பிள்ளைவளர்ப்பு என்பது ஒரு கலை, அதில் யாருமே பாண்டித்தியம் பெற்றுவிடமுடியாது என்பதுதான் யதார்த்தம். ஒவ்வொருவரும் அவரவரின் அறிவுக்கெட்டியவகையிலும், நம்பிக்கையின் அடிப்படையிலும் பிள்ளைகளை வளர்க்கிறார்கள். பெற்றோரியத்தில் இதுதான் சரியான வழியென்று ஒன்றில்லை என்பதுடன், ஒரு பிள்ளைக்குச் சரிவரும் உத்திகள் இன்னொரு பிள்ளைக்குச் சரிவர மாட்டாது என்பதாலோ என்னவோ பெற்றோரியம் தொடர்பாகக் கற்பதிலோ, அது பற்றிய புத்தகங்களை வாசிப்பதிலோ அதிகமானோர் ஆர்வம் காட்டுவதில்லை.
முன்பொரு காலத்தில் பிள்ளைவளர்ப்பு என்பது பெற்றோரினதும், உறவினரினதும் வழிகாட்டலில் அமைந்திருந்தது. இந்தக் காலத்தில், கூட்டுக்குடும்பமாகவும் இல்லாமல், அயலில் வாழ்பவர்களையும் அறிந்திராமல், தனித்துவாழும் பெற்றோருக்குத் தொழில்நுட்ப வளர்ச்சி கொடுக்கும் சவால்களுக்கும் பிள்ளைவளர்ப்பில் முகம்கொடுக்க வேண்டிய பிரச்சினை இருக்கிறது.
எங்களில் பலர் தண்டனையால் வழிநடத்தப்பட்டோம். அப்படிப் பயத்துடன் வளர்ந்ததால்தான் நாங்கள் நன்றாக வாழ்கிறோம் என்ற நம்பிக்கையில், எங்களில் சிலர் இப்போதும் அதற்கே வக்காலத்து வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். அது சட்டரீதியான பிரச்சினைகளுக்கும் குடும்பப் பிளவுகளுக்கும்கூட சிலவேளைகளில் காரணமாகிறது. அதேவேளையில், இப்போது பரவலாக வன்முறை ஏற்கத்தகாதது என்ற அறிவிருப்பதால், வேறு சிலர் பிள்ளைகளின் உடலும் மனமும் நோகாமல் அவர்களை வளர்க்கவேண்டுமெனப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்காகப் பிள்ளைகள் விரும்புவதையெல்லாம் எப்பாடுபட்டும் பூர்த்திசெய்ய வேண்டுமென்றும் நினைக்கிறார்கள்.
பிள்ளைகள் பிழையான வழியில் போகாமல் தடுக்கிறோமென நினைத்துக்கொண்டு அவர்களின் மனங்களையும் உடல்களையும் துன்புறுத்துவது, பிள்ளைகளின் வாழ்க்கையை எவ்வளவு பாதிக்குமோ, அதேயளவுக்கு பின்விளைவுகளுக்கு முகம்கொடுக்கவிடாமல் பிள்ளைகளைக் காப்பாற்றுவதும் அவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்குமென்பதை பெற்றோர் விளங்கிக்கொள்ள வேண்டும்.
மூளையிலுள்ள இரசாயனப் பொருள்களின் பற்றாக்குறை, பிறப்புரிமைக் காரணிகள் எனத் தற்கொலைக்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும்கூட, தோல்வியை, பொறுப்பை ஏற்றுவாழ்வதற்குப் பழகாமையும், விரும்பிய அனைத்தையும் பெறுவதற்குப் பழக்கப்பட்டமையும்கூட அதற்கான காரணங்களாக இருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். அவ்வாறே நன்மை, தீமைகளை ஆராய்ந்து தாமாக முடிவெடுக்கப் பழக்கப்படாத பிள்ளைகள் சூழலின் தூண்டல்களைக் கையாளத் தெரியாமல் கெட்ட பழக்கங்களைப் பழகிக்கொள்கின்றனர்.
பிள்ளைவளர்ப்பு முறையின் அடிப்படையில் பெற்றோரியத்தை நான்கு வகைகளாகப் பிரிக்கலாமென்கின்றனர் ஆய்வாளர்கள்.
