கொஞ்ச நாட்களாக அம்மாவில் சில மாறுதல்களை அவதானிக்கத் தொடங்கினேன். அந்த அவதானிப்பு என்னையும் மீறி வளர்ந்துகொண்டே போனது. அம்மா இப்போ இடையிடையே தன்பாட்டில் சிரிக்கிறார். தனது அலங்காரங்களில் அதிக அக்கறை செலுத்துகிறார். முன்பெல்லாம் நான் நினைவூட்டி நெருக்கும்போதுதான் தலைக்கு சாயம் தீட்டுவார். இப்போது மாதம் இரண்டு தடவை, சிலவேளைகளில் மூன்றுதடவையும் கூட நடக்கிறது. தொலைபேசி சத்தம் கேட்டால் அம்மா பரபரப்பாக ஓடுகிறார். கையில் என்ன வேலையாக இருந்தாலும் அதை அப்படியே போட்டுவிட்டு ஓடிவிடுகிறார். இரண்டு தடவைகள், சமைத்துக் கொண்டிருக்கும்போதும் இப்படி நடந்தது. சட்டி அடிப்பிடித்தது மட்டுமல்ல வீடெல்லாம் பெரும் புகை. பெரும் ஆபத்தில்கூட முடிந்திருக்கலாம்.
'அய்யய்யோ..ஏன் பிள்ளை நீ கொஞ்சம் பாத்திருக்கலாமல்லே...'
நான் என்னத்தைப் பாக்கிறது. நான் அம்மாவையே பார்த்துக்கொண்டு நின்றேன். அம்மா தன் உதட்டுக்குள் ஒரு புன்னகையோடு கறிச்சட்டடியை சரியை செய்யும் வேலையில் மூழ்கியிருந்தார். இந்த அமளியிலும் கூட அம்மாவின் மூளை எங்கெங்கோ அலைந்து திரிந்ததை என்னால் அவதானிக்கமுடிந்தது.
பேரப்பிள்ளைகளுடன்கூட செலவழிக்கும் அம்மாவின் நேரம் குறைந்து விட்டது. சிலவேளைகளில் சினந்து விழுகிறார். அல்லது தூக்கிவைத்து அளவுக்கதிகமாக செல்லம் பொழிகிறார்
அம்மாவின் இந்த மாற்றத்தை என்னுடைய கணவருடன் பகிர்ந்துகொண்டபோது அவர் என்னை முறைத்தார். எதுவும் பேசவில்லை. எனக்குப் பயமாக இருந்தது. அக்காவுடன் தொலைபேசியில் பேசினேன். அக்கா ஏற்கனவே தன் குடும்பத்தகராறில் மூழ்கிக்கிடப்பவள்.
'போடி விசரி' என்று என்னைத் திட்டினாள். அண்ணாவுடன் நான் எதையும் பேசமுடியாது. அவன் என் வயசையும் பார்க்காது சிலவேளை எனக்கு கைநீட்டியும் விடுவான். அம்மாவுடன் பேசலாம் என்றால், எப்படிப் பேசுவது? அது சிலவேளை அம்மாவை காயப்படுத்தியும் விடலாம்.
எனக்கு மூன்று வயதாக இருக்கும்போது அப்பா இறந்துவிட்டார். அப்போது அம்மாவுக்கு வயது முப்பத்தியெட்டு. தனியாளாக நின்று எங்களை ஆளாக்க எவ்வளவு கஸ்ரப்பட்டிருப்பார். சந்தோசம் என்றாலே என்ன என்று தெரியாத அளவுக்கு அம்மாவின் காலம் கடந்திருக்கும். நாங்கள் திருமணமாகி ஒரு நிலைக்கு வந்தபின்னர்தான் அம்மாவின் முகத்தில் புன்னகை பூத்திருக்கும். பேரப்பிள்ளைகள் அம்மாவுக்குப் பெரும் வரம்.
கடந்த ஆண்டு, அம்மாவின் பாடசாலை பழையமாணவர் ஒன்றுகூடலுக்கு அம்மாவையும் அழைத்தார்கள். அம்மா தொடுகிலும் மாட்டேன் என்றே அடம்பிடித்தார். அங்க போனால் தேவையில்லாத கதைகள் வரும். தேவையில்லாத கதைகள் கிளறுப்படும். எல்லாரும் குடும்பமாக வர நான் தனியப்போறது அவ்வளவு நல்லா இருக்காது என்று காரணங்களை அடுக்கிக்கொண்டே போனார்.
