இரண்டு முறை சாகித்தியப் பரிசு, பிரான்ஸ் வென்மேரி அறக்கட்டளையினரின் இலக்கியச் சாதனையாளர் விருது, தமிழ் இலக்கியத் தோட்டத்தினரின் வாழ்நாள் சாதனையாளர் விருது என வேறுபட்ட பல விருதுகளுக்குச் சொந்தக்காரராக இருக்கும் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் இலக்கிய உலகில் தனக்கென ஒரு முத்திரையை ஆழமாகப் பதித்திருக்கிறார்.
1972 இல், மல்லிகையில் பிரசுரமான ‘கனவுகள் ஆயிரம்’ என்ற சிறுகதையின் ஊடாக இலக்கிய உலகில் தடம்பதித்த அவர் அடுத்த மூன்று வருடத்துக்குள் குறித்த வருடத்தின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான சாகித்தியப் பரிசைத் தனதாக்கிக் கொண்டார் என்பதே அவரின் எழுத்தின் சிறப்பைக் கூறுவதற்குப் போதுமானது. அந்தக் கெளரவத்தை அவருக்குப் பெற்றுக்கொடுத்திருந்த ‘சுமையின் பங்காளிகள்’ என்ற அவரது முதலாவது சிறுகதைத் தொகுதி தற்போது ரொறன்ரோப் பல்கலைக்கழகத்தின் எண்ணிம நூலகத்திலும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
ஏழு சிறுகதைத் தொகுதிகள், பதினைந்து கட்டுரைத் தொகுதிகள், நாவல் மற்றும் சிறுவர் இலக்கியம், விமர்சனங்கள், நேர்காணல்கள் எனத் தன் பல்வேறு படைப்புக்களால் தமிழ் இலக்கிய உலகுக்கு மிகுந்த வளம் சேர்த்திருக்கும் முருகபூபதி அவர்கள் இலக்கிய உலகில் தான் மிளிர்வதுடன் மட்டும் நின்றுவிடவில்லை. சக எழுத்தாளர்களைப் பற்றிப் பரவலாக எல்லோரும் அறிந்திருக்க வேண்டுமென்ற முனைப்புடன் செயல்படும் ஒரு கருமவீரராகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரின் பரந்தமனப்பான்மையும், விரிவான வாசிப்பும், அபாரமான நினைவாற்றலும், மற்றவர்கள் பற்றிய கரிசனையும்தான் அதற்கு அடிப்படையெனலாம்.
நீர்கொழும்பில் பிறந்த முருகபூபதி அவர்கள் என்னுடைய பெற்றோரின் ஒரு மாணவர் என்பதிலும், நான் கற்ற ஒரு பாடசாலையில் படித்த ஒரு மாணவர் என்பதிலும் எனக்கு நிறைந்த பெருமை இருக்கிறது. 1985 இல், கொள்ளுப்பிட்டி மெதடிஸ்ற் கல்லூரியில் நான் ஆசிரியையாகப் பதவியேற்ற சில நாள்களில், ஒரு நாள் என்னைச் சந்திப்பதற்கு வீரகேசரியின் துணையாசிரியர் முருகபூபதி அவர்கள் வந்திருக்கிறார் என்று சொல்லப்பட்டபோது என்னால் அந்தச் செய்தியை நம்பவே முடியவில்லை. இதுவே எவ்வளவு தூரத்துக்கு அவர் மிகவும் எளிமையான ஒரு மனிதர் என்பதைக் காட்டப்போதுமானது.
அந்தச் சந்திப்பின் பின்னர், எங்களின் சுயலாபத்துக்காக அவரின் வீட்டுக்குப் பல தடவைகள் நாங்கள் சென்றிருக்கிறோம். விமானநிலையத்துக்கு அண்மையில் அவரின் வீடு இருந்தமையால் வெளிநாட்டிலிருந்து வருபவர்களை அழைக்கவோ அல்லது வழியனுப்பவோ போகும்போது அவர்களின் அன்பான உபசரிப்பை அனுபவித்திருக்கிறோம்.