Authoritarian பெற்றோர் - இவர்கள் மிகவும் கண்டிப்பானவர்கள். பிள்ளைகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காகக் கடுமையான விதிமுறைகளைப் பயன்படுத்துவார்கள், கட்டளையிடுவார்கள். பிள்ளைகளின் உணர்ச்சிகளைக் கருத்திலெடுக்கமாட்டார்கள். தாங்கள் சொல்வதே சட்டமென்பார்கள். இதனால் பிள்ளைகளின் மனநலம் மற்றும் சுயமதிப்புப் பாதிக்கப்படுவதுடன், பிள்ளைகளுக்கு எதையும் சுயமாக முடிவெடுக்கத் தெரியாமலிருக்கும். மேலும் தண்டனையிலிருந்து தப்புவதற்காக பொய்சொல்லப் பழகி பொய்பேசுவதில் வல்லவர்களாகவும் அவர்கள் மாறக்கூடும். அத்துடன், ஆக்ரோஷமானவர்களாக, அல்லது கூச்ச சுபாவமுள்ளவர்களாக அவர்கள் இருப்பார்கள்.
Authoritative பெற்றோர் - இவர்கள் பிள்ளைகளைப் பேணிவளர்ப்பவர்களாக, ஆதரவளிப்பவர்களாக, கண்காணிப்புள்ளவர்களாக, உறுதியான எல்லைகளை வகுப்பவர்களாக இருப்பார்கள். விதிமுறைகளை விளங்கப்படுத்தி, கலந்துரையாடி, காரணம் கற்பிப்பதன் மூலம் பிள்ளைகளின் நடத்தைகளைக் கட்டுப்படுத்துவார்கள். பிள்ளைகளின் உணர்ச்சிகளையும், அபிப்பிராயங்களையும் கருத்திலெடுப்பார்கள். இதனால் பிள்ளைகள் தன்னம்பிக்கை உள்ளவர்களாக, நன்னடத்தைமிக்கவர்களாக, சமூகத்துடன் நன்கு ஊடாடக்க்கூடியவர்களாக இருப்பார்கள்.
Permissive பெற்றோர் – இவர்கள் பிள்ளைகளுக்கு அதிக செல்லம் கொடுப்பவர்களாகவும், வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளைக் குறைந்தளவில் வழங்குபவர்களாகவும் இருப்பார்கள். பிள்ளைகளிடமிருந்து முதிர்ச்சியான நடத்தையை எதிர்பார்க்கவோ அவர்களின் நடத்தையைக் கட்டுப்படுத்தவோ மாட்டார்கள். பின்விளைவுகளை வழங்குவதில் உறுதியாக இருக்கமாட்டார்கள். பிள்ளைகள் என்றால் அப்படித்தான் என்ற கருத்தைக் கொண்டிருப்பார்கள். எனவே பிள்ளைகளுக்கு ஏற்றுக்கொள்ளமுடியாத நடத்தை எது என்ற அறிவு குறைவாகவே இருக்கும். இதனால் பிள்ளைகள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த மாட்டாதவர்களாகவும், நடத்தைச்சிக்கல்களைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
ஈடுபாடற்ற பெற்றோர் – இவர்கள் தங்களின் சொந்தத் தேவைகளுக்கே முன்னுரிமை கொடுப்பவர்களாக இருப்பார்கள். பிள்ளைகளின் அடைவுகள், ஆர்வங்கள் அல்லது செயல்பாடுகளில் சிறிதளவே ஆர்வத்தைக் காட்டுவார்கள் அல்லது ஆர்வமே காட்டமாட்டார்கள். பிள்ளைகளை ஊக்குவிக்கவும் மாட்டார்கள், அவர்கள் பங்குகொள்ளும் நிகழ்ச்சிகளுக்குச் செல்லவும் மாட்டார்கள். அத்துடன் அவர்களின் வீட்டில் விதிமுறைகள் எதுவும் இருக்கமாட்டாது. பிள்ளைகள் தானாக வளர்வார்கள் என்ற கோட்பாடு இவர்களிடம் இருக்கும். இதனால் பிள்ளைகள் சுயமதிப்பு மற்றும் தன்னம்பிக்கை குறைந்தவர்களாகவும் மற்றவர்களுடன் எவ்வாறு ஊடாடுவது என்பது தெரியாதவர்களாகவும் இருப்பார்கள்
இந்த நான்கு வகைப் பெற்றோரியத்தையும் மேலுள்ள படம் விளங்கப்படுத்துகிறது. ஒருவரின் பிள்ளைவளர்ப்பு முறையை இந்த நான்குக்குள் முழுமையாக அடக்கமுடியாது. மேலும், குறித்தவொரு வகைக்குள் ஒருவர் எப்போதும் இருப்பதும் சாத்தியமற்றது. எனினும், பெரும்பாலான நேரங்களில் ஒருவர் என்ன செய்கிறார் என்பதைப் பொறுத்து அவரின் பிள்ளைவளர்ப்பு முறையை அடையாளம்காண முடியும். ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்.
