1
அண்மையில் நடந்த நிகழ்வுகளில் இரண்டு விடயங்கள், முக்கியமானவையாக காணப்படுகின்றன:
I. இலங்கையின் சுதந்திரதின கொண்டாட்டம்.
II . மாலைத்தீவிலிருந்து இந்திய இராணுவத்தின் வெளியகற்றல்.
இலங்கையின் சுதந்திர தினமானது ஒரு கரிநாளாக வட-கிழக்கால் பிரகடனப்படுத்தப்பட்டது தெரிந்த ஒன்றே.
பொதுவில், மேற்படி கரிநாள் எதிர்ப்பில், மக்கள் பெருவாரியாக கலந்துகொள்ளாத நிலையில், முக்கியமாக, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், விக்னேஸ்வரன், சுமந்திரன் போன்றோர் மேற்படி எதிர்ப்பில் பங்குபற்றாத நிலையில், மக்கள் சாரிசாரியாக கலந்து கொள்வார் என எதிர்ப்பார்ப்பது அசட்டுத்தனம் மிக்கதுதான். ஆனால் அப்படியே இந்த தலைவர்கள் கலந்திருந்தாலும,; மக்கள் கலந்திருப்பார்களா என்பது கேள்விக்குரிய ஒன்றாகவே இருக்கின்றது.
ஆனால் விடயத்தின் முக்கியத்துவமானது, மட்டக்களப்பில் காட்டப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது வேலன்சுவாமிகளுக்கும், சாணக்கியருக்கும் இடையே இடம்பெற்ற சண்டை பொருத்தே களைகட்டியது. வடக்கிலிருந்து, வேலன்சுவாமிகள் அவர்கள், கிழக்கில் களமிறக்கி விடப்பட்டது என்பது வெறும் ஆதரவு சம்பந்தப்பட்டது மாத்திரம் அல்ல, ஆனால் ஆழ்அரசியலை உணர்த்தக் கூடிய ஒன்றே.
2
எதிர்ப்பு நடவடிக்கை என்பது குறைந்தபட்சம், பொலிஸாருடன் மோதுவது, என்பதை அடிப்படையாகக் கொண்டு, முன்னெடுக்கப்படும் ஓர் அரசியலின் பின்னணியில், சர்வதேசத்தின் எப்பகுதியானது மறைந்து வீற்றிருக்கின்றது என்பது ஆணித்தரமாக கேட்கப்பட வேண்டிய கேள்வியாகின்றது.
மேலோட்டமாக பார்க்கும் இடத்து, இத்தகைய தீவிர எதிர்ப்பு நடவடிக்கைகள் என்பது வரவேற்கத்தக்கதுதான் என்பதில் ஐயப்பாடில்லை. ஆனால், ஓரடி முன்னால் என்பதும் பின் ஈரடி பின்னால் சறுக்குவது என்பதும், துர்பாக்கிய நிலையை நோக்கி நாங்கள் போகின்றோமோ என்பதே மக்களின் சந்தேகமிக்க கேள்வியானது. ஏனெனில் குருந்தூர் அரசியலில் இருந்து, பாராளுமன்ற அங்கத்தினரான செல்வராசா பொன்னம்பலம் அவர்களை குண்டுகட்டாக கட்டி அவர் குழறக் குழறப் பொலிஸார் அப்புறப்படுத்திய நடப்பை (தினக்குரல் செய்தி) மக்கள் எளிதில் மறப்பதற்கில்லை.
அண்மைய காலங்களில் இடம்பெற்றுவந்த இவ்வகை அரசியலில் எமக்கு அனுசரணையாக சர்வதேசம் இதுவரை எந்தளவில் முன்னணிக்கு வந்துள்ளது என்ற கேள்வி பிரதானமானது. இந்த புரிதலின் பின்னணியில்தான். திரு.சாணக்கியன் அவர்களின் சண்டை பிரதானமாகின்றது. வேலன்சுவாமிகளின் அரசியலானது எளிமை மிக்கது. அவர் வழமைப்போல் பொலிஸாரின் அடாவடித்தனத்தை சர்வதேசத்திற்கு காட்சிப்படுத்த வேண்டுமென்று அவாவுறுகையில், சாணக்கியனோ, (அப்படியென்றால்) “நீங்கள் தனியாக சென்று செய்யுங்கள்” என்று கோபப்பட்டதை வீடியோக்களில் மக்கள் கண்டுகளித்தனர் (தமிழ்வின்). இது, இருவேறு அரசியலின் இருப்பை சுட்டிக்காட்டுமொன்றாகும்.