நான் விடாப்பிடியாக நின்றேன். 'பாடசாலைக் காலங்கள் எவ்வளவு இனிமையானவை. ஏன் அதை மீட்டிப் பார்க்கக்கூடாது. அறுபது வயது என்ன வயதா? இனிதான் வாழவேண்டிய வயது. வாழப்போகும் ஒவ்வொரு மணித்துளிகளையும் மகிழ்ச்சியாக கழிக்கவேணும். நீங்கள் சந்தோசமாக போயிற்று வாங்கோ' என்று நாங்கள் காரில் கொண்டுபோய் இறக்கிவிட்டு வந்தோம். திரும்பி வரும்போது அம்மா தன் நண்பரின் காரில் வந்திறங்கினார்.
அதன் பிற்பாடு அம்மா தொலைபேசியில் மூழ்கிக்கிடந்தார்.
தன்னுடைய நண்பர்கள் பற்றி அம்மா சிலாகிக்கும்போது சிவகலா என்பவர்பற்றிய சிலாகிப்பு சற்று மிகையாகவே இருந்தது. மெது மெதுவாக தன் பளளிக் கதைகளை தன்னையறியாமலே அம்மா என்னிடம் கசியவிட்டார். அதிலிருந்து ஒரு முக்கிய புள்ளியை ஊகிப்பது எனக்கு அவ்வளவு சிரமமாக இருக்கவில்லை. பள்ளிக்காதல் படலை வரை மட்டுமென்று ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் என்னுடைய அப்பம்மா சொன்னது நினைவில் வந்து போனது.
எனக்குப் புதினம் அறியும் ஆவல் அதிகரித்தது. நான் 'பிறகு...பிறகு...பேந்து..'என்று சிரித்துச் சிரித்துக் கேட்டேன். அம்மா வெட்கப்பட்டார்.
'சும்மா போடி' என்று என்னைச் செல்லமாக இடித்தார்.
வெட்கத்தைப்பார். ஓ! இந்த வயதிலும் வெட்கம் வருமா? எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
அம்மா கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவை கன்னா பின்னா என்றிருந்தன. ஆனாலும் மகிழ்வூட்டும் பல சொற்கள் கவிதைகளில் தெறித்தன.
அம்மா சந்தோசமாக இருப்பது எனக்கு மகிழ்வாய் இருந்தாலும், எங்கேயோ ஏதோ என் மனதுக்குள் இடறிக்கொண்டேயிருந்தது.
ஒருநாள் அம்மா தன் நண்பரை வீட்டுக்கு அழைத்திருந்தார். வந்தவரை சிவகலா மாமா என்று எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் தலையில் முடியேதும் இருக்கவில்லை. ஆனாலும் வாட்டசாட்டமாக இருந்தார். அவர் எல்லோருடனும் அதிகம்பேசும் பேர்வழியாக இருக்கவில்லை. என்னிடம் பழகுவதற்குகூட சற்று கூச்சப்பட்டதை அவதானிக்கமுடிந்தது. விலை உயர்ந்த கார் வைத்திருந்தார். வரும்போது பெரிய பூங்கொத்துடனும், ஒரு பெரிய சொக்லேற் பெட்டியுடனும் வந்தார்.
பின்னர் அடிக்கடி வீட்டுக்கு வந்துபோனார். என்னுடைய கணவருக்கு இது அவ்வளாகப் பிடிக்கவில்லை. நான் ஒரு ஐரோப்பிப் பெண்ணாக இருந்திருந்தால் இலகுவாகக் கடந்திருப்பேன். அம்மாவின் மகிழ்சியை எண்ணிப் பூரிப்டைந்திருப்பேன். இன்னும் அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள்! என்ன சொல்வார்கள்! என்று குழம்பியிருக்மாட்டேன். இப்போது அடுத்தவர் பற்றிய வீணான எண்ணங்கள் என் மூளையை நிரப்புகின்றன. சரி, நான் என்னைச் சரி செய்து கொள்ள முயற்சிக்கலாம். முயற்சித்தாலும் என் கணவரை நினைக்க பயம் என்னை இறுகப்பற்றிக் கொண்டே வந்தது. அவரும் ஐரோப்பிய நாடொன்றில் வாழ்ந்தாலும் என் அளவிற்குகூட அவரால் மாறமுடியவில்லை. அவர் இன்னும் அதிகமாக எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிப் பயந்தார்.
