம் வேரூன்றிக் கிளைபரப்பி நிற்கின்றது என்பதும் தற்செயலான ஒன்றல்ல. அண்மைக் கால இலக்கியங்கள், புதிய மத குறுங்குழுக்கள், ஆச்சிரம வாழ்க்கை முறைகள் - ஆன்ம விடுதலைக்கான பூசைகள், புதிய நவீன சடங்குகள் - இவை அனைத்திற்கும், இன்று நவீன இலக்கியத்துடன் தீர்க்கமான சம்பந்தம் உள்ளது - இவற்றினூடாகவே இவை தலைக்காட்டச் செய்கின்றன என்பதனையும் மறுத்தல் ஆகாது. இதன்போது, இவை, நவீன இலக்கியத்தில் சாதீய கட்டுமானங்களைக் காப்பதிலும், இவை தமது தலையாய பாத்திரத்தை இன்று வகிப்பதாகவே உள்ளது.
ஆனால், மதத்தின் பாத்திரம், வெறுமனே சாதீயத்தைக் காப்பதுடன் அல்லது அதனை நியாப்படுத்துவதோடு முடிந்து விடுவதாக இ;ல்லை. உலர்ந்த, சருகு நிலையை அடைந்துவிடப் போகும் ஆன்மாவிற்கு, தேவைப்படும் ஈரலிப்பினையும் கூட, இதே மதம் வழங்கவே முன்வருகின்றது என்பதும் ஆழ சிந்திக்கத்தக்கதே. நலன்கள் விட்டுக் கொடுக்கப்படாமலும், அதேவேளை ஆன்மாவின் உய்ப்பிற்கு ஒருவழியைக் காட்டக் கூடியதாகவும் ஒரு நம்பிக்கை கிட்டுமென்றால்..? - இது கார்க்கி யின் பாத்திரங்கள் தேடி அலையும், தேடல்களின் உள்ளடக்கக் கூறுகளில் ஒன்று என்றாகின்றது.
எத்தனை லட்ச புத்திஜீவிகள் - அறிவு ஜீவிகள் - என வகைப்படுத்தப்படும் ஆன்மாக்கள் ஒரு குளத்தில் இறங்கி நீரில் மூழ்கி, ஆன்மாவின் புனிதத்தை நாடி, சூரிய நமஸ்காரத்தை ஏந்தத் துடிக்கின்றனர்? ஒரு புனித நீர்ச் சடங்கை நடத்தி முடிக்கின்றனா;? இது தொடர்பிலான கார்க்கி யின் கேள்விகள் தவிர்க்க முடியாதவை என்றாகின்றது பற்பல மனுகுல ஞானிகள் - அரிஸ்டோட்டில் முதல் கார்ல்மார்க்ஸ் வரை என விரியும்- பல்வேறு தத்துவபோதங்கள்-ஆழம் பார்க்கத் துணிந்த மதம் சார்ந்த கேள்விகளை, இத்தொகுதியும் தன்னளவில் ஆய்வுக்கு உட்படுத்தவே முற்பட்டுள்ளது - உயிர்ப்போடு.
IV
இந்நவீனம், மூலத்தில் இருந்து மொழிப்பெயர்க்கப்பட்டிருந்தால் அது இன்னும் சிறப்புடையதாக அமைந்திருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம். ஆனால், கிட்டத்தட்ட 90 வருடங்களின் முன், 1930களிலேயே, நியுயார்க்கில் மொழிப்பெயர்க்கப்பட்டு, தனது ஆங்கில வடிவத்தைப் பெற்றிருக்ககூடிய இந்நூல் - இதுவரை, சந்தோஷமாய் இருட்டடிப்பு செய்யப்பட்டதற்கான சான்றுகளையே அதிகம் சுமந்ததாக உள்ளது.
காரணம்,இந்நூல் ஏந்திப்பிடிக்கக் கூடிய உண்மைகள் அவ்வாறானவையாகவே காணப்படுகின்றன. இதனாலோ என்னவோ இந்நூல் பொறுத்து இதுவரை வெளிவந்திருக்கும் ரஷ்ய திரைப்படங்கள், அல்லது ரஷ்ய எழுத்துக்கள், விமர்சனங்கள் அனைத்துமே (பெரும்பாலும்) இந்நவீனத்தை போற்றுதலுக்கு பதிலாக, சிதைப்பதை அல்லது கொச்சைப்படுத்துதலையே தமது தலையாய நோக்காகக் கொண்டுள்ளன.