3
ஆனால் இதைவிட சுதந்திரதினத்தின் முக்கியத்துவம் எனப்படுவது இலங்கையின் அரசியல் பரப்பில் ஆழ ஓடக்கூடிய ஒன்றாகவே திகழ்கின்றது. சுதந்திரதினத்தன்றே, தாய்வானின் பிரதமர் இலங்கை வரவழைக்கப்பட்டார் என்பதும், இரு நாடுகளுக்கிடையே ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது என்பதும் பிரதானமான நிகழ்வாகியது. இவ் ஒப்பந்தத்திற்கான சர்வதேசத்தின், இன்னும் சரியாக கூறுவோமானால் மேற்கின் ஆசிர்வாதங்களின்றி தாய்வான் பிரதமர் இலங்கை வரப்போவதுமில்லை-ரணில் இவ்ஒப்பந்தத்தில் கைசாத்திடப் போவதுமில்லை. இருந்தும், சோடனைகள் என்னவோ, வேறு ஒரு சித்திரத்தை உலகுக்கு சுட்டிக்காட்டுவது போலவே இடம்பெறுகின்றன என்பதிலேயே நகர்வுகளின் முக்கியத்துவம் இங்கே உள்ளடங்குகின்றது.
சுதந்திரதின நாளன்று தாய்வான் பிரதமர் அவர்கள் இப்படி-எந்தளவில் வரவேற்கப்பட்டாரோ, அந்தளவில், சந்தடியற்ற விதத்தில் இந்திய நீர்மூழ்கி கப்பலொன்று இலங்கையினுள் உள்நுழைந்து, தன் இரண்டு நாள் விஜயத்தில் நாட்டின் பல்வேறு துறைகளில் தன் பயிற்சியை தொடங்கியது. அதாவது, தாய்வானின் பிரதமர் உள்வருகை இந்திய நீர்மூழ்கி கப்பலின் உள்நுழைவுக்கு தளமைத்ததோ என்பது கேள்வியாகவே இன்றும் இருக்க கூடிய ஒன்றுதான். ஆனால் சுதந்திர நாளின் முக்கியத்துவமானது இவ்விருவிடயங்களுடன் முடிந்ததாக இல்லை. இலங்கையின் சுதந்திர நாளில் இந்திய தூதுவர் பங்கேற்கவில்லை என்ற விடயம் முக்கியமானதாயிற்று.
ஏட்டிக்கு போட்டியாக, சர்வதேசத்தின், முக்கியமாக, அமெரிக்க - ஐக்கிய இராச்சியத்தின் தூதுவர்களும் இப்பொன்னான நாளில் பங்கேற்க்கவில்லை என்ற செய்தியும் கருத்தூன்றிப் படிக்கத்தான் என்றாலும், அது ஒரு பதில் நகர்வாக, இருக்கக்கூடிய சாத்தியமே அதிகமாக உள்ளது என்பது அடுத்துவரும் செய்தியின் பின்னணியி;ல் நோக்கக்கூடிய ஒன்றுதான. ஏனெனில், இத்தகைய நகர்வுடன் நிற்காமல் (நீர்மூழ்கி அரசியல்) முதல் முறையாக இந்தியா தனது உயர்மட்டங்களுடன் கலந்தாலோசிக்க ஜே.வி.பியையும் அழைத்து முடித்திருந்தது. இவை அனைத்தும், ரணில், தாம் விரித்த வலையில் தானே சிக்கிக்கொண்டாரா என்ற கேள்வியை அழுத்தமாக எழுப்ப தவறவில்லை.
4
இந்திய நகர்வுகள் என்பவை மிகவும் நுணுக்கமானவை என்பது மிக அண்மைக்கால அரசியல், உலகுக்கு எடுத்துக்காட்டிவரும் செய்தியாகின்றது. முக்கியமாக, ஜெய்சங்கரின் பொறுப்பேற்பும், இந்தியாவின் அண்மைக்கால வளர்ச்சியும் மேற்படி விடயங்களுக்கு தீண் போடுவதாக இருக்கின்றது. உதாரணமாக, அண்மைக்காலத்தின் மாலைத்தீவு தொடர்பிலான இந்திய நகர்வுகள் என்பது சர்வதேச சுவாரஸ்யத்தை இப்பகுதியில் முடுக்கிவிட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை.