என்னுடைய பிறந்த நாளுக்கு சிவகலா மாமா மடிக்கணினி ஒன்றைப் பரிசளித்தார். அது எனக்கு தேவையில்லாத ஒன்றாகவே பட்டது. என் கணவர் அதை ஒரு அருவெருப்பான தீண்டத்தகாத பொருளாகவே பார்த்தார். அது வீட்டின் ஒரு மூலையில் அனாதரவாகக் கிடந்தது.
அம்மாவின் கணினி வைரஸ் பிரச்சினையால் இடறுப்பட்டது. அது பாவிக்கச் சிரமமானதும் பழையதுமான ஒன்று. இனி, அதைத் திருத்திக் கொடுக்குமாறு என் கணவரிடம் கேட்கவும் தயக்கமாக இருந்தது. சிவகலா மாமா தந்த கணினியை அம்மாவிடம் கொடுத்தேன். அம்மா மிக ஆவலோடு வாங்கி பாவிக்கத் தொடங்கினார். அந்தக்கணினி அம்மாவுக்கு பல புதியபுதிய விசயங்களை கற்பித்தது. அம்மாவும் ஆர்வமாய்க் கற்றுக் கொண்டிருந்தார்.
எதிர்பாராத ஒரு மாலைப்பொழுது. சிவகலா மாமா வீட்டுக்கு வந்தார். அம்மா சிரித்த முகத்தோடு 'வாங்கோ' என்றார். என் கணவர் என்னை 'வாரும் வெளியே போவம்' என்றார். எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. இருந்தாலும், நான் சற்றுத் தாமதமாக்கிக் கிளம்பினேன் . அம்மா என்னை ஒரு மாதிரிப் பார்த்தார். நான் சிரித்துச் சமாளித்தேன். போகும் போது என் கணவர் கதவை அடித்துச் சாத்தினார். நான் திடுக்கிட்டேன். நிலைமையச் சமாளிக்க நான் கதவைத் திரும்பத் திறந்து சாத்தினேன். சாத்தும்போது, 'வெளியில சரியான காத்து' என்று இல்லாத காற்றை வரவழைத்தேன். அம்மா சிரித்தார். அப்பாடா! என்றிருந்தது.
நடக்கும்போது 'என்னப்பா கொஞ்சமும் 'மனேஸ்' இல்லாமல் நடந்து கொள்றியள்' என்றேன். அப்போதும் அவர் முறைத்தார். நிலைமையை உணர்ந்து நான் மௌனமானேன்.
'வேற வீடு பாக்கிறன்' என்றார்.
நான் எதுவும் பேசவில்லை.
'கிட்டவாத்தான் பாக்கிறன். இந்த ஏரியா சரியான விலையா இருக்கு'என்றார்.
'அப்ப அம்மா?'
'இது அவான்ர வீடு. அவ என்னவும் செய்யட்டும்'
'வயசான நேரத்தில என்னண்டு...தனிய விட்டிட்டு....' நான் இழுத்தேன்.
'அவ வயசு போன மாதிரியே நடந்து கொள்றா?' கடுமையானார்.
நாங்கள் அருகிலுள்ள பார்க்கில் போய் அமர்ந்தோம்.
பூமரத்து இலைகள் வாடிக்கிடந்தன. வாடிக் கருகிக்கிடக்கும் இலைகளுக்குள்ளும் ஒரு துளிர் மட்டும் எப்படி?
'கொஞ்சம் தள்ளிப்போகலாம். பிறகு வேலைதூரம். பிள்ளைகளுக்கு பள்ளிகுடமும் சிக்கலாப்போகிடும்' என்று மௌனத்தை அவரே உடைத்தார்.
'கொஞ்சம் அமைதியாகுங்கோப்பா. இப்ப என்ன அவசரம்?'
அவர் அமைதியாகினார்.
'அம்மாவின்ர முடிவு, அது அவவின்ர சுதந்திரம்.' இப்போ குரலை அமைதியாக்கி ஆனால் அழுத்தினார்.
'இப்ப அவ என்ன முடிவு எடுத்துப்போட்டா? ஒரு ஆணும் பெண்ணும் நட்பாய் இருக்கிறது தப்பா?