அதன் பின்னர், துரதிஷ்டவசமாக எங்களில் பலரை எங்கெல்லாமோ சிதறடிக்க வைத்த எங்களின் நாட்டு நிலைமைகளால், இடைவிட்டுப்போன உறவுகளில் ஒன்றாக பூபதி அண்ணாவின் உறவும் மாறிப்போயிருந்தது. எனினும், உண்மையான அன்புக்கு அழிவில்லை என்பதற்கேற்ப, 2007 டிசம்பரில் அவர் ரொறன்ரோவுக்கு வந்திருந்தபோது எங்களின் உறவை நாங்கள் புதுப்பித்துக் கொண்டோம். அந்த நேரத்தில் நிகழ்ந்த அவருடனான உரையாடல்களும், அவர் CTBCக்கு வழங்கிய பேட்டியும் இலக்கிய உலகில் மீளவும் என்னை இணைத்துக் கொள்வதற்கான உத்வேகத்தை எனக்குத் தந்திருந்தன. அதன் விளைவாக அவரை நான் கண்ட பேட்டி கனடா உதயன் பத்திரிகையில் அன்று பிரசுரமாகியிருந்தது. பின்னர் ஞானம் சஞ்சிகையை அவர் எனக்கு அறிமுகப்படுத்தியிருந்தார். அதில், தினக்குரலில், மல்லிகையில் என் ஆக்கங்கள் பிரசுரிக்கப்படுவதற்கு அவரே ஓர் உந்துகோலாகவும் இருந்திருக்கிறார். அத்துடன், நீர்கொழும்பு விஜயரட்ணம் மகாவித்தியாலத்தின் நூற்றாண்டு மலர், சர்வதேச எழுத்தாளர் மலர் என அவரது பொறுப்பில் வெளிவந்தவற்றில் எல்லாம் என் எழுத்தும் இருக்கவேண்டுமென்பதை உறுதிப்படுத்தியிருந்தார். மேலும் என்னுடைய ஆக்கங்கள் அவரின் வாசிப்புக்கு உட்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அழைத்துப் பாராட்டவும், ஊக்கம் தரவும் அவர் என்றுமே தவறியதில்லை.
அவ்வாறே, மெல்பேர்னின் தமிழிலக்கிய கலைச் சங்கத்தின் ஊடாகப் பல்வேறு எழுத்தாளர்களினது எழுத்துக்கள் விமர்சனத்துள்ளாக்கப்பட்டு படைப்பாளர்களும் வாசகர்களும் பயன்பெறப் பெரிதும் உதவியிருக்கிறார். 2010ஆம் ஆண்டு இலங்கையில் சர்வதேச எழுத்தாளர் விழா ஒன்றினை ஒழுங்குசெய்து, அது திறம்பட நடப்பதற்கும் பெரும் பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.
‘திரும்பிப் பார்க்கின்றேன்’ என்ற அவரது தொடரில், பல்வேறு எழுத்தாளர்களைப் பற்றி எழுதிவந்த பூபதி அண்ணா, ‘நிழலாகத் தொடர்ந்துவரும் நினைவுகளில் ஸ்ரீரஞ்சனி’ என என்னைப் பற்றியும் விரிவாகவும் சிறப்பாகவும் எழுதியிருக்கிறார். ஜீவநதியின் ஈழத்துப் பெண் எழுத்தாளர்கள் சிறப்பிதழிலும், ‘நீர்கொழும்பிலிருந்து கனடா வரையில் தொடரும் உறவென’ என்னையும் என் கதைகளையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார். அதன் பின்னர் 28 பெண் ஆளுமைகள் பற்றி அவர் வெளியிட்டிருந்த மின்நூலிலும் நான் இடம்பெற்றிருப்பது என் பாக்கியமென்றே நான் நினைக்கிறேன்.