மறுபுறத்தில், இதுவரை அடக்கிப் பிடித்திருக்க கூடிய அனைத்து விமர்சனங்களையும் கார்க்கி இந்நூலிலேயே முழுமையாகக் கட்டவிழ்த்து விடுவதாகவும் படுகின்றது மிச்சம் மீதி அற்ற ஒரு நிலையில்-சுதந்திரமாக. தன் சொந்த விருப்பு வெறுப்புகளைப் புறந்தள்ளி ரஷ்யாவின் ஒரு சுய விமர்சன ஆன்மாவாகத் தன்னை கார்க்கி நிலைநிறுத்தி உள்ளார் இந்நூலில் எனலாம்.
V
பிலிஸ்டைன் என்பவனை மொழிப்பெயர்ப்பாளர் ஆர்.கே.கண்ணன் பின்வருமாறு வரைவிலக்கணப்படுத்தி உள்ளார்:
“விவிலிய வேதத்தில் காணும் அர்த்தத்தில் இச்சொல் இங்கு கையாளப்பட வில்லை. புதிய கருத்துக்களையும் உயர்வான லட்சியங்களையும் நஞ்சென வெறுப்பவன்: பழைமையிலேயே பரம சுகம் காண்பவன்: பண்பு, தாராளபான்மை என்று உதட்டளவில் பேசிக் கொண்டு காசு பண்ணுவதிலேயே குறியாய் இருப்பவன். மனித குலம் கூட்டாகக் கொண்டு வெளிப்படுத்தும் பொது நோக்குகளையும் கூட்டு முயற்சிகளையும் சிறிதளவேனும் எதிரொலிக்காமல் நாகரிகஸ்தன் என்று வேஷம் போடும் போலி பண்பாளன் - இந்த நபரையும் போக்கையும் குறிப்பனதான் பிலிஸ்டைன், பிலிஸ்டைனிசம் போன்ற சொற்களாகும்”.
ஆனால், கார்க்கியின் கிளிம் இந்த வரைவிலக்கணங்களைத் தாண்டியும் பயணிக்கக் கூடியவன்தான். கார்க்கி யும் பிலிஸ்டைன் பொறுத்து தன் கருத்தை; எடுத்துரைக்கத் தவற வில்லை. பிலிஸ்டைன் பொறுத்த கார்க்கி யின் கருத்து பல பரிமாணங்களைக் கொண்டது.
“பிலிஸ்டைனிசம் என்பது ஒரு விஷக்கொடி. எத்தனையோ மகாகவிகளை அது அழித்தொழித்திருப்பதை எண்ணிப்பாருங்கள்.”
“பிரமித்தியுஸ் நிலையிலிருந்து, ரவுடியின் நிலைக்கு நாம் இறங்கிவிட்டதற்கு, பிலிஸ்டைனிசமே காரணமாகின்றது”.
“இந்த நோயுள்ள சீழ் புண், மனித ஆளுமையை அறவே அழித்துவிட்டிருக்கிறது. சூனிய ரீதியிலான தனிநபர் போக்கை இது விஷமூட்டி வளர்த்திருக்கின்றது. உள் இணக்கம் அழிந்த நிலையில், சிதறி சுக்கலாகிப்போன மனநிலையையும், அறுந்த நரம்புகளையும் உடைய ஒரு வினோத பிராணி வாழ்வின் நோயுள்ள குரைப்புகளைத் தவிர மற்றெல்லா குரல்களையும் கேட்காதபடி அவனைத் தீவிர செவிடனாக்கியுள்ளது”
பிலிஸ்டைனிசத்தின் வரலாற்று ரீதியான குணாம்சங்களையும் அதன் வளர்ச்சி நிலைகளையும் அதன் மாற்றமுடியாத குணவியல்புகளையும் இப்படித்தான் கார்க்கி தன் ஆய்வு நிலைகளுக்கூடாகக் கண்டுணர்ந்து கொள்கின்றார். ஆனால்,இனி, இதனை இலக்கியமயப்படுத்துவது அதிலும் ரத்தமும் சதையுமாக அதுவும் தலைமுறைகளுக்கூடு என்பது சற்றே கடினமான செய்கைதான்.
“பிலிஸ்டைனிசமானது ஒரு தனித்த பாத்திரத்தில் உருவப்படுத்தப்பட்டு, ஒரு தனி ஆளாய், காத்தேயின் பவுஸ்ட் (குயரளவ-1808) போன்றோ அல்லது ஷேக்ஸ்பியரின் ஹெம்லட் (1601) போன்றோ படைத்தளிக்க வேண்டிய தேவைப்பாட்டை எதிர்நோக்குகின்றது”(1934).