'ஒரு தப்பும் இல்லை. எல்லை தாண்டாமல் இருக்கிறது முக்கியம்'
'எது எல்லை?'
'வயதுகள் தாண்டின பிறகும்கூட சபலம் ஏற்படுறது இயல்புதான். ஆனால், அடுத்தவைக்கு பாதிப்பில்லாமல் நடந்துகொள்ளவேணும்.'
'இப்ப ஆருக்கு பாதிப்பு? ஊருலகம் என்னவும் கதைக்கட்டும். அதைப்பற்றி நான் கவலைப்படேல்லை'
'உமக்குத் தெரியுமா? சிவகலாவின்ர குடும்பத்துக்க என்ன நடக்குது என்று'
உண்மையிலேயே எனக்கு எதுவும் தெரியவில்லை.
'என்னப்பா அங்க என்ன நடக்குது?' பதகளிப்பட்டேன்.
'சிவகலாவின்ர மனிசி ஒரு ஒரு அப்பாவி. அழுது வடிக்குது. ரெலிபோனில எடுத்து எனக்கு முறைப்பாடு வைக்குது'
'என்ன? உங்களோட கதைச்சவவோ?'
'ஓ! என்னோடதான். எனக்குச் சீ எண்டு போச்சு. பிள்ளையள் சிவகலாவோட கதைக்கிறேல்ல'
இதற்கு மேல் எனக்கு எதுவும் கதைக்கத் தோன்றவில்லை. கதைக்க முடியவுமில்லை.
o
நாங்கள் வீடுதிரும்பியபோது சிவகலாவும் வீட்டிலிருக்கவில்லை. அம்மா உற்சாகமாக கணினியில் ஏதோ செய்து கொண்டிருந்தார்.
இரவு என்னால் சரியாக சாப்பிடவும் முடியவில்லை. நித்திரையும் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தேன்.
அம்மாவிடம் இதை எப்படி நான் வெளிப்படையாகப் பேசுவது? வீடு பார்க்கிறோம் என்று தெரிந்தாலே அம்மா உடைந்து போய்விடுவார். எப்படியோ சொல்லித்தானே ஆகவேண்டும். சிவகலா மாமாவின் தொடர்பை துண்டித்துவிடும்படி கேட்கலாம்!
ஏன் கேட்கக்கூடாது?
ஏன் கேட்க வேண்டும்?
இன்னொரு குடும்பம் பாதிக்கப்படுகிறது என்ற காரணத்தை முன்வைத்துக் கேட்கலாம்!
அது கூட இன்னொருவர் வாழ்க்கைக்குள் அத்துமீறி தலையிடுவது போல் ஆகிவிடாதா?
சனிக்கிழமைக்காகக் காத்திருந்தேன்.
வீடு பார்க்கப் போகிறோம் என்று அம்மாவின் முகத்தைப் பார்த்துச் சொல்லும் தைரியம் எனக்கில்லாதிருந்தது.
'அம்மா, வெளியில போறம் பிள்ளயள ஒருக்கா வெளிக்கிடுத்தி விடுங்கோ' என்றேன்.
இப்படி ஒரு வழமை எங்களிடம் இருந்தபடியால் அம்மா ஆர்வமாக வெளிக்கிடுத்த தயாரானார். பிள்ளைகள் மகிழ்ச்சியில் 'அம்மா எங்க போறம்?' என்றார்கள்.
'புது வீடு பாக்க..' என்றேன்.
' யாருக்கு, எங்களுக்கா? என்றார்கள் ஆச்சரியத்தோடு.
'ஓம்' என்று தலையசைத்தேன்.
'அ..ய்...எங்களுக்கு புதுவீடு' என்று அவர்கள் துள்ளிக் குதித்தார்கள்;.
'அப்ப இந்த வீடு..? என்றார் அம்மா ஏக்கத்தோடு.
'இது உங்கட வீடு. நீங்கள் இதில இருங்கோ. நாங்கள் கிட்டத்தான். ஆபத்து அவசரம் என்றால் ஓடிவருவம்' என்றேன்.
அம்மாவின் உதடுகள் துடித்தன. வார்த்தைகள் வரத்தயங்கின. கண்களிலிருந்து மட்டும் ஒரு துளி சொட்டியது.
* ஓவியம் - நன்றி: கல்கி -