திரு.முர்சி அவர்களின் வெற்றிவாகையும், பின் அவர் சீனத்திற்கு விஜயம் செய்தலும், பின் தன் தேர்தல் வாக்குறுதிக்கேற்ப, மாலைத்தீவிலிருந்தும் அனைத்து இந்திய இராணுவமும் வெளியேறி விட வேண்டும் என கெடு விதித்ததும், பெருத்த சுவாரஸ்யத்தை சர்வதேச மட்டத்தில் ஏற்படுத்த தவறவில்லை.
இரண்டு ஹெலிகள், மற்றும் ஒரு டோனியர் விமானம்-இவற்றுடன் 75 இராணுவத்தினர் என்று ஓர் இந்திய இராணுவம் மாலைத்தீவின் மூன்று தளங்களில் இருந்து, இயங்க வந்ததாய் கூறப்படுகின்றது. இதற்குரிய காரணம் அவசர மருத்துவ சிகிச்சைகளுக்காக நோயாளிகளை பல்வேறு பகுதிகளில் இருந்து கொணர்ந்து சேர்ப்பதற்கே என்று கூறப்படுகின்றது.
கடந்த ஐந்து வருடங்களில் மாத்திரம், இந்திய இராணுவமானது இப்படியாக கிட்டத்தட்ட 600 சந்தர்ப்பங்களில் பங்கேற்றிருப்பதாக பதிவுகள் ஒருபுறமாய் கூறிநின்றன. ஆனாலும் மாலைத்தீவின் நகர்வானது கச்சிதமாய் இருந்தது, ரணிலின் இலங்கையினது போன்றே! முதலில் துருக்கியிடம் மேலும் அதிகளவில் கோதுமையை அனுப்புமாறு மாலைத்தீவு கோரியது (அதுவரை இந்தியாவே, அதன் தலையாய கோதுமை வழங்குனராக இருந்துள்ளது என்ற சூழலில்) அடுத்து, சீனாவிடமிருந்து இன்னும் அதிகளவிலான உல்லாசப்பயணிகளை அனுப்பிவைக்குமாறு கூறியது (இந்திய உல்லாசப்பயணிகளே, மாலைத்தீவின் பிரதான உல்லாசப்பயணிகளாக வருகைத்தந்தவர்கள் என்ற பின்னணியில்) இது போக, தனது தீவிலிருந்து தனது நோயாளிகளை அப்புறப்படுத்தும் திட்டத்தில் பங்கேற்பதற்காக, இலங்கையின் உதவியையும் மாலைத்தீவு கோரியிருந்தது. மாலைத்தீவின் இக் கோரிக்கைக்கு இலங்கையானது மிக சாதகமான பதிலை உடனடியாக வழங்கியது. அதாவது, தான் இரண்டு விமான அம்புலன்ஸ்சுகளை மார்ச் ஒன்று முதல் அனுப்பிவைக்க இலங்கை தயாராக உள்ளதாக அமைச்சர் சிறிபால அவர்கள் மாலைத்தீவிற்கு உடனடியாகவே அறிவித்தார்.(Daily Mirror:30.01.2024)
இப்பின்னணியில்தான,; மாலைத்தீவின,; இந்தியாவுக்கான கோரிக்கையும் அரங்கேற்றி வைக்கப்பட்டது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் மாலைத்தீவு விரித்த வலையின் தண்மை, இதுதான் என்றானது. இதனைத்தொடர்ந்தே மோடி, இலட்சத்தீவில் காலடி எடுத்து வைத்ததும், அதன் அழகிய கடற்கரைகளில் அவர் “காலார” நடப்பதும் நடந்தேறியது.