அதாவது, இவ் ஆரம்பகால விமர்சனங்களின், இருநூறு அல்லது நானூறு ஆண்டுகள் கழிந்த நிலையில், இவ்விடயதானம் தொடர்பில் ஒரு ஆழமான சமகால படைப்பின் தேவைப்பாட்டை கார்க்கி ஆழமாக உணர்கின்றார்.
காத்தேயின் பவுஸ்ட்டில், தன் பொருளியல் நலன்களுக்காக,அதிகாரத்தைத் தேடி, அதற்குப் பதிலாகத் தன் ஆன்மாவை சாத்தானிடம் விற்று விடுவதாகக் கதை அமைந்துள்ளது. பவுஸ்ட், துயருற கூறுவான்: ‘என்னில் இரண்டு ஆன்மாக்கள் ஜீவிதம் நடத்துகின்றன. ஒன்றுக்கொன்று முரண்பட்டதாய்’.
இறுதியில் மீள முடியாத அவனைச் சாத்தான் கவ்விச் சென்று விடுகின்றது. மறுபுறத்தில், ஹெம்லட், காலத்தைக் கடந்தும் பவுஸ்ட் போலவே வாழ்கின்றான்.
‘ஹெம்லட்’ என்ற சொல்லின் பொது விளக்கம்: ஒரு மிக சிறிய குடியிருப்பு கிராமத்தை விட, மிக சிறிதானதாய்-முக்கியமாகக் கோயிலற்ற ஒரு குடியிருப்பு என்றும் பொருள்படும். இவ்வார்த்தையையே, தனது தலையாய பாத்திரத்தின் பெயராக, ஷேக்ஸ்பியர் தெரிவு செய்திருப்பது ஒரு தற்செயலான நிகழ்வாக இருக்க முடியாது. தான் உருவாக்கி நிறுத்த முற்பட்ட பாத்திரத்தின் குணாம்சங்கள் பொறுத்து அக்குவேர் ஆணிவேராக, அம் மகா கலைஞன் உணர்ந்தே இருப்பான் என்பதில் ஐயமில்லை.
கதையின் பிரகாரம், டென்மார்க் அரசனின் ஆவி அவனது மகனான ஹெம்லட்டிடம், ஒரு வேண்டுகோளை விடுக்கின்றது: தன்னைக்கொன்று, தன் அரசாட்சியையும் தன் மனைவியையும் கைப்பற்றிய ஹெம்லட்டின் மாமனைக் கொல்லுமாறு கூறுவதே அவ் வேண்டுகோளின் சாரம்.
ஹெம்லட், சித்த சுவாதீனமுற்றவனாய் நடக்கத் தலைப்படுகின்றான் - அவனது உள் நோக்கை அறியும் மாமனும் ஹெம்லட்டின் தாயும் (தற்போதைய மாமனின் மனைவி) ஹெம்லட்டைக் கொல்ல திட்டம் வகுக்கின்றார்கள். இறப்புக்கும் வாழ்வுக்கும் இடையே அல்லலுற்று அலையும் ஹெம்லட் பழி தீர்க்கும் எண்ணங்களை வடிவமைத்தவாறே நகர்கின்றான். மதமும், அரசியலும், யதார்த்தங்களும், பெண் உறவுகளும் அவனில் முட்டி மோத,ஹெம்லட் இவ் உலகிலே நகர்ந்தாக வேண்டியுள்ளது. ஆன்மா அற்ற நிலையில், காதல் வயப்படும் பண்பையும் இழந்து போன நிலையில் அவனது ஆன்மா வாழ்வுக்கும் இறப்புக்கும் இடையே நின்று பரிதவிக்கின்றது. ‘வாழ்வா சாவா’எனும் கேள்வியின் முன் இறப்பு, அப்படி ஒன்றும் மோசமானது இல்லை என கணத்தில் நினைத்துக் கொள்வான் ஹெம்லட். ஷேக்ஸ்பியரின் ஹெம்லட்டும் சரி அல்லது காத்தேயின் பவுஸ்ட்டும் சரி, இரண்டு இலக்கியங்களுமே நாட்டார் இலக்கியத்தின் செல்வாக்குகளின் பின்னணியை அடிப்படையாகக் கொண்டன ராமாயணம் அல்லது மகாபாரதம் போன்றே.
