- இன்று பெப்ருவரி 3 'உங்கள் குழந்தையை நூலகத்து அழைத்துச் செல்லுங்கள் தினம்' (Take Your Child to the Library Day). அதனையொட்டி எழுதப்பட்ட கட்டுரை. -
உணர்வுகளை அடையாளம்காண்பதற்கும், அவற்றை விளங்கிக்கொள்வதற்கும், தகுந்த முறையில் அவற்றைக் கையாள்வதற்குமான திறன், உணர்வுசார் நுண்ணறிவு எனப்படுகிறது. இது எம்மைச் சூழவுள்ளவர்களுடன் வினைத்திறனாகத் தொடர்புகொள்வதற்கும், எமக்கும் அவர்களுக்கும் இடையேயுள்ள முரண்பாடுகளைத் தீர்த்துக்கொள்வதற்கும், எமது மனத்தகைப்பைக் குறைப்பதற்கும் உதவிசெய்கிறது.
வாழ்க்கைக்கு அவசியமான இந்த உணர்வுசார் நுண்ணறிவைப் பயிற்சியின் மூலம் நாம் வளர்த்துக் கொள்ளமுடியும். உணர்வுசார் நுண்ணறிவு அதிகமாக இருக்கும்போது, நாம் செய்யும் வேலையைச் சிறப்பாகச் செய்யவும், எமது உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கவும், உறவுகளை நல்ல முறையில் பேணவும் அது உதவும்.
எமது தனிப்பட்ட வாழ்க்கையிலோ அல்லது வேலையிலோ உணர்வுசார் நுண்ணறிவு அதிகமாகவிருக்கும் ஒரு சிலரையாவது நாம் சந்தித்திருப்போம். எந்த நிலைமையிலும் எம்மை எரிச்சலூட்டாமல் அல்லது புண்படுத்தாமல் எதை, எப்படிச் சொல்ல வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கும். அத்துடன், தமது பலத்தையும் பலவீனத்தையும் அறிந்திருக்கும் அவர்களால், கண்டனங்களை ஏற்றுக்கொள்ளவும், பிரச்சினைகளை இனம்கண்டு அவற்றுக்கான தீர்வுகளை, அமைதியான முறையில் காணக்கூடியதாகவும் இருக்கும். எமது பிரச்சினைகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது, தீர்வொன்றைக் காண்பதற்கு அது உதவாமல் போனாலும்கூட, எம்மில் அவர்கள் காட்டும் கரிசனை எமக்கு ஆறுதலைத் தரும்.
எம்மிடம் அப்படியானதொரு திறன் இல்லாவிட்டாலும்கூட, அதைக் கொண்டிருக்கும் ஒருவராக எமது பிள்ளைகளை வளர்த்தெடுப்பதற்கு நாம் முயற்சிக்க வேண்டும். எப்போது தமக்கு மனத்தகைப்பு வருகின்றது, அதற்கு எவ்வகையான பிரதிபலிப்பைக் காட்டலாம், மனத்தகைப்பை எவ்வாறு குறைக்கலாம் என்றெல்லாம் பிள்ளைகள் கற்றுக்கொள்வது அவசியம். அவர்களின் பயத்தை, கோபத்தை, துக்கத்தைக் காட்டுவதற்கு வழியின்றி அவர்கள் அடக்கப்படக்கூடாது.
மேலும், பிள்ளைகளின் உணர்வுகளை அசட்டை செய்யாமல், அவற்றைக் குறைத்து மதிப்பிடாமல் நாம் இருப்பது முக்கியம். பிள்ளைகளின் உணர்வுகளை நாம் அங்கீகரிப்பதும், அவற்றைப் பற்றி அவர்களுடன் கதைப்பதும், வளர்ந்த பின்னரும் எந்தப் பிரச்சினை பற்றியும் எம்முடன் கதைக்கலாமென்ற மனோபாவத்தை அவர்களுக்குள் வளர்க்கும்.
அப்படியாகப் பிள்ளைகளின் உணர்வுப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசும்போது, நாமே தீர்வு சொல்லாது, அந்தப் பிரச்சினையை எப்படித் தீர்க்கலாமென அவர்கள் சிந்திப்பதற்கு வழிகாட்ட வேண்டும். மேலும், குறித்த உணர்வை அவர்கள் கையாளுவதற்கு உதவும் வகையில் நாம் ஒரு முன்மாதிரியாக இருக்க முயற்சித்தல் அவசியம். உதாரணத்துக்கு எமக்கொரு பிரச்சினை வரும்போது அதைத் தீர்ப்பதற்கு என்ன செய்யலாமென பிள்ளைகளுக்கும் தெரியத்தக்கதாக நாம் சிந்திக்கலாம். அவ்வாறே நாம் ஏதாவது பிழைவிட்டால் பிள்ளைகளிடம் அதற்காக மன்னிப்புக் கேட்கவேண்டும். அந்தச் செய்கை அவர்களின் உணர்வுகளுக்கு ஒத்தடம் கொடுப்பதுடன், மன்னிப்புக் கேட்கும் இயல்பை அவர்களில் வளர்க்கவும் வழிசெய்யும்.