இராணுவத்தை அகற்றுவது தொடர்பிலான தனது முதலாவது பேச்சுவார்த்தையின் போது தனது துருப்புகளை அகற்ற இந்தியா உடனடி இணக்கம் தெரிவித்திருந்தாலும், அப்படி அகற்றுவது தொடர்பிலான நடைமுறை குறித்து, பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட தான் விருப்பம் கொண்டுள்ளதாய் அது தெரிவித்தது.(14.01.2024)
இதனைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையிலான, இரண்டாம் சுற்றுப்பேச்சுவார்த்தை நடைபெற இருக்கையில்(01.02.2024) மாலைத்தீவினரின் மூன்று மீன்பிடி படகுகளை இந்தியா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சேர்த்தது.(31.01.2024)
இந்திய கடற்படை மாலைத்தீவின் மீன்பிடி படகுகளுக்குள் அத்துமீறி பிரவேசித்ததற்கான முழு விளக்கத்தையும் உடனடியாகத் தருமாறு மாலைத்தீவானது இந்தியாவிடம் கோரிக்கை விடுத்தது என்பது விடயங்களுக்கு மேலும் சுவாரஸ்யத்தை வார்த்தது. ஆனால் இந்தியா, இதுவரை மேற்படி கோரிக்கைக்கு பதிலளிக்காமல், வெறுமனே கோரிக்கையை புறக்கணிப்பதில் சிரத்தை காட்டியது.(THE MALDIVES JOURNAL :04.02.2024) இதனைத்தொடர்ந்து மாலைத்தீவு - இந்தியாவிற்கிடையே இடம்பெற்ற இரண்டாவது சுற்றுப்பேச்சுவார்த்தையின் போது இந்திய துருப்பினர் “அகற்றப்படல்” என்பது இப்போது வெறும் “மாற்றீடு” என மாற்றீடுசெய்யப்பட்டுள்ள இந்துஸ்தான் டைம்ஸ் செய்தியாக வெளியிட்டது.(05.02.2024) (Leaving Became Replaced)
குறித்த செய்தியின் பிரகாரம், மாற்றீடு என்பது (Replace) இந்தியாவின் முன்னால் இராணுவத்தினராலேயே ஆக்கம் என மேலும் இந்துஸ்தான் டைம்ஸ் கூறிநின்றது.
இச்சூழலில் ஒரு மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தையை நடாத்த இரு நாடுகளும் இணங்கியுள்ளதாய் அறிக்கை வெளியிட்டன. அதாவது ஒரு மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தையே விடயங்களின் இறுதி முடிவை துலாம்பரமாக்கும் என இப்போது எதிர்பார்க்கப்படுகின்றது.
சுருக்கமாகக் கூறினால் சீனமும் மேற்கும் பின்னணியில் இருந்த போதிலும், இந்தியாவானது தனது பிடியைத்தளர்த்தும் முன்னர் அனைத்து விவகாரங்களினதும் தனது முயற்சியை செய்துப்பார்க்க போகின்றது என்பதில் ஐயமில்லை. ஏனெனில், மோடி கூறியுள்ளது போல “அண்டைய நாட்டிற்கு முதலிடம்” என்ற இந்திய கோட்பாட்டின் அர்த்தமானது மேற்படி விடயத்தில் முழு வீச்சுடன் தொழிற்பட துவங்கியுள்ளது என கொள்வதில் தவறில்லை எனலாம்.
ஆக, இவ்வருடத்தின் மார்ச் 10 முதல் இந்திய இராணுவத்தின் முதல் குழுவினர் மலைத்தீவிலிருந்து அகன்றாக வேண்டும் என்ற மாலைத்தீவின் வலுவான நிலைப்பாடானது, மேலும் சில “மீன்பிடி படகுகளை” பிரச்சனைக்குள் தள்ளிவிடுமோ என்ற எண்ணம் உலக வல்லுனர்களுக்கிடையே சகஜமாகியது - ஒரு மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தைதான் இந்த சிக்கல்களை தீர்த்து ஒரு முடிவுக்கு கொண்டு வருமென்று நம்பப்படுகின்றது. இந்த சூழலில்தான், மாலைத்தீவின் ஜனாதிபதி முர்சும் தனது பாராளுமன்றத்தின் சம்பிரதாய அமர்வில் உரையாற்றும் போது இந்தியாவுடன் இனி புதிய ஒப்பந்தங்கள் யாதொன்றையும் மாலைத்தீவு செய்துக்கொள்ளப்போவதில்லை என்று அறிவித்தார்.