ஆனால், கார்க்கி யினது கிளிம் இவற்றில் இருந்து வேறுபட்டதாக உள்ளது. கார்க்கி யின் கிளிம், தனது ஆணிவேரை ஏதோ ஒரு வகையில் மறைமுகமாக நாட்டார் இலக்கியத்துடன் தொடர்பை பேணி இருந்தாலும், இதனது பிரவாகம் - நாளாந்த வாழ்வில் இருந்து ரஷ்யாவின் அன்றைய கறாரான யதார்த்த நிலைமைகளில் இருந்து கிளம்பியாக வேண்டியிருக்கின்றது. மேலும், இது, சக மனிதரிடை, அவர்களது வாழ்க்கையில் உரசி வெளிக்கிளம்புவதாயும் இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தையும் கொண்டதாகின்றது.
ஒருவகையில், இதன் போது கார்க்கி ஒரு புதிய நடைமுறையையும் கையாள் கின்றாரோ என்ற சந்தேகத்தையும் இத்தொகுதி எழுப்பவே செய்கின்றது. ஒரு பாத்திரமானது, ஒரு நூல் பற்றி அல்லது ஓர் ஓவியம் பற்றி தன் நிலைப்பாட்டை இந்நாவலில் முன்வைக்குகையில் அது ஒரு நூறு வருட காலத்தையும் அதற்குரிய, அக் காலகட்டத்தி;ன் விமர்சனத்தையும் கடந்து விடுகின்றது. இதற்கூடு,அக்குறித்த பாத்திரத்தின் குணாம்சமும் வெளிக்கொணரப்படுவது மாத்திரமின்றி, கூடவே, அந்த நூல் அல்லது ஓவியம் பொறுத்த குறித்த சமூக நலனின் அணுகுமுறையும் விமர்சனமும் வெளிக்கொணரப்படுவதாயும் உள்ளது. இதன்படி, ஓராயிரம் அல்லது இரண்டாயிரம் காலப் பகுதிக்கான மனித வாழ்வின் சிந்தனைகளை - கருத்துப்படிவுகளை, நூலானது, வாசகனின் திறந்த பரிசீலனைக்கு திறந்து விட எத்தனிக்கின்றது - தனது வளர்ச்சிப் போக்கில்.
இதனாலேயே, ஒரு தீவிர வாசகன், இந்நூலை பயிலும் போது ஒரு கணினியின் தேடுகையின் உதவியோடு வாசித்தல் விரும்பத்தக்கதாய் இருக்கின்றது. உதாரணமாக நூலில், மேலே கூறியுள்ளவாறு, இரு வரிகளில் வந்து போகும் ஒரு நூல் அல்லது ஒரு தத்துவஞானி அல்லது ஓர் ஓவியம் - அதற்கான விமர்சனம் இவை எதற்காக, எப்படி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய காட்சிப்படுத்தலிற்கூடு அது கனதியுறச் செய்யும் சாராம்சங்கள் எவை எவை என்பது போன்ற தேடுகைகளுக்கான ஒரு வசதியை ஒரு கணினி இலகுவில் ஏற்படுத்தித் தரலாம்.
VI
மறுபுறத்தில், ‘சோஷலிச யதார்த்த வாதம்’ என்பதன் அர்த்தத்தை தனது கைப்பிடி அளவிலேயே உள்வாங்கி இருக்கும் பலருக்கும் இந்நூல், ஓர் அதிர்ச்சியை உண்டு பண்ணி அவர்களது மாயையை ஒரு வகையில் முட்டி மோதி சுக்கு நூறாக உடைத்தெறியக்கூடிய சந்தர்ப்பங்களும் இந்நூலுக்கூடு எழவே செய்கின்றது. இதுபோன்றே, ‘நவீனத்துவம்’ என்ற திரையின் பின்னால், சப்தமின்றி மௌனமாய் அமர்ந்திருக்கக் கூடிய சாதீய ஆதிக்க சக்திகளின் வரிசைகளையும், இந்நூல், அத்திரையை அகற்றி கிழித்தெறிந்து விடுவதன் மூலம் மௌனமாய் காட்சிப்படுத்தி விடுகின்றது.
இந்த ஒரு பின்னணியில், டாஸ்தாவஸ்கியின் காட்சிபடுத்தும், கலையை, ஷேக்ஸ்பியருக்கு அடுத்ததாக நிறுத்தும் கார்க்கி யினது காட்சிப்படுத்தலின் தன்மை குறித்து செக்காவின் கூற்றையும் நாம் மறந்துவிடுவதற்கில்லை:
“ஒரு விடயத்தை நீங்கள் சித்திரிக்கும் போது அல்லது காட்சிப்படுத்தும் போது அதனை நீங்கள் ஸ்பரிசிக்கவும், கண்ணால் தத்ரூபமாகக் காணவும் செய்கின்றீர்கள மெழுகை வார்ப்பது போன்ற மனப்பதிவு உங்களது நீங்கள் ஒரு விவேகமுள்ள கலைஞன்”.