உங்களின் மகன் தனது கொம்பாசால் பக்கத்து வீட்டுக்காரரின் காரில் கதவு நீளத்துக்குக் கீறிவிட்டான், அப்படி அவன் சேதம் (vandalism) விளைவித்ததைப் பக்கத்து வீட்டுக்காரர் பார்த்தும் விட்டாரென வைத்துக்கொள்வோம். கொம்பாசால் கீறியிருக்கிறான் என்றால் நிச்சயமாக அவனுக்குப் பத்து வயதுக்கு மேலிருக்குமெனச் சொல்லலாம். இதற்கு எப்படி நீங்கள் எதிர்வினையாற்றுவீர்கள்?
மிகுந்த கோபத்துடன், மகனுக்குத் தண்டனை வழங்குவீர்களா?
அவன் செய்தது ஒரு குற்றமென்பதை அவனுக்கு விளங்கப்படுத்தி, அதற்கான பொறுப்பை அவன் ஏற்கவேண்டுமெனக் கூறி, பக்கத்து வீட்டுக்காரரிடம் மன்னிப்புக்குக் கேட்பது உள்ளடங்கலான அதற்கேற்ற பின்விளைவுகளை வழங்குவீர்களா?
“ஓ, நீ வேண்டுமென்று கீறவில்லைத்தானே, அழாதே செல்லம்,” என மகனை அணைத்துக் கொடுப்பதுடன், அந்தப் பிரச்சினையின் தாக்கத்திலிருந்து அவனைப் பாதுகாப்பீர்களா?
“நீ எதை வேண்டுமானாலும் செய்துகொள், நீயும் பக்கத்து வீட்டுக்காரரும் பட்டபாடு” என அசட்டையாக இருப்பீர்களா?
அண்மையில் நான் வாசித்த ஒரு கதையில் இப்படியாகச் சேதம் விளைவித்த ஒரு சிறுவனுடன் அது கண்டிக்கத்தக்க விடயமில்லை என்பதுபோல பெற்றோர் நடந்துகொள்கின்றனர். “பிள்ளை வேணுமெண்டே செய்தது. அழாதேங்கோ செல்லம்,” எனத் தாய் மகனை ஆறுதல்படுத்துகிறார். அதை அறிந்த அப்பா ஒரு கணம் சிலையாய் நின்றுவிட்டுச் பின் சிரிக்கிறார். அவர்களும் சிரிக்கிறார்கள் என்றும் அந்தக் கதையில் சொல்லப்படுகிறது. அதுவே இதை எழுதவேண்டுமென என்னைத் தூண்டியது.
இப்படியான கையாளல் எவ்வகைப் பெற்றோரியத்துக்குள் அடங்குமென நீங்கள் நினைக்கிறீர்கள்?
அவன் அப்படிக் கொம்பாசால் கீறியதுக்கு விரக்தி, கோபம், சலிப்பு என ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால், அந்தச் செயல் ஏற்கத்தகாதது என்பது பற்றிய உரையாடல் நிகழ்ந்திருக்க வேண்டும். தவறுக்கூடான கற்றல் அந்தப் பிள்ளைக்குக் கிடைத்திருக்க வேண்டும். பொறுப்பேற்றல் நடந்திருக்க வேண்டும். இல்லையா? பொறுப்பேற்றல் என்பது கற்றுக்கொள்ள வேண்டிய திறன். எதுவுமே அங்கு நிகழவில்லை.
சில பிள்ளைகளுக்கு தங்களின் உணர்ச்சிகளைத் தகுந்தமுறையில் வெளிப்படுத்தத் தெரிவதில்லை. அது கற்பிக்கப்பட வேண்டும். இப்படியான வன்செயல்கள் ADHD, Autism, Tourette's Syndrome போன்ற ஒழுங்கீனங்களின் அறிகுறியாகவும் இருக்கலாம். அப்படியாயின் பிள்ளைகளுக்குக் கவுன்சலிங் அவசியம். இல்லாவிடினும் மற்றோரையும் அவர்களின் பொருள்களையும் மதிப்பதற்குப் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கவேண்டும். எனவே பிள்ளைகளை அன்புடனும் கனிவுடனும் அவர்களின் உணர்ச்சிகளைக் காயப்படுத்தாமல் வளர்க்கிறோமென நினைத்துப் பிள்ளைகளின் வாழ்க்கைக்குச் சேதம் விளைவிக்கிறோமா என நாங்கள் ஒவ்வொருவரும் எங்களைக் கேட்டுப்பார்ப்பது நல்லதெனலாம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>