ஆனால் இவரது இந்த அறிவிப்பின் போது 24 பேரே மாலைத்தீவின் பாராளுமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தனர் என்பதும் எதிரணியைச் சார்ந்த 56 உறுப்பினர்கள் பாராளுமன்றத்தை பகிஷ்கரித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகின்றது.(05.02.2024)
5
பகிஷ்கரிப்பு என்பது கைத்தேர்ந்த ஓர் கலையாகிவரும் செயற்பாட்டை அண்மைக்கால அரசியல் எமக்கு காட்டக்கூடியதாக உள்ளது - முக்கியமாக இலங்கை-மாலைத்தீவு விவகாரங்களை கருத்தில் கொள்வதானால்;.
இலங்கையின் சுதந்திர தினத்தை, இந்தியா-மேற்குநாடுகளும் மற்றும் இலங்கையின் முன்னால் தலைவர்களும் பகிஷ்கரித்தனர் என்பது போக, முர்சி போன்றே ரணில் விக்ரம சிங்கவும் இலங்கையின் சுதந்திரத்தினம் கழிந்து, அடுத்து வந்த நாட்களில், பாராளுமன்ற சம்பிரதாய அமர்வுகளில் தனது உரையை ஆற்ற ஆரம்பித்திருந்;தார்.
உரையின் போது, இலங்கையின் சிறுபான்மை இனங்களான தமிழர்-முஸ்லிம் போன்ற சிறுபான்மை உறவுகளை அன்னார் தொட்டது மாத்திரம் அல்ல இலங்கை, இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தமானது மேலும் விரிவுபடுத்தப்படும் என்று அன்னார் அடிக்கோடிடவும் மறந்தார் இல்லை (தாய்வானுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் பின்னணியில், அன்னார் அவர்கள் வேறு எதனையும் செய்திருக்க முடியாது என்பது தெளிவு). இந்தியாவும் இலங்கையும் செய்திருக்கும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தமானது பெயரளவில் சுதந்திரம் என கூறப்பட்டாலும், உளுந்தின் விலை கூட இலங்கையில் எத்தகையது என்பதனை தனியாக இங்கே எடுத்துரைக்க வேண்டிய அவசியமில்லை. உளுந்திலிருந்து வெங்காயம் வரை விலை பட்டியலை எடுத்து நோக்குவோமானால் இலங்கை இந்திய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் சுதந்திர தன்மையை நாம் முழுதாய் அறிந்துக்கொள்ளலாம்.
ஆனால் முக்கியமானது யாதெனில், ஜனாதிபதி அவர்கள் இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தமானது மேலும் விரிவுபடுத்த வேண்டியுள்ளது என ஆற்றிய கூற்றல்ல மாறாக, இவ் உரையின் போது, மாலைத்தீவுப்போன்றே, இங்கும், எதிர்கட்சியினர் உரையை பகிஷ்கரித்திருந்தனர் எனப்படும் உண்மையாகும்.
இதே தினங்களில், இந்தியாவின் அழைப்பின் பேரில் ஜே.வி.பியின் அனுரகுமார திஸ்ஸ நாயக்க தனது குழுவினருடன், இந்தியாவின் முக்கிய பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்திக்கொண்டிருந்தார். அதாவது இவரும் ரணில்விக்ரமசிங்கவின் சம்பிரதாயமான பாராளுமன்ற கொள்கை உரையின் போது வீற்றிருக்கவில்லை என்றானது. எனவே, சுருக்கமாக கூறினால் ரணில் விக்ரமசிங்க அவர்களின் பொறிகளுக்கு இந்தியா மசியுமா அல்லது “காலார” நடக்கத்தொடங்குமா என்பதனை இனி பொறுத்திருந்தே நாம் பார்க்க வேண்டும்.
6
இத்தகைய ஒரு “கலங்களான” பின்னணியிலேயே திருமலை நவம் அவர்களின் கூற்று முக்கியமானதாகவும் தமிழ் அரசியலின,; முக்கியமாக தமிமரசுக்கட்சியின், செல்திசையை கோடிட்டுக்காட்டுவதாகவும் அமைகின்றது: “சிலர் அடிக்கவந்தனர்” “அவர்கள் கட்சியை சார்ந்தவர்கள் அல்லர், சிலர் இரு கைகளை தூக்கியவாறு வெளியே வந்தனர்.”
தமிழரசு கட்சியினது, தேர்தல் தொடர்பில் மேற்கும் இந்தியாவும் பலத்த பலப்பரீட்சைகளை நடாத்தினர் என்ற பதிவுகள் ஏற்கனவே சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன என்பது குறிக்கத்தக்கது.