உணர்வுசார் நுண்ணறிவை வளர்ப்பதற்கு மிகச் சிறந்ததொரு வழியாக வாசிப்புப் பழக்கத்தை விருத்திசெய்தல் உள்ளது. நிஜ வாழ்வைப் பிரதிபலிக்கும் வெவ்வேறுபட்ட மனிதர்களையும், அவர்களுடைய அனுபவங்களையும் பிள்ளைகளுக்குப் புத்தகங்கள் காட்டுகின்றன. அத்துடன், மற்றவர்கள் எதை நினைக்கிறார்கள் என்பதையும், எப்படி உணர்கிறார்கள் என்பதையும் அவை விளங்கவைப்பதுடன், குறித்த விடயம் பற்றிய வேறுபட்ட பார்வைகளையும் காட்டுகின்றன. கதையில் வரும் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் பிள்ளைகள் இனம்காண முயற்சிக்கும்போது, தம்மைச் சூழவுள்ளவர்களினது உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் மட்டுமன்றி, தங்களுடைய உணர்வுகளையும் உணர்ச்சிகளையும்கூட சிறப்பாக விளங்கிக் கொள்ளும் சந்தர்ப்பம் அவர்களுக்குக் கிடைக்கும். மேலும், தம் உள்ளக்கிடக்கை எப்படி வெளிக்காட்டலாம் என்பதையும் அவர்கள் கற்றுக் கொள்வார்கள்.
அத்துடன், ஏற்றுக்கொள்ளக்கூடிய நடத்தை எது, ஏற்றுக்கொள்ளப்படமுடியாத நடத்தை எது என்பவற்றை உணரவைப்பதுடன், உறவுகளில் இருக்கும் முரண்பாடுகள், குழப்பங்கள், பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அல்லது அவற்றின் விளைவுகளிலான செயல்களுக்கான பின்விளைவுகளையும் கதைகள் பொதுவில் சொல்கின்றன. இது பிள்ளைகளுடைய வாழ்வில் நடக்கும் அதே மாதிரியான பிரச்சனைகளைக் கையாளக் கூடிய உத்தி முறைகள் பற்றியதோர் அறிவை அவர்களுக்கு வழங்குகின்றது.
தாம் எப்படி உணர்கிறோம் என்பதைச் சொல்லத்தெரியாத, தம் உணர்வுகளைக் காட்டத் தெரியாத பிள்ளைகளே, தலையிடி, வயிற்றுக்குத்து போன்ற உடல்ரீதியான பிரச்சினைகளுக்கு அடிக்கடி உள்ளாகுகிறார்கள்.
பிள்ளை ஒருவருக்கு குறித்ததொரு உணர்வு/உணர்ச்சி தொடர்பான பிரச்சனை இருந்தால் அதைப் பற்றி அந்தப் பிள்ளையுடன் நேரடியாகக் கதைப்பதிலும் பார்க்க, அது சம்பந்தமான புத்தகம் ஒன்றை வாசிக்கக் கொடுத்த பின்னர், புத்தகத்திலுள்ள கதாபாத்திரங்களுக்கூடாகக் கதைப்பது பிரச்சனையைக் கையாளுவதை இலகுவாக்கலாம்.
சில ஆரம்ப நிலைப் புத்தக தலையங்களுக்கான உதாரணங்கள்”
I am mad, I am Frustrated, When Sophie gets angry, I want it.
வாசிப்பு, பிள்ளைகளும் நாமும் ஒருவரோடு ஒருவர் நெருக்கமாக இருக்கவும், சிறப்பாகத் தொடர்பாடவும் உதவுவதுடன், ஒருவரை ஒருவர் விளங்கிக்கொள்ளவும், நல்லவற்றை மெச்சுவதற்கும்கூட கற்பிக்கின்றது. எனவே புத்தகங்களிலும் வாசிப்பிலுமான காதலை வளர்ப்பதன் மூலம் உணர்வுரீதியான நுண்ணறிவை வளர்ப்போம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
.