இந்த விவேகமுள்ள கலைஞன் தான், தன் வாழ்நாளின் இறுதிக்காலப்பகுதியில், தன் சொந்த விருப்பு வெறுப்புகளைக் கடந்தவனாய், கட்டற்று, வரலாற்றை சுரம் பிடிக்கத் துணிகின்றான்:
“பிலிஸ்டைனிசம் என்பது பல்வேறு வர்க்கங்களில் இருந்து வெளிக்கிளம்பும் பல்வேறு புல்லுருவிகளை ஒட்டுண்ணிகளை உள்ளடக்குகின்றது. நான் என்பதனையும் (நுபழஉநவெசளைஅ), அராஜகம் என்பது ஈறான அனைத்து கீழ்மைகளையும், பிலிஸ்டைனிசம் வரலாற்று ரீதியாக உள்வாங்கிக் கொள்கின்றது”.
பிலிஸ்டைனிசத்தின் வரலாற்றுப் பாத்திரத்தை கணித்துக் கொள்ளும் கார்க்கி கூறுவான்:
“பிலிஸ்டைனிசம் தன் தகப்பனையே கொலை செய்யும் ஒரு பாத்திரத்தை வகிக்கும்படி வரலாறு, அதற்கு முன்கூட்டியே விதித்திருக்கின்றது. அவன் தன் சொந்தத் தகப்பனையே கொல்லப்போகின்றான”.
இதற்கான தடயங்களை, கார்க்கி அழுத்தமாய் டால்ஸ்டாய் முதல் டஸ்டாவாஸ்கி வரையிலான எண்ணற்ற மகா எழுத்தாளர்களையும் தத்துவ ஞானிகளையும், ஓவியங்களையும் துணையாகக் கொண்டு தன் பாத்திரங்களை முன்நகர்த்தி இந்நுhலின்; வாயிலாக படைத்தளிக்க முயன்றுள்ளார். எனவேதான் இந்நூல் ‘மனுக்குலத்தின் ஒரு விவேக ஞான திரட்சி’ என்று வரையறுக்கப்படும் சிறப்பை கொண்டிருக்கின்றது.
மறுபுறத்தில், இந்த வரலாற்று பாத்திரங்களின் நகர்வுகளும் அசைவுகளும் எப்படியாய் இருக்கப் போகின்றது என்பது மாபெரும் கேள்வியாகின்றது அதுவும் மனுக்குல வரலாற்றின் சமகாலப் பின்னணியில். வேறு வார்த்தையில் கூறுவதானால், ‘பல்வேறு வர்க்கங்களில்’ இருந்து எழும் ஒரு பிலிஸ்டைனிசத்திற்கு, தகப்பனை கொல்லக்கூடிய ‘ஒரு தலைவிதியை’, ‘வரலாறே’ அன்று தொட்டு அதன் மேல்சுமத்தியுள்ளது என்பதில் மனுக்குலவிரோத பாவம் ஒரு தலையாய ‘வரலாற்று விதியாக’ அதாவது அப்பனைக் கொல்லும் கதையாக செயல்படப் போகின்றதா என்பதும், இப் பாவமானது ஒருவனின் பல்வேறு வர்க்க நிலைகளில் இருந்தும் உருவெடுத்து, தோன்றுவதற்கான வேர்களைக் கொண்டுள்ளதா என்பதும் இம் மூன்றாம் தொகுதி முன்வைக்கக்கூடிய அழுத்தமான கேள்விகளாகின்றன.
இப்பின்னணியிலேயே கிளிம் என்ற பாத்திரமும் உருப்பெற்று நகர்த்தப்படுகின்றது. இப்பாத்திரத்தின் சமூக கடப்பாடுகளை புரட்சிக்கு முந்திய பிந்திய சமூகங்கள் எப்படி, எப்படி உள்வாங்கப்போகின்றன என்பது மனுக்குலத்தின் வரலாற்று வினாவாகின்றது. இதனையே வரலாற்றின் இம் மூன்றாம் தொகுதியும் பிரதான விடயப்பொருளாக ஓர் மனுக்குல வரலாற்று பின்னணியில், அரவணைக்க முற்படுகின்றது எனலாம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.