கனடிய தூதுவர் நேரடியாகவே களத்தில் இறங்கினார் என்பதும் அவர் குறிக்கப்பட்ட தலைமைக்காக (நபருக்காக) உங்கள் வாக்கை அளிக்க வேண்டும் என தனிப்பட்ட ரீதியில் வேண்டிக்கொண்டதாகவும் பதிவுகள் கூறிநின்றன.
மேலும் தமிழரசுக்கட்சியானது, தனது தேர்தல் முடிந்த கையோடு, இந்திய தூதரை ஏனைய தமிழ் தலைவர்களோடு சந்தித்தும,; பின், சில தினங்கள் கழிந்த நிலையில், பதிலடிப்போல், ஸ்ரீதரன் அவர்களை ஐக்கிய இராச்சியத்தின் தூதரால் அழைக்கப்பட்டு அவரின் தனிப்பட்ட சந்திப்பும் இடம்பெற்றன். இதேபோலவே, அண்மையில், ஜெர்மனிய தூதுவரின் சந்திப்பும் நிகழ்தேறியது.
இவையனைத்தையும் கூட்டிக்கழித்து பார்க்குமிடத்து, தமிழரசியல் தொடர்ந்தும், சர்வதேசத்தினாலும் இந்தியாவாலும் தொடர்ந்து இழுப்பறி படப்போகின்றதா என்பது கேள்வியாகின்றது.
இச்சந்தர்ப்பத்திலேயே, மாலைத்தீவும் இலங்கையின் நகர்வுகளுடன் வந்தினையும் புள்ளியாகின்றது. (இந்து சமுத்திர அரசியலில்).
இப்பின்னணியிலேயே அடுத்துவரும் வாரங்களில் தமிழ் தலைவர்கள் மோடியை சந்திக்கவுள்ளனர் என்ற அதிரடி செய்தியை தமிழ்வின் ஊடகமானது வெளிபடுத்தியது.
இச்செய்தியின் உண்மை தன்மையானது சற்றே கேள்விக்குரியானதுதான். ஏனெனில், மேற்படி செய்தியை, தமிழ்வின் தவிர, வேறு எந்த ஓர் ஊடகமும் பிரசுரித்ததாய் தெரியவில்லை. இது போன்றே, இச்செய்தியானது, இலங்கை அரசாலோ அல்லது இந்திய அரசாலோ அல்லது இந்திய ஊடகங்களினாயோ உறுதிப்படுத்தப்படவில்லை. அதாவது, சில காலத்தின் முன் எமது விக்னேஷ்வரன் ஐயா அவர்கள் மோடியை சந்திக்க விருப்பம் தெரிவித்து கடிதமெழுதியப்போது, இக்கடிதமானது, மோடியின் கைகளுக்கு கிட்டாமல் எங்கேயோ தேங்கி கிடப்பதாக செய்திகள் வெளிவந்திருந்தன. இந்நிலையில், மோடியை சந்திக்கவுள்ளனர் என தமிழ்தலைவர்கள் மீண்டும் ஒரு கடிதத்தை எழுதி அல்லது ஒரு வேண்டுதலை நடத்தி, அவ்வேண்டுதலானது இந்தியாவால் நிராகரிக்கப்படும் பட்சத்தில், இந்தியாவுக்கும் தமிழ்கட்சிகளுக்கும் இடையிலான உறவு முறிந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.
அதாவது இச்செய்தி ஊடாக ஓர் உறவினை முறிக்கும் நடைமுறையொன்று உள்ளடங்கி இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமென்றாகின்றது. ஆக இச்செய்தியினை வெளியிட துண்டுதல் அளித்தது மேற்கா அல்லது சர்வதேசமா அல்லது இலங்கை அரசா என்பதே தற்போதைய கேள்வியாகின்றது. வேறு வார்த்தைகளில் கூறினால் இச்செய்தியின் வெளிப்பாடு என்பது நகர்வுகளின் ஒரு பகுதியாக உள்ளதா என்பதே கேள்வியாகின்றது. தெளிவாக கூறுவோமானால், மோடியை “சந்திக்கவுள்ளோம்” என ஒருதலைப் பட்சமாக, குரல் எழுப்புவது, தேவையற்ற ஒன்றாகவும், ஏமாற்றத்தையும் நிராசையையும் இரு பாலரிடையும் ஏற்படுத்தி, ஒருவித பகைமை உணர்வின் ஈற்றில் கொண்டுவரக்கூடியது என்பதில் ஐயமில்லை. இக்காரணத்தினாலேயே மேற்படி செய்தியானது திட்டமிட்டு வெளியிட்டப்பட்டதா, இல்லையா என சந்தேகம் கொள்ளவும் வைக்கின்றது.