அவுஸ்ரேலியாவுக்கு வந்து உங்களைச் சந்திப்பேன் என அவர் ரொறன்ரோவிலிருந்து விடைபெறும்போது நான் கூறியிருந்தேன். அது 2022 இல் யதார்த்தமானபோது, என் ‘ஒன்றே வேறே’ என்ற சிறுகதைத் தொகுதிக்கான விமர்சனக் கூட்டங்களை மெல்பேர்னிலும், சிட்னியிலும் சிறப்பாக ஒழுங்குசெய்து என்னை மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தார், அத்துடன், ATBC வானொலி கானா பிரபா அவர்களும், SBS வானொலி ரேமண்ட் செல்வராஜா அவர்களும் என்னைப் பேட்டி காண்பதற்கான ஒழுங்குகளையும் செய்து என்னை ஆச்சரியப்படுத்தியிருந்தார். இப்படியாக, “இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்,” என நான் வியக்குமளவுக்கு அவர் என் முன்னேற்றத்தில் கரிசனையாக இருந்திருக்கிறார். என் கதைகள் பற்றிய அவரின் விமர்சனக் குறிப்பை ‘நான் நிழலானால்’ என்ற சிறுகதைத் தொகுதியிலும், என்னுடைய கட்டுரைகள் பற்றிய அவரின் கருத்துக்களை ‘பின்தொடரும் குரல்’ என்ற கட்டுரைத் தொகுதியிலும் சேர்த்து நான் மகிழ்ந்திருக்கிறேன்.
இலக்கியத்தில் மட்டுமன்றி, பல்வேறு தன்னார்வத் தொண்டுகளிலும் இவர் தன்னை அர்ப்பணித்திருக்கிறார். 1988 இல் இவர் ஆரம்பித்திருந்த ‘இலங்கை மாணவர் நிதியம்’ ஊடாகப் பல்வேறு ஏழை மாணவர்கள் தொடர்ந்து பயன்பெற்று வருகின்றனர். அதைவிடக் கஷ்டத்தில் இருக்கும் பல தனிப்பட்ட மனிதர்களின் வாழ்வு சிறப்பதற்காகவும் தன்னாலான பணிகளைச் செய்திருக்கிறார். இவ்வகையில், தனிப்பட்ட வாழ்வின் சவால்களை மேவி பலரும் பயன்பட வாழ்ந்துகொண்டிருக்கும் முருகபூபதி அவர்கள் இதுவரை சமூகத்துக்காக செய்த பணிகள் அளப்பரியவை. மிகவும் எளிமையாகவும், ஆர்வத்தைத் தூண்டும்வகையிலும் இருக்கும் அவரின் எழுத்துக்களைப் போலவே அவரின் ஆளுமையும், ஊடாட்டங்களும் இருப்பதை அவரை அறிந்த அனைவரும் அறிந்திருப்பர். இவ்வகையில் வையத்தில் அவர் வாழ்வாங்கு வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்றால் மிகையாது.
என் சகோதரகளைவிட மேலான அன்புடனும், அக்கறையுடனும் இருக்கும் பூபதி அண்ணாவின் வாழ்வு தொடர்ந்தும் இலக்கிய பணிகளாலும், சமூகப் பணிகளாலும் நிறைந்திருக்க வேண்டும். அவற்றின் மூலம் திருப்தியையும் மகிழ்ச்சியையும் அவர் பெற்றுக்கொள்வதற்காக விரைவில் அவர் குணமடைய வேண்டுமெனப் பிரபஞ்சத்தை நான் இறைஞ்சுகிறேன். அதேவேளையில், எழுத்துக்களால் எங்களை மகிழ்வித்தவரை எங்களின் எழுத்துக்களால் மகிழ்விக்கும் தார்மீகக் கடமையைச் செய்வதற்கு அவரின் அத்தனை இலக்கிய நண்பர்களும் முன்வருவார்கள் என எதிர்பார்க்கிறேன்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.