உடையார்குடிக் கல்வெட்டும், விளக்கமும், ஆதித்த கரிகாலன் படுகொலையும், கல்கியும் பற்றி...... - வ.ந.கி -
உடையார்குடிக் கல்வெட்டில் 'பாண்டியனைத் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று' என்று வருகின்றது. பாண்டியன் தலைகொண்ட கரிகால் சோழனை எதற்காகச் சோழர் உயர் அதிகாரிகள் கொல்ல வேண்டும்? அந்தக் கல்வெட்டின் மேற்படி வசனத்தைப் பார்க்கும் எவரும் தர்க்கரீதியாக ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் பாண்டியனுக்குச் சார்பானவர்களாக இருக்கக் கூடுமென்ற முடிவுக்கு வரலாம். அப்படி வந்தால் அது தர்க்கபூர்வமானதாகவுமிருக்கும். அப்படி கல்கி வந்திருந்தபடியால் ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களைப் பாண்டிய ஆபத்துதவிகளாக உருவாக்கியிருக்கக் கூடும்.
கல்கி பிராமணர் குலத்தில் பிறந்தவர் என்பதற்காக அவர் திட்டமிட்டே குற்றவாளிகள் என்பதை மறைத்தார் என்று கூறுவது சரியானதல்ல. நாம் ஒருவரின் சாதியைக் கூறி அறிமுகப்படுத்துவது மனித உரிமை மீறல் என்னும் காலகட்டத்தில் வாழ்கின்றோம். அதன் காரணமாகவும் அவர் குற்றவாளிகளின் சாதியின் பெயரைக் குறிப்பிடாமல் தவிர்த்திருக்கக் கூடும். மக்களுக்கிடையில் சாதிரீதியிலான வேறுபாடுகளை அவ்விதம் குறிப்பிடுவது அதிகரிக்கும் என்று கல்கி கருதியிருக்கலாம். மேலும் பொன்னியின் செல்வனில் பல பாத்திரங்கள் பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் வருகின்றார்கள். அவர்களையெல்லாம் சாதிப் பெயர் பாவித்துக் கல்கி அறிமுகப்படுத்தவில்லை. இந்நிலையில் எதற்காகச் சதிகாரர்களின் சாதிப்பெயரைக் கல்கி கூற வேண்டுமென்று எதிர்பார்க்கின்றீர்கள்?
கல்கி தேசியவாதி. காந்தியவாதி. இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்ற ஒருவர். அவரது 'தியாகபூமி'யில் தீண்டாமைக்கெதிராகக் குரல் கொடுத்தவர். பெண் உரிமைக்காகக் குரல் கொடுத்தவர். தேசிய விடுதலைக்காகக் குரல் கொடுத்தவர். அவ்விதமான ஒருவரைச் சாதி வெறியராகக் காட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
மன்னன் மன்னன் என்னும் யு டியூப்பில் நன்கறியப்பட்ட அரசியல் ஆய்வாளார் 'பிராமணர்கள் திட்டமிட்டு மாற்றிய சோழ வரலாறு என்னும் காணொளியில் எதிரிகள் , துரோகிகள் பற்றி கூறும் விளக்கம் சிறுபிள்ளைத்தனமானது. துரோகிகள் என்றால் கூட இருந்து குழி பறிப்பது என்கின்றார். எதிரிகள் என்றால் எதிரி நாட்டில் அல்லவா இருக்க வெண்டும் என்கின்றார். கூட இருப்பவன் எதிரிக்கு உளவாளியாக இருந்து செயற்படலாம் என்பதை ஏனோ மறந்து விட்டார்? பாண்டியனுக்கு ஆதரவாகச் சோழர் மத்தியில் இருந்து செயற்பட்டாலும் அவர்கள் பாண்டிய ஆபத்துதவிகளாகக் கருதப்படலாம். இதை அவர் மறந்து விட்டார். இங்கு ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் ஏதோ ஒரு காரணத்தால் சோழர்களை வெறுப்பவர்களாக இருந்திருக்கக் கூடும். உண்மையில் குற்றவாளிகள் நால்வரும் சகோதரர்கள் என்றுதான் உடையார்குடிக் கல்வெட்டு கூறுகின்றது. ஒரு குடும்பத்தவர்கள் சோழரை வெறுப்பதற்கு ஏதாவது முக்கிய காரணம் இருந்திருக்கக் கூடும். ஏதோ ஒரு வகையில் சோழரால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்திருக்கக் கூடும். அதனால் பாண்டியனுடன் இணைந்து பாண்டியனுக்கு உளவாளிகளாகச் செயற்பட்டவர்களாக இருந்திருக்கக் கூடும்.