இதேவேளை, இந்தியாவுடனான எம் உறவு அற்புதமாய் இருக்கிறது என்று ரணில் தரப்பால் செய்திகள் நாளும் வெளிவந்ததாய் உள்ளன. ஊதாரணமாக, ஜெய்சங்கரை ரணில் அவுஸ்ரேலியாவில், ஏழாவது இந்து சமுத்திர மாநாட்டின் போதுசந்திப்பார் என்றும், தனது உரையின் போது இந்தியாவுடன் தரைவழித் தொடர்பு சாத்தியக்கூறுகள் அமைப்பதுக்குறித்து இலங்கை ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.(தினக்குரல்: 11.02.2024)
இச்செய்தியும் அநேக சந்தேகங்களை எழுப்பக்கூடியதாகவுள்ளது. ஏனெனில் அமைச்சர் நிமல் சிறிபால ஊடாக, அம்புலன்ஸ் விமானங்களை (மார்ச் ஒன்று முதல்) தந்துதவ இலங்கை தயாராகவுள்ளது என அறிவித்துள்ள என்பதும் நாகப்பட்டின கப்பல் சேவையானது கிடப்பில் போடப்பட்டுள்ளது என்ற பின்னணியல் மேற்படி செய்தி ஆராயத்தக்கது. அதாவது இந்திய உல்லாசப்பயணிகள், மாலைத்தீவை விடுத்து இலங்கை நோக்கி படையெடுத்துள்ளனர் என்பதும் இலங்கை மாலைத்தீவு உறவானது அண்மைக்காலங்களில் ஓர் அற்புதமாக உள்ளது என்பதும் அம்புலன்ஸ் விமான செய்திகளுக்கு முரணான பொய்மைகளை உள்ளடக்குவதாகவேபடுகின்றது. ஆனால் இந்நகர்வுகளின் பின்னணியில் இருக்கும் கரங்கள் யாருடையது என்பதும், இந்நகர்வுகளானது எத்தனை வேகத்துடன் நடந்தேறுகின்றது என்பதும் சுவாரஸ்யமானதாகத்தான் இருக்கின்றது.
இது போன்றே ஜேவிபியினரின் இந்திய விஜயம் குறித்த செய்திகளும் திரிபுபடுத்தப்பட்டவையாகவும் விஷமத்தன்மை நிறைந்ததாகவும் தமிழ் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் அடுத்தடுத்ததாய் வெளிவந்து கொண்டிருப்பதை சுட்டிக்காட்டாமல் இருக்கமுடியாது. ஜேவிபியரினரின் இந்திய விஜயமானது இராஜதந்திர ரீதியானது அல்ல என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல கூறியுள்ள மறுநாள் ஜனாதிபதியின் ஆசிர்வாதத்துடன்தான் ஜேவிபி இந்தியா சென்றதாக அமைச்சர் விஜேயதாச ராஜபாக்ஷ ஒரு போடு போட்டார். ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்த ஜேவிபி எம்பி ஹரிணி அமரசூரிய தனது பாராளுமன்ற உரையின் போது, ஜேவிபி இந்தியா செல்ல ஜனாதிபதி காரணமல்ல என்ற விடயத்தை போட்டுடைத்தார்.(தினக்குரல்: 7ம்,8ம் திகதி முன்;பக்க செய்திகள்)
இதேவேளை இந்தியாவானது ஜெய்சங்கர் மூலமாக, மூன்று கோரிக்கைகள் ஜேவிபியிடம் முன்வைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன.(தினக்குரல்: 07.02.2024) ஜேவிபினரின், உள்ளக தகவல்களை மேற்கோள் காட்டும், குறித்த தினக்குரலின் செய்தியானது விஷமத்தனம் மிகுந்தது என்பதில் ஐயமில்லை. காரணம் குறித்த பரிந்துரைகள் வருமாறு என்று மேற்படி பத்திரிகை செய்தி அட்டவணைப்படுத்தி இருந்தது.
