எழுத்தாளர் நந்தினி சேவியர் நினைவாக.... - வ.ந.கி -
எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்களின் பிறந்தநாள் மே 25. அதனையொட்டி நான் எழுதிய குறிப்புகளிலிருந்து எடுக்கப்பட்ட குறிப்புகளின் தொகுப்பிது. முகநூல் எனக்கு நண்பராக்கிய மூத்த கலை,இலக்கிய ஆளுமைகளில் ஒருவர். இருந்தவரையில் விடாமல் இயங்கிக்கொண்டிருந்தார். அவரது விடா முயற்சியும், கொண்ட கொள்கை தவறாத உறுதிமிகு மனநிலையும் என்னை மிகவும் கவர்ந்தவை.
தனது எழுத்துகளைச் சமூகச் சீர்கேடுகளைச் சுட்டெரிக்கும் போர் வாளாகப் பாவித்தவர் அவர். எப்பொழுதுமே தான் நம்பும் கோட்பாடுகள் விடயத்தில் , குறிப்பாக மார்க்சியக் கருத்துகள் விடயத்தில், சமரசம் செய்து கொள்ளாதவர். சமூக, அரசியுல் & பொருளியல் விடுதலைக்கான மார்க்சியக் கருத்துகள் ரீதியில் அமைந்த போராட்டம், அதனுடன் இணைந்த தீண்டாமைக்கெதிரான போராட்டம் என்பவற்றில் தெளிவான, உறுதியான கருத்துகளைக் கொண்டிருந்தார்.
இன்னுமொரு விடயமும் என்னை மிகவும் கவர்ந்தது. தான் வாசித்த, தனக்குப்பிடித்த இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் பற்றிய விபரங்களைச் சுருக்கக் குறிப்புகள் மூலம் ஆவணப்படுத்தியவர் அவர்.சிலர் அக்குறிப்புகளை உதாசீனப்படுத்தினர். அவை விமர்சனங்களல்ல என்றும் கிண்டல் செய்தனர். ஆனால் அவர்கள் அவற்றின் நோக்கத்தை, முக்கியத்துவத்தைக் காணத்தவறி யானை பார்த்த குருடர்கள் என்பேன். அவற்றின் மூலம் அவர் எழுத்தாளர்கள் பலரை ஆவணப்படுத்தியுள்ளார். அதுதான் அவரது நோக்கமும் கூட. அதனைக் காணத்தவறியவர்கள்தாம் அவற்றில் குற்றம் குறை கண்டார்கள். ஆனால் அதற்காக அவர் அதனை நிறுத்தவில்லை. தொடர்ந்தும் அறிமுகப் படுத்திக்கொண்டேயிருந்தார். இலங்கைத் தமிழ் இலக்கிய ஆய்வுகளுக்கு உதவும் ஆவணக்குறிப்புகளாக அவை எப்போதுமிருக்கும்.
அவரது முகநூற் குறிப்புகளும் முக்கியமானவை. அவற்றினூடு அவரது சினிமா, இலக்கியம், அரசியல் பற்றிய எண்ண ஊட்டங்களை அறிய முடியும். அவை நிச்சயம் ஆவணப்படுத்த வேண்டிய பதிவுகள்.