1. கச்சைத்தீவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்.
2. வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபை முறையை நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்.
3. தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே பாலம் அமைக்கப்படல் வேண்டும்.
இப்பரிந்துரைகளை ஜெய்சங்கர் ஜேவிபியிடம் கூறி இருப்பதாக அச்செய்தியானது மேலும் கூறிநிற்கிறது. (தினக்குரல் 07.02.2024)
இதனை இந்தியாவோ அல்லது ஜேவிபியோ இதனை இதுவரை உறுதி செய்ததாக இல்லை. இச்சூழலில்தான், அதாவது, மேற்படி ஜேவிபி விரோத செய்திகள் ஏன் தொடர்ச்சியாக வருகின்றன என்ற பின்னணியில்தான், திரு.யோதிலிங்கத்தின் ஜேவிபி குறித்த வரைவிலக்கணம் மீள நினைவூட்டி கொள்ளத்தக்கதாகின்றது.
“பெருந்தேசியவாதமானது, மேற்குலக எதிர்ப்பு - இந்திய எதிர்ப்பு – தமிழீழ எதிர்ப்பு ஆகிய மூன்று தூண்களில்தான் கட்டப்பட்டுள்ளது. இன்றைய நிலையில் இந்த மூன்று தூண்களையும் இணைக்கக்கூடிய தரப்பு ஜேவிபிதான்” (வீரகேசரி 31.01.2024)
இப்பின்னணியிலேயேதான், ரணிலின் தரைவழி தொடர்பு யோசணையும், இந்தியாவின் மாலைதீவு தொடர்பிலான கையாளுகையும், இலங்கை சுதந்திர தினத்தில் இந்தியாவின் பகிஷ்கரிப்பும், “அண்டை வீடே எமக்கு தலையானது” என்ற இந்தியாவின் நிலைப்பாடும், மோடி காலார நடந்து திரிவதும், ஜேவிபியினரின் இந்திய வரவேற்பும் எமது அரசியலை தீர்மானிக்க வேண்டி உள்ளது.
அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, பகைவர்களும் இல்லை என கூறுவர். உண்மையாக இருக்கலாம். முக்கியமானது, நிரந்தரம் என்ற சொற்பாவிப்பேயாகும். குறித்த தருணத்தின் நண்பன் யார், பகைவன் யார் என உணர்வது கூரிய சாணக்கியம் சார்ந்தது. ஆனால் கனவில் மிதக்கும்; கற்பணையாளர்களுக்கு, குறித்த கணத்தி;ன் விதிகளை உள்வாங்குதல் என்பது மொத்தத்தில் சாத்தியப்பட போகின்றதா என்பது வேறு கேள்வி – அதிலும் இவர்களின் கனவானது, தீவிர புலம்பெயர் அரசியலால் ஊக்குவிக்கப்படும.; போது இப்புள்ளியிலேயே, இன்றைய ஜேவிபியும் நேற்றைய தமிழ் அரசியலும் வித்தியாசப்படலாம்.
மறுபுறத்தில், இந்து சமுத்திர ஏழாவது மாநாட்டில் உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க, இந்து சமுத்திரத்தில், காஸாவை காரணம் காட்டி, அமெரிக்காவை இழுத்துவிட்டது, தற்செயல் நிகழ்வு அல்ல இங்கேயே இந்தியாவை ஒரு கட்டுக்குள் கொண்டு வரும் அன்னாரின் ஆர்வமும், அன்னாரின் அரசியலின் எதிர்காலம் குறித்த கேள்விகளும் உள்ளடங்குதல் சகஜம் என கருத இடமுண்டு.
ஆக, ஜேவிபியினரை கபளீகரம் செய்யும் ரணிலின் தி;ட்டமும் (சர்வதேசத்துடன் இணைந்து), இந்தியாவை கட்டுக்குள் கொணர்ந்து சேர்க்கும் ரணில்-சர்வதேசத்தின் திட்டமும், இன்று இந்தியா - ஜேவிபியினரை கைகோர்க்க செய்திருக்கலாம் இக்கூட்டில், தமிழ் தேசியத்தின் பங்குயாதாக இருக்கப்போகின்றது என்பதே இன்றைய கேள்வியாகின்றது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.